என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் பூங்காவில் இரவு சபாரி திட்டம் கைவிடப்படுகிறது
- கடந்த ஆண்டு இரவு சபாரி திட்டபணி மீண்டும் புத்துயிர் பெற்று 3 முறை டெண்டர் விடப்பட்டது.
- மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அனுமதி வழங்கி இருந்தாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு சபாரி திட்டம் கைவிடப்படுவதாக தெரிகிறது.
கூடுவாஞ்சேரி:
உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு வரும் வன விலங்குகளை இரவு நேரத்தில் வாகனத்தில் சென்று பார்க்கும் வகையில் இரவு சபாரி திட்டம் உத்தரபிரதேசமாநிலத்தில் உள்ள கிட்டர் நொய்டா, மத்தியபிர தேசமாநிலம் இந்தூர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோரேவாடா உயிரியல் பூங்காக்களில் கொண்டுவர பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவில் விலங்குகளை பார்த்து ரசிக்கும் வகையிலான 'நைட் சபாரி'யை மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போதைய தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவின் 2007-ம் ஆண்டில் சிங்கப்பூர் பயணத்துக்கு பின்னர் அவரது பரிந்துரையின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதற்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது. இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 கோடியை மாநில அரசு ஒதுக்கி இருந்தது. இதையடுத்து இரவு சபாரி திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் மட்டும் நடந்து வந்தது.
அதன்பின் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஆண்டு இந்த திட்டபணி மீண்டும் புத்துயிர் பெற்று 3 முறை டெண்டர் விடப்பட்டது. ஆனால் மதிப்பீடு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அனுமதி வழங்கி இருந்தாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு சபாரி திட்டம் கைவிடப்படுவதாக தெரிகிறது.
விலங்கு உரிமை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எதிர்ப்புகள், விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வண்டலூர் பூங்காவில் இரவு நேர சபாரி திட்டத்துக்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.






