search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby sold"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வறுமை காரணமாக ஆண் குழந்தை ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள டோம்பிவ்லி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

    அவரது குடும்பம் ஏற்கனவே வறுமையில் வாடியது. எனவே இந்த குழந்தையை வளர்க்க வழி இல்லாமல் தவித்தார். எனவே குழந்தையை விற்று விட முடிவு செய்தார்.

    இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் உதவி செய்தனர். அந்த குழந்தையை முலுண்ட் நகரைச் சேர்ந்த ஒருவர் வாங்குவதற்கு முன் வந்தார். அவரை அந்த பெண்கள் குழந்தையின் தாயிடம் அழைத்து வந்தனர்.

    பேரம் பேசி ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்துக்கு அந்த நபர் குழந்தையை வாங்கினார். பின்னர் தனது வீட்டுக்கு குழந்தையை எடுத்து சென்று விட்டார்.

    இந்த தகவல் போலீசுக்கு தெரிய வந்தது. அவர்கள் விசாரணை நடத்தியதில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

    இதையடுத்து குழந்தை வாங்கியவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். குழந்தையின் தாய், விற்பதற்கு உதவிய 3 பெண்கள், மேலும் ஒருவர் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது குழந்தை பராமரிப்பு பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாமக்கல் குழந்தை விற்பனை சம்பவத்தில் மேலும் ஒரு பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இச்சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக நடந்த குழந்தைகள் விற்பனை சம்பவம் தொடர்பாக காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற நர்சு உதவியாளர் அமுதா என்கிற அமுதவள்ளி (வயது 50), அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஈரோட்டை சேர்ந்த பர்வீன், ஹசீனா, அருள்சாமி, லீலா, செல்வி மற்றும் சேலம் எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த சாந்தி ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான நர்சு அமுதவள்ளி மற்றும் இடைத்தரகர்களை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் ஏராளமான குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது. இதுவரை 30 குழந்தைகள் வரை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டதாக சி.பி.சி.ஐடி. போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் பல குழந்தைகள் விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் இன்னும் பல இடைத்தரகர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடி பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ரேகா (வயது 40) என்ற பெண்ணுக்கு குழந்தை விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் கமி‌ஷன் அடிப்படையில் இடைத்தரகர் போல் செயல்பட்டு வந்தார்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பெங்களூரு விரைந்து சென்று ரேகாவை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நாமக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் இச்சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த நிலையில் 260 குழந்தைகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 300 குழந்தைகள் பிறந்திருப்பதும் இதில் 260 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதனால் அந்த 260 குழந்தைகளும் விற்பனை செய்யப்பட்டதா? அல்லது அவர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டார்களா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 20 குழந்தைகள் மாயமானது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். #Rasipuramnurse
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொல்லிமலையில் அதிக அளவில் குழந்தைகள் விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் 20 குழந்தைகள் மாயமானதாக திடீர் தகவல் பரவியது. குழந்தைகளின் பெற்றோர்களிடம் பிறப்பு சான்றிதழ் மட்டும் இருப்பதாகவும், குழந்தைகள் அவர்களிடம் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

    அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பதிவேட்டில் உள்ளபடி பிறந்த குழந்தைகள் அங்கு உள்ளார்களா? என்பது தொடர்பாக சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    20 குழந்தைகள் மாயமானதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இது சம்பந்தமான கணக்கு எடுக்கும் பணி முடிந்தபிறகு தான் இதுபற்றி தெரியவரும்.

    கொல்லிமலையை சேர்ந்தவர்கள் வெளியூர்களில் குழந்தை பிறந்து இருந்தால் பிறப்பு சான்றிதழ் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #RasipuramNurse
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளங் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். #RasipuramNurse
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை விற்பனை சம்பவம் விசுவரூபம் எடுத்துள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் இதுவரை நர்சு அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோடு நர்சு பர்வீன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் பல இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த நிலையில் குழந்தை விற்பனை சம்பவத்தில் தொடர்புடைய ஈரோடு, திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் ஒரு பெண்ணின் பெயர் ஹசினா என்பது ஆகும்.

    கைதான 4 பேரும் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு புரோக்கர்களாக செயல்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இதனால் குழந்தை விற்பனை சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரிடமும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் அவர்களும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் கைதான அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரின் செல்போன்களில் உள்ள எண்களை ஆய்வு செய்து அதில் குழந்தை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் யாராவது உள்ளார்களா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தில் குழந்தை பெற்று தர பெண்கள் பயன்படுத்தப்பட்டார்களா? என்பது குறித்தும் பெண்களின் கரு முட்டைகளை விற்பனை செய்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதனால் இந்த சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #RasipuramNurse
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வதாக வெளியான ஆடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #RasipuramNurse
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆண் குழந்தைகளை 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 3 லட்ச ரூபாய்க்கும் விற்பதாக தெரிகிறது.

    குழந்தைகளின் அழகான தோற்றம், கலர் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

    பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் குழந்தைகள் இருப்பதை அறிந்து, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்று வந்ததாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் ஓய்வு பெற்ற நர்ஸ் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் அந்த நர்ஸ், நான் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். இதனால் நர்ஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

    குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என அவர் கூறுகிறார்.

    இந்த ஆடியோ பேச்சு ராசிபுரம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

    இதையடுத்து ராசிபுரம் மகளிர் போலீசார் ஓய்வு பெற்ற நர்சிடம் தற்போது அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை வாங்கி, விற்றது உண்மையா? அல்லது தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறீர்களா? என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     
    இச்சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #RasipuramNurse
    ×