
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள், வாழைத்தார்கள், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.
இதன் காரணமாக தினந்தோறும் வாழைத்தார்கள் மற்றும் கழிவுகள் ஏராளமாகக் குவிந்துள்ளது. இந்த நிலையில் வாழைத்தார் மற்றும் குப்பை கழிவுகளை சரியான முறையில் அகற்றப்படாததால் மலைபோல் குவிந்து உள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் உழவர் சந்தை பகுதியில் இந்த அவல நிலை நீடித்து வருவதால் நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மலைபோல் குவிந்து இருக்கும் குப்பைகள் அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.