search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வறுமை... 3 மாத பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்

    ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை சுபஸ்ரீயை தனிப்படை போலீசார் இன்று கோவையில் மீட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 34), கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி மீனா (27). இந்த தம்பதியினருக்குக்கு திருமணம் ஆகி 9 வயது, 4 வயது, 3 வயது என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நான்காவதாக கர்ப்பம் அடைந்த மீனா மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு சுபஸ்ரீ என்று பெயரிட்டனர்.

    ஆனாலும் 4 குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை எப்படி வளர்த்து ஆளாக்க போகிறோம் என்று தம்பதியினர் தொடர்ந்து புலம்பி வந்துள்ளனர். இது தொடர்பாக உறவினர்களிடமும் ஆலோசித்து வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பிறந்து 3 மாதங்களேயான குழந்தையை வீட்டில் காணவில்லை. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் கேட்டபோது, குழந்தை தூங்கிக்கொண்டு இருக்கிறது என்று மழுப்பலாக பதிலளித்து உள்ளனர். இது உறவினர்கள் மற்றும் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத புதிய நபர்கள் சரவணனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்கள் யாரென்று கேட்ட போது, தூரத்து உறவினர்கள், நண்பர்கள் என்று சரவணன் கூறியுள்ளார்.

    இதற்கிடையே சரவணன்- மீனா தம்பதியர் பிறந்து மூன்று மாதமான பெண் குழந்தை சுபஸ்ரீயை யாரோ ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டதாக தகவல் கசிந்தது. இதுபற்றிய ரகசிய தகவல் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவனுக்கும் கிடைத்துள்ளது.

    உடனடியாக அதிரடி விசாரணையில் இறங்கிய அவர், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கு தெரிவித்தார். அதனடிப்படையில் துரைமுருகன் வடவீக்கம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜூடன், சரவணன் வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. சரவணனும், அவரது மனைவி மீனாவும் மாயமாகி இருந்தனர். அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்தார். மேலும் மாயமான சரவணன், மீனாட்சி ஆகியோரை தேடி வந்தனர். உறவினர் வீட்டில் இருந்த அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வறுமையால் நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் கோவையை சேர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்றதை ஒப்புக்கொண்டனர்.

    கைது

    இதையடுத்து குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஈரோட்டை சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மண்ணச்சநல்லூரை சேர்ந்த முத்தையன் மற்றும் குழந்தையின் பெற்றோர் சரவணன், மீனா ஆகியோரை ஜெயங்கொண்டம் போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதற்கிடையே ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை சுபஸ்ரீயை தனிப்படை போலீசார் இன்று கோவையில் மீட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×