என் மலர்tooltip icon

    அரியலூர்

    பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ஈடுபட்டது செந்துறை பகுதி அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் தாலுகா அலுவலகம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணைப்பதிவாளராக ஸ்ரீராம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இங்கு பணி மாறுதலாகி வந்தார்.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக குறைந்த அளவே பத்திரப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு சமீப காலமாக அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தன.

    அதன் அடிப்படையில் நேற்று மாலை திடீரென அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் வானதி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனை நடத்தினர்.

    பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஜன்னல் மற்றும் கதவுகளை பூட்டினர். மேலும் மாலை நேரத்தில் பத்திரப் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் மற்றும் சார்பதிவாளர் ஸ்ரீராம் மற்றும் உதவியாளர் ஜோதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.

    நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடவடிக்கைகளின் முழு விபரம், அதற்காக பெறப்பட்ட கட்டணம் உள்ளிட்டவை குறித்து நீண்ட நேரமாக விசாரணை நடத்தப்பட்டது.

    அத்துடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் குறிப்பெடுத்துக் கொண்டனர். பின்னர் சார் பதிவாளர் ஸ்ரீராமை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றும் விசாரணை நடத்தினர்.

    மாலை தொடங்கி நள்ளிரவு வரை நீடித்த இந்த திடீர் அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.38 ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியது. அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ஈடுபட்டது செந்துறை பகுதி அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே ஆசை வார்த்தை சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழுதுடையான் கிராமத்தை சேர்ந்த தியாகராஜனின் மகன் பிரகாஷ்(வயது 27). கூலித்தொழிலாளியான இவர், 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமானார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா, ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் பிரகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.
    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அரியலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டார். இதன் படி ஒரு இரவில் 36 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொடூர கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அவற்றில் பழிக்குப்பழியாக நடந்த கொலைகள் சற்று அதிகம் இருந்தன. மேலும் கொள்ளை சம்பவங்களும் அதிகரித்தன. இந்த கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களும், கொலையானவர்களும் பலர் ரவுடிகள் பட்டியலில் இருந்தனர்.

    போலீசார் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், கொலையானவர்களின் உறவினர்கள் வன்மம் வைத்து கொலையாளிகள் ஜாமினில் வெளிவரும் போது அவர்களை பழி தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்கதைபோல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதே போல் கொள்ளை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

    தற்போது அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிபறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிபறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய டி.ஜி.பி., போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு பலனாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 36 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி, அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து, குற்றங்களில் செயல்படாமல் இருக்க வேண்டும் என்று எச்சரித்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை சுபஸ்ரீயை தனிப்படை போலீசார் இன்று கோவையில் மீட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 34), கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி மீனா (27). இந்த தம்பதியினருக்குக்கு திருமணம் ஆகி 9 வயது, 4 வயது, 3 வயது என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நான்காவதாக கர்ப்பம் அடைந்த மீனா மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு சுபஸ்ரீ என்று பெயரிட்டனர்.

    ஆனாலும் 4 குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை எப்படி வளர்த்து ஆளாக்க போகிறோம் என்று தம்பதியினர் தொடர்ந்து புலம்பி வந்துள்ளனர். இது தொடர்பாக உறவினர்களிடமும் ஆலோசித்து வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பிறந்து 3 மாதங்களேயான குழந்தையை வீட்டில் காணவில்லை. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் கேட்டபோது, குழந்தை தூங்கிக்கொண்டு இருக்கிறது என்று மழுப்பலாக பதிலளித்து உள்ளனர். இது உறவினர்கள் மற்றும் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத புதிய நபர்கள் சரவணனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்கள் யாரென்று கேட்ட போது, தூரத்து உறவினர்கள், நண்பர்கள் என்று சரவணன் கூறியுள்ளார்.

    இதற்கிடையே சரவணன்- மீனா தம்பதியர் பிறந்து மூன்று மாதமான பெண் குழந்தை சுபஸ்ரீயை யாரோ ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டதாக தகவல் கசிந்தது. இதுபற்றிய ரகசிய தகவல் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவனுக்கும் கிடைத்துள்ளது.

    உடனடியாக அதிரடி விசாரணையில் இறங்கிய அவர், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கு தெரிவித்தார். அதனடிப்படையில் துரைமுருகன் வடவீக்கம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜூடன், சரவணன் வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. சரவணனும், அவரது மனைவி மீனாவும் மாயமாகி இருந்தனர். அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்தார். மேலும் மாயமான சரவணன், மீனாட்சி ஆகியோரை தேடி வந்தனர். உறவினர் வீட்டில் இருந்த அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வறுமையால் நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் கோவையை சேர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்றதை ஒப்புக்கொண்டனர்.

    கைது

    இதையடுத்து குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஈரோட்டை சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மண்ணச்சநல்லூரை சேர்ந்த முத்தையன் மற்றும் குழந்தையின் பெற்றோர் சரவணன், மீனா ஆகியோரை ஜெயங்கொண்டம் போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதற்கிடையே ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை சுபஸ்ரீயை தனிப்படை போலீசார் இன்று கோவையில் மீட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உடையார்பாளையம் அருகே கடை முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோட்டை வாசல் கீழ வீதியை சேர்ந்தவர் ஷேக்இப்ராகிம்(வயது 47). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர், தனது மோட்டார் சைக்கிளை கடை முன் நிறுத்திருந்தார். பின்னர் இரவில் வேலை முடித்து வீட்டிற்கு செல்ல மோட்டார் சைக்கிளை பார்த்தபோது, அதனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஷேக்இப்ராகிம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
    அரியலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை.
    அரியலூர்:

    அரியலூர் நகரில் கடந்த சில நாட்களாக சித்திரை மாதத்தில் கத்தரி வெயில் சுட்டெரிப்பதுபோன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சிறிய தூறலாக மழை பெய்ய தொடங்கியது.

    சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. அதிக சத்தத்துடன் இடி மற்றும் மின்னல் ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் நகரில் குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டது. மேலும் மின்சாரம் தடை ஏற்பட்டது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் அரியலூர் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. ஜெயங்கொண்டம், செந்துறை பகுதிகளில் பெய்த மழையின் அளவைவிட அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைவு. இதனால் அரியலூரை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏரிகள் வறண்ட நிலையில் உள்ளன. பல இடங்களில் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைநீர் ஏரிகளுக்கு வருவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    திருமானூர் அருகே சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம்(வயது 50). இவரது அண்ணன் கிறிஸ்துராஜின் மகன் பிரதீப் அந்தோணிராஜ்(25). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினர் பேசிக்கொண்டிருந்தபோது ஆபிரகாம், பிரதீப் அந்தோணிராஜின் மனைவியிடம் பெரியவர்களிடம் மரியாதையாக பேச மாட்டாயா என்று கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் அந்தோணிராஜ் நேற்று, ஆபிரகாமை அரிவாளால் வெட்டியுள்ளார். அதை ஆபிரகாம் தடுத்தபோது அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து ஆபிரகாமை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் அந்தோணிராஜை கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் திருச்சி ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 52). விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாகவும், இதற்காக பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் சரியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், வலி தாங்க முடியாமல் வீட்டில் கடலை செடிக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். 

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் முருகனை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    செக் மோசடி வழக்கில் அரியலூர் தனியார் கல்லூரி தாளாளருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 53). இவர் அரிமா சங்க மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். அரியலூர் அருகே கீழப்பழுவூரில் உள்ள தனியார் கல்லூரி தாளாளர் பாஸ்கர்.

    இவர் பெட்ரோல் விற்பனை நிலையம் ஆரம்பித்த போது, ஸ்ரீதரிடம் ரூ.5 லட்சம் கடனாகப் பெற்றிருந்தார். இதற்கு ஈடாக 5 லட்சத்திற்கு வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்திய போது பாஸ்கர் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்ப வந்து விட்டது. வழக்கறிஞர் மூலம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் வராததால் அரியலூரில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு ஸ்ரீதர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. செக் மோசடி வழக்கில் அரியலூர் தனியார் கல்லூரி தாளாளர் பாஸ்கருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி (எண் 2) செந்தில்குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
    ஜெயங்கொண்டம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர் கோயில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக் கொல்லை, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால் வானதிரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சி பெருமாள் நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்த நல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவன்நல்லூர், இடைக்கட்டு, ஆயுதகளம் (வடக்கு-தெற்கு), தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் மற்றும் அருகில் உள்ள கிராம பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 4 மாணவ, மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    அரியலூர்:

    கொரோனா பரவல் குறைந்ததை தொடா்ந்து, அரசின் உத்தரவின்படி 9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். இந்நிலையில் அரியலூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் ஒருவருக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் சோர்வும், அதிக காய்ச்சலும் இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த மாணவருக்கும், பள்ளியில் அவருடன் படிக்கும் 67 மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த மாணவருக்கு தொற்று உறுதியானது. பரிசோதனை முடிவில் மற்றவர்களுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர், தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மாணவர் படித்த வகுப்புகள் உள்பட அனைத்து வகுப்புகளும் தொடர்ந்து நடந்தன. மேலும் அனைத்து வகுப்புகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.

    கடந்த 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு அரியலூர் நகரில் ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கும், பிளஸ்-2 மாணவிக்கும், வரதராஜன்பேட்டையில் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு மாணவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை 4 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மீன்சுருட்டி அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கீழ செங்கல்மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அவா்களில் இரண்டாவது மகளான துர்க்காதேவிக்கும்(வயது 26), ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் அன்பரசனுக்கும்(30) கடந்த 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    கடந்த 10-ந் தேதி மகளும், மருமகனும், மறு வீடு விருந்துக்கு வந்திருந்தனர். அப்போது துர்காதேவிக்கு மாதவிடாய் காரணமாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர், சோர்வாக காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி இரவு எல்லோரும் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் மரத்தில் மாடு கட்டுவதற்காக வைத்திருந்த கயிற்றால் துர்க்காதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கருப்பையன் கொடுத்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் மற்றும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துர்க்காதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வயிற்று வலி காரணமாக துர்க்காதேவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×