என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    பொத்தேரியில் தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
    வண்டலூர்:

    ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்தவர் இந்து (வயது 27). பல் டாக்டரான இவர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கிதனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியையாக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சக தோழிகளிடமும், ஆஸ்பத்திரி நிர்வாகத்திடமும் விசாரித்து வருகின்றனர்.
    தடையில்லா சான்று கொடுப்பதற்கு ரூ,20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 52). இவர் காட்டாங்குளத்தூர் அடுத்த நின்னக்கரை பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக தடையில்லாச்சான்று பெற செங்கல்பட்டு திம்மாவரத்தில் உள்ள செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

    அங்கு வேளாண்மை துணை இயக்குனராக பணிபுரியும் சுகுமாரன் (56) என்பவர் தடையில்லா சான்று கொடுப்பதற்கு அவரிடம் ரூ,20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    புகாரின் பேரில், காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் ஆனந்தனிடம் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டு்களை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுகுமாரனிடம் ஆனந்தன் லஞ்சம் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் சுகுமாரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 609 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 441 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 750 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். 418 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 970 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 317 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 435 பேர் உயிரிழந்துள்ளனர்.
    செல்போனில் விளையாடிய போது தம்பியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் புது வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    இவர் மகள் காவியா (வயது 18). பிளஸ்-2 படித்துள்ளார். கடந்த 8-ந்தேதி கமலக்கண்ணன் தனது இளைய மகன் யுவராஜுக்கு புதிய செல்போன் வாங்கி வந்தார். அந்த செல்போனில் காவியாவும் அவரது தம்பி யுவராஜும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

    அப்போது காவியாவுக்கும், அவரது தம்பிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அவர்களது தாயார் இருவரையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த காவியா பக்கத்து அறைக்கு சென்று தன் துப்பட்டாவால் ஜன்னலில் தூக்கிட்டுள்ளார்.

    இதைக்கண்ட அவரது தாயார் மற்றும் அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து காவியாவை மீட்டு திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், சட்ராஸ் போலீஸ் நிலைத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் தணிகைவேல் (வயது 43). இவர் மாமல்லபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தனது பணி முடிந்து சட்ராஸ் போலீஸ் நிலையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கிழக்குகடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி என்ற இடத்தில் வளைவில் திரும்பும் போது, புதுச்சேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இந்த விபத்தில், சாலையில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மாமல்லபுரம் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

    அங்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி ஏட்டு தணிகைவேல் பரிதாபமாக இறந்தார். மேலும் அவர் மீது மோதிவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தணிகைவேலுக்கு சந்திரகலா என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் மின்சார ரெயிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், தற்போது செங்கல்பட்டு அடுத்த பரனூரில் வசித்து வருகிறார். இவர், மின்சார ரெயிலில் பழங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    பல்லாவரத்தில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு உள்ளார். கடந்த 8-ந் தேதி இவர், பல்லாவரத்தில் உள்ள தனது வீட்டை பார்க்க வந்தார். பின்னர் இரவில் பரனூர் செல்வதற்காக செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலில் ஏறிச்சென்றார்.

    அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் இருந்த அந்த பெண், ரெயிலில் அயர்ந்து தூங்கி விட்டதாக தெரிகிறது. இதனால் அவர் பரனூரில் இறங்கவில்லை. அந்த மின்சார ரெயில் செங்கல்பட்டு சென்றுவிட்டு மீண்டும் கடற்கரை ரெயில் நிலையத்துக்கு சென்று, மீண்டும் தாம்பரம் ரெயில்நிலையம் வந்தது. அதுவரை அவர் தூங்கியபடியே இருந்தார்.

    தாம்பரத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு ரெயில் நிலையம் அருகே உள்ள பணிமனைக்கு மின்சார ரெயிலை கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. போதையில் தூங்கிய அந்த பெண், நள்ளிரவு 1 மணியளவில் எழுந்து பார்த்தபோது ரெயில் பணிமனையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இரவு நேரம் என்பதால் வெளியே செல்ல பயந்த அந்த பெண், விடியும் வரை ரெயில் பெட்டியிலேயே இருக்க முடிவு செய்து மின்சார ரெயிலிலேயே அமர்ந்து இருந்தார்.

    அப்போது ரெயில்களை சுத்தம் செய்ய அங்கு வந்த ரெயில்வே தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர், மின்சார ரெயில் பெட்டியில் தனியாக இருந்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டினர்.

    பின்னர் அங்கிருந்து தப்பி தாம்பரம் ரெயில் நிலையம் வந்த அந்த பெண், ரெயில்வே போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக ரெயில்வே தற்காலிக ஊழியர்களான மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது 30), மப்பேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம் ரெயில்வே பணிமனையில் மின்சார ரெயிலிலேயே பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு கொண்டு செல்லும் முன்பு மின்சார ரெயில் பெட்டிகளில் யாராவது தூங்கி விட்டார்களா? ஏதாவது பொருட்கள் தவறவிடப்பட்டுள்ளதா? என ரெயில்வே ஊழியர்கள் அல்லது ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்து இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்காது.

    இனியாவது முறையாக சோதனை செய்த பின்னர் ரெயில்களை பணிமனைக்கு அனுப்ப வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    10 மாதங்களுக்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    மதுராந்தகம்:

    வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் ஆயிரக்கணக்கான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும். அவை 6 மாதம் தங்கியிருந்து மீண்டும் தங்கள் நாடுகளுக்கு சென்று விடும். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழை பெய்ததால் வேடந்தாங்கல் ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதையடுத்து முன்னதாகவே பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து அரியவகை பறவைகளான நத்தை குத்தி, நாரை, சாம்பல் நாரை, வெள்ளை நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன் நீர்காகம், கூழைக்கிடா என 20 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளன.

    கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் கடந்த மார்ச் மாதம் வேடந்தாங்கல் சரணாலயம் மூடப்பட்டது. பறவைகள் வந்த நிலையில் சரணாலயத்தை திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 10 மாதங்களுக்கு பிறகு நேற்று சரணாலயம் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புலிக்குட்டி ஒன்று சென்னை வண்டலூர் பூங்காவில் திடீரென உயிரிழந்தது.
    வண்டலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகத்தில் உள்ள சீமர்குழி ஓடை பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 21-ந்தேதி 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அதன் அருகே பிறந்து சில நாட்களே ஆன 2 ஆண் புலிக்குட்டிகள் சுற்றிக் கொண்டிருந்தன.

    இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த புலிக்குட்டிகளை மீட்டு, கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி இரவு வண்டலூர் பூங்காவில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இந்த 2 புலிக்குட்டிகளையும் சிறப்பு விலங்குகள் சிகிச்சை மையத்தில் வைத்து பூங்கா அதிகாரிகள் வளர்த்தனர்.

    மேலும், 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் புலிக்குட்டிகளின் அசைவுகளை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக மருந்துகள் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 2 புலிக்குட்டிகளில் ஒரு ஆண் புலிக்குட்டி கடந்த சில நாட்களாக உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டு மிகவும் மெலிந்து காணப்பட்டது. இதனையடுத்து பூங்கா மருத்துவர்கள் உடனடியாக அந்த புலிக்குட்டியை தனிமைப்படுத்தி அதற்கு தேவையான சிகிச்சைகளை சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் அளித்து வந்தனர்.

    இதற்கிடையே தொடர் சிகிச்சையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாமல் கடந்த 5-ந்தேதி சுமார் 60 நாட்களான ஆண் புலிக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து பூங்கா மருத்துவர்கள் புலிக்குட்டியை பிரேதபரிசோதனை செய்த பிறகு பூங்கா வளாகத்தில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டினர்.
    செம்மஞ்சேரியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
    சோழிங்கநல்லூர்:

    சமீபத்தில் பெய்த மழையால் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ஜவஹர் நகர் மற்றும் எழில்முக நகர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வீடுகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்ற சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வண்டலூர்:

    தமிழக அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் ஊர்வலம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், மறைமலைநகர் நகர செயலாளர்கள் சரவணன், அரி, மாவட்ட நிர்வாகிகள் செந்தில்நாத், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ஜி.எஸ்.டி. சர்வீஸ் சாலை வழியாக சிலம்பாட்டம், மேளதாளம் முழங்க மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் நோக்கி சென்றது. பின்னர் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு உடனே 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மறைமலைநகர் முன்னாள் நகர் மன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம் கண்டன உரையாற்றினார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து மறைமலைநகர் நகராட்சி செயல் அலுவலர் விஜயகுமாரியிடம் இடஒதுக்கீடு கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் நகர நிர்வாகிகள் ரகுபதி, குணா, ரமேஷ் மற்றும் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் பொன் கங்காதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் ஆத்தூர் கோபால கண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் குமரவேல், மதுராந்தகம் நகர செயலாளர் சபரி, வக்கீல் சதீஷ் ஆகியோர் வரவேற்று பேசினர். சிறப்பு மாவட்ட செயலாளர் கணபதி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் மதுராந்தகம் நகராட்சி ஆணையாளர் நாராயணனிடம் மனு அளித்து விட்டு சென்றனர்.

    இதில் மாவட்ட துணைச்செயலாளர் குணசேகரன். நகர நிர்வாகிகள் சந்தோஷ், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள், மாநில துணைத்தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
    சிங்கப்பெருமாள் கோவில் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன் (வயது 35). இவர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருக்கச்சூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த கதிரவன் தனது பிரச்சினைகள் பற்றி உறவினர்களிடம் கூறிவிட்டு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கதிரவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 200 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 749 ஆக உயர்ந்தது. 413 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 858 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 179 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 434 பேர் உயிரிழந்துள்ளனர். 245 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 42 ஆயிரத்து 884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41 ஆயிரத்து 895 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 309 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 680 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
    ×