என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் விசாரணைக்கு வந்த வாலிபர் லாரியில் அடிபட்டு பலி
- தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக போலீஸ் நிலையம் முன்பு உள்ள ரோட்டை கடக்க முயன்றபோது லாரி கார்த்திக் மீது மோதியது.
- இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காளியம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவரது மனைவி நவநீதம் (22).
இவர்கள் 2 பேரும் கடந்த 10-ந் தேதி வேலை தேடி கோவைக்கு வந்தனர். பின்னர் அன்னூரில் தங்கி இருந்தனர். அப்போது கார்த்திக்கிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அவரை அவரது மனைவி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். சிகிச்சை முடிந்து கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
சம்பவத்தன்று வெளியே சென்ற கார்த்திக் கள்ளிப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டை திருடி தப்பிச் செல்ல முயன்றார்.
இதனை பார்த்த அங்கு இருந்த பொதுமக்கள் கார்த்திக்கை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணைக்காக கார்த்திக்கை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவரது மனைவி நவநீதமும் வந்தார். விசாரணைக்கு பின் கார்த்திக்கை, நவநீதத்திடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
அப்போது கார்த்திக் தனது மனைவியிடம் தண்ணீர் தாகம் எடுப்பதால் தண்ணீர் வாங்குவதற்கு பணம் கொடுக்கும்படி அவரது மனைவியிடம் கேட்டார். பணத்தை வாங்கி கொண்டு வெளியே சென்றார்.
தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக போலீஸ் நிலையம் முன்பு உள்ள ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி கார்த்திக் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி இறந்தார். உடனடியாக போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






