என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • போலீசார் சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
    • போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுந்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் காரை ஓட்டி வந்த ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் சிங்காநல்லூர் அருகே நீலிகோணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராபியா என்பவர் மூலமாக நீலிக்கோணம் பாளையம், கள்ளிமடை, ஒண்டிப்புதூர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் பெண்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, கள்ளச் சந்தையில் கேரளாவுக்கு கடத்தி சென்று மளிகை கடை மற்றும் ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் ராபியாவையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
    • விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவை:

    சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கடந்த 6-ந் தேதி கோவை விமான நிலையம் வந்தது. பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்தில் 3 பெட்டிகள் அனாதையாக இருந்தது. அந்த பெட்டிகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை.

    ஒருநாள் முழுவதும் 3 பெட்டிகளும் அங்கேயே இருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் அடைந்து 3 பெட்டியை யார் எடுத்து வந்தார்கள் என்று கண்காணிப்பு கேமிரா மூலம் சோதனை செய்தனர்.

    அப்போது 3 நபர்கள் பெட்டியை எடுத்து வந்து வைப்பதும், அவர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவர்களை விமான நிலையத்திற்கு வரவழைத்தனர். 3 பேரில் 2 பேர் டொமினிக், ராமசாமி ஆகியோர் விசாரணைக்கு வந்தனர். ஒரு நபர் வரவில்லை.

    இதுகுறித்து விசாரணை மேற்கண்டபோது பெட்டியில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்களான 11 ஆயிரம் ஆமைகள், சிலந்தி வகைகள், அரியவகை பாம்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அரியவகை வெளிநாட்டு விலங்குகள் என்பதால் மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்ப சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • காளியாபுரம், பணந்தோப்பு மயில், தர்மர் கோவில் வீதி பகுதியில் 40 வீடுகளில் மழை நீர் புகுந்தது.
    • குப்பனூர், ஆம்போதி, பொகலூர் ஊராட்சிகளில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்கு தொடங்கிய மழை காலை 9 மணி வரை இடைவிடாது கொட்டித்தீர்த்தது.

    இந்த மழையால் அன்னூர் பகுதியில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. மழையால் கணுவக்கரையில் ஒரு தோட்டத்து கோழிப்பண்ணையில் 2500 கோழிகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    அன்னூர் கட்டபொம்மன் நகர், அல்லிகுளம், தாசபாளையம் பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த 15 ஆயிரம் வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வாழைத்தோட்டத்தில் இரண்டு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்றது.

    காளியாபுரம், பணந்தோப்பு மயில், தர்மர் கோவில் வீதி பகுதியில் 40 வீடுகளில் மழை நீர் புகுந்தது. குப்பனூர், ஆம்போதி, பொகலூர் ஊராட்சிகளில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

    பழனி கிருஷ்ணா அவென்யூவில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அங்கு பொதுப்பணித்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அந்த பகுதியில் 100 அடி ஆழ கிணறு ஒன்று நிரம்பி அதில் இருந்து தண்ணீர் வெளியேறியது. ஏராளமான வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    • 2 பேரும் போதையில் வீட்டில் உள்ள அறையில் படுக்க சென்றனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    குனியமுத்தூர்:

    கோவை வெள்ளலூர் அருகே உள்ள வள்ளியம்மன்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்த மனைவியின் அண்ணன் சக்திவேல் (40) என்பவரது மகள் புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு சென்றார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் உறவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த போது நாகராஜ், சக்திவேல் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் போதையில் வீட்டில் உள்ள அறையில் படுக்க சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் அங்கு இருந்த உருட்டு கட்டையால் நாகராஜின் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். என்ன நடந்தது என்பது தெரியாமல் சக்திவேல் அங்கே படுத்து தூங்கினார். நள்ளிரவு அறைக்கு சென்றவர்கள் நாகராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்கள் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் போதை தெளிந்து எழுந்த சக்திவேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புனித நீராட்டு விழா நிகழ்ச்சியில் நடந்த மது விருந்தில் தங்கையின் கணவரை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த சக்திவேலை தேடி வருகின்றனர்.

    • சகதியும், சேறுமாக வீடுகளில் படிந்துள்ளதால் அவற்றை சுத்தப்படுத்திய பிறகு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
    • செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழை மாவட்டத்தையே புரட்டிப்போட்டது.

    நள்ளிரவு 12 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை காலை 8 மணி வரை இடை விடாமல் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளங்களில் மழை நீர் தேங்கியது. பல ஆண்டுகளுக்கு பிறகு 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன.

    சில இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அந்த இடங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவை நகர் பகுதியான செல்வபுரத்தில் செல்வ சிந்தாமணி குளம் உள்ளது. இந்த குளமும் நேற்று நிரம்பியது. தண்ணீர் குளத்துக்கு வந்து கொண்டே இருந்ததால் உபரிநீர் குளத்தில் இருந்து வெளியேறியது.

    குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குளத்தை ஒட்டியுள்ள அசோக் நகர், பிரபு நகர், சாவித்திரி நகருக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.

    வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.

    மழை ஓய்ந்ததால் குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. வீடுகளை சூழ்ந்து நின்ற தண்ணீரும் வடியத் தொடங்கி உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் மண்டபத்திலேயே தங்கி உள்ளனர். சகதியும், சேறுமாக வீடுகளில் படிந்துள்ளதால் அவற்றை சுத்தப்படுத்திய பிறகு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

    செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று 2-வது நாளாக தண்ணீர் வடியாமல் அப்படியே நின்றது. இதனால் அந்த ஒரு பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது.

    இதேபோல வெள்ளக்கிணறு குட்டைமேடு குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்த பகுதியில் கொஞ்சம், கொஞ்சமாக மழை நீர் வடிந்து வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

    • சிமெண்டு சாக்குப்பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • கிடைத்த பணமான ரூ.78 லட்சத்தை கேரளா கொண்டு செல்வதற்காக ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு மாற்றினோம்.

    கோவை:

    கோவை மதுக்கரை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் இளவேந்தன் தலைமையில் இரவு 7.30 மணியளவில் செட்டிப்பாளையம் பிரிவு அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த சிலர் ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு சிமெண்டு சாக்குப்பைகளை மாற்றிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனையடுத்து போலீசார் காரின் அருகே சென்று சோதனை செய்தனர்.

    அப்போது சிமெண்டு சாக்குப்பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு நின்றுகொண்டு இருந்த 3 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் சாக்குப்பையில் இருந்த பணம் மற்றும் 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சசிகாந்த் (வயது 48). இவரது மகன் நிகில் (22), சுரேஷ் (45) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவர்களிடம் பணம் எப்படி வந்தது என விசாரணை நடத்தினர்.

    நாங்கள் கேரள மாநில வடக்கஞ்சேரியில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறோம். கோவை ராஜ வீதியை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது வீட்டில் 1,403 கிராம் தங்க கட்டிகளை விற்றோம். அதில் கிடைத்த பணமான ரூ.78 லட்சத்தை கேரளா கொண்டு செல்வதற்காக ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு மாற்றினோம். அப்போது எங்களை போலீசார் பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆனால் அவர்களிடம் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே மதுக்கரை போலீசார் ரூ.78 லட்சம் பணம், 2 கார்கள் மற்றும் 3 பேரையும் மத்திய வருமான வரித்துறை குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கேரளா மாநிலத்தில் இருந்து நீண்ட காதுகளை உடைய ஜமுனா பாரி ரக ஆடுகள் அதிகம் விற்பனைக்கு வந்திருந்தன.
    • ஆடுகளை வாங்குவதற்காக அதிகாலை 4 மணி முதலே நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குவிந்தனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    அதிகாலையில் தொடங்கும் விற்பனையில் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். புரட்டாசி மாதம் என்பதால் கடந்த சில வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்தநிலையில் நாளை மறுநாள் (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை என்பதால் பொள்ளாச்சி வாரச்சந்தைகளில் நேற்று ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    தமிழகத்தில் நாட்டு ஆடுகள் குறைவாக விற்பனைக்கு வந்திருந்தன. கேரளா மாநிலத்தில் இருந்து நீண்ட காதுகளை உடைய ஜமுனா பாரி ரக ஆடுகள் அதிகம் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடுகளை வாங்குவதற்காக அதிகாலை 4 மணி முதலே நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குவிந்தனர். 5 கிலோ எடையுள்ள ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை ஆனது. 20 கிலோ எடையுள்ள ஆடு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.1 ஆயிரம் வரை விற்பனையானது. பொள்ளாச்சியில் சுமார் ரூ.2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மழைக்கு கடையின் சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    இதனிடையே நேற்றிரவும் பலத்த மழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு பல சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

    மேட்டுப்பாளையம் காந்திபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது63). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதிகளில் உள்ள கடையோரங்களில் இரவில் படுத்து தூங்குவது வழக்கம். நேற்றிரவு அங்கு புதுப்பித்து கட்டப்பட்டு வரும் ஒரு கடையின் அருகே படுத்து தூங்கினார்.

    நேற்றிரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், புதுப்பிக்கப்பட்டு வரும் கடையின் சுவர் மற்றும் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் கடையின் கீழே படுத்திருந்த பழனிசாமி சிக்கி கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இடிபாடுகளை அகற்றி, இறந்த பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மழைக்கு கடையின் சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சில இடங்களில் சாலையோரங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
    • மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கோவை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது லேசான மழையும், சில நேரங்களில் கனமழையும் கொட்டி தீர்த்தது.

    நேற்று காலை வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு காலநிலை அப்படியே மாறியது. வெயில் மறைந்து வானில் மேகமூட்டங்கள் திரண்டு மேகமூட்டமாகவே காட்சியளித்தது.

    தொடர்ந்து நள்ளிரவில் கோவை மாவட்டம் முழுவதுமே பரவலாக மழை பெய்தது.

    கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர், கணபதி, ரெயில் நிலையம் பகுதி, டவுன் ஹால், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது. விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    சில இடங்களில் சாலையோரங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி, சோமசுந்தரம் மில்ரோடு பாலம், வடகோவை மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி பாலம் உள்பட மாநகரில் உள்ள பாலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    குறிப்பாக சோமசுந்தரம் மில்ரோடு ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் பாலத்தில் மழைநீர் பாலத்தை மூழ்கடிக்கும் வகையில் மழைநீர் தேங்கியது. இதனால் பாலங்களின் கீழ் பகுதிகளில் வாகனங்கள் செல்வது, உடனடியாக நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

    சில இடங்களில் காலை நேரத்திலேயே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே சென்றன. காலை நேரத்தில் பெய்த இந்த மழை காரணமாக அதிகாலையில் வேலைக்கு செல்வோர் உள்பட பல்வேறு தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியால் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பாலங்களில் தண்ணீர் தேங்கிய தகவல் கிடைத்ததும், மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து, ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    தீபாவளி நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகளுக்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களும், பாதிப்புக்குள்ளானார்கள்.

    புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், அம்பாரம்பாளையம், கோவில்பாளையம், சரவணம்பட்டி, சூலூர், கருமத்தம்பட்டி, சோமனூர், நீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    மேட்டுப்பாளையம், அன்னூர், சிறுமுகை, காரமடை, பெள்ளேபாளையம், பொகலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக அந்த பகுதிகளில் உள்ள குளங்கள், குட்டைகள் அனைத்தும் நிரம்பி, தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. பல இடங்களில் வீடுகளும், வீட்டின் தடுப்பு சுவர்களும் இடிந்துள்ளன.

    தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு கனமழை பெய்தது. மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, திடீரனெ காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வனப்பகுதி மற்றும் அதனையொட்டிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மருதமலை அடிவார பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியான ஐ.ஓ.பி காலனியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள சாலை ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வரமுடியாத நிலை உள்ளது. அந்த பகுதியை சுற்றிலும் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் தனித்தீவு போன்றே காட்சியளிக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, மாற்றுப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    • பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது.
    • மேட்டுப்பாளையத்தில் இருந்து 155 பயணிகளுடன் இன்று புறப்பட்ட மலைரெயில், கல்லார் பகுதிக்கு முன்பாக சென்றபோது, மண் அரிப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் நிறுத்தப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் விரும்புவார்கள்.

    தற்போது மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 3-ந் தேதி இரவு பெய்த மழைக்கு, மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைரெயில் பாதையில் மரங்கள், மண்சரிவு ஏற்பட்டதால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மலைரெயில் ரத்து செய்யப்பட்டது.

    பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் நீலகிரி, கோவை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால், குன்னூர் மலைரெயில் பாதையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன.

    இதுதவிர நேற்றிரவு திடீரென கல்லார் பகுதியில் உள்ள மலைரெயில் தண்டாவள பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் வடிந்த பின்னர் அந்த பகுதியில் மண்அரிப்பும் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல மேட்டுப்பாளையத்தில் இருந்து 155 பயணிகளுடன் புறப்பட்ட மலைரெயில், கல்லார் பகுதிக்கு முன்பாக சென்றபோது, மண் அரிப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் மலைரெயில் நிறுத்தப்பட்டது.

    பின் அங்கிருந்து மீண்டு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் வந்து, சுற்றுலா பயணிகளுக்கு அவர்களது முன்பதிவு பணம் திருப்பி கொடுக்கப்பட்டு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தண்டவாள பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக இன்று ஒரு நாள் மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • லாரிகளுக்கான பசுமை வரியை ரூ.500-ல் இருந்து, 750 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
    • மாவட்டத்தில் 2,500 லாரிகள் இன்று ஓடவில்லை.

    கோவை,

    தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி கோவையிலும் கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோவையில் 2,500 லாரிகள் ஓடவில்லை.

    இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் இயங்கி வந்தன. ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க கட்டணம் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. தற்போது 2.50 லட்சம் எண்ணிக்கையிலான லாரிகள் மட்டுமே இயங்குகின்றன.

    லாரி தொழில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் லாரிகளுக்கான பசுமை வரியை ரூ.500-ல் இருந்து, 750 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

    அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்க சாவடிகளை அகற்ற கோரியும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம். அதன்படி, மாவட்டத்தில் 2,500 லாரிகள் இன்று ஓடவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 80-வது வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான மாரிசெல்வன் முன்னிலை வகித்தார்.
    • ஏழ்மையான மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம் அதிகரிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார குழு கூட்டம் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். 80-வது வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான மாரிசெல்வன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் பேசியதாவது:-

    தெருநாய்களை கட்டுப்படுத்தும் விஷயத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரின செயல்பாடு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருப்தியாக இல்லை. எனவே அதில் புதிய முறையை கொண்டு வர வேண்டும். தகுதியானவர்கள் அந்த பணியில் ஈடுபடுத்தினால் தெருநாய்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:-

    தற்போது குப்பை பிரச்சினை தீவிரமாக உள்ளது. தரம் பிரிக்காமல் கொட்டப்படும் குப்பையால் குப்பை மேலாண்மையில் பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதார குழுவினர் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் உறுப்பினர்கள் கேள்வி கேட்க வேண்டும். உரிய பதில் அளிக்கும் பொறுப்பு அதிகாரிகள், பணியாளர்களுக்கு உள்ளது. அப்படி பதில் தரமறுத்தால் மெமோதரப்படும். அதேபோல் ஏழ்மையான மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர் சிவக்குமார், நகர் நல அலுவலர் தாமோதரன், உதவி நகர் நகல அலுவலர் வசந்த் திவாகர், பொது சுகாதார குழு உறுப்பினர்கள் குமுதம், மணியன், சம்பத், சுமித்ரா, அம்சவேணி, கமலாவதி, வசந்தாமணி, அஸ்லாம் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    ×