என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    4-வது மாடியில் இருந்து குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு வந்த பொழிச்சலூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான எல்லப்பன் (வயது 33) என்பவர் அவரது நண்பரை பார்க்க செல்வதாக காவலாளியிடம் கூறி கட்டிடத்தின் உள்ளே சென்றார்.

    சிறிது நேரத்தில் கட்டிடத்தின் பின்புறத்தில் இருந்து, பலமான சத்தம் கேட்டது. காவலாளி சென்று பார்த்தபோது, எல்லப்பன் இறந்து கிடந்தார். இது குறித்து, சம்பவ இடத்திற்கு சென்ற சிட்லபாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமராகாட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், கட்டடத்தின் 4-வது மாடியில் இருந்து எல்லப்பன் கீழே குதித்து தற்கொலை செய்வது தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


    திருப்போரூர் அருகே வீட்டில் புகுந்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூர் இள்ளலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 38). டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊரான ஈச்சங்காடு கிராமத்திற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை அவர் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    செங்கல்பட்டு அருகே ஆயுதப்படை காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரம் பகுதிகளில் வசித்து வரும் இன்பரசு (28) புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வீடு திரும்பிய நிலையில், இன்று பணிக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆயுதப்படை காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த செல்வி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவர் 3 மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று தனது நண்பர் சக்கரவர்த்தி புதிதாக கட்டிவரும் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் சேகரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் சேகரின் தலையை துண்டாக வெட்டி எடுத்த மர்மநபர்கள் சாலையில் வீசிச்சென்றனர். தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரது உடலை கைப்பற்றிய செங்கல்பட்டு தாலுகா போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலிலேயே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட சேகருக்கு சித்ரா என்ற மனைவியும், 9 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர்.

    இந்த கொலையில் தொடர்புடையதாக பொன்விளைந்த களத்தூர் சுரேஷ் (38), செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19), சுண்ணாம்புகாரத்தெரு மொய்தீன் (19), கே.கே. தெரு பாபு (24), ஆலவாய் மாரியம்மன் கோவில் தெரு மகேஷ் (30), மேட்டுத்தெரு கவுதம் (25) ஆகியோர் செங்கல்பட்டு டவுன் போலீசில் சரண் அடைந்தனர்.

    கடந்த 2012-ம் ஆண்டு பி.வி. களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்த விஜயகுமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் அவரது தம்பி சுரேஷ் இந்த கொலையை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

    ஏற்கனவே அவர் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டை, மறைமலைநகர், பி.வி.களத்தூர் என 3 இடங்களில் வைத்து 3 பேரை கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
    மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக புதுப்பொலிவுடன் ஐந்து ரதம் காட்சி தருகிறது.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் ரதம் என்று அழைக்கப்படும் ஐந்துரதம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய முக்கிய நினைவு சின்னமாக திகழ்கிறது. இங்குள்ள ரதங்கள் அர்ச்சுனன் ரதம், தர்மராஜ ரதம், நகுலன் ரதம், சகாதேவ ரதம், பீம ரதம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ரதங்கள் கல்லில் கலைநயத்துடன் தென்இந்திய சிற்பகலைக்கு எடுத்து காட்டாக வடிவமைக்கப்பட்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    ஐந்துரத வளாகத்தில் தெற்கு திசை நோக்கி நின்ற நிலையில் பிரமாண்ட யானை சிற்பமும், வடக்கு திசை நோக்கிய நிலையில் சிங்க சிற்பமும் கலையத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ளதுபோல் இங்கு கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர நந்தி சிலை சிற்பம் பல்லவர்களின் சைவ வழிபாட்டை பறைசாற்றும் ஒரு முக்கிய கலை சின்னமாக திகழ்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் நந்தி சிற்பம் முன்பும், யானை சிற்பம் முன்பும் புகைப்படம் எடுக்க தவறுவது கிடையாது. இப்படி எண்ணற்ற கலை சிற்பங்கள் அமைந்துள்ள இந்த ஐந்துரதம் தற்போது கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இந்த 5 மாதங்களில் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் எந்த வித இடையூறும் இல்லாமல் மத்திய தொல்லியல் துறை போர்க்கால அடிப்படையில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துள்ளது.

    இந்த ஐந்துரதத்தை வயதானவர்கள் முதல் சிறியர்கள் வரை மணல் பரப்பு பகுதிக்கு செல்லாமல் எளிதாக 4 புறமும் சுற்றி வர வெள்ளை கிரானைட் கற்களால் அழகிய வடிவில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் நடைபாதை வழியாக சுற்றுலா பயணிகள் சென்று கண்டுகளிக்கும் வகையில் நடைபாதை தரைதளத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் சுற்றுலா பயணிகள் நடைபாதை வழியாக சுற்றி பார்த்தவுடன் அமர்ந்து பொழுதை போக்குவதற்காக ஐந்துரத்தின் கிழக்கு மற்றும் தெற்கு திசையில் அழகிய புல்வெளிகளுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பல பூச்செடிகளும் தற்போது நடப்பட்டு அழகுற காட்சி அளிக்கிறது.

    கடந்த 2019-ம் அண்டு அக்டோபர் மாதம் மாமல்லபுரம் வந்த பிரதமர் நரேந்திரமோடி, சீனஅதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்த ஐந்துரத சிற்பத்தின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

    இப்படி பல்வேறு நாட்டு தலைவர்கள், பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள் என அனைவரது கவனத்தையும் ஈர்த்த முக்கிய பாரம்பரிய நினைவு சின்னமான ஐந்துரதம் தற்போது நடைபாதை, புல்வெளி, பூங்கா என அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு பயணிகளுக்கு புதுபொலிவோடு காட்சி அளிக்க தயாராகி உள்ளது. ஊரடங்கு தடை நீக்கப்பட்டு ஐந்துரதம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சுற்றுலா பயணிகளை வரவேற்க தயார் நிலையில் உள்ளது.
    செங்கல்பட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு முருகேசனார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் செங்கல்பட்டு மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி (வயது 26) என்பவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜெகநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்து ஹேமாவதியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமாவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செங்கல்பட்டு டவுன் போலீசிலும், ஹேமாவதியின் பெற்றோருக்கும் ஜெகநாதன் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹேமாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் ஹேமாவதியின் தந்தை கண்ணன் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.

    அந்த புகாரில், எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. ஜெகநாதனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதாகவும் அதற்கு இடையூறாக இருக்கும் தனது மகளை அடித்துக்கொலை செய்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுகிறார்.

    இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அரும்பாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவரை கொலை செய்ததாக தாய்-மகனை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னை அரும்பாக்கம், திருவேங்கடகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் ஸ்ரீராம் (வயது 19). சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டில் ராஜா என்பவர் சில ஆண்டுகளாக குடும்பத்துடன் லீசுக்கு இருந்து வருகிறார்.

    நேற்று மதியம் குப்புசாமி வீட்டின் 2-வது மாடியில் உள்ள ஒரு வீடு காலியானது. அந்த வீட்டுக்கு ராஜாவின் மகன் சங்கர்(28) பூட்டு போட்டு வைத்திருந்தார். அந்த பூட்டை ஸ்ரீராம் உடைக்க முயன்றார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    அப்போது தள்ளிவிட்டதில் 2-வது மாடியிலிருந்து ஸ்ரீராம் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீராம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அதில் லீசுக்கு இருக்கும் ராஜா, வீட்டின் உரிமையாளர் குப்புசாமிக்கு ரூ.5 லட்சம் லீசுக்கான பணத்துடன், மேலும் ரூ.2 லட்சம் கடன் வாங்கியும் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த கடன் தொகைக்கு வட்டி செலுத்தவில்லை. அசல் தொகையும் தரவில்லை என்பதால் தனக்கு பணம் கொடுக்கும் வரை அந்த வீட்டுக்கு யாரும் வாடகைக்கு வரக்கூடாது என்பதற்காக ராஜாவின் மகன் சங்கர், மாடியில் உள்ள வீட்டுக்கு பூட்டு போட்டு விட்டதாகவும், அந்த பூட்டை உடைக்கும் போது ஏற்பட்ட தகராறில் மாடியில் இருந்து தள்ளி விட்டதில் ஸ்ரீராம் கீழே விழுந்து இறந்ததும் தெரிந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் (28) மற்றும் அவரது தாய் பானு (46) ஆகிய 2 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மேல்மருவத்தூரில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 வயது குழந்தை பலியானது.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது மனைவி ஜான்சி ராணி, மகன் சாமுவேல் (வயது 3) மகள் ஜெர்சி ஆகியோருடன் அச்சரப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும்போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதுவது போல் உரசி சென்றது. இதில் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.

    இதில் மாரிமுத்துவின் மகன் சாமுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மாரிமுத்து, அவரது மனைவி ஜான்சிராணி, மகள் ஜெர்சி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
    மாமல்லபுரம்:

    தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகரம், அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் அரவிந்தசாமி (வயது 25), இவரது பக்கத்து தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மகள் ஹர்ஷாலட்சுமி (19). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதில் ஹர்ஷாலட்சுமி வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 14-ந் தேதி தர்மபுரியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட தகவல் ஹர்ஷாலட்சுமி வீட்டுக்கு தெரியவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் காதல் ஜோடிக்கு தர்மபுரியில் உள்ள ஹர்ஷாலட்சுமி உறவினர்கள் மூலம் கொலை மிரட்டல் வரவே காதல் ஜோடியினர் அங்கிருந்து பஸ் மூலம் வந்து திருப்போரூர் அருகே உள்ள ரத்தினமங்கலத்தில் உள்ள அரவிந்தசாமியின் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தனர்.

    தர்மபுரியில் உள்ள அதியான்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஹர்ஷாலட்சுமி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அங்கிருந்து போலீசார் நேற்று ரத்தினமங்கலம் கிராமத்திற்கு வந்து அங்கு அரவிந்தசாமியின் உறவினர் வீட்டில் தங்கியிருந்த காதல் ஜோடியினரை தர்மபுரிக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதையடுத்து காதல் ஜோடியினர் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தர்மபுரிக்கு வர முடியாது என கூறினர். பிறகு காதல் ஜோடியினர் அதியமான்கோட்டை போலீசாருடன் செல்ல மறுத்து நேற்று மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு தொடர்ந்து கூலிப்படை மூலம் மிரட்டல் வருவதாகவும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டும் தஞ்சம் அடைந்து புகார் அளித்தனர்.

    அந்த புகார் மனுவில் நாங்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்கு தர்மபுரிக்கு சென்றால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும், நாங்கள் மேஜர் என்பதால் தங்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கூறியுள்ளனர். இது குறித்து மாமல்லபுரம் அனைத்து மகளர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரித்து வருகிறார்.
    திருவேற்காட்டில் அ.தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவரை வெட்டிக்கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    திருவேற்காடு அடுத்த கோலடியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 52). அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், திருவேற்காடு முன்னாள் நகரமன்ற தலைவராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    திருவேற்காடு அருகே சென்றபோது பின்னால் லோடு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், இவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் இடித்தனர். இதில் மகேந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் லோடு ஆட்டோவிலிருந்து கையில் அரிவாளுடன் இறங்கிய மர்ம நபர்களை கண்டதும் மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    மர்ம நபர்கள் விடாமல் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டினர். இதில் மகேந்திரனின் தலையில் லேசான வெட்டு காயம் ஏற்பட்டது. சிறிது தூரம் ஓடிய பின்னர் அங்கு அதிகளவில் கூடியிருந்த பொதுமக்களை பார்த்தவுடன் மர்ம நபர்கள் திரும்பி சென்று விட்டனர்.

    இந்த கொலை முயற்சியில் காயமடைந்த மகேந்திரனை பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோ காட்சியில், வேட்டி, சட்டையுடன் மகேந்திரன் ஓடி வருவதும், அவரது பின்னால் விடாமல் ஆயுதங்களுடன் வாலிபர்கள் விரட்டி வருவதும் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் மகேந்திரன் நுழைந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடியாமல் மர்மநபர்கள் திரும்பி ஓடுவதும் அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது.

    இந்த காட்சிகளை கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து திருவேற்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 283 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் லோகநாதன் தெருவை சேர்ந்த 25 வயது இளம்பெண், வண்டலூர் சிங்காரத்தோட்டம் பகுதியை சேர்ந்த 59 வயது ஆண், பங்குஜம்மாள் நகரை சேர்ந்த 37 வயது பெண் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட திருக்குறள் தெருவில் வசிக்கும் 21 வயது வாலிபர், கீழக்கரணை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 34, 31 வயதுடைய வாலிபர்கள், கணபதி நகரை சேர்ந்த 31 வயது இளம்பெண்,

    ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நல்லம்பாக்கம் பகுதியை சேர்ந்த 55 வயது பெண் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 580 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 607 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 517 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 456 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 207 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்து 140 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 27 ஆயிரத்து 922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 697 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 521 பேர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 5 பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 42, 32, 21, 35 வயதுடைய ஆண்கள் 58, 32, வயது பெண்கள் சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், 51 வயது பெண், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 477 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 119 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடப்பாக்கம் அருகே பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோவைப்பாக்கத்தை சேர்ந்தவர் அரசு என்கிற ராமச்சந்திரன் (வயது 50). அ.தி.மு.க.வை சேர்ந்தவர். பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர். ராமச்சந்திரன் நேற்று கடப்பாக்கத்தை அடுத்த கோவைப்பாக்கம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மர்ம நபர்கள் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஷ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ராமச்சந்திரனின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கடப்பாக்கம் அருகே சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    ×