என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்-தமிழர் நீதிகட்சி, ஏர் உழவர் சங்கம் வலியுறுத்தல்
- அரியலூரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழர் நீதிகட்சி, ஏர் உழவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அரியலூர்,
தமிழர் நீதி கட்சி, ஏர் உழவர் சங்க கூட்டத்தின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் அரியலூர் ஒற்றுமைத் திடலில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் இரா.பாக்கியராசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரியலூர் மாவட்ட முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அரியலூரிலுள்ள சிமெண்ட் ஆலை வேலை வாய்ப்புகளில், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். உள்ளூர் மக்களுக்கு சிமெண்ட் மூட்டைகள் உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும். ஒப்பந்த பணிகள் அனைத்தும் அரியலூர் மக்களுக்கே வழங்கிட வேண்டும்.
சிமெண்ட் ஆலைகள், சுண்ணாம்புக் கல் சுரங்கங்களுக்கிடையே தனி சாலை அமைக்க வேண்டும். சிமெண்ட் ஆலைகள், விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அரசு அறிவித்த முந்திரி தொழிற்சாலையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராசேந்திரசோழனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்கட்சியின் நிறுவனரும், ஏர் உழவர் சங்கத்தின் தலைவருமான சுபா.இளவரசன், தலைமை நிலையச் செயலர் சி.மதியழகன், மாநில மகளிர் அணித் தலைவர் இள.கவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.