search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
    X

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

    • காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 36-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
    • அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    செங்கல்பட்டு:

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 14 ஊரக உள்ளாட்சி பதவிகளும், காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் பதவியும் காலியாக உள்ளன. இந்த 15 பதவிகளுக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடந்தது.

    3 மாவட்டங்களிலும் இன்று காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்லச்செல்ல வாக்குப் பதிவு விறுவிறுப்பு அடைந்தது.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 36-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம. மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, ஒரு சுயேட்சை என 6 பேர் போட்டி போடுகிறார்கள். இதில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்த வார்டில் 2,154 ஆண் வாக்காளர்கள், 2,356 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 4,510 வாக்காளர்கள் உள்ளனர். அங்குள்ள தியாகி நடுநிலைப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுளன.

    ஓட்டுபோட வந்த வாக்காளர்கள் முககவசம் அணிந்து வந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தனர். இன்று மாலை 5 மணிமுதல் மாலை 6 மணி வரை கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கும் பொது மக்கள் ஆர்வமாக திரண்டு வந்து வாக்களித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட சிவபுரம் ஊராட்சியில் 5-வது வார்டில் இன்று இடைத்தேர்தல் நடந்தது. இங்கு 2 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காலை முதல் பொதுமக்கள் வந்து வாக்களித்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான 15-வது வார்டில் பாக்கம் மற்றும் சிலாவட்டம் ஊராட்சி ஆகியவை உள்ளன. இந்த வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் என 6 பேர் போட்டியிடுகின்றனர்.

    இங்கு 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் ரூ.3,800 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு காலையில் இருந்தே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திம்மாவரம் ஊராட்சியில் உள்ள 4-வது வார்டுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுயேட்சையாக 2 பேர் மட்டுமே போட்டியிடுகிறார்கள். இங்கு அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியிலும் விறுவிறுப்பாக ஓட்டுப் பதிவு நடைபெற்றது.

    நன்மங்கலம் ஊராட்சியில் 2,850 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு தி.மு.க., பா.ஜனதா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 4 பேர் போட்டியிட்டனர். இங்கு வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டு வருகிறார்கள். இதேபோல் திரிசூலம் 1-வது வார்டுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர் 10-வது வார்டு பதவிக்கும், பொன்பதிர் கூடம் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் மேல் ஊராட்சியில் 3-வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இங்கு மொத்தம் 343 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தி.மு.க., அ.தி.மு.க., சுயேட்சை என 3 பேர் போட்டியிடுகிறார்கள்.

    காலை 7 மணிக்கு அகரம் மேல் சன்னதி தெருவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகிறார்கள்.

    மீஞ்சூர் ஒன்றியம் மெதுர் ஊராட்சியில் காலியாக உள்ள 3-வது வார்டில் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு 328 வாக்காளர்கள் உள்ளனர். அங்குள்ள அரசு பள்ளியில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 8 மணி வரை ஓட்டுபோட யாரும் வரவில்லை. அதன்பிறகு ஒருசில வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர்.

    சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 8-வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இங்கு 1014 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 4 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காந்திநகர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளிகரம் 1-வது வார்டில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் இன்று இடைத்தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 17 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் விதி மீறல்களை தடுக்க பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் இணையவழி, கண்காணிப்பும், மற்ற வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.சி. கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுகின்றன. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 12-ந்தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

    Next Story
    ×