என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
    • மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜவகர் பிரசாத் ராஜ் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் சார் ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தமிழ் செல்வி, தமிழ் நாடு நுகர்போருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் மோகன், வங்கி மேலாளர் சரவணபாண்டியன், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜவகர் பிரசாத் ராஜ் கலந்து கொண்டனர்.

    • துவாரகா புண்ணிய ஸ்தலத்தில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
    • 5 ஆயிரம் கிலோமீட்டருக்கு தனது சைக்கிள் பயணம் அமைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    மாமல்லபுரம் :

    குஜராத் மாநிலம் ராஜகோட் நகரை சோந்தவர் ரசீக்போலா (வயது 64). செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த இவர், இறந்த தனது தாய், தந்தையை தெய்வமாக வணங்கி வருபவர். தனது பெற்றோரின் நினைவாக இந்தியா முழுவதும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 திசைகளில் உள்ள அதாவது, கிழக்கில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவில் (ஒடிசா), மேற்கில் உள்ள துவாரகா கோவில் (குஜராத்), வடக்கில் உள்ள பத்திரிநாத் சிவன் கோவில் (உத்தரகாண்ட்), தெற்கில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சைக்கிளில் ஆன்மிக யாத்திரை செல்ல முடிவு எடுத்தார். இவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மேற்கு கடற்கரையில் உள்ள குஜராத் மாநிலம், துவாரகா புண்ணிய ஸ்தலத்தில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

    அங்கிருந்து பல மாநிலங்கள் வழியாக கிழக்கு கடற்கரையில் உள்ள ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று விட்டு, தெற்கு திசையில் உள்ள ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்வதற்காக தமிழகம் வந்த ரசீக்போலா நேற்று மாமல்லபுரம் வந்தார். பல மாநிலங்கள் வழியாக வந்த அவர் வழியில் உள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களையும் சைக்கிள் பயணம் மூலமாகவே பார்த்து வருகிறார்.

    முடிவில் தனது சைக்கிள் பயணத்தை பத்ரிநாத்தில் நிறைவு செய்கிறார். சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டருக்கு தனது சைக்கிள் பயணம் அமைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    குறிப்பாக தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் இந்த சூழலில் தனது உடலில் வெயில் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மூங்கில் கூடையை தலையில் தொப்பியாக மாட்டிக்கொண்டு வயது 64 என்றாலும் ஒரு 18 வயது இளைஞரை போல் ரசீக்போலா சைக்கிள் பயணம் செய்தார்.

    • கடிதம் அனுப்பும் இயக்கத்தை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்கி வைத்தார்.
    • இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    மாமல்லபுரம்:

    கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து வன்னியர்களும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வீ.பாரதிதாசனுக்கும் கடிதம் எழுத வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். கடிதம் அனுப்பும் இயக்கத்தை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்கி வைத்தார். திருவிடந்ததையில் அனைத்து கட்சி வன்னியர்களையும் வீடுவீடாக சென்று சந்தித்து பேசி கடிதங்களை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், வரும் 2023-2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்குள் அதாவது வரும் மே.31 ஆம் தேதிக்குள் இடஒதுக்கீடு தரவில்லை என்றால் 1987ல் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூகநீதி போராட்டம் போன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டு ஆகியும், தமிழக அரசு இன்னும் கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்த இட ஒதுக்கீடு கேட்டு கடிதம் எழுதும் போராட்டம் மக்கள் மத்தியில் இன்று துவங்கி உள்ளது. இது அனைத்து கட்சி வன்னியர் சமுதாய மக்களின் அமைதியான புரட்சி போராட்டமாக வலுவடையும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    அப்போது மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுந்தர், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் தீனதயாளன், மகேஷ், ராஜா உள்ளிட்ட பா.ம.க பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • கலைஞர் திரைப்பட நகரம், கலைஞர் கோட்டம் என பெயர்கள் வைக்கப்பட்டது.
    • ஆட்சி மாற்றம் காரனமாக 10ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையணூரில் தமிழ் சினிமா, சின்னத்திரை தொழிலாளர்களின் நலன் கருதி, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில், அடுக்குமாடி குடியிருப்புகள், படப்பிடிப்பு தளங்கள், தொழில்நுட்ப கூடங்கள் கட்ட 90 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு இருந்தது., இதற்கு கலைஞர் திரைப்பட நகரம், கலைஞர் கோட்டம் என பெயர்கள் வைக்கப்பட்டது.

    ஆட்சி மாற்றம் காரனமாக 10ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது., தற்போது பையணூர் திரைப்பட நகரம் பணிகளை விரைவில் மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். அதற்கான பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி ) துணைத் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் தீனா பையனூரில் அமைக்கப்படுகின்ற திரைப்பட நகரத்தின் நுழைவு வாயில் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ சிலை அமைக்கப்பட உள்ளது. இதனை விரைவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். எனவும் இந்த நுழைவாயில் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக மாவட்ட ஆட்சியர் உடன் ஆய்வு மேற்கொண்டோம். இந்தத் திரைப்பட நகரத்தில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது.

    இதற்கு முந்தைய காலங்களில் சிறிய காட்சிகள் எடுக்க வேண்டும் என்றாலும் கர்நாடகா கேரளா மும்பை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது இங்கு படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இங்கேயே சில காட்சிகளை எடுத்துக் கொள்கிறோம். மிக விரைவில் மேலும் சில படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடைபெறும் என தெரிவித்தார். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

    • ஆஸ்பத்திரியில் உள்ள புதிய கட்டிடம் 116-வார்டில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தண்ணீர் சப்ளை இல்லாமல் உள்ளது.
    • கழிவறையில் தண்ணீர் வராததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ஏராளமானோர் உள்நோயாளிகளாக தங்கியும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரசவ வார்டு , நீரிழிவு நோய், சர்க்கரை, ரத்த கொதிப்பு, நரம்பியல் பிரிவு தலை மற்றும் கை கால்கள் சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து உயர் சிகிச்சையும் மேற்கொள்ளப்படுவதால் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ளவர்களும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ள புதிய கட்டிடம் 116-வார்டில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தண்ணீர் சப்ளை இல்லாமல் உள்ளது. கழிவறையில் தண்ணீர் வராததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் அருகில் உள்ள மற்ற வார்டுக்கு செல்லும் நிலை உள்ளது. இதுபற்றி ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே உள்நோயாளிகள் பிரிவில் சீராக தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளும், அவரது உறவினர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    • வீட்டு உரிமையாளர் ராணிக்கும் சந்திரசேகருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
    • வீட்டு வாடகை பணம் தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வண்டலூர்:

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ராகவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சந்திரசேகர் (வயது60). இவரது சொந்த ஊர் சிதம்பரம் ஆகும். இவரது 2-வது மகளுக்கு மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை கிடைத்ததால் மாதம் ரூ.5,500 வாடகை நிர்ணயம் செய்து சந்திரசேகர் தன் மகளுடன் கடந்த மாதம் முதல் வாடகைக்கு தங்கி இருந்தார்.

    ஆனால் வீட்டில் போதுமான குடிநீர் வசதியும், கழிவுநீர் செல்வதற்கான வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. அதை சரிசெய்து கொடுக்க சந்திரசேகர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும் வீட்டு வாடகை தொடர்பாகவும் எதிர் கருத்து கூறி வந்தார்.

    ஆனால் இதனை வீட்டு உரிமையாளரான ராணி என்பவர் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சந்திரசேகர் வாடகைக்கு வந்த 28-வது நாளில் முன்பணமாக கொடுத்த ரூ.10 ஆயிரத்தை வாங்காமலே வீட்டை காலி செய்து விட்டார்.

    இதையடுத்து சந்திரசேகர் வீட்டு உரிமையாளரிடம் முன்பணமாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்தார். இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் ராணிக்கும் சந்திரசேகருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வாடகை முன்பணத்தை வாங்குவதற்காக சந்திரசேகர் மீண்டும் ராணியின் வீட்டுக்கு வந்தார். அப்போது ராணிக்கும், சந்திரசேகருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி ராணி செல்போன் மூலம் வெளியில் இருந்த தனது மகன் நரேந்திரனிடம் தெரிவித்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த நரேந்திரன், முதியவர் சந்திரசேகரிடம் மோதலில் ஈடுபட்டார். மேலும் அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதியவர் சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் மறைமலைநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரகடம் பகுதியில் பதுங்கி இருந்த நரேந்திரனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    வீட்டு வாடகை பணம் தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகளுக்கு சத்தான உணவு அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு செய்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது இல்ல நிர்வாகிகளுக்கு, குழந்தைகளுக்கு சத்தான உணவு அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

    மாவட்டத்தில் அனைத்து குழந்தைகள் இல்லங்களும் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் இல்லங்களில் ஏதேனும் பதிவு செய்யாமல் இயங்கி வருவது அறியப்பட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார். ஆய்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவண குமார், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உடன் இருந்தனர்.

    • வேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.
    • புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் செல்லமுத்து மீது மோதியது.

    கூவத்தூர் அடுத்த கடலூரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது41). சென்னை மாநகர பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இவர் கல்பாக்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி சென்றார்.

    வேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் செல்லமுத்து மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    • பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று மாலை 6 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    கோவளம் அடுத்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலில் இன்று வராக ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 9 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்தனர். இன்று மாலை 6 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    இதே போல் மாமல்லபுரம் ஆதிவராக பெருமாள் கோயிலில் வராக ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி மேற்கு ராஜவீதி, டி.கே.எம் சாலை, கிழக்கு ராஜவீதி, தெற்கு மாடவீதி, கலங்கரை விளக்கம் வழியாக வீதி உலா நடைபெற்றது.

    • உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.
    • மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர்.

    மாமல்லபுரம்:

    உலகின் பாரம்பரிய நினைவு சின்னங்களை பாதுகாத்து அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, யுனெஸ்கோ அமைப்பினர் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ந் தேதியை உலக பாரம்பரிய தினமான கடைபிடித்து வருகிறார்கள். மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கோட்டை மியூசியம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள், செஞ்சிகோட்டை, தஞ்சாவூர், தாராசுரம் கோயில், வேலூர் கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளை, இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.

    அதன்படி இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை, மற்றும் குடவரை கோயில் பகுதிகளை இலவசமாக பார்த்து ரசித்து சென்றனர். இதனால் வழக்கத்தை விட இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • வீட்டில் தனியா இருந்த லலிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையணூர் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி லலிதா (வயது56). வீட்டில் தனியா இருந்த லலிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்
    • செயலி மூலம் வசந்த் கடன் பெற்றதை நண்பர்கள் மூலம் காவல்துறையினர் அறிந்துகொண்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே வசந்த் (22) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் ஆன்லைன் செயலியில் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

    தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போன் சிம்கார்டை வசந்த் உடைத்து எறிந்துள்ளார். செயலி மூலம் வசந்த் கடன் பெற்றதை நண்பர்கள் மூலம் காவல்துறையினர் அறிந்துகொண்டனர்.

    இளைஞர் வசந்தின் உடலை கைப்பற்றி படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×