என் மலர்tooltip icon

    கடலூர்

    திட்டக்குடியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    கடலூர்:

    திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவரும் விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணத்தை சேர்ந்த 25 வயதுடைய வாலிபரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டனர். 

    இந்த நிலையில் இளம்பெண்ணின் பெற்றோர், மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த இளம்பெண் தனது காதல் கணவருடன், நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அந்த இளம்பெண், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், நான் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து கொண்டதால், எனது பெற்றோர் மற்றும் உறவினர்களால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
    விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அருகே உள்ள வடக்கு தில்லைநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 57). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் கார்த்திக் (37) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தனது உறவினர் தண்டபாணி என்பவருடன் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் செல்வம் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த கார்த்திக், கதிர்வேல், சந்துரு என்கின்ற சந்திரபாபு, இளங்கோவன், ஸ்டாலின், ஜெயசக்தி ராஜன் ஆகிய 6 பேரும் செல்வம், தண்டபாணி ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். படுகாயம் அடைந்த செல்வத்தை சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து போனார். தண்டபாணி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த சம்பவம் குறித்து கிள்ளை போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு விசாரணை சிதம்பரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) இளவரசன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளியான கார்த்திக் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2, 100 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேரும் விடுவிக்கப்பட்டனர். அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகரன் ஆஜராகி வாதாடினார்.
    2 மணி நேரத்தில் கடலூரில் 5 செ.மீ. மழை கொட்டியதுடன், மக்களை மீண்டும் மிரட்டி வருகிறது. தொடர் மழையால் வெள்ளம் வடிந்த பகுதியில் மீண்டும் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் தீவிரம் காட்டாத மழை, கடந்த மாதம் இறுதியில் தீவிரம் அடைந்தது. வங்க கடலில் அடுத்தடுத்து உருவான நிவர், புரெவி புயல்கள் நல்ல மழையை கொடுத்து சென்றது.

    இதில் கடலூர் மாவட்டத்தில் அடித்து ஊற்றிய மழையால் மாவட்டமே வெள்ளக்காடானது. குடியிருப்புகளும் வெள்ள நீரில் மிதந்தன. தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். பெரும் பயிர் சேதத்தை ஏற்படுத்தி மாவட்ட விவசாயிகளையும் ஒரு கை பார்த்து சென்றன. இந்த புயல்கள். மாவட்டத்தை விடாமல் துரத்திய மழை கடந்த 7-ந்தேதிக்கு பின்னர் சற்று ஓய்ந்தது. இதனால் மக்களும் நிம்மதியடைந்தனர்.

    இதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வறண்ட வானிலையே நீடித்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. அதே வேளையில் இரவில் பனியின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டது.

    ஐப்பசி அடைமழை கார்த்திகை கனமழை என்று பழமொழி சொல்வார்கள். அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரும் மெல்ல மெல்ல வடிய தொடங்கியது. முகாம்களில் இருந்த மக்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பியதுடன், இயல்பு வாழ்க்கைக்கும் மெல்ல திரும்பி வந்தார்கள்.

    இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 16-ந்தேதி முதல் (அதாவது நேற்று) 19-ந்தேதி வரை மிதமானது முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி கடலூரில் கடந்த ஒருவாரமாக நீடித்த வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை இடைவிடாது சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது.

    அதாவது, அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மட்டும் 2 மணி நேரத்தில் 5 செ.மீ. மழை கடலூரில் பதிவானது. இதனால் காலை பொழுது வானில் கருமேக கூட்டங்கள் நிறைந்து, மழைதூறலுடன் விடிந்ததுடன், மீண்டும் கடலூர் நகர மக்களை மழை மிரட்டியது.

    அவ்வப்போது ஓய்வெடுத்து மழை பெய்த வண்ணம் இருந்தது. இரவு வரையிலும் விட்டு, விட்டு பெய்த கனமழையால் குடியிருப்புபகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்க தொடங்கியது. கடலூர் நகரில் ஏராளமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் மோட்டார் மூலம் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அதோடு ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் இருந்து விவசாயிகள் தண்ணீரை வடியவைத்து வந்த நிலையில், இடைவிடாது பெய்த இந்த மழையால் அவர்கள் மேலும் வேதனைக்கு உள்ளானார்கள். மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் நிலைமை மேலும் மோசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், வடலூர், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளிலும் மழை நீடித்தது.

    நேற்று அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலான 2 மணி நேரத்தில் மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வானமாதேவி -32
    பண்ருட்டி -27
    கொத்தவாச்சேரி -22
    புவனகிரி -14
    குறிஞ்சிப்பாடி -14
    குப்பநத்தம் -13.6
    பரங்கிப்பேட்டை -12.4
    சேத்தியாத்தோப்பு -10
    வடக்குத்து -9
    அண்ணாமலைநகர் -7.8
    சிதம்பரம் -6.2
    ஸ்ரீமுஷ்ணம் -6.2
    விருத்தாசலம் -5.1
    காட்டுமன்னார்கோவில் -3.4
    லால்பேட்டை -3.2
    பெலாந்துரை -2.2
    கீழ்செருவாய் -2
    மேமாத்தூர் -2
    கடலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

    கடலூர்:

    புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. இதனால் பல்வேறு கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்து தீவுகள்போன்று காட்சியளித்தது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

    விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை மழைவெள்ளம் மூழ்கடித்து குளம்போல் காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போதுதான் அந்த பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

    கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் பனிபொழிவு அதிகமாக இருந்தது. காலையிலும் தொடர்ந்து பனிபொழிவு இருந்ததால் சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பகல்நேரங்களில் வெயில் சுட்டெரித்தது.

    தற்போது தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி கடலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.

    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுநகர், திருப்பாதிரிபுலியூர், வண்டிபாளையம், மஞ்சக்குப்பம், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர், செம்மண்டலம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழைபெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.

    இன்று காலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இது சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கிநின்றது. கடலூர் பஸ்நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. திருப்பாதிரிபுலியூர், பாடலீஸ்வரர் கோவில் உட்புற வளாகத்தில் மழைநீர் தேங்கியது.

    மழைநீரை வெளியேற்றும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் வடிந்து பொதுமக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பியபோது தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

    மந்தாரக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பல்வேறு கிராமங்களில் நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்தது. இதனால் தாழ் வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முருகன்குடி, கோனூர், செம்பேரி, சவுந்தரசோழபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து குறைவாக காணப்பட்டது. பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சென்றனர்.

    சிதம்பரத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்ரீநடராஜர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
    சிதம்பரத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்ரீநடராஜர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் 29-ந்தேதியும், 30-ந்தேதி தரிசனமும் நடைபெற இருக்கிறது. வழக்கமான காலங்களில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால் தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் அனைத்து துறை அதிகாரிகள், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள், பக்தர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று காலை சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் தலைமை தாங்கினார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வன், தாசில்தார் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தீட்சிதர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவிழாவுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கு முன்பதிவு செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்தில் கோவில் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்களைஅனுமதிக்க வேண்டுமென தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சப் - கலெக்டர் மதுபாலன் பேசுகையில், இக்கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் கடலூர் மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்படும். இதுதொடர்பாக மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
    மழை வெள்ள பாதிப்பு நிவாரணம் பெறும் பயனாளிகள் பட்டியலில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர்:

    மழை வெள்ள பாதிப்பு மறு சீரமைப்பு மற்றும் சேத மதிப்பீட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூரில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து சேதமடைந்த வீடுகள், பலியான கால்நடைகள் குறித்து விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும். பயிர் சேத மதிப்பீட்டுப் பணி வருவாய்த்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை சார்ந்த அலுவலர்கள் கூட்டாக ஆய்வு செய்து, பயிர் சேத பாதிப்புகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். நிவாரணம் பெறும் பயனாளிகள் பட்டியல் தயார் செய்யும்போது உண்மைத்தன்மை இருக்க வேண்டும்.

    பயிர் சேத கணக்கெடுப்பு பணிகளை கூடுமானவரை சம்பந்தப்பட்ட விவசாயிகள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தூய்மைப்படுத்தப்பட்ட பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்து நோய் தொற்று பரவாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சுகாதாரத்துறையின் மூலம் டெங்கு கொசு பரவலை தடுக்கும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்துகளை தெளித்து, நல்ல தண்ணீர் தேங்காத வண்ணம் கண்காணித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் நடத்தி, கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் கால்நடை பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு விவரங்களை விரைவாக மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும். பொதுப் பணித்துறை மூலம், கனமழையால் சேதமடைந்த சிறு பாலங்கள் உள்ளிட்டவைகளை உடனடியாக சரி செய்து, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத்துறை மூலம் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகளை மேலும் துரிதப்படுத்தி பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், சப்-கலெக்டர்கள் மதுபாலன், பிரவின்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், துணை கலெக்டர் (பயிற்சி) ஜெயராஜபவுலின், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர் சில்வர் பீச்சுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதையொட்டி நேற்று பீச்சில் பொதுமக்கள் குவிந்தனர்.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பாகவே கொரோனா அச்சுறுத்தலால் கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா மூடப்பட்டது. மேலும் கடலூர் சில்வர் பீச்சும் மூடப்பட்டது. இவை இரண்டும் கடலூர் நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதால், பொதுமக்கள் விடுமுறை நாட்களில் வேறுவழியின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14.12.2020 (அதாவது நேற்று) முதல் கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’ என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பொதுமக்கள் வசதிக்காக சில்வர் பீச்சில் குவிந்து கிடந்த குப்பைகள் அனைத்தும் அள்ளப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டது.

    பின்னர் 9 மாதங்களுக்கு பிறகு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டதையொட்டி, நேற்று காலை பொதுமக்கள் சில்வர் பீச்சுக்கு செல்ல தொடங்கினர். ஆனால் காலையில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    இதற்கிடையே சில்வர் பீச்சில் தள்ளுவண்டியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் நேற்று காலை தங்களது கடைகளை திறக்க வந்தனர். அப்போது அங்கிருந்து போலீசார் கடைகளை திறக்க அனுமதி கிடையாது என்று கூறி, அவர்களை தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் கடைகளை திறக்க அனுமதி அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பொதுமக்கள் கடலூர் சில்வர் பீச்சில் குவிந்தனர். பின்னர் அவர்கள் 9 மாதங்களுக்கு பிறகு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரையை ரசித்தனர். ஆனால் கடற்கரையோரத்தில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து வீணாகி கிடப்பதாலும், கடந்த வாரம் பெய்த கன மழையால் விளையாட்டு உபகரணங்களை சுற்றிலும் மழைநீர் தேங்கி குட்டை போல் கிடப்பதாலும் சிறுவர்கள் விளையாட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கையை வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஆணைவாரி நல்லதண்ணிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்காந்தி (வயது 35). அவரது மனைவி சத்தியவதி (30). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகன் சஞ்சய், மகள் சஞ்சனா ஆகியோர் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சத்யவதி கோபித்துக் கொண்டு தனது தாய் ஊரான விருத்தாசலத்துக்கு வந்துவிட்டார். அங்கு கூலிவேலை பார்த்து குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு சஞ்சய்காந்தி விருத்தாசலத்துக்கு வந்தார். தனது மனைவியிடம் சேர்ந்துவாழ வருமாறு அழைத்தார். அதற்கு சத்தியவதி மறுத்துவிட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சஞ்சய்காந்தி மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி சத்தியவதியின் தலை, கை மற்றும் பல்வேறு பகுதியில் வெட்டினார்.

    இதில் சத்தியவதியின் கை துண்டானது. அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சுருண்டுவிழுந்தார். இதனை பார்த்ததும் சஞ்சய்காந்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய சத்தியவதியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தூக்கிகொண்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரது நிலமை மோசமானதால் உடனடியாக அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சத்தியவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து சஞ்சய்காந்தியை தேடி வருகிறார்கள்.

    டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கபப்பட்டது.
    கடலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள் விழா கடலூர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் கடலூரில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன்கோவிலில் டி.டி.வி. தினகரன் நீண்ட நாள் வாழ வேண்டி சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு கடலூர் ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கபப்பட்டது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் கே.எஸ்.கே. பாலமுருகன் கலந்து கொண்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினார். இதில் நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகி சத்தியராஜ், மாநில மாணவரணி துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட அவை தலைவர் முருகன், மாவட்ட இணை செயலாளர் உமா, மாவட்ட துணை செயலாளர் சேகர், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவக்குமார், பேரவை செயலாளர் தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் பாடலீஸ்வரன், மணிவண்ணன், ராஜராஜன், செல்வம், அருள்செல்வன், பேரூர் செயலாளர்கள் பிரவீன்குமார், பாக்கியராஜ், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் ஆனந்தன், மாவட்ட தலைவர் வேலாயுதம், வர்த்தக அணி செயலாளர் பிரபு மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் 32 பேர் ரத்த தானம் வழங்கினர்.
    காவலர் தேர்வில் செல்போனை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    தமிழ்நாடு முழுவதும் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதில் நெய்வேலியில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில், குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 22) என்பவர் போலீசாருக்கு தெரியாமல் தனது உள்ளாடைக்குள் செல்போனை மறைத்து வைத்து தேர்வு மையத்திற்குள் சென்று விட்டார். அங்கு அவருக்கு கொடுத்த வினாத்தாளை செல்போனில் புகைப்படம் எடுத்து, நண்பரின் செல்போனுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினார். இதை நோட்டமிட்ட கண்காணிப்பாளர், மோகன்ராஜை கையும், களவுமாக பிடித்து தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றினார்.

    இதேபோல் நெய்வேலி மந்தாரக்குப்பம் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்திற்குள் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து செல்போனை எடுத்த சென்ற வினோத்குமார் (24) வினாத்தாளை புகைப்படம் எடுத்து உறவினருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியபோது பிடிபட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
    திண்டுக்கல்லில் தனியார் பள்ளி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது சிறுவன், வாலிபர் கைது செய்யப்பட்டனர். ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் அவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 49). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மணிகண்டனை அவருடைய குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 6-ந்தேதி ஆர்.எம்.காலனி மின்மயானம் பின்னால் உள்ள சுடுகாட்டில், நிர்வாண நிலையில் மணிகண்டன் பிணமாக மீட்கப்பட்டார். சுடுகாட்டில் உள்ள காத்திருப்போர் கூடத்தின் இரும்பு தூணில் மணிகண்டன் கட்டி வைக்கப்பட்டு வயிற்றில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு இருந்தார். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்பேரில் திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், வீரபாண்டி, நல்லதம்பி, குமார், சுரேஷ்குமார், ஏட்டுகள் ஜார்ஜ் எட்வர்ட், ராதாகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக் கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    மேலும் நகர் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மணிகண்டனை, 2 பேர் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும்காட்சி பதிவாகி இருந்தது. எனவே, மணிகண்டனை அழைத்து சென்ற நபர்கள் குறித்து தனிப்படையினர் விசாரித்தனர்.

    விசாரணையில், மணிகண்டனை அழைத்து சென்றது மேற்கு மீனாட்சிநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 21), திண்டுக்கல் பாலதிருப்பதி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அதில் சிவகுமார் மீது மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து 2 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து, மணிகண்டனை கொலை செய்ததை ஒப்புகொண்டனர். இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    கடந்த 5-ந்தேதி நள்ளிரவில் திண்டுக்கல்-பழனி சாலையில் மணிகண்டன் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சிவகுமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற மணிகண்டனை பார்த்ததும், மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரிடம் 2 பேரும் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அவருக்கு மதுகுடிக்க விருப்பம் இருப்பதை அறிந்து, 2 பேரும் தங்களுடன் சேர்ந்து மதுகுடிக்க வரும்படி அழைத்தனர். அதை உண்மை என நம்பிய மணிகண்டன், அவர்களுடன் மோட்டார்சைக்கிளில் ஏறி சென்றார்.

    ஆனால் அவரை சுடுகாட்டுக்கு அழைத்து சென்று, அங்கு ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றனர். இதற்கு மணிகண்டன் மறுப்பு தெரிவித்தார். இதனால் அவரை காத்திருப்போர் கூடத்தின் இரும்பு தூணில் கட்டி வைத்து ஓரின சேர்க்கையில் ஈடுபட முடிவு செய்தனர். அதற்காக ஆடைகளை களைந்து அவரை கட்டி வைத்து, ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றனர். அப்போது மணிகண்டன் சத்தம் போட்டதால், ஆத்திரம் அடைந்த 2 பேரும் கத்தியால் அவரை குத்தி கொலை செய்துள்ளனர்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
    கடலூரில் கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.25 லட்சம் மோசடி செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் வன்னியர்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 49). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நான் சொந்தமாக சரக்கு வாகனம் வாங்கி ஓட்டி வருகிறேன். இந்நிலையில் கடலூர் கொமந்தான்மேடு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்கிற கிருஷ்ணசெல்வம்(54) என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் என்னை சந்தித்து, சரக்கு வாகனத்தை தனக்கு மாத வாடகைக்கு வழங்கினால் மாதந்தோறும் ரூ.23 ஆயிரம் வாடகையாக தருவதாக கூறினார். இதை நம்பிய நான் ஒப்பந்தம் செய்து கொண்டு, சரக்கு வாகனத்தை வழங்கினேன். ஆனால் அவர் ஒரு மாத வாடகை மட்டும் தந்துவிட்டு, மீதமுள்ள வாடகை தரவில்லை. மேலும் வாகனத்தையும் என்னிடம் ஒப்படைக்கவில்லை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் செல்வம், பழனிவேலிடம் சரக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டது போல் கடலூரை சேர்ந்த சரண்ராஜ், இளங்கோ, முருகன், செங்குட்டுவன், கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்து மொத்தம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் கஸ்டம்ஸ் சாலையில் நின்று கொண்டிருந்த டிரைவர் செல்வத்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வாடகைக்கு எடுத்து ஓட்டிய 5 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×