search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில்"

    • காளிதேவி பெண் என்பதால், ஈசனைப் போன்று ஊர்த்துவ தாண்டவம் ஆட மறுத்து, தில்லையின் எல்லைக்கு சென்று கிழக்கு நோக்கி அமர்ந்தார்.
    • தீயவைகளை அழிக்கும் கோப சக்தியாக தில்லைகாளியும், நல்லவைகளை அருளும் சாந்த சொரூபினியாக, தில்லையம்மனுமாக இருவடிவமாக திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரின் எல்லையில் உள்ள தில்லைக் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 725 ஆண்டுகளுக்கு முன் கோப்பெருஞ்சிங்கன் என்ற சோழ மன்னனால் கட்டப்பட்டது.

    சிவம் பெரியதா, சக்தி பெரியதா என்ற விவாதம் கைலையங்கிரியில் சிவனுக்கும் சக்திக்கும் இடையே ஏற்பட்டது. சிவமும் சக்தியும் ஒன்றே என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தவும், பார்வதி தேவியின் கர்வத்தை அடக்கவும், சிவபெருமான் பார்வதிதேவியை, காளியாக மாறுமாறு சபித்துவிடுகிறார்.

    காளியான பார்வதி தேவியார் சிதம்பரம் தில்லைவனத்தில் வந்து தங்கிவிடுகிறார். வனத்தில் தங்கி இருந்து முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் தீங்கு செய்யத் தொடங்கினார். அப்போது ஆனந்தத் தாண்டவம் புரியும் ஈசனையும் ஆடல் போட்டிக்கு காளியான பார்வதி அழைத்தார்.

    ஈசனும், காளியும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். இதில் ஈசன் காதில் அணிந்திருந்த குண்டலத்தைக் கீழே விழச்செய்து, அக்குண்டலத்தைக் காலினால் எடுத்து காதில் பொருத்திக்கொண்டார். இத்தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்றும் பெயர்.

    காளிதேவி பெண் என்பதால், ஈசனைப் போன்று ஊர்த்துவ தாண்டவம் ஆட மறுத்து, தில்லையின் எல்லைக்கு சென்று கிழக்கு நோக்கி அமர்ந்தார். தேவர்களும், முனிவர்களும் வேண்டிக்கொண்டதற்கு இணங்க சினம் நீங்கி 4 முகம் கொண்ட பிரம்ம சாமுண்டீஸ்வரியாக உருக்கொண்டு தில்லை அம்மன் ஆனார். சிவனுடன் சிவகாமியாக இணைந்து காளியின் சாபம் நீங்கப்பெற்றார்.

    இவ்வாறாக தீயவைகளை அழிக்கும் கோப சக்தியாக தில்லைகாளியும், நல்லவைகளை அருளும் சாந்த சொரூபினியாக, தில்லையம்மனுமாக இருவடிவமாக இத்திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.

    இக்கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு இன்று காலை கன்னியா லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சாமுண்டி அம்மன் (தில்லைக்காளியம்மன்), தில்லை நான்முகி அம்மன் (தில்லையம்மன்), சபரிவாரசுவாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். விழாவினை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீசார் பாகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×