என் மலர்tooltip icon

    அரியலூர்

    • குச்சியால் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 48), விவசாயி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் மனைவி அல்லி (42) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ரவி தனக்கு சொந்தமான இடத்தில் தைலமரக்குச்சிகளை கொட்டி வைத்து இருந்தார். இதைப்பார்த்த அல்லி என்னுடைய இடத்தில் ஏன் குச்சிகளை கொட்டி வைத்துள்ளாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவரை ஒருவர் குச்சியால் அடித்து தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 2 பேரும் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அல்லி மற்றும் ரவி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • விடுமுறைக்கு ஊருக்கு வந்த அக்காள், தங்கை ஏரியில் மூழ்கி பலியானர்
    • இவர்கள் இருவரும் புனேவில் உள்ள ராணுவ பள்ளியில் அட்சயா பிளஸ்-2, மற்றும் அபி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 50). இவர் இந்திய ராணுவத்தில் சபிதார் மேஜராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அட்சயா(17), அபி(15) என 2 மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் புனேவில் உள்ள ராணுவ பள்ளியில் அட்சயா பிளஸ்-2, மற்றும் அபி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் விடுமுறையில் தங்களது சொந்த ஊரான ஒக்கநத்தம் கிராமத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முருகானந்தம் தனது குடும்பத்துடன் வந்தார்.

    நேற்று மாலை 4 மணி அளவில் அக்காள், தங்கை இருவரும் அருகில் உள்ள பிலிச்சிக்குழி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் ஏரிக்கு குளிக்க சென்ற மகள்கள் 2 பேரும் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்களின் துணிகள் மற்றும் காலணிகள் மட்டும் ஏரிக்கரையில் கிடந்துள்ளன.

    பின்னர் ஏரியில் இறங்கி பார்த்தபோது அட்சயாவும், அபியும் ஏரியில் மூழ்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர், இவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மாணவிகளின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது
    • எதிர்பாராத விதமாக 5 அடி ஆழமுள்ள உரை கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் வக்கார மாரி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி மஞ்சுளா. இவருக்கு சொந்தமான பசு மாட்டை அதே பகுதியில் உள்ள அசோகன் என்பவருடைய வயலில் உள்ள தரிசு பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 15 அடி ஆழமுள்ள உரை கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது. இதனை பார்த்த மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மாட்டை கயிற்றால் பிணைத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பசு மாட்டினை மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து பசுமாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வெகுவாக பாராட்டினர்.

    • சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • அவரிடம் இருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆறுமுகம்(27). கிளிமங்கலம் ஓடை அருகே உள்ள குறவர் கொட்டகையில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது செய்யபட்டார்
    • விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 10 அரசுமது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி பகுதியில் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கோடாலி பகுதியில் மது பாட்டில்களை சிலர் பதுக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் கோடாலி காலனி தெரு தங்கராசு மனைவி ராதிகா (வயது40) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராதிகா விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 10 அரசுமது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ராதிகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.



    • விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்தனர்
    • இழப்பீடு தொகை தராததால், ரேணுகா மீண்டும் அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணதாசன்(வயது40). இவர், கடந்த 2012-ம் ஆண்டு வெளிப்பி ரிங்கியத்திலிருந்து கீழப்பழுவூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து மோதியதில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரேணுகா தொடர்ந்த வழக்கில், அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.6.70 லட்சம் இழப்பீடு தர விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து கிளை கழகத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் விழுப்புரம் கோட்டம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரியலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

    ஆனாலும், இழப்பீடு தொகை தராததால், ரேணுகா மீண்டும் அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் அடுத்த குறுக்கு ரோட்டுக்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள் விழுப்புரத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக திருச்சி வந்த விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தை ஜப்தி செய்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.



    • தா.பழூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார்
    • இது குறித்து அவரது தாய் தனலட்சுமி தா.பழூர் போலீசில் புகார் அளித்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் வசித்து வருபவர் அறிவழகன். இவரது மகள் ஜெயப்பிரியா (வயது 19). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயப்பிரியா கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து அவரது தாய் தனலட்சுமி தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து ஜெயப்பிரியாவை தேடி வருகிறார்.

    • செந்துறை அருகே அமைச்சருடன் ‘டிக் டாக்’ செய்ய முயன்ற 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    • செந்துறை பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்க போக்கு–வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வந்தி–ருந்தார்

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்க போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வந்திருந்தார். பல்வேறு கிராமங்களில் திட்ட பணிகளை தொடங்கி வைத்துவிட்டு சன்னாசிநல்லூரில் இருந்து குழுமூர் நோக்கி அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது குழுமூர் காட்டுப்பகுதியில் 2 இளைஞர்கள் செல்போனுடன் அமைச்சர் காரை வழிமறித்த–னர். அதனை தொடர்ந்து அமைச்சர் அவர்களிடம் பேசிவிட்டு குழுமூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் குடிபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் விரைந்து வந்து அங்கு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கிளம்பி அமைச்சரிடம் வந்து செல்பி எடுப்பது போல் நடித்தனர். மேலும் அமைச்சரிடம் டாஸ்மாக்கில் கூடுதலாக வாங்கும் ஐந்து ரூபாயை குறையுங்கள் என்று ரகசியமாக டிக்டாக் வீடியோ எடுத்தனர். இதனை அறிந்த அமைச்சர் உஷாராகி போலீசாரிடம் அந்த இளைஞர்களை பிடித்து ஒப்படைத்தார். அதனைத் செந்துறை போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இளைஞர்கள் கல்லங்குறிச்சி அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அமைச்சரிடம் தகராறு செய்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • வாலிபரை கத்தியால் கிழித்த திராவிடர் கழக பிரமுகர் கைது செய்யபட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 49). திராவிட கழக ஒன்றிய அமைப்பாளர் ஆன இவர் செந்துறை அண்ணா சிலை எதிரே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இந்த பகுதியில் தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு பள்ளம் தோண்டிய போது கட்டிடத்தின் கீழே இருந்த செப்டிக் டேங்க் உடைந்து விட்டது. இந்தநிலையில் இவர் கடையில் இருந்த பாத்ரூமின் பைப்லைனில் இருந்து வந்த கழிவு நீரை இளங்கோவன் திறந்து விட்டார்.

    இவை அருகே கடை நடத்தி வரும் ராஜேந்திரன் மகன்கள் கடை பகுதியில் புகுந்துள்ளது. இதனைக் கண்ட ராஜேந்திரன் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜேந்திரன் மகன் பிரசாத் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் இளங்கோவனிடம் ஏன் கழிவு நீரை திறந்து விட்டுவிட்டு, எனது தந்தையிடம் தகராறு செய்தாய் என்று கேட்டு உள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த இளங்கோவன் ஏற்கனவே கையில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு கட்டு போட்டு இருந்த அனிதாவை தாக்கி–யதோடு தன் கையில் வைத்திருந்த பேனா கத்தி–யால் பிரசாத்தை சரமாரி–யாக கிழித்துள்ளார்.

    இதனால் அவருக்கு 20 இடங்க–ளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீ–சார் விரைந்து சென்று சண்டையை விலக்கி விட்டு பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிர–சாத் கொடுத்த புகாரின் பேரில் இளங்கோ–வனை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோன்று இளங்கோ–வன் கொடுத்த புகாரின் பேரில் பிரசாத் அவரது அண்ணன் வினோத்குமார் மற்றும் இருவரது மனைவி–கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    • செந்துறை ஒன்றியத்தில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கபட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். அதன்படி, இலைக்கடம்பூர்- ஆர்.எஸ்.மாத்தூர் சாலையை ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்து, இந்த சாலையினை செயல்படுவது மூலம் செந்துறை, ஆர். எஸ்.மாத்தூர், படைவெட்டிக்குடிகாடு, சோழங்குடிக்காடு, சன்னாசிநல்லூர், பெரியாக்குறிச்சி, நத்தக்குழி, பொன்பரப்பி மற்றும் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்கள் பயன்பெறுவார்கள் என்றார். தொடர்ந்து, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75.19 லட்சம் மதிப்பிட்டில் பொன்பரப்பி -சிறுகளத்தூர் சாலை ரூ.1.24 கோடி மதிப்பீட்டிலும், சிறுகளத்தூர் கொடுக்கூர் சாலை ரூ.71.43 லட்சம் மதிப்பிட்டிலும், சன்னாசிநல்லூர் -தளவாய் பள்ளி சாலை ரூ.1.92 கோடி மதிப்பிட்டிலும், மற்றும் அயன்தத்தனூர் - முல்லையூர் பள்ளி சாலை மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

    தொடர்ந்து, குழுமூரில் 15-வது நிதி குழு மானியம் (சுகாதார நிதி) திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பிட்டில் துணை சுகாதார மைய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் முருகண்ணன், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நபார்டு மற்றும் கிராம சாலைகளின் திருச்சி கோட்டப் பொறியாளர் பெ.வடிவேல், உதவிக் கோட்டப் பொறியாளர் அரியலூர் வி.பி.சரவணன், உதவி பொறியாளர் எஸ்.பிரியதர்ஷினி, வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • பேரணி ஜெயங்கொண்டம் முக்கிய வீதி வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிந்தது.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அண்ணா சிலையில் மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு சார்பாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை டி.எஸ்.பி. வெங்கடேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாடர்ன் கல்லூரி தாளாளர் பழனிவேல், துணைத்தலைவர் சுரேஷ், ஆய்வாளர்கள் ஜெகநாத் சாஹிரா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி ஜெயங்கொண்டம் முக்கிய வீதி வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிந்தது. இதில் மாணவர்கள் போதை தடுப்பு பற்றிய பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் தன செல்வம், இளங்கோவன், நாகராஜ் மற்றும் மாடர்ன் கல்லூரி மாணவர்கள், காவல்துறை சார்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டது
    • சான்றிதழ்களை எஸ்.பி. வழங்கினார்

    அரியலூர்,

    போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி அரியலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி. கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி, போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி ஓவியப் போட்டிஉள்ளிட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், கூடுதல் எஸ்.பி. அந்தோணி ஆரி, டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ×