என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மரத்தின் கிளையை பிடித்து மேடான பகுதியில் நின்றதால் தப்பினார்.
    • தீயணைப்பு படையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்

    கவுண்டம்பாளையம்,

    கோவை இடிகரை அத்திபாளையம் பகுதியில் கவுசிகாநதி பெரும்பள்ளம் செல்கிறது. இந்த பள்ளத்தின் நடுவே பொதுமக்கள் நடந்து செல்ல மற்றும் போக்குவரத்து வாகனங்களில் செல்வதற்கு வசதியாக தரைப்பாலமும் உள்ளது.

    இன்று அதிகாலை பெய்த மழை காரணமாக இந்த பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் தரைப்பாலம் மூழ்கியது.அப்போது அத்திபாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். தரைப்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

    அவரது சத்தம்கேட்டும் அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் மரத்தின் கிளையை பிடித்து மேடான பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    • உரிய அனுமதி இல்லாமல் 16 யூனிட் கற்களை கடத்தியது அம்பலம்
    • மாவட்ட புவியியல் சுங்கத்துறை வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் நடவடிக்கை

    கோவை,

    தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடி அருகே கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரிகளில் உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு 16 யூனிட் கற்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் அந்த 2 லாரி களையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர் இதுகுறித்து கேஜிசாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2306051.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்ல உள்ளனர்.

    இதன் காரணமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் வருகிற 11-் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    எனவே பயணிகள் கூட்ட நெரிசலினறி இந்த பஸ்களில் பயணித்து கொள்ளலாம். மேலும் பயணிகள் ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல் அல்லது போக்குவரத்து நெரிசல் குறித்தும் புகார் செய்ய கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 11-ந் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் வகையில் கட்டுபாட்டு அறை பொதுமக்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேற்கண்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2306051. மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்து 9384808304 வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பலாம் .

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
    • வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலிறுத்தல்

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் ஏடிஎம் மையங்கள் அதிகளவில் உள்ளன. அவை கடந்த சில நாட்களாக சர்வர் கோளாறு காரணமாக செயலிழந்து காணப்படுகிறது.

    இதனால் வாடிக்கை யாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பெறும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அங்கு உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை, செயலிழந்து நிலை யில் உள்ளது

    ஒருசில பகுதிகளில் ஏ.டி.எம். தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. சிலஇடங்களில் ஏ.டி.எம் மையங்கள் மூடப்பட்டு உள்ளது. தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகள் ஊழிய ருக்கான சம்பளத்தை வங்கி கணக்கு வழியாகவே கையாள்கிறது.

    மேலும் வங்கிகள் வாடிக்கையாளருக்கான சேவையை அளிக்க தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் தீபாவளி செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்களும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஏ.டி.எம். மையம் தொடர்ந்து தடையின்றி செயல்பட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
    • ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி கல்லூரி முதல்வர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதன்படி ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல் வேண்டும், ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும்.

    ராகிங் புகார் பெட்டி, ஆலோசனை பெட்டியை அமைத்து ராகிங் கொடுமையை அறவே ஒழிக்க முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வரும், துறை தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் கடந்த 2019-ம் ஆண்டின் அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மகாராஷ்டிர அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இருக்கும் ராகிங் தடுப்பு குழுக்களில் அக்கல்லூரியின் தலைமை மற்றும் துறைசார்ந்த தலைவர்கள், பொதுத்துறை முக்கிய தலைவர்கள், போலீஸ் துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர், மாணவர் இருப்பது போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் ராகிங் குழுக்கள் அமைக்க வேண்டும்.

    இதுதொடர்பாக ஆய்வு செய்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து ராகிங் குறித்த அறிக்கை ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார்.
    • ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    கோவை:

    கோவை பீளமேட்டில் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 18 வயது மாணவர் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி மாணவர் விடுதியில் உள்ள அறையில் இருந்தார். அப்போது அதே கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேர் வந்தனர். அவர் 2-ம் ஆண்டு மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 7 மாணவர்களும் 2-ம் ஆண்டு மாணவரை யாரும் இல்லாத அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 7 பேரும் சேர்ந்து 2-ம் ஆண்டு மாணவரை நிர்வாணப்படுத்தி, மொட்டை அடித்து ராகிங் செய்தனர்.

    மேலும் மாணவரை நிர்வாணப்படுத்தி அவர்களது செல்போன்களில் வீடியோ எடுத்து பணம் கொடுக்கவில்லை என்றால் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினர். மேலும் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர்.

    இது குறித்து மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார். மாணவரின் பெற்றோர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் 2-ம் ஆண்டு மாணவரை ராகிங் செய்தது அந்த கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மணிகண்டன் (வயது 20), நித்யானந்தன் (20), ஐயப்பன் (21), தரணிதரன் (20), சந்தோஷ் (21), வெங்கடேஷ் (20), யாஜீஸ் (21) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் 7 மாணவர்கள் மீதும் ராகிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீசார் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைதான மாணவர்கள் 7 பேரையும் வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி செந்தில்ராஜா உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 7 மாணவர்களையும் கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் தடுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களை இதுபோன்ற ராகிங் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல ராகிங் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்கும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது.
    • உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கோவை:

    கோவை ஆலந்துறை செம்மேடு அருகே உள்ள பட்டியார் கோவில்பதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 73). கூலித் தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றனர். பின்னர் யானையை காட்டுக்குள் விரட்டினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்த கருப்பனை ஆம்புலன்சு மூலமாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வழிவிட்டான் மீது ஏற்கனவே பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோவை,

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உல்லா குடியை சேர்ந்தவர் மச்சராஜா(வயது27).

    இவர் கோவை டி.கே. மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் கோவையில் வசித்து வந்தார்.

    மச்சராஜாவும், மதுரையை சேர்ந்த வழிவிட்டான் (31), என்ற வாலிபரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.இதனால் வழிவிட்டான் அடிக்கடி மச்சராஜா வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது மச்சராஜாவின் மனைவியுடன் வழிவிட்டானுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனை அறிந்த மச்சராஜா தனது மனைவியை கண்டித்தார்.

    இந்தநிலையில், மச்சராஜாவின் மனைவி, தனது கணவரை திடீரென பிரிந்தார். பின்னர் அவர், வழிவிட்டானை 2-வதாக திருமணம் செய்து 2 பேரும் ராமநாதபுரத்தில் வசித்து வருகின்றனர்.இதுதொடர்பாக மச்சராஜாவுக்கும், வழி விட்டானு க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மச்சராஜா டி.கே மார்க்கெ ட்டில் பழ கமிஷன் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வழிவிட்டானுக்கும், மச்சராஜாவுக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்தது.

    இதில் ஆத்திரமடைந்த வழிவிட்டான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் மச்சராஜாவை வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மனைவியின் முதல் கணவரை அரிவாளால் வெட்டிய வழிவிட்டானை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். வழிவிட்டான் மீது ஏற்கனவே பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வட்டியும், அசல் தொகையையும் திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வருகிறார்.
    • புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள சின்ன தடாகம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுகுமார்(வயது53). சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

    இவர் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கோவை வடவள்ளி இடையர்பாளையம் ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ரகுநாத். ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார்.

    எனக்கு நட்பு ரீதியாக அவரது பழக்கம் கிடைத்தது. கடந்த 2016-ம் ஆண்டு அவர் தனது தொழிலை விரிவு படுத்த வேண்டும். அதற்கு வங்கி கடனை அடைக்க வேண்டும் என பணம் கேட்டார்.

    இதனை நம்பிய நான் அவரிடம் ரூ.53 லட்சம் கொடுத்தேன். ஆனால் அதற்கு அவர் சில மாதங்கள் வரை வட்டி கொடுத்தார்.

    அதன்பின்பு வட்டியும், அசல் தொகையையும் திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தனது வீட்டை விற்று கடனை அடைத்து விடுவதாக தெரிவித்தார்.

    ஆனால் பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுக்கவில்லை. மேலும் ரகுநாத் வீட்டை விற்க அவரது மனைவி சுசித்ராவிடம் பவர் பத்திரம் எழுதி கொடுத்து விட்டு வெளிநாடு செல்ல திட்டமிடுவதாக தெரிகிறது.

    எனவே ரூ.53 லட்சம் மோசடி செய்த ரகுநாத் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ரகுநாத், அவரது மனைவி சுசித்ரா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையில் உள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.
    • கோவை மாவட்டத்தில் இருந்து 290 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    கோவை,

    கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள தொழில் நிறுவனங்களில் வெளிமா வட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்வது வழக்கம். தற்போது வருகிற 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி கோவையில் உள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகி றார்கள்.

    பஸ்கள், ரெயில்களில் முன்பதிவு செய்து ஊருக்கு செல்வதற்கு தயாராகி உள்ளனர்.

    கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பெரும்பாலானவை நிரம்பி விட்டன. குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுதினத்திற்கு அனைத்து பஸ்களும் நிரம்பி காணப்படுகிறது.

    தீபாவளியை கொண்டாட ெசாந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக கோவையில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் இருந்து மதுரை, தேனி, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு 290 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்கள் நாளை முதல் வருகிற 11-ந் ேததி வரை இயக்கப்பட உள்ளது.

    இந்த பஸ்களில் பயணிக்க ஆயிரக்கணக்கான மக்கள் முன்பதிவு ெசய்து காத்திருக்கின்றனர். தீபாவளி தொடர்விடு முறையை யொட்டி நாளை முதலே பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள்.காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையம் மற்றும் சூலூர் பஸ் நிலையம் உள்பட 4 இடங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    திருச்சி, கரூருக்கு செல்ல கூடிய பஸ்கள் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்தும், மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், சத்தியமங்கலம் பகுதிக்கும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, கூடலூர் பகுதிக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த பஸ் நிலையங்களுக்கு காந்திபுரம், உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் அடிக்கடி இயக்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அரசு பஸ்கள் மட்டுமின்றி ஆம்னி பஸ்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடருகிறார்கள்.

    10-ந் தேதியே அதிகமானோர் பயணம் செய்ய விரும்புகிறார்கள். அன்றைய தினம் அதிகளவிலான கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகி றது.

    • குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று வேளாண்மை செய்தார்.
    • போர்வெல் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் அதிக விளைச்சலை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதாக கூறினார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் அருகே உள்ள பாலமலை பகுதியில் 5-க்கும் மேற்பட்ட பழ ங்குடியின குடும்பங்கள் உள்ளன. அவர்கள் பருவ மழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பால மலை அடுத்த பசுமணிபுதூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரம ணியம் (வயது 55) என்ப வருக்கு சிறந்த விவசாயி விருது வழங்கப்பட்டு உள்ளது. இது பாலமலை பகுதியில் வசிக்கும் கிராம த்தினர் மத்தியில் பெருமிதம் ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சுப்பிர மணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    நாங்கள் பாலமலை பகுதியில் தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். அங்கு பருவமழையை மட்டும் நம்பியே விவசாயம் நடக்கிறது. மேலும் எங்க ளின் 4 ஏக்கர் பரப்பளவில் சக உறவினர்கள் உதவி யுடன் ராகி, கம்பு, சோளம் உட்பட வானம் பார்த்த பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம்.

    சில சமயங்களில் நாங்களே குடத்தில் தண்ணீர் முகர்ந்து சென்று பயிர்களுக்கு விட்டு வேளாண்மை செய்து வருகிறோம். இயற்கை முறையில் விளைவதால் பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு வந்த வேளாண்து றையினர் எங்களின் விவ சாய நேர்த்தி பற்றி அறிந்து மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி என்னை சென்னைக்கு அழைத்து கவுரவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இது எங்களை போன்ற பழங்கு டியின மக்களை ஊக்குவி ப்பதாக அமைந்து உள்ளது.

    மேலும் தற்போது காப்பி விளைச்சல் செய்வதற்காக தனியார் அமைப்பினர் சோதனை அடிப்படையில் எங்களுக்கு விதைகளை கொடுத்து உள்ளனர். பாலமலை பகுதியில் வசி க்கும் பழங்குடியின மக்க ளுக்கு விவசாய நிலத்தில் போர்வெல் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் அதிக விளைச்சலை உருவாக்கி, எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சிறந்த விவசாயி விருது பெற்ற சுப்பிரமணிய த்துக்கு, பாலமலை அரங்க நாதர் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சடையகவுண்டன்புதூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). மில் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நெகமம் அருகே உள்ள தூரிபாளையத்தை சேர்ந்த மாமனார் அய்யாசாமி (70) என்பவரை ஏற்றிக்கொண்டு ரங்கன்புதூரில் இருந்து சடையகவுண்டனூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    மோட்டார் சைக்கிள் பல்லடம் ரோட்டில் தண்ணீர் பந்தல் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அய்யாசாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் அய்யாசாமியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தில் இறந்த மாரிமுத்துவின் உறவினர்கள் இழப்பீடு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு நெகமம் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×