என் மலர்
அரியலூர்
- வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
- இது குறித்து உடையார் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் நாசர் (வயது 56). உடையார் பாளையத்தில் கோழிக்கடை நடத்தி வந்தார். கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்து வந்த நாசர், சம்பவத்தன்று கடையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக அரியலூர் மருத்துவ க்கல்லூரி மருத்துவம னையில் சேர்க்கப்பட்ட நாசர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது
- முகாம் அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது.
அரியலூர்:
போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பொதுமக்களிடம் இருந்து 17 மனுக்களை பெற்று விசாரித்தார். மேலும் அவர் மனுதாரர்களின் குறைகளை கேட்டு, அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- விக்கிரமங்கலம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
- பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டித் திருக்கோணம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52), விவசாயி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டி மீது பசுமாடு ஒன்று சென்றபோது மூடி உடைந்து 12 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் எந்திரம் மூலம் கழிவுநீரை அகற்றி பொக்லைன் எந்திரம் மூலம் பசுமாட்டை கயிறு கட்டி மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
- மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- விற்பனைக்காக வைத்திருந்த 19 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சூரியமணல் வடக்கு தெருவை சேர்ந்த சின்னத்திரை (வயது 54) என்பவர் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 19 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- நித்தியானந்தத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
- இவர் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்ததால் கடந்த மே மாதம் அரியலூர் போலீசார் அவரை கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர்.
அரியலூர் :
அரியலூர் ராஜீவ்நகரை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 26). இவர் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்ததால் கடந்த மே மாதம் அரியலூர் போலீசார் அவரை கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் நித்தியானந்தத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் சிறையில் இருந்த நித்தியானந்தத்தை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்து அதற்கான உத்தரவு நகலை சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கினார்கள்.
- அரியலூர் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சியுடன் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் கணேசன் தெரிவித்தார்
- ஒரு அரசு தொழிற்பயிற்சி மையத்திற்கு ரூ.34.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், அரியலூர் தொழிற்பயிற்சி மையத்தினை தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகராவ்முன்னிலையில் நடைபெற்றது. தொழிற்பயிற்சி மையத்தினை ஆய்வு செய்து மாணவர்களுடன், மாணவர்கள் மேற்கொண்ட செய்முறைகள் குறித்து கேட்டறிந்த பின் அமைச்சர் அதன் பின்னர் தெரிவித்ததாவது, இன்றைக்கு இருக்கின்ற நவீன தொழில் நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் புதிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள்.
இவ்வகையான தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சி மாணவர்களுக்கு வழங்கும் விதமாக ரூ.2,878 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்ப மையங்களை உருவாக்கிடும் வகையில் டாடா டெக்னாலஜியுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் புதியதாக தொழில் நுட்ப மையங்கள் ஏற்படுத்தப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பணிகள் முடிவுற்ற 22 தொழில்நுட்ப மையங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 49 அரசு தொழில்பயிற்சி மையங்களில் இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த அயல்நாட்டில் வழங்கப்பெறும் பயிற்சிகள் அனைத்தும், இத்தொழில் நுட்ப மையங்கள் மூலமாக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும். இதனை முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செயல்படுத்தியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு அரசு தொழிற்பயிற்சி மையத்திற்கு ரூ.34.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாணவர்கள் இங்குள்ள சிமெண்ட் ஆலைகளில் பணிபுரிவதற்கான நவீன தொழில்நுட்பங்களை பயின்று வேலை வாய்ப்பை பெறும் வகையில் தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி வழங்க முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வில் விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் திரு.ஜான் போஸ்கோ, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.நாகராஜன், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- ராஜேந்திர சோழன் கால கோட்டைவாசல் தூண் கண்டெடுக்கப்பட்டது.
- 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின.
இந்த பணியின்போது பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன. அவை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவர், வடிகால் அமைப்பு போன்ற சுவர் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இப்பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கியது. இந்த பணியின்போது சோழர் காலத்து கட்டிட எச்சங்கள், பழங்கால அரண்மனை சுற்றுச்சுவர்களின் தொடர்ச்சி, பழங்கால பானை மற்றும் ஐம்பொன் கலந்த செப்பு காப்பு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. பின்னர் இந்த பணிகள் நிறைவடைந்தன.
இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் சில நாட்களுக்கு முன்பு, 11-ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கும், சீன நாட்டிற்கும் இடையிலான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் சீன பானைவோடுகள், காசு வார்ப்பு, சுடு மண்ணால் அலங்கரிக்கப்பட்ட அச்சு முத்திரை ஆகிய 3 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் மாளிகைமேட்டை அடுத்த உட்கோட்டை பகுதியில் உள்ள அய்யனார் கோவில் அருகே அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் நேற்று கிரானைட் கல் தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த தூண் 72 செ.மீ. அகலமும், 6.40 மீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளது. இந்த தூணானது தரையில் பக்கவாட்டில் கிடப்பதால் உடைந்திருக்கலாம் அல்லது சாய்ந்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் அகழ்வாய்வு பணியை தொடரும்போதுதான் அதனுடைய முழு விவரமும் தெரியக்கூடும். இந்த கல்தூணானது ராஜேந்திர சோழன் காலத்தில் மாளிகையின் தென்பகுதி கோட்டை வாசலில் இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இது குறித்து தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
- மானியத்தில் நீர் சேகரிப்பு அமைப்பு-பசுமைக்குடில் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம்
அரியலூர்:
அரியலூர் தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்ட செயலாக்கத்திற்கு அரியலூர் மாவட்டத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் உத்தேச பொருள் இலக்கீடாக 6,364 எக்டேர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.448 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் பயனடையும் வகையில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் காய்கறி குழித்தட்டு நாற்றுகள், சம்மங்கி சாகுபடி, மா, பலா, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை, பழக்கன்றுகள், முந்திரி ஒட்டுச்செடிகள் மற்றும் முந்திரி பழைய தோட்டம் புதுப்பித்தல் போன்றவை அடங்கும்.
மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக நீர் சேகரிப்பு அமைப்பு, வீரிய ரக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில், பசுமைக் குடில், நிலப்போர்வை போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இயற்கை விவசாயிகளுக்கு அங்ககப் பண்ணையம், இடுபொருட்கள் வழங்குதல், நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைத்தல் போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. தேனீப்பெட்டிகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் விளை பொருட்களை அறுவடை செய்த பின்பு சேமிப்பு மற்றும் தரம் பிரிப்பதற்கு சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீத மானியம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு பின்பு சேமித்து வைப்பதற்காக குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு 50 சதவீத மானியத்தில் பணி முடித்தவுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.
காய்கறி மற்றும் மலர்களை இருப்பு வைத்து வினியோகிக்க 100 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன அறை மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வதற்காக நடமாடும் காய்கறி விற்பனை வண்டி 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு செயலாக்க திட்டத்தில் முந்திரி விவசாயிகளுக்கு முந்திரி வெட்டும் எந்திரம், முந்திரி பிரிப்பான் ஆகியவை மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
- மாணவர்களுக்கு நிதி சார் கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு போட்டி நடந்தது.
- ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி வழிகாட்டுதலின்படி மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியால் வினாடி-வினா போட்டி ஒன்றிய அளவில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் பாரத வங்கி முதன்மை மேலாளர் ராஜராஜன் தலைமை தாங்கி வாழ்த்தி பேசினார்.அரியலூர் மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் லியோனில் பெனிடிக் முன்னிலை வகித்தார்.
பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். வினாடி வினா போட்டியில் அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகன் என 18 பள்ளிகளில் இருந்து 8, 9, 10-ம் வகுப்பு பயிலும் 36 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் செங்குந்தபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் லோகேஷ், சுவாதி ஆகியோர் முதலிடத்தையும், அய்யப்பநாயக்கன் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அக்ஷயா, ராகுல் ஆகியோர் 2-ம் இடத்தையும், கல்லாத்தூர் தண்டலை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் லெனின், அபூர்வநாதன், அனுஷ்கா ஆகியோர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பிரகாஷ், சின்னவளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராஜதுரை ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர். ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
- திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கபடும்
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரியலூர்:
அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கிராமங்கள் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் திருக்குறள் பெயர் பலகை வைப்பது, கூட்டமைப்பை வலுவப்படுத்துவது, சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் வழியில் நடத்துவது, 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பத்தாயிரம் பரிசு வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் நாகமுத்து தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தர்ராஜன்,மண்டலத் தலைவர் சின்னதுரை, மாவட்டத் தலைவர் இளங்கோ, துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அரசு வழக்குரைஞருமான சாந்தி, ஒருங்கிணைப்பாளர் செல்லபாண்டியன், துணைச் செயலர் செவ்வேல், கொள்கை பரப்புச் செயலர் பொய்யாமொழி, பெரம்பலூர் மாவட்ட நிர்வாக அமைப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
- டூவீலர் மோதி மூதாட்டி உயிரிழந்தார்
- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோடாலி மெயின் ரோட்டை சேர்ந்த சுப்பையன் என்பவரின் மனைவி அம்பிகை(வயது 85). கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டில் இருந்து கோடாலி காலனி தெரு, பஸ் நிறுத்தம் அருகே உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதே ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சங்கர் ஓட்டி வந்த டூவீலர் எதிர்பாராத விதமாக அம்பிகை மீது மோதியது. இதில் காயமடைந்த அம்பிகை ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் ஸ்டேஷனில் அம்பிகை மகன் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரியலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 15 நாள் ஊதியம் வழங்க கோரிக்கை
- மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
அரியலூர்,
அரியலூர் நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மே மாதம் வழங்க வேண்டிய 15 நாள்கள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் , உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநிலச் செயலர் தண்டபாணி தலைமையில், பம்பு ஆப்ரேட்டர் த. மருதமுத்து, பிச்சைபிள்ளை, துப்புரவு பணியாளர்கள் குருசாமி, பழனியாண்டி, ரேவதி உள்ளிட்டோர் அளித்த மனுவில், நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மே மாதம் 15 நாள்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் மீதி 15 நாள்களுக்கான ஊதியம் இது நாள் வரை வழங்கவில்லை. இது குறித்து நகராட்சி ஆணையர், மேலாளர்களிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இது வரை நடவடிக்கை இல்லை. மேலும் நிலுவைத் தொகை மற்றும் நிரந்த தொழிலாளிகளுக்கு சொந்த குடியிருப்பு வழங்க வேண்டும்.
அரியலூர் ஒன்றியம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் பணியாற்றி வரும் பம்பு ஆப்ரேட்டர், துப்புரவு தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகளாக பொங்கல் போனஸ் ரூ.1000 வழங்கப்படாமல் உள்ளது. நாகமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்னும் ஊதியக் குழுநிலுவை தொகை பணம் முழுமையாக கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே கலெக்டர் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






