என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வேன் மீது லாரி மோதி நிற்கும் காட்சி
மதுராந்தகம் அருகே வேன் மீது லாரி மோதல்- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த 2 பேர் விபத்தில் பலி
- விபத்தால் மேல் மருவத்தூர் அருகே திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மேல் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:
சென்னை, வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடை பெறுகிறது. இதைபொட்டி தமிழகம் முழுவதும் இருந்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்னைக்கு வந்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தை சேர்ந்த 15- க்கும் மேற்பட்ட அ.தி.முக. தொண்டர்கள் வேன் மூலம் இன்று அதிகாலை சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கம் அருகே உள்ள இரட்டை ஏரிக்கரைபகுதியில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்திசையில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த ஆம்னி பஸ் மோதியது.
அந்த வேகத்தில் லாரியும், ஆம்னி பஸ்சும் சேர்ந்து அவ்வழியே வந்து கொண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்களின் வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. அதில் இருந்த வேன் டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம் சாலவேட்டை சேர்ந்த அண்ணாமலை (வயது 34 ) அ.தி.மு.க. பிரமுகர் பரசுராமன் (40) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
இதேபோல் லாரியின் டிரைவர், உடன் இருந்த 2 பேர் மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தார்கள்.
தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த 15 பேைர மீட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
வேன் டிரைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. பிரமுகர் பரசுராமன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கி சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தால் மேல் மருவத்தூர் அருகே திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மேல் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






