search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வண்டலூர் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்றத்தில் 2 சிங்கங்கள் வழங்குவதை குஜராத் பூங்கா நிராகரித்தது
    X

    வண்டலூர் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்றத்தில் 2 சிங்கங்கள் வழங்குவதை குஜராத் பூங்கா நிராகரித்தது

    • வண்டலூர் பூங்காவில் தற்போது 9 சிங்கங்கள் மட்டுமே உள்ளது.
    • குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்காக பணிகள் நடந்து வந்தது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, மனித குரங்கு உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து செல்கிறார்கள். வார விடுமுறை நாட்களில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பார்வையாளர்கள் வருவது வழக்கம்.

    வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களை கவர்ந்து வரும் விலங்குகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதன்படி விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மற்ற மாநிலங்களில் இருந்து விலங்குகள் இங்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக இங்கிருந்து மற்ற பூங்காவுக்கு தேவையான விலங்குகள் அல்லது பறவைகளை கொடுப்பது வழக்கம்.

    வண்டலூர் பூங்காவில் தற்போது 9 சிங்கங்கள் மட்டுமே உள்ளது. அதில் ஒரு வயதான சிங்கம் மருத்துவ பராமரிப்பில் உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது 2 சிங்கங்கள் இறந்தன. இதனால் பூங்காவில் உள்ள ஆண், பெண் சிங்கங்கள் விகிதம் குறைந்தது. கடந்த 2 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தது.

    இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள மற்ற உயிரியல் பூங்காவில் இருந்து 2 ஆசிய சிங்கங்களை விலங்குகள் பரிமாற்றத்தில் பெற திட்டமிடப்பட்டது.

    இதற்காக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்காக பணிகள் நடந்து வந்தது. இதனால் குஜாரத்தில் இருந்து ஆசிய சிங்கங்கள் வண்டலூர் பூங்காவுக்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிய சிங்கங்களை வழங்க குஜாராத் பூங்கா தற்போது மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு சிங்கங்களை பெற அடுத்தகட்ட நடவடிக்கையாக ஐதராபாத் மற்றும் திருப்பதி உயிரியல் பூங்காவை நாடி உள்ளனர். விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு இமாலயா கரடியும், மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிறு கரடியும் வர உள்ளது. மேலும் வண்டலூர் பூங்காவுக்கு செஞ்சியில் மீட்கப்பட்ட ஒரு கரடி வர உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×