என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ரூ.63 கோடி மதிப்பீட்டில் இரு வழி சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    • இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் சுமார் 2500 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதி வாரியாக இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதலில், நடப்பு நிதி ஆண்டில் (2022-2023) சுமார் 150 கி.மீ. நீளம் உள்ள சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.அந்த வகையில் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம்-மதனத்தூர் இருவழிச்சாலையை 21 கி.மீ. வரை அகலப்படுத்துதல், 26 கி.மீ. நீளத்தில் அமையப்பெற்ற சிறுபாலத்தை திரும்பக் கட்டுதல், வடிகால், தடுப்புச்சுவர் மற்றும் சென்டர் மீடியன் கட்டுதல், கல்வெட்டுகள் அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    ரூ.63 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இந்த பணியினை கூவத்தூர் கிராமத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்திராண்டி, உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் விக்னேஷ்ராஜ், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தா.பழூர் அருகே சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
    • சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மகாபிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியபெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரகார பிரதட்சணம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். இதைபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • தா.பழூர் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 37 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
    • சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பஞ்சநாதனை தேடி வருகிறார்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தா.பழூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அங்கராயநல்லூரை சேர்ந்த அண்ணாதுரை மகன் அபினாஷ் (வயது 23) என்பவரை தடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டார். சோதனையில் அவர் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து 22 மதுபான பாட்டில்களை எடுத்து வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வாங்கி சென்றது தெரியவந்தது.இதனையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அபினாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

    அதேபோல், தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேவாமங்கலத்தை சேர்ந்த பஞ்சநாதன் (80) என்பவரது வீட்டில் புகுந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டார். அப்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 அரசு மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆய்வின்போது வீட்டில் யாரும் இல்லாததால் பஞ்சநாதனை கைது செய்ய முடியவில்லை. இதையடுத்து அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பஞ்சநாதனை தேடி வருகிறார்.

    • ஜெயங்கொண்டம் அருகே கொள்ளை போன நகையை கண்டுபிடித்து தருவதாக நாடகமாடிய போலி சாமியாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
    • மகா காளியம்மன் கோவில் உண்டியலை கடந்த வாரம் மர்ம நபர்கள் உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடி சென்றனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மணக்கரை செல்லும் வழியில் உள்ள மகா காளியம்மன் கோவில் உண்டியலை கடந்த வாரம் மர்ம நபர்கள் உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடி சென்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீசார் மோப்பநாய் வரவழைத்து நகைகளை தேடி வந்த நிலையில், திடீரென ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், நான் பூஜை செய்து நகைகளை கண்டுபிடித்து தருவதாக அந்த பகுதி மக்களிடம் தெரிவித்து பூஜை நடத்தினார்.

    அப்போது அவர் வைத்திருந்த செல்போனை எடுத்து போனில் பேசுவது போல் நாடகமாடி உங்கள் நகை ஒரு இடத்தில் உள்ளது, அதை நானே எடுத்து அம்மனின் கழுத்தில் சாற்றுகிறேன் என கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர் பின்னால் சென்றனர். தோப்பில் ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த நகையை எடுத்து அவரே அம்மன் கழுத்தில் நகையை அணிந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இவர் சென்ற பிறகு கழுத்தில் உள்ள நகையை எடுத்து பார்த்த போது நகைகள் அனைத்தும் போலி நகை என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து வார்டு கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டரிடம் நடந்ததை கூறி அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அவரை விசாரித்து நகையை மீட்டு தர வேண்டும் என கூறினர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் விசாரணை நடத்தி வருகின்றார்.

    • அரியலூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • ஒன்றியகுழு கூட்டத்தில் 28 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அரியலூர்

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் ஒன்றியகுழு கூட்டம் யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி தலைமையில், ஒன்றியகுழு துணை தலைவர் சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், செந்தில்குமார், ஓன்றியகுழு உறுப்பினர்கள் வெள்ளச்சாமி (பொய்யாதநல்லூர்), முத்துசாமி (ராயம்புரம்), சரவணன் (எருத்துக்காரன்பட்டி), முருகேசன் (கடுகூர்), ராணி (ராவுத்தன்பட்டி), செந்தமிழ்செல்வி (பள்ளகிருஷ்ணாபுரம்), கண்ணகி (அஸ்தினாபுரம்), சுந்தரவடிவேல் (மண்ணுழி), ரேவதி (விளாங்குடி), மாலா (பெரியதிருக்கோணம்), சிவபெருமாள் (வைப்பம்), விஜயகுமார், சுரேஷ்குமார் (சுண்டகுடி) மற்றும் அலுவலக மேலாளர் ஆனந்தன், பதிவரை எழுத்தர் வெங்கடாசலம், கணக்கர் ராஜீவ்காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியகுழு கூட்டத்தில் 28 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • கோடைக்கால பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
    • இதில் ஓய்வூ பெற்ற தலைமை ஆசிரியர் இளங்கோவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி, கோடைக்கால பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முழு நேர கிளை நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், சதுரங்கம், கணினி, மெய்நிகர் உள்ளிட்ட கோடைக்கால பயிற்சி வகுப்புகள் கடந்த ஒருவாரம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த பயிற்சியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வூ பெற்ற தலைமை ஆசிரியர் இளங்கோவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி, கோடைக்கால பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். நூலகப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் தமிழாசிரியர் ராமலிங்கம், நூலகப் பணியாளர் நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக நூலகர் முருகானந்தம் வரவேற்றார். முடிவில் துணை நூலகர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    • விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 தனியார் உரக்கடைகள் மீது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

    அரியலூர்.

    விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் இருப்பு தொடர்பாக வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் குழு சார்பில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 தனியார் உரக்கடைகள் மீது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

    மேலும் விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது, உர விற்பனையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட பின், இது தொடர்பாக அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரியலூர் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் திருமானூர் வட்டாரத்தில் உள்ள 3 தனியார் உரக்கடைகளுக்கு, ஒவ்வொரு கடைக்கும் அபராதம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    தற்போது தா.பழூர் வட்டாரத்தில் உள்ள 2 தனியார் உரக்கடைகள் மீது ஜெயங்கொண்டம், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் அபராதமாக ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டதில் 5 உரக்கடைகளுக்கு தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. செந்துறை குற்றவியல் கோர்ட்டில் மேலும் 1 தனியார் உரக்கடை மீது வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
    • தலை கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா திடீரென உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதில் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகவும் ஏதேனும் தகவல் கிடைத்தால் அவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அந்தந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விபத்து தடுக்கும் விதமாக வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். மேலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிகிறார்களா என்று பார்க்க வேண்டும். தலை கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார்.

    • அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
    • அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆதிகேசவன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம் கண்டனம் தெரிவித்து பேசினார். 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். ஓட்டுனர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமுல்படுத்திட வேண்டும். ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

    • திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றினார்
    • தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரியலூர்,

    ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து விசாரித்தனர். அப்போது அவர், தனது இடம் தொடர்பாக, சிலர் தன்னை மிரட்டுவதாகவும், அதனால் தீக்குளிக்க முயன்றதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார், ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்குடியிருப்பு மற்றும் சீனிவாசன் நகர் பகுதிகளில் மது விற்பனை செய்தவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கீழக்குடியிருப்பை சேர்ந்த ரமேஷ் (வயது 39), சீனிவாசா நகரை சேர்ந்த கோபி (38) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக்கில் சென்றவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், செந்துறை சென்னிவனம் நடுத்தெருவை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுவாமிநாதன்(வயது 33). இவர் ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா (32). மகன் விஷ்வா. இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அரியலூர் நோக்கி சென்றனர். அரசு நகர் பகுதியில் சென்றபோது எதிரே உடையார்பாளையம் பருக்கள் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன்(40) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சுவாமிநாதனின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சுவாமிநாதன், அவரது மனைவியும் படுகாயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கயர்லாபாத் போலீசில் சுவாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×