என் மலர்
செங்கல்பட்டு
- பறவைகள் மற்றும் மனிதர்களால் பெருமளவு ஆமை முட்டைகள் சேதமடைந்து வந்தன.
- ஆமை குஞ்சுகள் பொறித்ததும் அவை கடலில் விடப்படும் அதுவரை சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளில் 83 சதவீதம் நல்ல நிலையில் இருந்தன.
மாமல்லபுரம்:
ஆமைகளின் இனப்பெருக்க காலமாக டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ளது. மே மாதம் வரை முட்டையில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகள் கடலுக்குள் செல்வது வழக்கம்.
சென்னை கடற்கரை பகுதியான மெரினா ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பெசன்ட் நகர், பழவேற்காடு பகுதிகளில் அதிக அளவு ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் கரையோரம் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம்.
பறவைகள் மற்றும் மனிதர்களால் பெருமளவு ஆமை முட்டைகள் சேதமடைந்து வந்தன. இதையடுத்து ஆமைகள் முட்டைகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் ஆமைகள் அதிக அளவில் முட்டையிட்டு செல்லும் கடற்கரை பகுதிகளை கண்காணித்து ஆமை முட்டைகளை பத்திரமாக சேகரித்து வருகிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களில் சென்னை கடற்கரை பகுதிகளில் 430 இடத்தில் இருந்து 42 ஆயிரத்து 650 ஆமை முட்டைகளை சேகரித்து உள்ளனர். அதில் பெசன்ட்நகர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள ஆமை குஞ்சு பொறிப்பு பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஆமை குஞ்சுகள் பொறித்ததும் அவை கடலில் விடப்படும் அதுவரை சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளில் 83 சதவீதம் நல்ல நிலையில் இருந்தன. சுமார் 46,755 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளது என்று ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 490 இடங்களில் இருந்து 55 ஆயிரத்து 713 ஆைம முட்டைகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது,
"கடந்த 2019-2020, 2020-2021 ஆம் ஆண்டுகள் ஆமை முட்டைகளை சேகரிப்பதில் மோசமான ஆண்டாக இருந்தது. 2021-ம் ஆண்டு 41 ஆயிரத்து 326 ஆமை முட்டை கள் சேகரிக்கப்பட்டது.
தற்போது சென்னை கடற்கரை பகுதியில் இறந்து ஒதுங்கப்படும் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. பழவேற்காட்டில் கடந்த மாதம் அதிகமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. ஆமைகள் நடமாட்டம் கடற்கரை பகுதியில் இந்த மாதம் இறுதிவரை இருக்கும். முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சு பொறிக்க 45 முதல் 50 நாட்கள் வரை ஆகும்" என்றார்.
- வேளாண் மற்றும் தோட்டக்கலை பாட திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி வேளாண் பணிகளை அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சி முகாம் நடைபெற்றது.
- எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஆர்.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
கூடுவாஞ்சேரி:
செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டை வேந்தர் நகரில் இயங்கி வரும் எஸ். ஆர். எம். வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி (ஹானஸ்) வேளாண்மை, பி. எஸ்சி (ஹானஸ்) தோட்டக்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் 268 பேர் கல்லூரி வேளாண் மற்றும் தோட்டக்கலை பாட திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி வேளாண் பணிகளை அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சி முகாம் நடைபெற்றது.
மதுராந்தகம், அச்சரப்பாக்கம், சித்தாமுர், ஓரத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3 மாதம் 26 குழுக்களாக தங்கி வேளாண்மை துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் சாகுபடி பணிகள், நீர் மேலாண்மை, மண் வளம் உள்ளிட்ட வேளாண் பணிகள் பற்றி பயிற்சி பெற்றனர். முகாம் நிறைவு விழா கல்லூரி டீன் எம். ஜவஹர்லால் தலைமையில் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். சமூக அறிவியல் துறை தலைமை பேராசிரியர் ஏ. அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். துணை பேராசிரியர் ஆர். ராஜசேகரன் கிராம வேளாண் பணி அனுபவங்கள், கண்காட்சி பற்றி விளக்கி கூறினார்.
எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஆர்.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆர்.அசோக் கவுரவு விருந்தினராக பங்கேற்று வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு அரசு துறைகளில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் பற்றி பேசினார். இதில் வேளாண் உதவி இயக்குனர் அருள் பிரகாசம், தோட்டக்கலை அலுவலர் திரிபுராசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியை எஸ். ஆனந்தி நன்றி கூறினார்.
- பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று காலை முட்டுக்காடு படகு குழாமில் தொடங்கி வைத்தார்.
- சமையல் அறை, பொருட்கள் சேமிப்பு அறை, கழிவறை மற்றும் எந்திர அறை தனித்தனியாக இருக்கும்.
திருப்போரூர்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், எந்திர படகுகள், வேகமான எந்திர படகுகள் உள்ளன. இதனால் படகு குழாமுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் இந்த படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் சொகுசு உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது. இது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல் படுத்தப்பட உள்ளது. இந்த சொகுசு உணவக கப்பல் தமிழ்நாட்டில் முதல் முறையாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று காலை முட்டுக்காடு படகு குழாமில் தொடங்கி வைத்தார்.

இதில் அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர். சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மிதக்கும் உணவக கப்பலின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடனும் முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல்தளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டு பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சமையல் அறை, பொருட்கள் சேமிப்பு அறை, கழிவறை மற்றும் எந்திர அறை தனித்தனியாக இருக்கும்.
மிதக்கும் பிரம்மாண்ட சொகுசு உணவு கப்பல் பயன்பாட்டுக்கு வரும்போது முட்டுக்காடு படகு குழாமிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் இதயவர்மன், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாமயில் வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் லி.பாரதி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காட்டாங்கொளத்தூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது திடீரென கார் மோதியது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி இன்று அதிகாலை கார் வந்து கொண்டு இருந்தது. காரை வெங்கம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் தினேஷ்(24) ஓட்டினார். காரில் தனியார் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகள், 2 மாணவர்கள் பயணம் செய்தனர்.
காட்டாங்கொளத்தூர் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி மீது திடீரென கார் மோதியது. இதில் டிரைவர் தினேஷ் பரிதாபமாக இறந்தார். மாணவ-மாணவிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி வரவேற்று பேசினார்.
- நல திட்ட உதவிகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கூடுவாஞ்சேரி:
காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தி. மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் ஊரப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளரும் , ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. ஊரப்பாக்கம் ஊராட்சி கிளை கழக செயலாளர் மெய்யழகன், ஜான்தினகரன், தமிழ்ச் செல்வன், இன்பசேகரன், கண்ணன், சண்முகம், சாய்ராம், புஷ்பராஜ், வரலட்சுமிமுருகன், ஜே.கே.தினேஷ், சி.ஜெ.கார்த்திக், வாசு, கமலநாதன், செல்வகுமார், சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா, செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.டி.சண்முகம் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் கருணாகரன், மகளிர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தீபன் மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
விழாவில் கிளை செயலாளர் சி.ஜே.கார்த்திக் ஏற்பாட்டில் 2500 பெண்களுக்கு புடவை, பிரியாணி, சலவைத் தொழிலாளர்கள் 15 பேருக்கு அயன்பாக்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டி, இளைஞர்களுக்கு கேரம் போர்டு, வாலிபால், டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் கிட் ஆகிய நல திட்ட உதவிகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏவி.எம். இளங்கோவன் நன்றி கூறினார்.
- வண்டலூர் பூங்காவில் தற்போது 9 சிங்கங்கள் மட்டுமே உள்ளது.
- குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்காக பணிகள் நடந்து வந்தது.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, மனித குரங்கு உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து செல்கிறார்கள். வார விடுமுறை நாட்களில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பார்வையாளர்கள் வருவது வழக்கம்.
வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களை கவர்ந்து வரும் விலங்குகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதன்படி விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மற்ற மாநிலங்களில் இருந்து விலங்குகள் இங்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக இங்கிருந்து மற்ற பூங்காவுக்கு தேவையான விலங்குகள் அல்லது பறவைகளை கொடுப்பது வழக்கம்.
வண்டலூர் பூங்காவில் தற்போது 9 சிங்கங்கள் மட்டுமே உள்ளது. அதில் ஒரு வயதான சிங்கம் மருத்துவ பராமரிப்பில் உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது 2 சிங்கங்கள் இறந்தன. இதனால் பூங்காவில் உள்ள ஆண், பெண் சிங்கங்கள் விகிதம் குறைந்தது. கடந்த 2 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள மற்ற உயிரியல் பூங்காவில் இருந்து 2 ஆசிய சிங்கங்களை விலங்குகள் பரிமாற்றத்தில் பெற திட்டமிடப்பட்டது.
இதற்காக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்காக பணிகள் நடந்து வந்தது. இதனால் குஜாரத்தில் இருந்து ஆசிய சிங்கங்கள் வண்டலூர் பூங்காவுக்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிய சிங்கங்களை வழங்க குஜாராத் பூங்கா தற்போது மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு சிங்கங்களை பெற அடுத்தகட்ட நடவடிக்கையாக ஐதராபாத் மற்றும் திருப்பதி உயிரியல் பூங்காவை நாடி உள்ளனர். விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு இமாலயா கரடியும், மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிறு கரடியும் வர உள்ளது. மேலும் வண்டலூர் பூங்காவுக்கு செஞ்சியில் மீட்கப்பட்ட ஒரு கரடி வர உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
- ஜேக்கின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாமல்லபுரம்:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜேக்(வயது65). இவரது மனைவி ஸ்டெல்லா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனைவரும் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் தங்கி இருந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தனர். ஜேக்கிற்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்காக அவர் தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜேக் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் வடக்கு மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஜேக் பிணமாக கரை ஒதுங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து ஜேக்கின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜேக் கடலில் குதித்து தற்கொலைசெய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் பல்வேறு கோணங்களில தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை தொல்லியல் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து பராமரித்து வருகிறது.
- சப்த மாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் சிலைகளை, அதுவும் பல்லவர் கால வழிபாட்டின் பழைய சிலைகளை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
மாமல்லபுரம்:
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இங்கு வடித்த குடைவரை கோவில்கள், குடைவரை மண்டபங்கள், ரதங்கள், பாறை சிற்பங்கள் உள்ளிட்ட புராதன சின்னங்களை கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர். இந்த கற்சிற்ப புராதன சின்னங்களை பார்வையிடுவதற்காக மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான, உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை தொல்லியல் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து பராமரித்து வருகிறது. மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்திலேயே சப்த கன்னியர் வழிபாடு நடந்துள்ளதாகவும், இதற்காக பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமூண்டீஸ்வரி போன்ற சப்த கன்னியர்களுக்கு (7 கன்னிகள்) பல்லவர்கள் சிலைகள் அமைத்து வழிபட்டுள்ளனர்.
பொதுமக்கள் குடியிருப்பு வளாக பகுதியில் உள்ள இந்த சப்த கன்னியர் புராதன சின்ன பகுதியில் சமூக விரோதிகள் சிலர் அங்குள்ள கம்பி வேலியை தாண்டி உள்ளே சென்று மது குடிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் இதுவரை அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.
தற்போது மாமல்லபுரத்திற்கு குழு குழுவாக சுற்றுலா வரும் பொதுமக்களிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சப்த கன்னியர் 7 பேரின் சிலைகள் உள்ள இந்த புராதன சின்னத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து தற்போது மாமல்லபுரம் தொல்லியல் துறையின் சிறப்பு அனுமதி பெற்று மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் சப்த கன்னியர் புராதன சின்னத்தை ஆர்வமுடன் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
இந்த சப்த கன்னியர் புராதன சின்னம் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறும்போது:-
சப்த மாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் சிலைகளை, அதுவும் பல்லவர் கால வழிபாட்டின் பழைய சிலைகளை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு சப்த கன்னியர் பூஜை செய்வதைதான் பார்த்திருக்கிறோம்.
தற்போது நேரில் 7 தெய்வங்களின் சிலைகளை பார்த்து வழிபட்டு செல்வது மனநிறைவாக உள்ளது. இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
இதனால் மாமல்லபுரத்தில் மற்ற புராதன சின்னங்களுக்கு வருவதுபோல் இங்கும் தற்போது சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
- குருவாயூரில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பார்த்தசாரதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம், நாராயணன் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (35). செங்கல்பட்டு படாளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது குருவாயூரில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பார்த்தசாரதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான பார்த்தசாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விடுதி, உணவகம், டிஜிட்டல் வகுப்பறை, உடற்பயிற்சி மையம், மருத்துவமனை என சகல வசதிகளும் உள்ளன.
- இயற்கை, செயற்கை மற்றும் ஹைபிரிட் என மூன்று கால்பந்து மைதானங்கள் உள்ளன.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில், இந்தியா மற்றும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்புகளின் தரநிலை பரிந்துரையின் கீழ் 23 ஏக்கர் நிலப்பரப்பில், இரவிலும் விளையாடும் வகையில் சர்வதேச தர கால்பந்து அகாடமியை "எப்.சி மெட்ராஸ்" என்ற நிறுவனம் துவங்கி உள்ளது.
இதில் 130 பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில் விடுதி, உணவகம், டிஜிட்டல் வகுப்பறை, கருத்தரங்க கூடம், உடற்பயிற்சி மையம், மருத்துவமனை, கால்பந்து மைதானங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன. இயற்கை, செயற்கை மற்றும் ஹைபிரிட் என மூன்று கால்பந்து மைதானங்கள் உள்ளன. இயற்கையான புல்வெளி மைதானமானது, வரையறுக்கப்பட்ட அளவிலான மைதானத்தைவிட 1.5 மடங்கு அதிகம். இது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும்.
இங்கு கால்பந்து விளையாட்டு திறனும், ஆர்வமும் உடைய இளம் வீரர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கிழக்காசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம் இதுவே என அகாடமியின் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம், இயக்குனர் தனஞ்செய் ஆகியோர் தெரிவித்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுதா அணிந்து இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
- சுதா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடாபுரம் மேட்டு காலனி தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா (வயது 37). இவர் திருக்கச்சூர் அண்ணா நகரில் உள்ள சென்ட்ரிங் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுதா அணிந்து இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சுதா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- இன்றைய இணைய உலகத்தில், தகவலே ஆற்றலுக்கும் அதிகாரத்திற்கும் அடித்தளம்.
- மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச 'வை-பை' சேவைகள் வழங்கப்படும்.
2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
இன்றைய இணைய உலகத்தில், தகவலே ஆற்றலுக்கும் அதிகாரத்திற்கும் அடித்தளம். இந்த அரசின் சமூகநீதிக் கொள்கையை நிலைநாட்ட, தகவல்களையும், வாய்ப்புகளையும் பரவலாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவது மிக அவசியமாகும்.
எனவே, முதற்கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச 'வை-பை' சேவைகள் வழங்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.






