என் மலர்
அரியலூர்
- அரியலூரில் இடைநிலை ஆசிரியர்கள் 14-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
- 28-ந்தேதி சென்னையில் போராட்டம் நடத்தபோவதாக அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் ஒன்றியத்தில், அர்ஜனாபுரம், அருங்கால், வண்ணாரப்பேட்டை, கரு.பொய்யர், கரு.சேனாபதி, இடையத்தான்குடி, கல்லக்குடி, ஒ. கூத்தூர், மண்னுழி, முனியங்குறிச்சி, பள்ள கிருஷ்ணாபுரம், ஆதனூர், ஆண்டிப்பட்டாக்காடு, பூ. ஓட்டக் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து 14-வது நாளாக நேற்றும் பணியாற்றினர். இதே போல் திருமானூர், செந்துறை, ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும் 350 ஆசிரியர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
வரும் 27-ந்தேதிக்குள் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், வரும் 28-ந்தேதி முதல் பருவத்தேர்வு விடுமுறை நாள்களில், சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
- அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் ரூ.6.38 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது
- போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் ரூ.6.38 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது.அரியலூர் ஒன்றியம் ராயம்புரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அங்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் ராயம்புரம், பொட்டவெளி சாலை மேம்படுத்துதல், சிறுபாலம் திரும்ப கட்டுதல் மற்றும் 129 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச் சுவர் கட்டுதல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.தொடர்ந்து செந்துறை ஒன்றியம், வாளரக்குறிச்சி கிராமத்தில் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் இரும்புலிக்குறிச்சி, பாளையபாடி , மணகெதி வரையிலும், நாகல்குழி ஊராட்சியில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் உஞ்சினி , வாரியங்காவல் வரையிலும் சாலையை அகலப்படுத்தல் பணியையும், அதே போல் இலை க்கடம்பூர் ஊரா ட்சியில் ரூ.1 கோடி மதிப்பீ ட்டில் செந்துறை , மாத்தூர் வரை சாலை மேம்படுத்துதல் பணியையும் தொடக்கி வைத்த அமைச்சர் சிவ சங்கர், பணியை தரமான பொரு ள்களை கொண்டு விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகி த்தார். உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்டப் பொறியாளர்கள் சிட்டிபாபு, ராஜா, செந்துறை வட்டாட்சியர் பாக்கியம்விக்டோரியா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் காம்பவுண்ட் சுவர் கட்டித்தர கோரிக்கை
- மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பள்ளியில் சின்னவளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் மட்டும் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியானது ஜெயங்கொண்டத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலை இந்த வட்டாரத்தின் முக்கிய சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். பெரும்பாலான மாணவர்கள் இந்த சாலையை கடந்துதான் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் காம்பவுண்ட் சுவர் இல்லாத நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும், வரும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இன்மை நிலை நிலவுகிறது. காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையில் பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் இல்லை. வகுப்பறைகளிலும் உரிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.பெரிய அளவில் விபத்தோ அல்லது அசம்பாவிதமோ நடைபெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறையினர் மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுத்து காம்பவுண்ட் சுவர், சுகாதாரமான குடிநீர், வகுப்பறை மேம்பாடு பணிகளை செய்திட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரியலூரில் கால்நடை பராமரிப்பிற்காக வட்டியில்லா கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
- கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அறிவிப்பு
அரியலூர்,
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கால்நடை பராமரிப்புக்கான நடைமுறை மூலதனக் கடன் வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு வருகிறது.
எனவே ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி மேற்படி நடைமுறை மூலதனக் கடனை பெற்று பயன்பெறலாம்.கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை , நிலவுடைமை தொடர்பாக 10 (1)}கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகிய ஆவணங்களுடன் கடன் மனு சமர்ப்பிக்க வேண்டும்.கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், அவரவர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் படிவத்தினைப் பெற்று ரூ.100 பங்குத்தொகை, ரூ.10 நுழைவுக்கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராகச் சேர்ந்து மேற்கண்டுள்ள ஆவணங்களுடன் நடைமுறை மூலதனக் கடன் மனுவினைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அரியலூரில் நடைபெற்றது
- விழிப்புணர்வு பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட வனத்துறை சார்பில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், சுற்றுச்சூழலை பாதுகாக்க, நிலத்தடி நீரை சேமிக்க, மரம் வளர்ப்போம் என்பன உள்பட மரம் வளர்க்க வேண்டியதின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் எழுதப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலம் சந்தைப்பேட்டை வழியாக சென்று பழைய பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. முன்னதாக அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவ-மாணவிகள் நட்டனர். இந்த நிகழ்ச்சியில், அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்
- மறியல் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விருத்தாச்சலம்-கும்பகோணம் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கல்லாத்தூர் மெயின் ரோட்டு தெருவில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பெண்கள் தொலைதூரம் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அரியலூரில் ராணுவ மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது
- முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை
அரியலூர்,
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் உள்ள முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருமானூர் ஒன்றிய தலைவர் கேப்டன் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்திற்கு ராணுவ கேன்டீன் மற்றும் ராணுவ மருத்துவமனை ஆகியவற்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சங்கத்தை சேர்ந்த அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் மாவட்டம் செந்துறை பேன்சி கடையில் திருட்டு நடைபெற்று உள்ளது
- செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் செந்துறை பஸ் நிலையத்தின் எதிரே பெண்ணாடம் அடுத்த கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த மெய்கண்டன் என்பவர் பேன்சி ஸ்டோர் மற்றும் குளிர்பான கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் உள்ளே புகுந்த 4 மர்ம ஆசாமிகள் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து மெய்கண்டன் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- அரியலூரில் ரூ.347 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது
- மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூர்,
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரியலூர்-செந்துறை சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய நிர்வாக அலுவலகம், 6 மாடிகளுடன் கூடிய மருத்துவக்கல்லூரி, வங்கி, அஞ்சல் நிலையம், மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கூடிய கட்டிடம், 9 நவீன ஆபரேஷன் தியேட்டர்கள், மாணவ-மாணவிகளுக்கு 5 மாடிகள் கொண்ட விடுதி கட்டிடம், பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 700 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு மட்டும் பகுதி நேரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் முதல் இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. உள்நோயாளிகளுக்கு பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய மருத்துவமனைக்கு உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு மாற்றப்பட்டுள்ளது. இங்கு எம்.ஆர்.ஐ. சி.டி. ஸ்கேன் அமைக்கும் பணிகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது. அந்த பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் திறக்கப்படும் என தெரிகிறது.தற்சமயம் பழைய அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டும், குழந்தைகள் சிகிச்சை வார்டும் மட்டும் செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த வார்டுகளையும் புதிய மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய மருத்துவமனை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- அரியலூர் செங்குணம் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 2 சிலைகள், 1 கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல்
அரியலூர்,
1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மருவத்தூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்ராஜா (வயது 54). இவரது நண்பர் அதே ஊரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (45). இவர்கள் 2 பேரையும் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும், கணேசின் வீட்டிலிருந்து சுமார் 3 அடி உயரமுள்ள 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 சிலைகள் மற்றும் 1 கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- அரியலூர் மாவட்டத்தில் விளை நிலங்களுக்கு வன விலங்குகள் வருவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, அரியலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் செங்கமுத்து, மாவட்டத்தில் யூரியா, காம்பளக்ஸ் போன்ற உரங்கள் அதிக விலைக்கு விற்கும் கடைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நத்தம் பட்டாக்களை கணினியில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசும்போது, அரியலூர் மாவட்டம் தூத்தூர் - தஞ்சாவூர் மாவட்டம்வாழ்க்கை இடையே கொள்ளிடத்தில் கதவணை கட்ட வேண்டும் என்றார்.மண்ணுழி செந்தில் பேசும்போது, வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் யூக்லிப்டஸ் மரங்களை நடுவதனால், வனவிலங்கு களுக்கு தேவையாக தீவனம்கிடைப்பதில்லை. இதனால், தங்களுக்கு தேவையாக உணவு பொருளை தேடி விளைநிலங்களுக்கு குரங்கு, பன்றி, மயில், காட்டு மாடு உள்ளிட்டவை வருகின்றன. இதனால் விளை பொருட்கள் சேதமடைகின்றன. எனவே, வனத்துறையினர் யூகலிப்டஸ்(தைல மரம்) மரங்கள் நடுவதை தவிர்க்க வேண்டும். விளை நிலங்களுக்கு வன விலங்குகள் வருவதை வனத்துறையினர் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டு இயக்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பாண்டியன் பேசும்போது, மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதை தடை செய்ய வேண்டும். எள், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என்று பேசினார்.விவசாயிகளின் கோரிக்கை களை கேட்டறிந்த கலெக்டர் அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை இயக்குநர் தீபாசங்கரி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் கருணாநிதி நூற்றாண்டு கலைவிழா போட்டிகள் நடைபெற்றது
- 50 அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன
அரியலூர்,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 50 அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைமையாசிரியை க.முல்லைக்கொடி தலைமை வகித்தார். உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவி சம்மவாகினிக்கு கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பேரூராட்சி உறுப்பினர்கள் த.பிரபாகரன், கீதா கொளஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். முடிவில் கணித ஆசிரியை செ.தமிழரசி நன்றி கூறினார். சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிக ளுக்காக நடைபெற்ற கலைப் போட்டிகளை பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா தொடக்கி வைத்தார்.தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில்குமரன், செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். இதே போல் மாவட்டத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கலைவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.






