என் மலர்
அரியலூர்
- ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மீது மோதியதில் பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரது மகன் பாஸ்கர் (வயது 57). இவர் குழுமூர் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு காது குத்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோரியம்பட்டி பஸ்பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த பாஸ்கர் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.
அருகில் உள்ளவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கே இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் போலீசார் பாஸ்கரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
- போக்குவரத்து காவல்துறை போலீசார் இருசக்கர வாகனம் திருட்டுப் போவதை தடுக்கும் விதமாக ஆய்வு மேற்கொண்டனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் ஷகீரா பானு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ஜெயங்கொண்டம் பகுதிகளில் போக்குவரத்து காவல்துறை போலீசார் இருசக்கர வாகனம் திருட்டுப் போவதை தடுக்கும் விதமாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் அமர்ந்து சென்ற 25 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் சென்ற 120 பேர் மீதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்ற வாகனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதி மீறிய 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் மீண்டும் ெஹல்மெட் அணியாமலோ, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினாலோ அல்லது அனுமதிக்கு புறம்பாக 2 பேருக்கு மேல் வாகனங்களில் அமர்ந்து சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தும் அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
- செந்துறை அருகே நூறாண்டுகள் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்
- கிராம மக்கள் வழிபாடு நடத்தி நூதன போராட்டம்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது இரும்புலிக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தின் நடுவே நூறாண்டுகள் பழமையான ஆலமரமும், அதன் அருகிலேயே கோவில் ஒன்றும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த ஆலமரத்தில் அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வெயில் காலங்களில் இளைப்பாரி வந்தனர். இந்த ஆலமரம் இந்த ஊரின் ஒரு அடையாளமாகவும் திகழ்ந்து வந்தது.இந்த நிலையில் தற்போது இரு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் இந்த ஆலமரத்தை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்கு தேவையான இடங்கள் இருக்கும்போது ஏன் இந்த மரத்தை அகற்ற வேண்டும் என்பதோடு மரத்தை அகற்றாமல் சாலை பணியை அமைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.இருப்பினும் அதிகாரிகள் மரத்தை அகற்ற வேண்டும் என்று உறுதியாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள் ஊரின் அடையாளமாகவும், வழிப்போக்கர்கள் மற்றும் கிராம மக்களையும் வெயிலில் இருந்து காத்து வந்த பழமையான ஆலமரம் அகற்றப்படுவதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக 100 ஆண்டுகளுக்கு மேலாக நிழல் தந்து மக்களை காப்பாற்றிய ஆலமரத்தை தெய்வமாக வழிபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே இருந்த பூசாரியிடம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயபக்தியிடம் ஆலமரத்தை வணங்கி விபூதியிட்டு சென்றனர். மனிதன் செய்யும் தவறுக்கு மரத்திற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம் என்று அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்.இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகள் அந்த ஆலமரத்தை அகற்றாமல் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்
- ஆனால் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இதுவரை புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை
அரியலூர்,
அரியலூர் பேருந்து நிலையம் கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, புதிய பேருந்து நிலைய கட்டிடங்கள் கட்ட ரூ.7.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாலும், இதன் பணிகள் முடிய 18 மாதங்கள் உத்தேசிருப்பதாலும், தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர் - திருச்சி புறவழிச்சாலையில், வாணி திருமணமண்டபம் எதிர்புறம் உள்ள தனியார் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்காலிக பேருந்து நிலையம் என்றாலும் ஒன்றரை வருடங்கள் தொடர்ந்து இங்கு செயல்பட உள்ளது. ஆனால் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இதுவரை புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடை, குடிநீர், மின்விளக்கு, ஏடிஎம் என்று அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் அரியலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், திருச்சி, தஞ்சை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் மாதாகோவில், சத்திரம், அண்ணாசிலை வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வரவேண்டும். சேலம், பெரம்பலூர், திட்டக்குடி பார்டர் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் மேம்பாலம், சத்திரம், அண்ணாசிலை வழியாக தற்காலிக பேருந்துநிலையம் செல்ல வேண்டும். தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் அரியலூர், நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்லவேண்டும். மேலும் ஆட்டோ வாடகை கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதோடு, தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் நகருக்குள் சென்று வர நகர பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- அரியலூர் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை வைத்தனர்
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அரியலூர்,
அரியலூரில் விடுதி பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய சங்க உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், 2021 ஆம் ஆண்டு பணியில் சமையலர்களை பணி வரன் முறை வழங்கி நிரந்தம் செய்ய வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தலைவராக தமிழ்மணியும், செயலாளராக ஜெயபாலும், பொருளாளராக சுரேஷ்குமாரும் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- அரியலூர் நகராட்சியில் சாலையோரம் உள்ள விளம்பரதட்டிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
- நகர்பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்புகள் மிகுந்து நடந்துகூட செல்லமுடியாத சூழ்நிலைக்கு இருந்து வருகின்றது
அரியலூர்,
அரியலூர் நகராட்சியில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது. முக்கிய நகர பகுதிகளுக்கு 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. 40 கி.மீட்டர் சுற்றளவு பகுதியிலிருந்து தினசரி 25 ஆயிரம் பேர்கள் வந்துசெல்கின்றனர்.நகர்பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்புகள் மிகுந்து நடந்துகூட செல்லமுடியாத சூழ்நிலைக்கு இருந்து வருகின்றது. சாலையின் இருபுறமும் எங்கு பார்த்தாலும் விளம்பர தட்டிகள் உள்ளது. கோர்ட் உத்தரவிட்டும், அரசு உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, விளம்பர தட்டிகளை அப்புறப்படுத்தவோ அதிகாரிகள் முன்வரவில்லை.எனவே அரியலூர் நகரில் சாலை இருபுறமுள்ள விளம்பர தட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பூட்டிகிடக்கும் அரியலூர் நகராட்சி நூலகம் மீண்டும் திறக்கப்படுமா என வாசகர்கள் கோரிக்கை வைத்தனர்
- அனைத்து தினசரி நாளிதழ்களும் ஒரே இடத்தில் படிக்க கிடைப்பதால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது
அரியலூர்:
அரியலூர் நகராட்சிக்கு தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துசெல்கின்றனர். அரசு மருத்துவகல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். அரியலூர் நகராட்சி வெள்ளழத்தெருவில் நகராட்சி படிப்பகம் சுமார் 25ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. நூலகவரி, வீட்டுவசதி வரியுடன் வசூல் செய்யப்பட்டு வந்தது. நகராட்சி படிப்பகம் காலையும், மாலையும் திறந்து இருக்கும்.
அனைத்து தினசரி நாளிதழ்களும் ஒரே இடத்தில் படிக்க கிடைப்பதால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது. கொரோனா காலத்தில் பொது மக்கள், வாசகர்கள் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு அனைத்து நூலகங்களையும் மூட உத்தரவிட்டது, கொரோனா பாதிப்புகள் சீரான நிலையில் மூடியிருந்த நூலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனால் அரியலூர் நகராட்சி நூலகம் திறக்கப்படவில்லை.எனவே நகராட்சி நூலகத்தை உடனடியாக திறந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக சமூகஆர்வலர்கள், வாசகர்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- அரியலூரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழர் நீதிகட்சி, ஏர் உழவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அரியலூர்,
தமிழர் நீதி கட்சி, ஏர் உழவர் சங்க கூட்டத்தின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் அரியலூர் ஒற்றுமைத் திடலில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் இரா.பாக்கியராசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரியலூர் மாவட்ட முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அரியலூரிலுள்ள சிமெண்ட் ஆலை வேலை வாய்ப்புகளில், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். உள்ளூர் மக்களுக்கு சிமெண்ட் மூட்டைகள் உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும். ஒப்பந்த பணிகள் அனைத்தும் அரியலூர் மக்களுக்கே வழங்கிட வேண்டும்.
சிமெண்ட் ஆலைகள், சுண்ணாம்புக் கல் சுரங்கங்களுக்கிடையே தனி சாலை அமைக்க வேண்டும். சிமெண்ட் ஆலைகள், விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அரசு அறிவித்த முந்திரி தொழிற்சாலையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராசேந்திரசோழனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்கட்சியின் நிறுவனரும், ஏர் உழவர் சங்கத்தின் தலைவருமான சுபா.இளவரசன், தலைமை நிலையச் செயலர் சி.மதியழகன், மாநில மகளிர் அணித் தலைவர் இள.கவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
- அரியலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளபட்டது
- அரியலூரில் உள்ள 30 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் 120 வாகனங்கள் ஆய்விற்காக கொண்டு வரப்பட்டிருந்தது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி வாகனங்கள் அனைத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த ஆய்வு நடைபெற்றது. அரியலூரில் உள்ள 30 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் 120 வாகனங்கள் ஆய்விற்காக கொண்டு வரப்பட்டிருந்தது.வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சலீம் ஜாவித், வாகன ஆய்வாளர் சரவணபவன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இந்த வாகனங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, பேருந்துகளில் சிசிடிவி கேமரா, வேககட்டுப்பாட்டு கருவி, அவசர பாதை, இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, பள்ளி வாகனங்கள் இயக்கும் முறைகள், தீயணைப்பு கருவி இயக்கும் முறை, விபத்து நேரிடும் போது முதலுதவி அளிக்கும் முறைகள் குறித்து ஓட்டுநர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
- உடையார்பாளையம் அருகே வீட்டின் ஓட்டை சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்கு தொடரபட்டுள்ளது
- இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடையார்பாளையம்,
உடையார்பாளையம் அருகே வாணதிரையன்பட்டினம் மேட்டு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குமார் (வயது 49). இவர் தனது ஊரில் அமைந்துள்ள சென்னீஸ்வரர் குளத்திற்கு வரும் நீர் வழி புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் காரணமாக வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் (42), ரவி (48), மணிகண்டன் (36) ராமு மற்றும் சிலர் குமார் வீட்டில் இருந்தபோது, அவரை தகாத வார்த்தையால் திட்டியதோடு வீட்டின் ஓட்டை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரியலூர் பா.ஜ.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரியலூர்,
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மகளிரணித் தலைவி அனிதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்ட துணைத் தலைவர் கோகுல்பாபு, மாவட்ட பொதுச் செயலர் அருண்பிரசாத், மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாநில மகளிரணி பொதுச் செயலர் கவிதா, நகரத் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருமானூர் அருகே ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது
- இப்போட்டியில் 678 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை காவல் கண்கணிப்பு அலுவலர் ஆரோக்கிய அரி, டி.எஸ்.பி. சங்கர்கனேஷ் மற்றும் கிராம நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், புதுக்கோட்டை மங்கலமாதா கோவில் பங்குதந்தை ரெஜிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான இப்போட்டியில் 678 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்டுள்ள காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதில் 33 மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. 2 பேர் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாடு பிடி வீரர்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர், சாப்பாடு வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாட்டை அடக்கிய மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத மாட்டு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.






