என் மலர்
அரியலூர்
- சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம் நடந்தது
- சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் பக்தர்கள் வேண்டுதலின்பேரில் சேலைகள், மிளகாய் வத்தல்கள் இடப்பட்டன. பின்னர் பல்வேறு வகையிலான மூலிகைகள், முக்கனிகள் உள்ளிட்ட பழங்கள் யாகத்தில் போடப்பட்டன. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கலசங்களில் இருந்து புனித நீரால் விநாயகர், சாமுண்டீஸ்வரி அம்மன், முருகப்பெருமான், பிரத்தியங்கரா தேவி, கால பைரவர், கருப்புசாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- மூதாட்டியை தாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்
- மாங்காய் பறித்ததால் நடந்த சம்பவம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்த தங்கராசுவின் மனைவி காளியம்மாள்(வயது 68). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் மா, தென்னை மரங்களை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜன்(63), மாமரத்தில் உள்ள மாங்காய் மற்றும் தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறித்துக் கொண்டு இருந்தார். இது பற்றி காளியம்மாள் கேட்டபோது, நடராஜன் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் காளியம்மாள் அளித்த புகாரின்பேரில், நடராஜன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமானூரில் தற்காலிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது
- சமூக ஆர்வலர்களால் அமைக்கப்பட்டது
அரியலூர்:
திருமானூரில் கடந்த சுமார் 5வருட காலமாக திருமானூர் பஸ் நிலையத்தில் அமைந்திருந்த பயணியர் நிழல்குடை தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக இடிக்கப்பட்டது.மேலும் அரசு ஆரம்பசுதாரநிலையத்தின் அருகில் இருந்த பயணியர் நிழல்குடை தேசியநேடுஞ்சாலை விரிவுபடுத்தும் போது இடிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநில நிர்வாகத்திற்கும் ஊராட்சி மற்றும் கிராம நிர்வாகத்திற்கும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.இதனால் பொது மக்களின் நலன் கருதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு சுகாதார நிலையம் அருகில் தற்காலிக நிழல் கூடை சமூக ஆர்வலர்களால் அமைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு தலைவர் வரதராஜன், ராமலிங்கம், பார்த்திபன், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு ஆலோசகர் பாலை திருநாவுக்கரசு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளி இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
- சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தில் தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அளவீடு செய்து உள்ளனர். இதனை அறிந்த அந்த கிராம மக்கள், தற்போதுள்ள நடுநிலைப்பள்ளி எதிர்காலத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியாக மாறும்போது, அதற்கு இடம் தேவைப்படும். எனவே அரசு பள்ளிக்கு சொந்தமான இந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டக்கூடாது என்றும், அதனை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளனர்.இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிக்கு சொந்தமான இடத்திலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு வேலைகள் நடைபெற்று வருவதை அறிந்த அந்த கிராம மக்கள் நேற்று காலை ஒன்று கூடி கோவிந்தபுத்தூர் கிராமத்தில் முத்துவாஞ்சேரி தா.பழுர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- விசாலாட்சி அம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- மலர் அலங்காரம் செய்யப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் ஆலயத்தில் வைகாசி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அருள்மிகு விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் மற்றும் பிரகாரத்தில் வீற்றிருக்கும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு கிருத்திகை தினத்தை முன்னிட்டு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தணம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வில்லேந்திய வேலவர் வண்ணமிகு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- சாலை பணிகள் ஆய்வு செய்தனர்
- உள் தணிக்கை குழுவினர் செய்தனர்
அரியலூர்,
தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த நிதியாண்டில் நடைபெற்ற சாலை மற்றும் பாலப்பணிகளை உள் தணிக்கை குழுவினர் கடந்த 10-ந் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. சென்னை திட்டங்கள் அலகு கோட்ட பொறியாளர் அருணா தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வினை மேற்கொண்டனர்.
- உயர்கல்வி குறித்து ஆலோசனை முகாம் நடக்கிறது
- பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலந்து கொள்ள அழைப்பு
அரியலூர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கோடு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தன்னார்வ இயக்கத்தின் மூலம் ஆலோசனை முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசார் நடவடிக்கை
அரியலூர்:
அரியலூர் அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலர் மீனாம்பிகைக்கு கசனை ஏரியில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உதவியாளருடன் சென்று கசனை ஏரியில் பார்த்த போது அங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் திருடி கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணல் திருட்டில் ஈடுபட்ட சிவக்குமார் (வயது 25), அன்பரசன் (35) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது
- சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடர்பாக நடைபெறுகிறது
அரியலூர்:
கயர்லாபாத்தில் சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கல்லங்குறிச்சியில் 23-ந்தேதி நடக்கிறது என்று என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுகா, பழங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்டு (பாரத்) லிமிடெட் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்தீரணம் 2.25.0 ஹெக்டேர், புல எண். 455/1, 456/2- 456/3 கயர்லாபாத் கிராமத்தில் சுண்ணாம்புக்கல் எடுக்க உத்தேசித்துள்ளது.இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் லால்குடியார் திருமண மண்டபத்தில் வருகிற 23-ந்தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்ற இடங்களில் வாழும் உண்மையான குடிமக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் பிறர் உள்ளடங்கலாக அனைவரும் பங்கேற்கலாம்.மேற்கண்ட தொழிற்திட்டங்களை பற்றி அவர்களுடைய கருத்துக்களை வாய் மொழியாகவோ, எழுத்து வடிவிலோ தெரிவிக்கலாம். அவை பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- எந்த கட்சியுடனும் சேர்ந்து போராட தயார் என்று வேல் முருகன் தெரிவித்துள்ளார்
- முழு மதுவிலக்குக்காக
அரியலூர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அரியலூர் காமராஜர் திடலில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-தமிழகத்தில் முழு மதுவிலக்கு வேண்டும். ஒரு சொட்டு மதுகூட தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நோக்கம். இதற்காக எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் சேர்ந்து போராட தயாராக இருக்கிறேன். அரசியல் காரணங்களுக்காக மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறாமல், உண்மையிலேயே ஊழல் புரிந்ததற்கான ஆவணங்கள், தரவுகள் இருந்தால் அதனடிப்படையில் ஊழலை எதிர்க்க வேண்டும்.குறிப்பாக பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக கூறிவிட்டு, இணையத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது போன்ற மோசடி வித்தைகளை காட்டக் கூடாது என்பதே எனது வேணடுகோள் என்றார்.
- அரியலூரில் 24-ந்தேதி விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யபடவுள்ளனர்
- மேலும் தகவல்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
அரியலூர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையம் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.இந்த விளையாட்டு மையங்களில் சேர்வதற்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு போட்டி, அரியலூரில் 24ம்தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்ப படிவம் ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்து அனுப்பலாம். 23ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். மேலும் தகவல்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலர் மீனாம்பிகைக்கு கசனை ஏரியில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உதவியாளருடன் சென்று கசனை ஏரியில் பார்த்த போது அங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் திருட்டு நடைபெற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், மணல் திருட்டில் ஈடுபட்ட பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (25), அன்பரசன் (35) ஆகியோரை மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர். பின்னர் இது குறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து, பிடிபட்ட இருவரையும் கைது செய்தார். மேலும் பட்டுரோஜா (45), மகேஸ்வரி (50), பெரியசாமி (40) ஆகியோரை தேடி வருகிறார்.






