என் மலர்tooltip icon

    கடலூர்

    திட்டக்குடி நகராட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று நகராட்சியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
    திட்டக்குடி:

    திட்டக்குடி நகராட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று நகராட்சியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

    திட்டக்குடியில் பறக்கும் படையினர் விருத்தாசலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் , சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் ராமநத்தம் திட்டக்குடி செல்லும் சாலை,அரியலுார் திட்டக்குடி சாலை , திட்டக்குடி பெண்ணாடம் சாலைகளில் செல்லும் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் .
    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் கிடப்பில் போடப்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரை சீரமைப்பு பணியால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் மிக கனமழை பெய்த காரணத்தினால் தென்பெண்ணை ஆற்றில் 49 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் தரைப்பாலம் பாலம் போன்றவை பெரும் சேதம் அடைந்தது. மேலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துதோடு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாறு கரையோரம் சீறிப்பாய்ந்து ஓடிய வெள்ளப்பெருக்கால் கரைகள் அடித்து செல்லப்பட்டதால் சாலைகளும் அடித்து செல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் பெரிய அளவிலான பாராங்கற்கள் கொட்டப்பட்டு, பள்ளத்தில் தரமற்ற குப்பைகள் கலந்த மண்களை கொட்டி சரி செய்து வந்தனர்.

    அப்போது கரையோரம் மர தடுப்புகளை அமைத்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2 முறை மண் சரிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் பல நாட்கள் இவ்வழியாக வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வாகனங்கள் சென்று வரும் நிலையில், பணிகள் முழுமை அடையாமல் அப்படியே கிடப்பில் உள்ளது.

    மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு தென்பெண்ணையாற்றின் தரைப்பாலத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை மாநிலத்தில் இருந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். ஆனால் தற்போது வரை மண் அரிக்கப்பட்ட இடத்தில் பணிகள் நடைபெறாமல் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தற்போது பெரிய அளவிலான பள்ளங்கள் அப்படியே இருந்துவருகின்றது.

    ஆனால் குடிப்பிரியர்கள், ஒரு சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தரைப்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்ட சிமெண்ட் கட்டையின் மீது ஏறி செல்லும் போது தவறி விழுந்தால் கை கால் முறிவு மற்றும் உயிர்பலி ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. ஆனால் இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாவட்டத்தில் தலை நகரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த அவலநிலை ஏற்பட்டு வருவதை சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் மண்ணரிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள பள்ளத்தில் உடனடியாக சீரமைத்து தரைப் பாலம் வழியாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் எளிமையாக செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    கடலூர் அருகே விசா காலம் முடிந்து தங்கி இருந்த 8 இலங்கை தமிழர்கள் குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே கிஞ்சம் பேட்டை பகுதியில் இலங்கைத் தமிழர்கள் 3 பெண்கள் உள்பட 8 பேர் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். இவர்கள் தங்கி இருந்ததை குறித்து கியூ பிரிவு போலீசாருக்கும், கடலோர காவல் படை போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில மாதத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு உறவினர்கள் வீட்டிலும், லாட்ஜிலும் தங்கியுள்ளனர். பின்னர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடலூர் கிஞ்சம் பேட்டையில் தங்கி வந்ததாகவும் கூறினார்கள். பின்னர் அவர்கள் முறைப்படி விசா வைத்துள்ளார்களா? என்பதனை கியூ பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது விசா காலம் முடிந்து பல நாட்கள் ஆகியும் கடலூர் பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் விசா கிடைப்பதற்காக பதிவு செய்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் க்யூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர காவல் படை போலீசாரும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் இது சம்பந்தமாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 பேரையும் தீவிரமாக கண்காணிப்பதோடு இவர்களுடன் வேறு யாரேனும் வந்து உள்ளார்களா? அல்லது எதற்காக இவர்கள் இங்கு வந்துள்ளனர்? விசா காலம் முடிந்தும் ஏன் இங்கு தங்கி உள்ளார்கள்? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
    திட்டக்குடி அருகே இலவச வீட்டு மனைபட்டா வழங்க கோரி வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைத்து தீக்குளிக்கும் போராட்ட அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே வதிஷ்டபுரம் பகுதியில் உள்ள காலனி மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா இதுவரை வழங்கவில்லை என முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன்பன் தலைமையில் திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திக்கிடம் மனு அளித்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

    வதிஷ்டபுரம் காலனி பகுதியில் 400 -க்கும்மேற்பட்டோர் தங்குவதற்கு இடமில்லாமல் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பல வருடங்களாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவே வருகிற 15-ந் தேதி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்து தீக்குளிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். நகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டம் அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் முதல் கட்டமாக அனுக்ஞை விக்னேஷ்வர பூஜைகளுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மற்றும் யாகசாலை பூஜைகள் முடிவடைந்துள்ளன.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 வருடங்களுக்குப் பிறகு வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதற்காக கோபுரங்கள், கொடி மரங்கள், சுவாமி சன்னதிகள், பிரகாரங்கள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் முடிவடைந்தன. அதைத்தொடர்ந்து விருத்தாம்பிகை அம்மன் கருவறை கோபுரம் வர்ணம் தீட்டும் பணிகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

    முதல் கட்டமாக அனுக்ஞை விக்னேஷ்வர பூஜைகளுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மற்றும் யாகசாலை பூஜைகள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து மூலவருக்கு கருவறை கோபுரம் வர்ணம் தீட்டி முடிவடைந்துள்ளது. இதில் கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகிகள், அறநிலையத்துறை ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் கடுமையாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    கடலூர் பஸ்நிலையத்தில் சுகாதாரமற்ற கழிவறையை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூரில் பஸ் நிலையம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் மூலம் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    கடலூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவறை உள்ளது. இந்த கழிவறை சரியான முறையில் பராமரிக்காததால் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. மேலும் சரியான முறையில் சுத்தம் செய்யாததால் அருவருப்பாக காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் கழிப்பறைக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவு நேரங்களில் கழிவறைக்குச் செல்லாமல் அருகாமையில் சிறுநீர் கழிப்பது போன்றவைகள் செய்வதால் பஸ் நிலையம் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலும் கடலூர் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு பிறகும் இது போன்ற அவல நிலைகள் ஏற்பட்டு உள்ளது. ஆகையால் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் நோய் பரவும் அவலம் ஏற்படாமல் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    விருத்தாசலத்தில் 2 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து முற்றிலும் கருகியது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவர் பாலக்கரை பகுதியில் செல்போன் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகளை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு ராஜேஷ் குமார் வியாபாரம் முடிந்தவுடன் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். தொடர்ந்து இன்று அதிகாலை ராஜேஷ் குமாரின் 2 கடைகளிலும் இருந்து கரும்புகை வந்துள்ளது.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கடைகளிலும் தீ மளமளவென பற்றி கொண்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் 2 கடைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது.

    மேலும் 2 கடைகளிலும் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து கருகியது. இந்த தீ விபத்து குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிதம்பரம் அருகே குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் பலியான சம்பவம் குறித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கூலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. அவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனவே விஜயலட்சுமி குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி விஜயலட்சுமி ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பகட்டுப்பாடு செய்தார். அங்கு அவரது உடல்நிலை மோசமானது. உடனடியாக விஜயலட்சுமி சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த சம்பவத்தால் திருநாவுக்கரசு மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் விஜயலட்சுமி இறந்ததாக கூறினர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் திருநாவுக்கரசின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் திடீரென இன்று காலை 9 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
    கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றி வருகிறார்கள். இன்று காலை மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள் கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மருத்தவதுறை இணை இயக்குனர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் அம்மா மினிகிளினிக் உருவாக்கப்பட்டது. இந்த கிளினிக்கில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றி வருகிறார்கள். இன்று காலை மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள் கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மருத்தவதுறை இணை இயக்குனர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

    அப்போது அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அம்மா மினிகிளினிக்கில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளராக கடந்த 1 வருடமாக பணியாற்றி வருகிறோம். கொரோனா வைரஸ் தொற்று பிரிவிலும், தடுப்பூசி முகாம்களிலும், காய்ச்சல் முகாம்களிலும் பணிபுரிந்து வந்த நிலையில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி எங்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    கடலூர் முதுநகரில் பஸ் மோதி சிதம்பரத்தை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் முதுநகர்:

    சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூரை சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் அசோக்குமார்(வயது 40). இவரும், அம்மாபேட்டையை சேர்ந்த பத்திநாதன் மகன் சந்தியாகு(38) என்பவரும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று மதியம் புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சந்தியாகு ஓட்டினார். கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் சென்றபோது, எதிரே சேலத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில அசோக்குமாரும், சந்தியாகுவும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துறைமுக போலீசார் விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் கடலோர பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. முதல் நாளில் 55 இன பறவைகள் கண்டறியப்பட்டது.
    கடலூர்:

    தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் செல்வம் உத்தரவின்பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று கடலூர் கடற்கரை பகுதியில் நடந்தது. இந்த குழுவினர் வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது, வனவர் குணசேகரன், வனக்காப்பாளர் ஆதவன், பறவைகள் ஆர்வலர் சுவாமிநாதன், குழந்தைகள் நல மருத்துவர் இளந்திரையன் மற்றும் தன்னார்வலர் குழு நிறுவனர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் உள்ள பகுதிகளில் பறவைகளை கணக்கெடுத்தனர். அப்போது 55-க்கும் மேற்பட்ட இன பறவைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதாவது மரங்கொத்தி, சிட்டுக்குருவி, காடை, ஆந்தை, கருங்குருவி, செங்கால்நாரை, வீட்டு பறவைகள், ஆஸ்திரேலியாவில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து புலம் பெயர்ந்த குருவிகள், மழைக்கால பறவைகள் உள்ளிட்ட 55 வகையான பறவை இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குழுவினர் இன்று (சனிக்கிழமை) கடலோர பகுதிகளில் மீண்டும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை நடத்துகின்றனர்.
    பெண்ணாடத்தில் திருமணம் செய்து வைக்காததால் விரக்திட்யில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைகோட்டம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் வினோத்குமார்(வயது 25). இவர், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். அதற்கு உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் குடும்ப சூழலை காரணம் காட்டி வந்தனர். 

    இதில் மனமுடைந்த வினோத்குமார், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×