என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினமாக கடை பிடிக்கப்படுகிறது.
    • மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 வசூலிக்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உலக பாரம்பரிய தினமாக கடை பிடிக்கப்படுகிறது.

    உலக பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் முழுவதும் பார்வையாளர் நேரமான காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித நுழைவு கட்டமணமும் இன்றி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இங்குள்ள புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

    குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600-ம் உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம் நுழைவு கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா வரும் 25-ந்தேதி தொடங்குகிறது.
    • வருகிற 27-ந்தேதி 63 நாயன்மார்கள் கிரிவலம் நடைபெறுகிறது.

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழா வரும் 25-ந்தேதி தொடங்கி, மே மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    முதல்நாள் இரவு பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி வழிபாடு நடைபெறுகிறது.

    வருகிற 27-ந்தேதி 63 நாயன்மார்கள் கிரிவலம், மே 1-ந்தேதி பஞ்சமூர்த்தி சுவாமி திருத்தேரில் வீதி உலா நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரோம்பேட்டை அரசு மருத்துவமனை 213 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையாக உள்ளது.
    • அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக இயங்கும்.

    குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா? என்று பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    குரோம்பேட்டை அரசு மருத்துவமனை 213 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையாக உள்ளது. இங்கு விபத்து அறுவை சிகிச்சை, மகப்பேறு, டயாலிசிஸ், ரத்த வங்கி, ஆய்வக பரிசோதனை உள்ளிட்ட போதுமான கருவிகளும் உள்ளது.

    முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கடந்த ஆண்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இதை தரம் உயர்த்த 400 படுக்கைகளுடன் 2 லட்சத்து 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.110 கோடியில் மருத்துவமனை கட்டும் பணியை கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையாக இயங்கும்.

    இ.கருணாநிதி எம்.எல்.ஏ.:-

    1972-ல் கலைஞரால் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை 50 ஆண்டுகளுக்கு பிறகு அதை தரம் உயர்த்தும் வகையில் ரூ.110 கோடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தந்து கட்டுமானப் பணியை தொடங்கி வைத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    மழை காலத்தில் இந்த ஆஸ்பத்திரியில் 4 அடிக்கு தண்ணீர் நிற்கும் சயங்களில் அதை வெளியேற்ற சிரமப்பட்டு வந்தனர். இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய ஆஸ்பத்திரி கட்டப்படுகிறது. எனவே பழைய இடத்தில் உள்ள கட்டிடத்தில் 4 ஏக்கரில் புதிய மருத்துவ மனையை உருவாக்க அரசு முன் வருமா? மேலும் அனகாபுத்தூர், திருநீர்மலையில் ஆரம்ப சுகாதார மையங்களின் தரம் உயர்த்தப்படுமா?

    அமைச்ர் மா.சுப்பிரமணியன்:-

    குரோம்பேட்டை மருத்துவமனையில் தாழ்வான பகுதிக்கு பக்கத்தில் உள்ள புதிய மைதானத்தில் புதிய மருத்துவ மனை கட்டப்படுகிறது. இது அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக இயங்கும்.

    அனகாபுத்தூர், திருநீர் மலை, கீழ்க்கட்டளை, ஜமீன் பல்லாவரம், பொழிச்சலூர், பழைய பல்லாவரம், ஜமீன் ராயப்பேட்டை பகுதிகளில் 10 மருத்துவ கட்டிடங்கள் ரூ.11 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஸ் நிலைய கட்டுமானத்துக்காக ரூ.18 கோடியில், தனியாரிடம், 2019-ல் பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
    • 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

    மாமல்லபுரம்:

    சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் தற்போது வசதியான பஸ் நிலையம் இல்லை. இங்குள்ள தலசயன பெருமாள் கோவில் முன்புறம், குறுகிய திறந்த வெளி பகுதியே பஸ் நிலையமாக உள்ளது.

    சென்னை மாநகர், அரசு, தனியார் பஸ்கள் நிறுத்த இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் மாமல்லபுரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாமலல்லபுரம் புறநகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக அதிநவீன பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் விடப்பட் டது.

    இதை ஏற்று திருக்கழுக்குன்றம் சாலை பகுதி, பக்கிங்காம் கால்வாய் அருகில், 6.80 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பஸ் நிலைய கட்டுமானத்துக்காக ரூ.18 கோடியில், தனியாரிடம், 2019-ல் பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

    இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதாக சென்னை பெருநகர திட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்து, ஓராண்டு கடந்தும் கிடப்பில் உள்ளது.

    இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சட்டசபை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மானிய கோரிக்கையில், திருப்போரூர் விடுதலை சிறுத்தை எம். எல்.ஏ. பாலாஜி இத்திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார்.

    இதற்கு பதில் அளித்த, அமைச்சர் சேகர்பாபு, "மாமல்லபுரம் பஸ் நிலையம், ரூ.50 கோடியில் அமைக்கப்படும்" என அறிவித்துள்ளார்.

    • 200 க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஒன்றிணைந்து முதல்முறையாக "பல்லவா சிற்பிகள் நலச்சங்கம்" என்ற பெயரில் புதிய சங்கத்தை துவங்கியுள்ளனர்.
    • மத்திய ஜவுளித்துறை தென் மண்டல இயக்குநர் பிரபாகரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள், ஸ்தபதி, சிற்பிகள் என 2000 க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாமல்லபுரத்தில் நலச்சங்கம் இல்லாததால் நலவாரிய உதவிகள், மருத்துவ காப்பீடு, மானிய கடனுதவி, சட்ட ஆலோசனை, நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிக்கல் இருந்து வந்தது.

    இந்நிலையில் 200 க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஒன்றிணைந்து முதல்முறையாக "பல்லவா சிற்பிகள் நலச்சங்கம்" என்ற பெயரில் புதிய சங்கத்தை துவங்கியுள்ளனர். மத்திய ஜவுளித்துறை தென் மண்டல இயக்குநர் பிரபாகரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் இராஜேந்திரன், பெயர் பலகையை திறந்து வைத்தார். ஸ்தபதி அரவிந்தன், சண்முகம், ராமு, பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றனர்.

    • சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று வேன் மீதி மோதியது.
    • விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன் இவர் நேற்று மதியம் தனது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் பிறந்து 45 நாட்களே ஆன கைக்குழந்தை மகன் ஹிதேஷ், மாமனார் விஜயன் ஆகியோருடன் மாருதி ஆம்னி வேனில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு, கோவளம் செல்வதற்காத சாலையை கடந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று வேன் மீதி மோதியது. இதில் கார் தலைகுப்பர கவிழ்ந்து காரில் தாயின் மடியில் இருந்த கைக்குழந்தை வெளியே விழுந்து தலையில் அடிபட்டது.

    காரை ஓட்டிவந்த விஜயன் உட்பட காரில் பயணித்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். குழந்தை மட்டும் மயக்க நிலையிலேயே இருந்ததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கைக்குழந்தை உயிரிழந்தது. விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பர்கள் 4 பேரும் கார்த்திகேயன் மாயமானதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அவரை தண்ணீரில் மூழ்கி தேடியும் கிடைக்கவில்லை.
    • கார்த்திகேயன் சடலத்தை கைப்பற்றிய காயார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    சென்னை, பட்டாபிராம், பாரதியார் நகர் மருதம் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் கார்த்திகேயன்(21) இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு தெரியாமல் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில் உள்ள குட்டையில் நேற்று மாலை குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது மாலை 4 மணி அளவில் நீச்சல் தெரியாத கார்த்திகேயன் ஆழமான பகுதியில் உள்ள தண்ணீரில் திடீரென மூழ்கினார். அப்போது இவர்களுடன் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டிருந்தபோது கார்த்திகேயனுடன் வந்த நண்பர்கள் 4 பேரும் கார்த்திகேயன் மாயமானதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அவரை தண்ணீரில் மூழ்கி தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காயார் போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்புத் துறையினர் வெகு நேரமாக தேடிப்பார்த்தனர். பின்னர் இரவு நேரம் என்பதால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையடுத்து மீண்டும் இன்று காலை 8:30 மணி அளவில் இருந்து மறைமலைநகர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில் 8 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக தேடியும் உடல் கிடைக்கவில்லை.

    இதனை அடுத்து சென்னை மெரினா பீச் காவல் நிலையத்தில் உள்ள 9 பேர் கொண்ட (ஸ்கூபா) நீர்மூழ்கி வீரர்கள் வந்து தண்ணீரில் அரை மணி நேரம் தேடினர். அப்போது காலை 11:30 மணி அளவில் கார்த்திகேயனின் சடலம் கிடைத்தது. இதனை அடுத்து கார்த்திகேயன் சடலத்தை கைப்பற்றிய காயார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனுடன் படித்து வந்த அவரது நண்பர்களான மோகன், வருண், அகத்தீஸ்வரன், விக்னேஷ் ஆகிய 4 பேரையும் காயார் போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து 4-வது முறையாக நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காலி பணியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி ஆகும்.
    • விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல காலி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி ஆகும்.

    வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி) 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

    மொத்த பணிக்காலியிடங்கள் தோரயமாக 7 ஆயிரம் (இந்தியா முழுவதும்). இந்த பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் 3-ந்தேதி ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.

    செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த தேர்விற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் சான்று விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டும், 044-27426020 என்ற தொலைபேசி எண்ணில் இந்த மாதம் 28-ந்தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் அல்லது https://forms.gle/YA2vYJ1AFjUYAd7 என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மினி லாரியில் அரசு சாக்கு குப்பையில் தலா 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 2,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    நந்திவரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் நந்திவரம் கிராமத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மினி டெம்போ லாரியை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அந்த மினி லாரியில் அரசு சாக்கு குப்பையில் தலா 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    அதில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 38) என்பதும், இவர் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி.சாலை ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ரேஷன் கடை மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வந்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 2,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி டெம்போ லாரியும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த அரிசி கடத்தலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    நந்திவரம் கூடுவாஞ்சேரி அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கேசவலு தலைமையில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் ஆர்.கலைச்செல்வன், தேவி தனசேகரன், எம்.கண்ணன், முன்னாள் கவுன்சிலர் என்.சரவணன் நிர்வாகிகள் பார்கவி வெங்கடேசன், பெருமாள், டெய்லர் கன்னியப்பன், டி.பிரபு, ஆர்.முருகன், அருள் குமரன், பப்பு, அசோகன், குமரன், செல்வராஜ், அரவிந்தராஜா, ஆதித்தன், எம்.கோதண்டம், கே.எஸ்.விஜயகுமார், பினகபாணி, எஸ்.நட்ராஜ், என்.மாணிக்கவாசகம், சுந்தரம், தங்கவேல், வி.கார்த்திக், எம்.கே.முனியாண்டி, மகேஷ், மாரி, தணிகாச்சலம், தனசேகர், அருண், மணிகண்டன், பிரவின், தினேஷ், நித்தியானந்தம், ராஜ்குமார்,சூர்யா,எஸ்.வினோத், வி.விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பற்றி எரிந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு மேட் மற்றும் சீட் தயாரிக்கும் தனியார் கம்பெனிகளில் இருந்து வரும் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்யப்படு கிறது.

    இந்த தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி பற்றி எரியத் தொடங்கியது. இதனை கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.

    தொழிற்சாலையில் இருந்த குடோனில் தீ பரவியதால் அங்கிருந்த சுமார் 300 டன் எடை கொண்ட சீட் மற்றும் மேட் தயாரிக்க மறுசுழற்சி செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்த மூலப் பொருட்களும், மறு சுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் பற்றி எரிந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரியும் எரிந்தது.

    இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. அருகில் உள்ள புதுப்பட்டு, சாத்தமை, மலைப்பாளையம், அன்டவாக்கம், வேடவாக்கம், வேடந்தாங்கல், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகை ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தீவிபத்து பற்றி அறிந்ததும் மதுராந்தகம், செய்யூர், அச்சரைப்பாக்கம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பற்றி எரிந்த தால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீணை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொழிற்சாலையில் தீப்பற்றியதும் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் தலையிட்டு மோதலை கட்டுப்படுத்தினர்.

    சென்னை :

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி கிராமத்தில் கோவில் திருவிழாவுக்கும், அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கக் கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த 77 வயதான நாடக கலைஞர் சிவபிரகாசம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு மோதலை கட்டுப்படுத்தினர்.

    2022-ம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளில் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பொதுமக்கள் கூட தடை உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்தனர்.

    நடப்பாண்டு இரு தரப்பினர் மோதலை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், "நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்னும் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையும், கோவில் திருவிழாவையும் ஒரே நேரத்தில் கொண்டாட முடியவில்லை. இதுபற்றி நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? கிராமத்தில் திருவிழாவையும், அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையும் ஒரே நேரத்தில் ஏன் நடத்தக்கூடாது?" என்று வேதனை தெரிவித்து, சரமாரியாக கேள்வி கேட்டனர்.

    பின்னர், "கோவில் விழாவும், அம்பேத்கர் பிறந்தநாளையும் அமைதியாக நடப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ×