என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் நடந்து சென்ற வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் கூத்தப்பாக்கம் சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 42). வியாபாரி. இவர் நேற்று முன்தினம் கம்மியம்பேட்டை ஜே.ஜே.நகர் வழியாக நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த பாதிரிக்குப்பம் காந்திநகரை சேர்ந்த சங்கர் மகன் நாகராஜ் (21) என்பவர் அவரை வழிமறித்து, அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.500-யை வழிப்பறி செய்தார். 

    இது பற்றி சண்முகம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். புதிதாக 424 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 70 ஆயிரத்து 902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 424 பேருக்கு பாதிப்பு உறுதி யானது. இவர்களில் சென்னையில் இருந்து அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில் வந்த 2 பேருக்கும், திருச்சியில் இருந்து பரங்கிப்பேட்டை வந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது.

    நோய் தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 136 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 285 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    நேற்று முன்தினம் வரை 66 ஆயிரத்து 674 பேர் குணமடைந்து சென்ற நிலையில், நேற்று 483பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனாவுக்கு இது வரை 883 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முதியவர் ஒருவர் பலியானார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    பரங்கிப்பேட்டையை சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 884 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதித்த 2 ஆயிரத்து 889 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 396 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 24 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது.
    சிதம்பரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை (வயது 49). இவரது மனைவி பத்மாவதி (45). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பத்மாவதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பிச்சை பத்மாவதியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து பிச்சை சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தார் போலீசார் காணாமல் போன பத்மாவதியை தீவிரமாக தேடி வருகின்றனர்‌‌.
    கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
    கடலூர்:

    தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான், கொரோனா தொற்று பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களை திறக்கக் கூடாது. பஸ், தியேட்டர், ஓட்டல், நகைக்கடை துணிக்கடை உள்ளிட்டவைகளில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    மேலும் தினந்தோறும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவித்தது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது.

    அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1640 கோவில்களும் கடந்த 7- ந்தேதி முதல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டன. ஆனால் கோவில்களில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும். மேலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய 3 நாட்களில் இன்று முதல் கோவில்கள் தடை உத்தரவுக்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலூர் பாடலீஸ்வரர், வரதராஜ பெருமாள், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர், பெண்ணாடம், பிரளயகாலேஸ்வரர், சிதம்பரம் தில்லைக்காளியம்மன், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் என மாவட்டம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறிய மற்றும் பெரிய கோவில்கள் என மொத்தம் 1640 கோவில்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.
    பண்ருட்டி அருகே சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் நாதன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் அஸ்வின் (வயது 4). இவன் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர் எங்கு தேடியும் அஸ்வின் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் மாயமான சிறுவனை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு சிறுவனின் உறவினர்கள் சென்னை கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துணை போலீஸ் சூப்பிரண்ட் சபியுல்லா காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் சிறுவன் அஸ்வின் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததால் அவனை யாரேனும் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அஸ்வின் வீட்டின் அருகே ரஞ்சிதா (25) என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்களது குடும்பத்திற்கும் அஸ்வின் குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக ரஞ்சிதா சிறுவன் அஸ்வினை அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் ரஞ்சிதாவை கைது செய்தனர்.இதனை தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருக்கும் சிறுவன் அஸ்வினின் உடலை வாங்க மறுத்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கீழக்கொல்லை கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தகவலறிந்த பண்ருட்டி தாசில்தார் சிவசுப்பிரமணியன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்ட் சபியுல்லா போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சிறுவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை உரிய நஷ்ட ஈடு மற்றும் தொகுப்பு வீடு ஆகியவை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுவனின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    சிதம்பரம் அருகே தனியார் இரும்பு ஆலையில் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த இரும்பு ஆலையில் அறிவழகன் (வயது 65) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு தனியார் இரும்பு ஆலையில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த இரும்பு பொருட்கள் மற்றும் எந்திரங்களை திருடி சென்றார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அறிவழகன் மர்ம நபரை துரத்தி சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

    தொடர்ந்து கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் கம்பிழிமேடு பகுதியை சேர்ந்த கணபதி (30) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணை கணபதி தனியார் இரும்பு ஆலையில் திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் கணபதியை கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திட்டக்குடி அருகே 2 கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செங்கமேடு கிராமத்தில் சாலை ஓரம் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் நேற்று இரவு வழக்கம் போல் கோயில் பூசாரி சுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இன்று அதிகாலை வழக்கம் போல் கோயிலுக்கு வந்தபோது கோவில் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உள்புறம் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் ஆறு மாதத்துக்கு ஒரு முறை திறப்பது வழக்கம் இந்நிலையில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது அதில் இருந்த 40 ஆயிரம் பணம் திருடு போயுள்ளது.

    மேலும் இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் பேரில் வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதேபோல் செங்கமேடு அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தில் கொட்டாரம் , வையங்குடி செல்லும் சாலை யோரம் உள்ள பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

    இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர். அருகில் உள்ள 2 கிராமங்களில் அடுத்தடுத்து கோவில் உண்டியலை உடைத்து திருடு போன சம்பவம் பொதுமக் களிடையே பெரும் பரபரப்பாக ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்தது.
    கடலூர்:

    உள் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை முதல் 31-ந்தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்தது.

    இதன் காரணமாக பொதுமக்கள் குடை பிடித்தபடி சாலையில் சென்றனர். மேலும் திடீர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி நின்றதையும், சிலர் மழையில் நனைந்தபடி சென்றதையும் காணமுடிந்தது.

    இது தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் பனிமூட்டம், மதியம் சுட்டெரிக்கும் வெயில், மாலை குளிர்ந்த காற்று என்று இருந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் திடீரென்று மழை பெய்து வந்ததால் சீதோஷ்ண மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லிமீட்டர் அளவில் பின்வருமாறு:-

    பரங்கிப்பேட்டை-1.4 கடலூர்-0.9 கலெக்டர் அலுவலகம்- 0.2 மில்லிமீட்டர் அளவு பதிவாகி உள்ளது.
    பண்ருட்டி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே அழகப்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 29) திருமணம் ஆனவர். விவசாயி. இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.

    இவர் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று மாலை 7 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர் உழவர் சந்தை பகுதியில் மலைபோல் குவிந்து இருக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள், வாழைத்தார்கள், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.

    இதன் காரணமாக தினந்தோறும் வாழைத்தார்கள் மற்றும் கழிவுகள் ஏராளமாகக் குவிந்துள்ளது‌. இந்த நிலையில் வாழைத்தார் மற்றும் குப்பை கழிவுகளை சரியான முறையில் அகற்றப்படாததால் மலைபோல் குவிந்து உள்ளது.

    இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் உழவர் சந்தை பகுதியில் இந்த அவல நிலை நீடித்து வருவதால் நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மலைபோல் குவிந்து இருக்கும் குப்பைகள் அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடலூர் அருகே இன்று கட்டிடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் அருகே ராமாபுரம் வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இந்த பகுதியில் பாழடைந்த கட்டிடம் இருந்தது. அந்த வழியாக எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சுதீஷ்குமார், வீரசேகர், புவனேஷ் ஆகியோர் சென்றனர்.

    அப்போது கட்டிடம் திடீரென இடிந்தது. இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கியதால் அலறிதுடித்தனர்.

    சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை.

    உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புபடை வீரர்கள் விரைந்தனர். பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது.

    இடிபாடுகளில் சிக்கிய 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சுதீஷ்குமார், வீரசேகர் ஆகியோர் இறந்தனர். புவனேஷ் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக போலீசாருக்கு தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கையில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 453 பேருக்கு கொரோனா தொற்று பரவல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் குமராட்சி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மாவட்ட குற்றப்பிரிவு, பரங்கிப்பேட்டை, கடலூர் ஆயுதப்படை போலீசார் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 11 போலீசாருக்கு கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களை சார்ந்த பலருக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதா? என்பதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக போலீசாருக்கு தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து போலீசாரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    ×