என் மலர்
செங்கல்பட்டு
- பூஞ்சேரியில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
- மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்னதாக அனைத்து வேலைகளையும் முடிக்கும் வகையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் 44-வது "சர்வதேச செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக உலகம் முழுவதும் இருந்து 2,500 விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளனர்.
இதையொட்டி பூஞ்சேரியில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக ஒரு அரங்கம், 8 ஏக்கர் நிலப்பரப்பில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் முடியும் நிலையில் உள்ளன.
இந்தநிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கும் அரங்கம், பாதுகாப்பு, கார் நிறுத்தம், சாலை வசதி, போன்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து நேற்று தலைமை செயலர் இறையன்பு ஆய்வுகள் மேற்கொண்டார்.
புதிய அரங்கம் அமைக்கும் பணிகள் இன்னும் முடியாததால், காவல்துறை கட்டுப்பாட்டில் போட்டி நடைபெறும் "போர் பாயின்ட்ஸ்" அரங்கத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி விரைவாக பணிகளை முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து விளையாட்டு துறை முதன்மை செயலர் அபூர்வா, போட்டி ஏற்பாட்டு சிறப்பு அலுவலர் சங்கர், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் கார்த்திகேயன், கலெக்டர் ராகுல்நாத், டி.ஐ.ஜி., சத்தியபிரியா, மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் பணிகளை வேகமாக முடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அவர் போட்டி நடைபெறும் அரங்கம் மற்றும் வளாகத்தை பார்வையிட உள்ளார்.
மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்னதாக அனைத்து வேலைகளையும் முடிக்கும் வகையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் அதிக அளவில் லாரிகள் இச்சாலையில் அனுமதிப்பதே விபத்துக்கு காரணம்.
- போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் போக்குவரத்து போலீசார் பணி செய்வது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு, விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி. இவரது மகன் லட்சுமிபதி (வயது 16). மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இன்று காலை லட்சுமிபதி வழக்கம்போல் பள்ளிக்கு தனது சைக்கிளில் முடிச்சூர் சாலை- மதுரவாயல் சாலை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய மாணவன் லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, கடந்த வாரத்தில் இதே பகுதியில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது 2-வது விபத்து நடந்து உள்ளது. காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் அதிக அளவில் லாரிகள் இச்சாலையில் அனுமதிப்பதே விபத்துக்கு காரணம். போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த சாலையில் போக்குவரத்து போலீசார் பணி செய்வது இல்லை என்று குற்றம் சாட்டினர்.
விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாணவன் லட்சுமிபதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
- விபத்தால் மேல் மருவத்தூர் அருகே திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மேல் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:
சென்னை, வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடை பெறுகிறது. இதைபொட்டி தமிழகம் முழுவதும் இருந்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்னைக்கு வந்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தை சேர்ந்த 15- க்கும் மேற்பட்ட அ.தி.முக. தொண்டர்கள் வேன் மூலம் இன்று அதிகாலை சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கம் அருகே உள்ள இரட்டை ஏரிக்கரைபகுதியில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்திசையில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த ஆம்னி பஸ் மோதியது.
அந்த வேகத்தில் லாரியும், ஆம்னி பஸ்சும் சேர்ந்து அவ்வழியே வந்து கொண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்களின் வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. அதில் இருந்த வேன் டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம் சாலவேட்டை சேர்ந்த அண்ணாமலை (வயது 34 ) அ.தி.மு.க. பிரமுகர் பரசுராமன் (40) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
இதேபோல் லாரியின் டிரைவர், உடன் இருந்த 2 பேர் மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தார்கள்.
தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த 15 பேைர மீட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
வேன் டிரைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. பிரமுகர் பரசுராமன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கி சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தால் மேல் மருவத்தூர் அருகே திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மேல் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாமல்லபுரம் நகரம் முழுவதும் விதவிதமாக அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி "செஸ் ஒலிம்பியாட்" துவங்குவதால் மாமல்லபுரம் நகரம் முழுவதும் விதவிதமாக அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
மரங்களின் வர்ணம் பூசுவது, மார்கட் வீதிகளில் செஸ் தம்பி லோகோ வரைதல், உணவு பாதுகாப்பு துறை சார்பில் தள்ளு வண்டி கடைகளை புதுக்கடை போன்று மாற்றும் அலங்கார வேலைகள் செய்வது போன்ற அலங்கார வேலைகளை செய்து வருகின்றனர்., இதனால் மாமல்லபுரம் முழுவதும் புதுப்பொழிவு அடைந்து வருகிறது.
- திருவள்ளூர் மாவட்டம், காலடிப்பேட்டை அருகே உள்ள சின்ன மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- இதனால் அரசு பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த அச்சரப்பாக்கம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் முன்னால் இரும்பு கம்பிகள் ஏற்றிச்சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்மருவத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்து நடந்ததும் அரசு பஸ் டிரைவர் முரளி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த திருவள்ளூர் மாவட்டம், காலடிப்பேட்டை அருகே உள்ள சின்ன மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதனால் அரசு பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் உத்திரமேரூர் அருகே உள்ள பருத்திகொள்ளை கிராமத்தைச் சோர்ந்த குமார் என்பவருக்கு இடது கை துண்டாகி உள்ளது. அவர் மிகவும் ஆபத்தானநிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே விபத்தில் சிக்கிய அரசு பஸ்சின் டிரைவர் பண்ருட்டி தாலுகா கீழகொள்ளை கிராமத்தை சேர்ந்த முரளி (வயது 44) என்பவர் அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரியை முந்தி செல்லமுயன்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து டிரைவர் முரளியை போலீசார் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
- பூங்காக்களை சீரமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களின் பொழுது போக்கு, உடற் பயிற்சிக்காக சுமார் 56 பூங்காக்கள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை போதிய பராமரிப்பு இன்றியும், தண்ணீர் வசதி, மின் விளக்கு, கழிவறை வசதி உள்ளிட்டவை இல்லாமல் உள்ளன. இதனால் பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
பூங்காக்களை சீரமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை சீரமைக்க அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் தனி நபர்கள் முன்வர வேண்டும் என்று மாநகராட்சி அழைப்பு விடுத்து உள்ளது.
இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறும்போது, "இந்த பூங்காக்களை பொது மக்களிடம் ஒப்படைத்தால் முறையாக திறந்து மூடப்படும். மேலும் பூங்காக்களும் சரியாக பராமரிக்கப்படும்.
அதன் உள்கட்டமைப்புகளை சரி செய்ய அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அவர்கள் கண்காணிப்பு பணிகளையும், செடிகளை வெட்டியும் பராமரித்து கொள்ளலாம். துப்புரவு பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும். ஏற்கனவே 4 பூங்காக்கள் குடியிருப்பாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
மாநகராட்சியின் இந்த முடிவுக்கு தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கூறும்போது, பூங்காக்களை அரசு நிதியில் தான் பராமரிக்க வேண்டும். இதற்காக சென்னை மாநகராட்சி போன்று டெண்டர் விடலாம். மோசமான பராமரிப்பில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
பூங்காக்களை பொது மக்களை பராமரிக்க செய்யும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அதன் பொறுப்புகளைக் கைகழுவும் நோக்கத்தில் உள்ளது. தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டதில் இருந்து இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களின் முன்னேற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
செங்கல்பட்டு:
மறைமலை நகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் 18-59 வயதிற்கான கொரோனா முன்னெச்சரிக்கை கூடுதல் தவணை தடுப்பூசி முகாமினை ஆட்சியர் ராகுல் நாத் பார்வையிட்டார்.
எம்.எல்.ஏ.வரலட்சுமி மதுசூதனன், நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணை தலைவர் சித் ரா கமலக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 36-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
- அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
செங்கல்பட்டு:
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 14 ஊரக உள்ளாட்சி பதவிகளும், காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் பதவியும் காலியாக உள்ளன. இந்த 15 பதவிகளுக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடந்தது.
3 மாவட்டங்களிலும் இன்று காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்லச்செல்ல வாக்குப் பதிவு விறுவிறுப்பு அடைந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 36-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம. மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, ஒரு சுயேட்சை என 6 பேர் போட்டி போடுகிறார்கள். இதில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த வார்டில் 2,154 ஆண் வாக்காளர்கள், 2,356 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 4,510 வாக்காளர்கள் உள்ளனர். அங்குள்ள தியாகி நடுநிலைப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுளன.
ஓட்டுபோட வந்த வாக்காளர்கள் முககவசம் அணிந்து வந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தனர். இன்று மாலை 5 மணிமுதல் மாலை 6 மணி வரை கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கும் பொது மக்கள் ஆர்வமாக திரண்டு வந்து வாக்களித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட சிவபுரம் ஊராட்சியில் 5-வது வார்டில் இன்று இடைத்தேர்தல் நடந்தது. இங்கு 2 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காலை முதல் பொதுமக்கள் வந்து வாக்களித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான 15-வது வார்டில் பாக்கம் மற்றும் சிலாவட்டம் ஊராட்சி ஆகியவை உள்ளன. இந்த வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் என 6 பேர் போட்டியிடுகின்றனர்.
இங்கு 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் ரூ.3,800 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு காலையில் இருந்தே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திம்மாவரம் ஊராட்சியில் உள்ள 4-வது வார்டுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுயேட்சையாக 2 பேர் மட்டுமே போட்டியிடுகிறார்கள். இங்கு அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியிலும் விறுவிறுப்பாக ஓட்டுப் பதிவு நடைபெற்றது.
நன்மங்கலம் ஊராட்சியில் 2,850 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு தி.மு.க., பா.ஜனதா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 4 பேர் போட்டியிட்டனர். இங்கு வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டு வருகிறார்கள். இதேபோல் திரிசூலம் 1-வது வார்டுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர் 10-வது வார்டு பதவிக்கும், பொன்பதிர் கூடம் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் மேல் ஊராட்சியில் 3-வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இங்கு மொத்தம் 343 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தி.மு.க., அ.தி.மு.க., சுயேட்சை என 3 பேர் போட்டியிடுகிறார்கள்.
காலை 7 மணிக்கு அகரம் மேல் சன்னதி தெருவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகிறார்கள்.
மீஞ்சூர் ஒன்றியம் மெதுர் ஊராட்சியில் காலியாக உள்ள 3-வது வார்டில் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு 328 வாக்காளர்கள் உள்ளனர். அங்குள்ள அரசு பள்ளியில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 8 மணி வரை ஓட்டுபோட யாரும் வரவில்லை. அதன்பிறகு ஒருசில வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர்.
சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 8-வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இங்கு 1014 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 4 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காந்திநகர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளிகரம் 1-வது வார்டில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் இன்று இடைத்தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 17 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் விதி மீறல்களை தடுக்க பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் இணையவழி, கண்காணிப்பும், மற்ற வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.சி. கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுகின்றன. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 12-ந்தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
- சமூகக்கூடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் தேவைப்பட்டது.
- கல்பாக்கம் அணுமின் நிலையம் 17.60 லட்சம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டிக்கொடுத்தது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளில் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. சமூகக்கூடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் தேவைப்பட்டது. இதையறிந்த கல்பாக்கம் அணுமின் நிலையம் 17.60 லட்சம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டிக்கொடுத்தது.
இந்திய அணுமின் கழகத்தின், மனிதவள இயக்குனர் சுரேஷ்பாபு புதிய கட்டிடத்தை பள்ளி நிர்வாகம் பயன்படுத்த திறந்து வைத்தார். அணுமின் நிலைய அதிகாரிகள், ஊர் மக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது.
- காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்
புதுடெல்லி:
சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண் 14) புறப்பட்டு சென்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.காலை 8.10 மணியளவில் அச்சரப்பாக்கம் அடுத்த தொழப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்தது.
அப்போது முன்னால் இரும்பு கம்பியை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் இடது புறத்தில் இருந்த லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் இடதுபுறம் முழுவதும் நொறுங்கியது.
இடதுபுற இருக்கைகளில் ஜன்னல் ஓரம் இருந்த 3 ஆண்கள், 2 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், மேல் மருவத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மற்றொரு ஆண் பயணியும் பரிதாபமாக இறந்தார்.
இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.
எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது. காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
- விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே லாரி மீத அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருச்சி- சென்னை சாலையில் தொழுப்பேட்டில் நிகழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த ஆண்டு இரவு சபாரி திட்டபணி மீண்டும் புத்துயிர் பெற்று 3 முறை டெண்டர் விடப்பட்டது.
- மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அனுமதி வழங்கி இருந்தாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு சபாரி திட்டம் கைவிடப்படுவதாக தெரிகிறது.
கூடுவாஞ்சேரி:
உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு வரும் வன விலங்குகளை இரவு நேரத்தில் வாகனத்தில் சென்று பார்க்கும் வகையில் இரவு சபாரி திட்டம் உத்தரபிரதேசமாநிலத்தில் உள்ள கிட்டர் நொய்டா, மத்தியபிர தேசமாநிலம் இந்தூர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோரேவாடா உயிரியல் பூங்காக்களில் கொண்டுவர பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவில் விலங்குகளை பார்த்து ரசிக்கும் வகையிலான 'நைட் சபாரி'யை மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போதைய தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவின் 2007-ம் ஆண்டில் சிங்கப்பூர் பயணத்துக்கு பின்னர் அவரது பரிந்துரையின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதற்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது. இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 கோடியை மாநில அரசு ஒதுக்கி இருந்தது. இதையடுத்து இரவு சபாரி திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் மட்டும் நடந்து வந்தது.
அதன்பின் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஆண்டு இந்த திட்டபணி மீண்டும் புத்துயிர் பெற்று 3 முறை டெண்டர் விடப்பட்டது. ஆனால் மதிப்பீடு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அனுமதி வழங்கி இருந்தாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு சபாரி திட்டம் கைவிடப்படுவதாக தெரிகிறது.
விலங்கு உரிமை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எதிர்ப்புகள், விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வண்டலூர் பூங்காவில் இரவு நேர சபாரி திட்டத்துக்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.






