என் மலர்
அரியலூர்
- மது போதையில் பூச்சி மருந்தை குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.
- இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மேலகருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியமுத்து (வயது 30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த முனியமுத்து தண்ணீர் என நினைத்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முனியமுத்து நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூரில் ரத்ததான முகாம் நடைபெற்றது
- முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் குருதி கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. குருதிக் கொடை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இரத்ததான விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் வரையப்பட்ட மாணவர்களின் ஓவியங்களை கலெக்டர் பார்வையிட்டார். அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் முத்துகிருஷ்ணன், துணை முதல்வர் சித்ரா, மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், இருக்கை மருத்துவ அலுவலர் குழந்தைவேலு, நோயியல் துறை தலைவர் பிரேமலதா, குருதி வங்கி மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
- அரியலூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்தில் பவ்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5 சதவீத ஊதிய உயர்வு, உயர்த்தப்பட்ட ஊதியம் , மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை பிடித்தம் செய்ய பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டத் தலைவர் ராகவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எம்.கே.ஷேக் தாவூத், மாவட்டத் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க செயற்குழு உறுப்பினர் சூர்யா, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் அருகே ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு போனது
- இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அடைக்கலசாமி புகார் செய்தார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் சூசையப்பர்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலசாமி. இவர் சூரியமணல் கிராமம் மெயின் ரோட்டில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றவர் மீண்டும் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த 1800 ரூபாய் ரொக்கம் பணம், ஒரு மோட்டார், பத்து காயில் ஒயர் உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அடைக்கலசாமி புகார் செய்தார்.புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது கடையின் பின்னால் இருந்த சிறிய துவாரத்தின் (ஓட்டை) வழியாக திருடர்கள் உள்ளே நுழைந்து இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் மர்ம கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவில் பூட்டியிருந்த ஹார்டுவேர்ஸ் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரியலூரில் கூடுதல் விலைக்கு மது விற்றவருக்கு அபராதம் விதிக்கபட்டது
- சேல்ஸ்மேன் இளம்பரிதி அபராதத்துடன் பணிமாறுதல் செய்யப்பட்டார்.
அரியலூர் :
அரியலூர் ெரயில்வே கேட் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து 3 முறை தொடர் குற்றத்தில் ஈடுபட்ட சேல்ஸ்மேன் இளம்பரிதி, பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் குடோனுக்கு அபராதத்துடன் பணிமாறுதல் செய்யப்பட்டார். அதேபோல் அரியலூர் ெரயில்வேகேட் டாஸ்மாக் கடையில் ரூ. 10 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த சேல்ஸ்மேன் திருமேனி என்பவரிடம் இருந்து அபராதம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ. 11 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ரூ. 5 கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்த அரியலூர் ெரயில்வே கேட் கடைசேல்ஸ்மேன் ரவிச்சந்திரன், பெரம்பலூர் மாவட்டம். கொளக்காநத்தம் கடை சேல்ஸ்மேன் சத்தியசீலன், செட்டிக்குளம் கடை சேல்ஸ்மேன் விநாயகமூர்த்தி ஆகியோரிடம் இருந்து அபராதம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியாக தலா ரூ.5 ஆயிரத்து 900 விதிக்கப்பட்டது.
- ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டர் நேரடி விசாரணை மேற்கொண்டார்
- மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டத்தில் 1432-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயங்கொண்டம் வட்டத்திற்கான ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் நாளில் தா.பழூர் உள்வட்டம், இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிப்பெருமாள்நத்தம், இடங்கண்ணி, உதயநத்தம் (மேல்பாகம்), உதயநத்தம் (கீழ்பாகம்), அணைக்குடம் (பொற்பதிந்த நல்லூர் உட்பட), தா.பழூர், கோடங்குடி (வடபாகம்), கோடங்குடி (தென்பாகம்), நாயகனைப்பிரியாள், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புக்குடி ஆகிய 15 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
இவர்களுக்கு அன்றைய தினமே பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் மீதமுள்ள 260 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இம்மனுக்களை உரிய விசாரணை செய்து தீர்வுகாணவும், கிராம கணக்குகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, கணக்குப் பதிவேடுகளை முறையாக பதிவு செய்து பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் துறை துணை வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க அறிவுறுத்தப்பட்டது
- மனிதனுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குவதில் காய்கறிகளின் பங்கு மகத்தானது
அரியலூர்,
உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களிலேயே விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மனிதனுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குவதில் காய்கறிகளின் பங்கு மகத்தானது. விவசாயிகள் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க தரமான காய்கறிகளை வீட்டுத் தோட்டம் மூலம் பெறலாம். வீட்டுத் தோட்டம் அமைப்பதால் கீழ்க்கண்டபயன்கள் நமக்கு கிடைக்கின்றது.
நச்சு மருந்துகள் இல்லாத காய்கறிகளை உற்யத்தி செய்யலாம். குடும்பத்துக்கு காய்கறி வாங்குவதற்கான செலவைக் குறைக்கலாம். வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி கடையில் வாங்குவதைக் காட்டிலும் சுவையாக இருக்கும். சமையலறையில் வீணாகும் நீர் மற்றும் பொருள்களைப் பயன்படுத்தலாம். உடலுக்கும், மனதுக்கும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும். ஓய்வு நேரத்தை உபயோககரமாக செலவிடலாம்.
எனவே விவசாயிகள் தங்கள் வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையான காய்கறி விதைகளை வாங்கும் போது மாநில அரசால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் வாங்க வேண்டும். மாறாக சாலை ஓரத்தில் உள்ள கடைகளிலோ, மளிகை கடைகளிலோ, சந்தைகளிலோ விற்கப்படும் காய்கறி விதைகளை வாங்கக் கூடாது. விதைகள் வாங்கும் போது பில் கேட்டுப் பெறுவது மிகவும் அவசியம். விவசாயிகள் விற்பனை பட்டியல் பெறா விட்டால் எந்த வித இழப்பீடும் பெற இயலாது என தெரிவித்துள்ளார்.
- திருமானூரில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
- திறந்த வெளியினை உபயோகிக்காமல், கழிவறைகளையே உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் பேசுகையில், பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைவரும் உட்கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் வெப்பத் தாக்கம் ஏற்படாதிருக்க நிறைய நீர் அருந்திட வேண்டும். தங்களது வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளியினை உபயோகிக்காமல், கழிவறைகளையே உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மருத்துவமல்லா மேற்பார்வையாளர் துரைராஜ் கலந்து கொண்டு பேசுகையில், தொழு நோயானது, ஒரு வகை பாக்டீரியாவால் பரவுகின்றது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உணர்ச்சியற்ற சிவந்த அல்லது வெளிறிய தேமல் தோன்றலாம். நரம்புகள் பாதிக்கப்படலாம். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மேற்கொண்டால் அங்ககீனத்தை தவிர்த்து முற்றிலுமாக குணமடையலாம். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. அனைவரும் பயன்படுத்தி நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்தார். முகாமில், அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
- நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம்:
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி மற்றும் ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஜெயங்கொண்டம் அங்கராயநல்லூர் பகுதியில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார். கோட்ட பொறியாளர் உத்தண்டி, ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர், உதவி கோட்ட பொறியாளர் பி.கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் விக்னேஷ்ராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம், கண்காணிப்பாளர் செந்தில், சாலை ஆய்வாளர்கள் கவிதா, சுமத்ரா, சுஜாதா, மரியசூசை,ஒன்றிய அவைத்தலைவர் குணசேகரன், கிளைக் கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
- அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 307 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக் கொண்டார். பின்னர் இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர்ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.
அரியலூர்,
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்பை வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.தர்மசீலன். தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் தேவேந்திரன், குழந்தைகள் நலக்குழு தலைவர் செந்தில்குமார், பாதுகாப்பு அலுவலர் ஜெ.செல்வராசு மற்றும் குழந்தைகள் இலவச உதவி மையம் 1098 உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்
- யானை சிற்பத்தினை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏதுவாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் அறிவுறுத்தினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, இந்த கோவிலுக்கு 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையின் சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி அருங்காட்சியகம், வாகனங்கள் நிறுத்தும் இடம், நுழைவு வளாகம், வழிகாட்டும் பலகைகள் போன்றவற்றுக்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் சலுப்பை ஊராட்சியில் அழகர் கோவிலுக்கு வெளியே உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட, 8.50 மீட்டர் உயரத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்துகளால் உருவாக்கப்பட்ட நாயக்கர் கால ராட்சத யானை சிற்பத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இந்த யானை சிற்பத்தினை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏதுவாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி, திருச்சி மண்டல முதன்மை பொறியாளர் வள்ளுவன், செயற்பொறியாளர் மணிவண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தாசில்தார் துரை மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






