என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்டித்தர கோரிக்கை
- சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் காம்பவுண்ட் சுவர் கட்டித்தர கோரிக்கை
- மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பள்ளியில் சின்னவளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் மட்டும் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியானது ஜெயங்கொண்டத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலை இந்த வட்டாரத்தின் முக்கிய சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். பெரும்பாலான மாணவர்கள் இந்த சாலையை கடந்துதான் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் காம்பவுண்ட் சுவர் இல்லாத நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும், வரும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இன்மை நிலை நிலவுகிறது. காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையில் பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் இல்லை. வகுப்பறைகளிலும் உரிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.பெரிய அளவில் விபத்தோ அல்லது அசம்பாவிதமோ நடைபெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறையினர் மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுத்து காம்பவுண்ட் சுவர், சுகாதாரமான குடிநீர், வகுப்பறை மேம்பாடு பணிகளை செய்திட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






