என் மலர்tooltip icon

    கடலூர்

    • கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டது.
    • கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்புதுலக்கி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிப்படை வெற்றிநகரை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 56). இவர் சிங்கபூரில் வேலைபார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவரது வீட்டில் இன்டர்நெட் சேபை இல்லை. எனவே சிதம்பரம் வடக்கு ரதவீதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டு கதவையை கடப்பாரையால் உடைத்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை திருடிக்கொண்டு சென்றனர்.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் வீட்டு கதவு திறந்துகிடப்பதை கண்டு ஜாபர் அலிக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனே வீட்டுக்கு விரைந்தார். அப்போது பீரோவில் இருந்த 30 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    பதறிபோன ஜாபர்அலி இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்புதுலக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    மருத்துவக் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் அருகே கீரப்பாளையம் சேர்ந்த மாணவி நாமக்கல் பல் மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவதன்று தனது ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு கல்லூரி மாணவி வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வாலிபர் மாணவியின் புகைப்படத்தை எடுத்துள்ளார். மேலும் வாலிபர் மாணவி தன்னை காதலிப்பதாக தெரிவித்து புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மருத்துவ கல்லூரி மாணவி இது சம்பந்தமாக கேட்டபோது மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கலைச்செல்வன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூர் அருகே புதிய வீடு கட்டிய கூலி தொழிலாளி திடீரென இறந்தார்.
    • இன்று புதிய வீட்டிற்கு தளம் போடுவதற்காக இரவு அங்க படுத்து தூங்கினார்‌.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு என்.மூலக்குப்பம் சேர்ந்தவர் சிவமுருகன் (வயது 38). கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது ஊரில் புதிய வீடு சிவ முருகன் கட்டி வந்தார். இந்த நிலையில் இன்று புதிய வீட்டிற்கு தளம் போடுவதற்காக இரவு அங்க படுத்து தூங்கினார்‌. இன்று அதிகாலை திடீரென்று சிவமுருகனுக்கு கை கால் மறுத்து திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக சிவமுருகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்‌. அப்போது சிவ முருகனை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூரில் பரபரப்பு மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி.
    • சூர்யா மற்றும் அவரது நண்பர் 2 பேரும் சத்யா வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

     கடலூர்:

    கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் சத்யா (வயது 25). சம்பவத்தன்று அந்த பகுதியில் சைக்கிளில் சத்யா சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் சத்யாவை வழிமறித்து மொபைல் எண்ணை கேட்டார். அப்போது சத்யா மொபைல் நம்பர் தர மறுத்ததால் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சத்யா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சத்யாவின் தாய் சூர்யாவின் மனைவியிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சூர்யா மற்றும் அவரது நண்பர் 2 பேரும் சத்யா வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட சத்யா மாத்திரை சாப்பிட்டு விட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் சூர்யா, காத்தமுத்து என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
    • அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவர் சிலையை அகற்றி விடுவதாக கூறி, இது சம்பந்தமாக கேட்டபோது சிவகுருவை தாக்கியதாக கூறினார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார்.பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மேல்பட்டாம்பாக்கம் சேர்ந்தவர் சிவகுரு (வயது 33) இவர் தி.மு.க. பிரமுகர். அதே பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை சொந்த செலவில் செய்து வைத்துள்ளார். ஆனால் அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவர் சிலையை அகற்றி விடுவதாக கூறி, இது சம்பந்தமாக கேட்டபோது சிவகுருவை தாக்கியதாக கூறினார். ஆகையால் அந்த நபரை கைது செய்ய கோரி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாக என தெரிவித்தார். அப்போது போலீசார் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிடம் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடும் எச்சரிக்கை செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • நீர்மட்டம் 42 அடியை எட்டியது வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது எப்போது? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்பட்டது. எனவே காவிரி தண்ணீர் ஒரு மாதத்துக்கு பின் கடைமடை பகுதியான நாகூர்வரை சென்றது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடம் வழியாக கீழணைக்கு காவிரிநீர்வந்து சேரும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.

    இந்த ஆண்டு திறக்கப்பட்ட காவிரிநீர் கடந்த மாதம் வீராணம் ஏரிக்கு வந்து சேர்ந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. வடவாறு வழியாக 146 கனஅடிநீர் ஏரிக்கு வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 57 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் வீராணம் ஏரி எப்போது பாசனத்துக்கு திறக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    இது குறித்து பொது பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த விவசாய பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். இதனிடையே வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுதவிர காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சோழத்தரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது வீராணம் ஏரி விரைவில் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் தங்களது நிலங்களை உழும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சேத்தியாத்தோப்பு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலியானார்.
    • விபத்தில் தூக்கி வீச்ப்பட்ட ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுவானைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 67). விவசாயி. இவர் சம்பவத்தன்று சேத்தியாத்தோப்பில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆணைவாரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீச்ப்பட்ட ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலை மை மோசமானது. எனவே ஜெயராமன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் இறந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலூர் மாநகராட்சியில் 150 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் மேயர் சுந்தரி ராஜா அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடலூர்:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், செயற்பொறியாளர், புண்ணியமூர்த்தி , நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி முழுவதும் 150 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வீடுகள் தோறும் நேரில் சென்று தடுப்பூசி போடும் பணியிலும் பணியாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமளன்குளம் ஊராட்சியில் உள்ள ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜையில் அடிக்கல் நாட்டு தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் வருவாய்த்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையினையும் , ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவினையும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் வழங்கினார் . மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ( வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயமானார்.
    • வழக்கம் போல் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிள் கல்லூரி மாணவி கல்லூரிக்கு சென்று வருகிறேன் என கூறி சென்றார்.

    கடலூர்:

    கடலூர் அருகே சி.என.பாளையம் சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் கடலூர் தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிள் கல்லூரி மாணவி கல்லூரிக்கு சென்று வருகிறேன் என கூறி சென்றார். பின்னர் நடுவீரப்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி மாணவியை எங்கு தெரியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 116 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.
    • நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் இருந்தனர்.

     கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் 1,600 ஆண்டு பழமை வாய்ந்த நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்ம உற்சவம் விழா 13 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து பிரம்ம உற்சவ விழா கடந்த 30 ஆம் தேதி பிடாரி அம்மன் உற்சவத்துடன் தொடங்கி கடந்த ஜூலை 2 ந்தேதி கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது. பின்னர் தினந்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று, இரவு பல்வேறு வாகனத்தில் சாமி மீது நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் 8- ந்தேதி காலையில் அதிகார நந்தி மற்றும் மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இன்று (10- ந் தேதி) முக்கிய சிகர விழாவான தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது பின்னர் நடனபாதேஸ்வரர் மற்றும் தாயார் பரிவார மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று தேரில் கம்பீரமாக எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்று, பரமேஸ்வரா பரமேஸ்வரா என்ற பக்தி கோஷத்துடன் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பின்னர் முக்கிய மாட வீதியில் தேர் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை வழங்கப்பட்டன. இன்று இரவு தேரடி இறங்குதல், மறுநாள் 11 ந்தேதி காலை நடராஜர் தரிசனம், மாலை தீர்த்தவாரி மற்றும் 12 ந்தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம், இரவு ரிஷப வாகனம் வீதி உலா, 13 ந் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கணக்கர் சரவணன், கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் இருந்தனர்.

    • சுருக்குமடி வலை வைத்திருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 60 மீனவர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர்.
    • தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என கூறினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகள் பயன்படுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதோடு, மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டம் அறிவித்து நடத்தி வந்தனர்.

    மேலும் நேற்று கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டத்தில் 7- க்கும் மேற்பட்ட கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கடலூர் மாவட்ட எல்லையில் நிறுத்த அனுமதிக்க கூடாது. ஆகையால் உடனடியாக தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை மற்றும் படகுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியர் அதியமான் கவியரசு கடுமையான உத்தரவிட்டார்.


    இந்த நிலையில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாவட்டத்தில் உள்ள ஏழு கிராமத்திற்கு நேரில் சென்றனர். பின்னர் 60 மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகள் இருப்பதை கண்டறிந்து அவர்களிடம் அதிரடியாக நோட்டீஸ் வழங்கினர். இதில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகளை கடலூர் மாவட்ட எல்லைகளில் நிறுத்தக்கூடாது, மீறி நிறுத்தினால் வலை மற்றும் படகுகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இது மட்டுமின்றி கடலூர் மாவட்ட கடற்கரையில் போலீசார் உடன் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் ஏறேனும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை மற்றும் படகுகளை நிறுத்தி உள்ளார்களா? என்பதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் முதுநகர் மற்றும் துறைமுகம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர் கிராமங்களில் பெரும் பதட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது.

    ×