என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    விவசாயி கொலை வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அருகே உள்ள வடக்கு தில்லைநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 57). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் கார்த்திக் (37) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தனது உறவினர் தண்டபாணி என்பவருடன் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் செல்வம் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த கார்த்திக், கதிர்வேல், சந்துரு என்கின்ற சந்திரபாபு, இளங்கோவன், ஸ்டாலின், ஜெயசக்தி ராஜன் ஆகிய 6 பேரும் செல்வம், தண்டபாணி ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். படுகாயம் அடைந்த செல்வத்தை சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து போனார். தண்டபாணி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த சம்பவம் குறித்து கிள்ளை போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு விசாரணை சிதம்பரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) இளவரசன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளியான கார்த்திக் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2, 100 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேரும் விடுவிக்கப்பட்டனர். அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகரன் ஆஜராகி வாதாடினார்.
    Next Story
    ×