என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாடகை தகராறில் முதியவர் அடித்துக் கொலை- வீட்டு உரிமையாளர் கைது
    X

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாடகை தகராறில் முதியவர் அடித்துக் கொலை- வீட்டு உரிமையாளர் கைது

    • வீட்டு உரிமையாளர் ராணிக்கும் சந்திரசேகருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
    • வீட்டு வாடகை பணம் தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வண்டலூர்:

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ராகவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சந்திரசேகர் (வயது60). இவரது சொந்த ஊர் சிதம்பரம் ஆகும். இவரது 2-வது மகளுக்கு மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை கிடைத்ததால் மாதம் ரூ.5,500 வாடகை நிர்ணயம் செய்து சந்திரசேகர் தன் மகளுடன் கடந்த மாதம் முதல் வாடகைக்கு தங்கி இருந்தார்.

    ஆனால் வீட்டில் போதுமான குடிநீர் வசதியும், கழிவுநீர் செல்வதற்கான வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. அதை சரிசெய்து கொடுக்க சந்திரசேகர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும் வீட்டு வாடகை தொடர்பாகவும் எதிர் கருத்து கூறி வந்தார்.

    ஆனால் இதனை வீட்டு உரிமையாளரான ராணி என்பவர் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சந்திரசேகர் வாடகைக்கு வந்த 28-வது நாளில் முன்பணமாக கொடுத்த ரூ.10 ஆயிரத்தை வாங்காமலே வீட்டை காலி செய்து விட்டார்.

    இதையடுத்து சந்திரசேகர் வீட்டு உரிமையாளரிடம் முன்பணமாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்தார். இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் ராணிக்கும் சந்திரசேகருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வாடகை முன்பணத்தை வாங்குவதற்காக சந்திரசேகர் மீண்டும் ராணியின் வீட்டுக்கு வந்தார். அப்போது ராணிக்கும், சந்திரசேகருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி ராணி செல்போன் மூலம் வெளியில் இருந்த தனது மகன் நரேந்திரனிடம் தெரிவித்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த நரேந்திரன், முதியவர் சந்திரசேகரிடம் மோதலில் ஈடுபட்டார். மேலும் அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதியவர் சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் மறைமலைநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரகடம் பகுதியில் பதுங்கி இருந்த நரேந்திரனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    வீட்டு வாடகை பணம் தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×