என் மலர்
கோயம்புத்தூர்
- எல்கார்ட் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
- நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிருபித்து செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து வெளியே வருவார்.
கோவை,
கோவை பீளமேட்டில் உள்ள தொழில் நுட்ப பூங்கா (டைடல் பார்க்) மற்றும் எல்கார்ட் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜனதாவும், மத்திய அரசும் எதுவும் செய்யாமல், சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவற்றை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான வேலைகளை அவர்கள் தமிழகத்திற்கு செய்ய வேண்டும்.
.
தி.மு.க இதை விட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம். இந்த அடக்குமுறையில் இருந்தும் இன்னும் வலிமையாக வெளியே வருவோம். நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிருபித்து செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து வெளியே வருவார்.
திமுகவை அடக்க வேண்டும் என்று நினைத்தால், இன்னும் வேகமாக வெளியே வரும் இயக்கம் தான் தி.மு.க. இயக்கம்.
கலைஞரின் வளர்ப்பு, தளபதியின் தம்பிகளாகிய நாங்கள், இதற்கெல்லாம் பயந்து போகும் ஆட்கள் கிடையாது. செந்தில் பாலாஜி கைதின்போது நிறைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. அதைக் கண்டு பயப்பட்டு, மத்திய அரசு அவர்களிடம் இருக்கும் துறைகளை ஏவி ஏதாவது செய்ய முடியுமா? என பார்க்கின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை,
நாங்கள் யார் என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீட்டு கம்பெனியினர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
- ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீமான் இதுகுறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சீமான் (வயது 48) . இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார்.
இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் சீட்டு கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக மாதம் ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் வரை பணம் கட்டியுள்ளார்.
இந்நிலையில் சீமான் தனது சொந்த செலவுக்காக சீட்டு கம்பெனியில் தான் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் சீட்டு கம்பெனியினர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர் காந்திபுரத்தில் உள்ள சீட்டு கம்பெனிக்கு நேரில் சென்றார்.
அங்கே போய் பார்த்தபோது சீட்டு கம்பெனி பூட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீமான் இதுகுறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீட்டு கம்பெனியை நடத்தி வந்த சிறுமுகையை சேர்ந்த சத்யபிரியா (31) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதில் தொடர்புடைய கிருஷ்ணசாமி, டேவிட் சுந்தரராஜன் ஆகிய 2 பேரையும் காட்டூர் போலீசார் தேடி வருகிறார்கள்.
- நிதி நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் இளம்ெபண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
- போலீசார் தலைமறைவாக உள்ள சதீஸ், அபிஷேக், தினஷே் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பங்களாமேட்டை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மோனிசா (வயது 21). இவர் மேட்டுப்பாளையம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். அவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். போதிய வருமானம் இல்லாததால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாத தவணை தொகையை எனது கணவரால் கட்ட முடியவில்லை.
இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் ஊழியர்கள் கடனை கட்ட சொல்லி எனது கணவரை மிரட்டி வந்தனர். இது சம்பந் தமாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். நாங்கள் அங்கு சென்று வருகிற 28-ந் தேதிக்குள் பணத்தை கட்டுவதாக உறுதியளித்து சென்றோம்.
சம்பவத்தன்று நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது நிதி நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் பேசி பணம் வாங்கும் போது இனிப்பா இருந்துச்சு, இப்ப கசக்குதாடி நாயே என்று பேசினர். மேலும் எனது சுடிதாரை பிடித்து இழுத்து கன்னத்தில் தாக்கி என்னை மானபங்கப்டுத்தினர்.
பின்னர் அவர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் வரவில்லை என்றால் உன்னையும், உன் புருஷனையும் தொலைத்து கட்டி விடுவேன் என மிரட்டி விட்டு சென்றனர். எனவே அவர்கள் 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கணவர் வாங்கிய கடனுக்காக வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கி மிரட்டல் விடுத்த நிதி நிறுவன ஊழியரான மேட்டுப்பாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்த விஷால் (20) என்பவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஸ், அபிஷேக், தினஷே் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
- லிங்காபுரம், காந்தவயல், ஆளூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் போது 21 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் முடக்கப்படும்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சி 1-வது வார்டில் லிங்காபுரம், காந்தவயல், உலியூர், காந்தையூர், ஆளூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
லிங்காபுரத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலையில் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியை தாண்டி காந்தவயல், உலியூர், ஆளூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஜூலை மாத இறுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியள்ள நீலகிரி, கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொழியும்.
இந்த நேரத்தில் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் லிங்காபுரம், காந்தவயல் இடையே தண்ணீர் சூழ்ந்து இப்பகுதியிலுள்ள 21 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் முடக்கப்படும். இதனால் விளை பொருட்களை எடுத்து செல்வதற்கும், பள்ளி, கல்லூரி , வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவார்கள். இதனால் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் கிராமத்தில் பரிசல் மற்றும் மோட்டார் படகு சேவை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும்.
இதற்கிடையே இப்பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் நபார்டு வங்கி உதவியுடன் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் 53 அடி உயரத்தில் 168 மீட்டர் நீளம் , 10 மீட்டர் அகலத்தில் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது கேரளா, நீலகிரி பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கான தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலப் பணிகள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். எனவே லிங்காபுரம்-காந்தவயல் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் மேல்மட்ட பாலப்பணியை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-
லிங்காபுரம்-காந்தவயல் இடையே பவானிசாகர் அணையின் நீர் மட்டம் ஆண்டு தோறும் ஜூலை மாத இறுதியில் உயரும். இந்த காலக்கட்டத்தில் லிங்காபுரம்-காந்த வயல் இடையே உள்ள உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க கடந்த சில மாதங்களுக்கு முன் மேல்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இப்பகுதியில் தண்ணீர் சூழும் நிலை உள்ளது. எனவே தண்ணீர் வருவதற்குள் இப்பகுதியில் மேல்மட்ட பாலத்திற்கான பணியை விரிவு படுத்த வேண்டும். இல்லையெனில் அனைத்து பணிகளும் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இதனால் அரசுக்கும் பல லட்சம் இழப்பீடு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முருகேசன் மது போதையில் தந்தை இறந்த துக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மகன் முருகேசன் (வயது 24). இவர் சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.
முருகேசனின் தந்தை கிருஷ்ணராஜ் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தந்தை இறந்த துக்கத்தில் யாரிடமும் பேசாமல் இருந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற முருகேசன் மது போதையில் வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் இருந்த அவர் திடீரென தந்தை இறந்த துக்கத்தில் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத் தினர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட முருகேசனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக போலீஸ் நிலையம் முன்பு உள்ள ரோட்டை கடக்க முயன்றபோது லாரி கார்த்திக் மீது மோதியது.
- இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காளியம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவரது மனைவி நவநீதம் (22).
இவர்கள் 2 பேரும் கடந்த 10-ந் தேதி வேலை தேடி கோவைக்கு வந்தனர். பின்னர் அன்னூரில் தங்கி இருந்தனர். அப்போது கார்த்திக்கிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அவரை அவரது மனைவி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். சிகிச்சை முடிந்து கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
சம்பவத்தன்று வெளியே சென்ற கார்த்திக் கள்ளிப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டை திருடி தப்பிச் செல்ல முயன்றார்.
இதனை பார்த்த அங்கு இருந்த பொதுமக்கள் கார்த்திக்கை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணைக்காக கார்த்திக்கை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவரது மனைவி நவநீதமும் வந்தார். விசாரணைக்கு பின் கார்த்திக்கை, நவநீதத்திடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
அப்போது கார்த்திக் தனது மனைவியிடம் தண்ணீர் தாகம் எடுப்பதால் தண்ணீர் வாங்குவதற்கு பணம் கொடுக்கும்படி அவரது மனைவியிடம் கேட்டார். பணத்தை வாங்கி கொண்டு வெளியே சென்றார்.
தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக போலீஸ் நிலையம் முன்பு உள்ள ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி கார்த்திக் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி இறந்தார். உடனடியாக போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
- பள்ளிக்குள் சென்றதும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
கோவை,
தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்ததை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்த பின்னர் கடந்த 12-ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்கியது.
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தொடக்ககல்வி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் தொடக்க பள்ளிகள் என மொத்தம் 1081 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்களும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் சீருடை அணிவித்து, பேக் மாட்டி பள்ளிக்கு அழைத்து வந்து விட்டனர். பள்ளியில் மாணவர்களுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளி நுழைவு வாயில் முன்பு ஆசிரியர்கள் நின்று கொண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் கொடுத்தும் வரவேற்றனர்.
பின்னர் பள்ளிக்குள் சென்றதும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. சாப்பிட்டு முடித்து விட்டு வகுப்பறைக்கு மாணவர்கள் சென்றனர். அங்கு அவர்களுக்கு புதிய பாடபுத்தகங்கள், புத்தகப்பைகளை வழங்கினர்.
மாணவர்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்ததால் தங்களது நண்பர்களை பார்த்து ஒருவருக்கொருவர் கை கொடுத்து தங்களது நினைவுகளை பேசி கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறியதாவது:-
கோவை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட 8 வட்டாரங்களிலும் 1-ம் வகுப்பில் மட்டும் தமிழ் வழியில் 790 மாணவர்களும், ஆங்கில வழியில் 108 மாணவர்கள் என 898 பேர் சேர்ந்துள்ளனர்.
2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை புதிதாக 360 பேர் சேர்ந்துள்ளனர். இதேபோல 6 முதல் 8-ம் வகுப்பு வரை 58 பேர் சேர்ந்துள்ளனர்.
இதேபோல் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 58 பேர் சேர்ந்துள்ளனர். தொடக்க கல்வி துறையின் கீழ் மட்டும் 8-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் 1,095 மாணவர்க ளும், ஆங்கில வழிக்கு 221 பேரும் புதிதாக இந்த கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகள் திறப்புக்கு முன்பு பள்ளிகளில் தூய்மை பணிகள் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- அறிவியல் பூங்காவில் ராக்கெட், பூமி உருண்டை உருவங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
- பூங்கா செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை,
கோவை டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை, ராக்கெட், பூமி உருண்டை உருவங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பூங்கா செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, பெரிய கடைவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.7.48 கோடி மதிப்பில் 1.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோட்டார் இல்லாத வாகனப் போக்குவரத்து திட்டத்தில் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவிப் பொறியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
- ஜி.டி. அருங்காட்சியகம் அருகே செல்லும் போது ஒரு அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கோவை,
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்குள் நேற்றுமுன்தினம் மாலை மர்மநபர் ஒருவர் புகுந்து கதவை அடைக்க முயன்றார். இதை அங்கு பணியில் இருந்த ஊழியர் பார்த்து, அவரை பிடித்து வெளியே தள்ளினார்.
இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலக ஊழியர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்தனர்.
இதற்கிடையே இரவில் அவினாசி சாலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவர் எப்படி இறந்தார் என்பதை அறிய அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த நபர், அவினாசி ரோடு ஜி.டி. அருங்காட்சியகம் அருகே செல்லும் போது ஒரு அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டது.
ஆனால் இதுவரை இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் பஸ்சில் விழுந்து தான் இறந்தாரா? அப்படி தற்கொலை செய்து கொண்டால் அதற்கான காரணம் என்ன? தற்கொலை செய்யும் போது அந்த நபர் போதையில் இருந்தரா எனவும் விசாரணை நடக்கிறது.
தற்கொலை செய்தவர் எதற்காக பா.ஜனதா அலுவலகத்திற்குள் நுழைந்தார்? அவர் அங்கு நுழைந்தற்கான நோக்கம் என்ன? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர் குறித்த முழு விவரமும் கிடைத்த பிறகே அவர் தற்கொலை செய்தற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- கட்டண சிகிச்சை வார்டு அமைக்க ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- 26 படுக்கை வசதியுடன் கூடிய கட்டண சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் 6,500-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சைக்காக வருகின்றனர்.
கோவை மட்டுமின்றி கேரளா, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்கு தனியார் மருத்துவனைகளுக்கு இணையான அதிநுட்பமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் அரசு மருத்துவமனையின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகள் போல் நோயாளிகளிடம் கட்டணம் அடிப்படையில் சிகிச்சை அளிக்க "பே வார்டு" திட்டத்ைத ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்க ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு 26 படுக்கை வசதியுடன் கூடிய கட்டண சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனையின் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் 15 படுக்கை வசதியுடனும், மகப்பேறு பிரிவில் 11 படுக்கை வசதியுடனும் வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வார்டில் உள்ள தனி அறையில் கழிப்பிட வசதி, இருக்கை வசதி, டி.வி. உள்ளிட்டவை தனியார் மருத்துவனைகளில் இருப்பது போன்றே இருக்கும். தவிர, இரண்டு பேர் தங்கும் வகையில் டுவின் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டுவின் அறையில் கழிப்பிடம் மட்டும் ஒன்றுதான் இருக்கும்.
ஆனால் உடை மாற்றும் வசதிகள் ஆகியவை தனித்தனியாக இருக்கும். இந்த பொது சிகிச்சை வார்டில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மகப்பேறு சிகிச்சைக்காக மட்டும் பிரத்யேகமாக கட்டண சிகிச்சை வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டின் பணிகள் அனைத்தும் முடிந்தநிலையில் விரைவில் கட்டண சிகிச்சை வார்டினை தொடங்கி வைக்க உள்ளதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.
- தமிழ்ச்செல்வனின் தாயார், கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை,
கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (வயது 41 ). இவரும், இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவரது தாயார் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் செல்வன் மற்றும் அவரது மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். சம்பவத்தன்று மதியம் வேலைக்கு சென்ற தமிழ்செல்வனின் மனைவி சாப்பிட வீட்டிற்கு வந்தார். சாப்பிட்ட பின்னர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து மகன் வீட்டிற்கு சென்ற தமிழ்ச்செல்வனின் தாயார், கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அவர் உடனடியாக தனது மகனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். தமிழ் செல்வன் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 29 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.25,000 பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரி யவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தேவராஜின் மனைவி ஜாய்ஸ் தனக்கு தெரியாமல் தனது கணவரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர்.
- கோவை அரசு ஆஸ்பத்தி டாக்டர் ஜெயசிங் தலைமையிலான டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள சத்யா காலனியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 35).
இவர் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிளில் வடவள்ளி- சிறுவாணி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தேவராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை அவரது உறவினர்கள் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ஜனவரி 30-ந் தேதி தேவராஜ் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். பின்னர் அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தேவராஜின் உடலை புலியகுளம் அருகே உள்ள சவுரிபாளையம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.
இந்தநிலையில் தேவராஜின் மனைவி ஜாய்ஸ் என்பவர் தனக்கு தெரியாமல் தனது கணவரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர். எனவே மீண்டும் தனது கணவர் தேவராஜின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சவுரிபாளையம் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட தேவராஜின் உடல் இன்று மீண்டும் ேதாண்டி எடுக்கப்படுகிறது. அவரது உடலை கோவை அரசு ஆஸ்பத்தி டாக்டர் ஜெயசிங் தலைமையிலான டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.






