என் மலர்
அரியலூர்
ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வைரம்(வயது 58). பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றிய இவர், விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். வைரத்தின் மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் வைரம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு, வீட்டிற்குள் தூங்கினார். மறுநாள் எழுந்து வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றபோது, கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பக்க கதவும் திறந்து கிடந்தது. மேலும் மற்றொரு அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 3 பவுன் சங்கிலி, 3 ஜோடி தோடு, கம்மல், தங்கக்காசு என 4½ பவுன் நகைகளும், வெள்ளிப்பொருட்கள் குத்து விளக்கு, டம்ளர், கிண்ணம், கரண்டி மற்றும் ரூ.38 ஆயிரம் என மொத்தம் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் வைரம் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றார்.
மேலப்பழுவூரில் கல்குவாரி- அரிசி ஆலையை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள மேலப்பழுவூர் கிராமத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து ஜல்லிக்கற்கள் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் நேற்று அந்த கல்குவாரியை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக அளவுக்கதிகமாக வெடிபொருட்களை பயன்படுத்தி பாறைகளை உடைப்பதால் குடியிருப்பு பகுதிகளில் பெரும் அதிர்வும், சத்தமும் ஏற்படுகிறது. திடீரென ஏற்படும் சத்தத்தால் குழந்தைகள், முதியவர்கள் என பலரும் அச்சப்படுகின்றனர். மேலும் அதிர்வால் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் உதிர்கின்றன. குவாரி பகுதியில் வெடி வைத்து 200 அடிக்கு மேல் பாறைகள் தகர்த்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் அவ்வழியே செல்லும் விவசாயிகளின் ஆடு, மாடுகள் தவறி விழுந்து உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
எனவே அளவுக்கு அதிகமான சத்தம் மட்டும் அதிர்வுகளை ஏற்படுத்தும் வெடிபொருட்களை பயன்படுத்தக்கூடாது. இதுபோன்று 200 அடிக்கு மேல் கல்லை வெட்டி எடுக்கும் அளவிற்கு அரசிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து கல்குவாரி அருகில் உள்ள தனியார் அரிசி அரவை ஆலையை அவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, அந்த ஆலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் வீசும் கழிவுநீரை ஆலைக்கு பின்புறம் உள்ள தண்ணீர் வரத்து ஓடையில் தேக்கி வைத்துள்ளனர். மழைக்காலங்களில் அந்தக் கழிவுநீர், மழைநீருடன் கலந்து, குடிநீருக்கு பயன்படுத்தப்படும் குளத்தில் வந்து கலக்கிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உடையார்பாளையம் அருகே மது குடிக்க பணம் தராத தாயை தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி நீலா(வயது 46). இவர்களது மகன் விஜய்(24). கூலி தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடிப்பது வழக்கம் என்றும், இந்நிலையில் நேற்று விஜய் மது குடிப்பதற்காக நீலாவிடம் பணம் கேட்டதாகவும் தெரிகிறது. அதற்கு நீலா பணம் தர மறுத்ததால், அவரை விஜய் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நீலா ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் நீலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீன்சுருட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மீன்சுருட்டி அருகே உள்ள நரசிங்கபாளையம் மேலத்தெருவை சேர்ந்த சாமிநாதன்(வயது 55) என்பவர், நரசிங்கபாளையம் அருகே உள்ள இடப்பள்ளம் என்ற இடத்தில் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து சாமிநாதனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழைநீர் தேங்கி சாலை சேதமடைந்துள்ளது. மேலும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த சின்னவளையம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தில், நகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட காமிட்டி அம்மன் கோவிலுக்கு பின்புறம் பால்வாடி மேலத்தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை, நீர் வரத்து வாய்க்கால் இல்லாமல் அமைக்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் சென்றதால், சாலை சிதிலமடைந்து தற்போது நடந்து செல்வதற்கு கூட தகுதியற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதுடன், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் தருவாயில் உள்ளதால் போர்க்கால அடிப்படையில் சாலையின் 2 பக்கங்களிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து காமிட்டி அம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒரு குழாய் பாலமும், ஜெயங்கொண்டம்-மணக்கரை சாலையில் இருந்து பால்வாடி தெருவுக்கு பிரியும் பிரிவு சாலையில் ஒரு குழாய் பாலமும் அமைத்து, சாலையை உயர்த்தி, தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று மணக்கரை பால்வாடி தெரு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செந்துறை அருகே வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் ராஜா(வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அவர் தனது தந்தையின் கார் மற்றும் பொக்லைன் எந்திரங்களை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இரவில் தூக்கமின்றி அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்து வந்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வெளியே சென்ற அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் தேடியபோது, அவரது மாமனார் வீட்டிற்கு பின்புறம் உள்ள கிணற்றுமேட்டில் அவரது செல்போன் மற்றும் செருப்புகள் இருந்ததை கண்டனர். இதையடுத்து அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.
இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்கமின்மை நோயால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீன்சுருட்டி அருகே உள்ள வடவாறு ஆற்றங்கரையின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கொள்ளிடம் கீழணை உள்ளது. இந்த கீழணையில் இருந்து வடவாறு என்னும் ஆறு பிரிந்து செல்கிறது. இந்த கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாகத்தான் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வடவாறு தலைப்பில் தான் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன.
குறிப்பாக சென்னை, புதுச்சேரி, கடலூர், வேலூர், காஞ்சீபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், ராஜமன்னார்குடி போன்ற அனைத்து பஸ்களும் இங்கு நின்று செல்லும். இந்த பஸ் நிறுத்தத்திற்கு தங்களது குழந்தைகளுடன் வரும் பஸ் பயணிகளில் சிலர் பஸ் வருவதற்கு முன்னதாக அருகில் உள்ள வடவாற்றில் செல்லும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பது வழக்கம்.
அதேபோல, உள்ளூர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் பொழுது போக்கிற்காக இங்கு வந்து செல்கிறார்கள். ஆற்றில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது. தற்போது வடவாற்றில் தண்ணீர் செல்வதையும், மீன்பிடிப்பதை பார்ப்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வருகின்றனர்.இந்த வடவாற்றின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லாததால் வேடிக்கை பார்ப்பதற்காக வரும் பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள் கால் தவறி விழுந்தால் ஆற்றில் தான் விழ வேண்டும். இதனால், பலர் தங்களது குழந்தைகளின் கைகளை இறுக பற்றிக் கொள்கிறார்கள்.
ஆகவே, ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன், இந்த ஆற்றின் இரண்டு புறமும் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தா.பழூர் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் தினக்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 61). இவர் தினக்குடி கிராமத்தில் சாலையோரத்தில் நடந்து வந்தபோது எதிரே மயிலாடுதுறை செட்டித்தெருவை சேர்ந்த ராஜகோபாலின் மகன் சரவணன் வேகமாக ஓட்டி வந்த கார் கணேசன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து கணேசனின் மருமகன் வீரமணி கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூரில் வீட்டில் ரூ.53 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மார்க்கெட் தெருவில் வசிப்பவர் விஜயலெட்சுமி(வயது 65). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு, நடைபயிற்சி சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மணிபர்சில் வைத்திருந்த ரூ.53 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுபற்றி அரியலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, மளிகை கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஆந்திர மாநிலம் ஒங்கோலு போத்தவரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடபாபு (வயது 43). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு வந்து, ஜூப்ளி ரோட்டில் வாடகை பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் பக்கத்து தெருவில் தனியார் ரைஸ்மில் சந்தில் மளிகை கடையும் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 15-ந் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் அவரது மளிகைக்கடையின் பூட்டை அறுத்தும், கேமராவை உடைத்தும் திருட முயன்றனர். அப்போது அந்த வழியாக இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி(கூர்கா), இது குறித்து கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே காவலாளியை பார்த்தவுடன் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். கடையின் உரிமையாளர் வெங்கடபாபு அங்கு வந்து பார்த்தபோது பூட்டு அறுக்கப்பட்டு, கேமரா உடைந்த நிலையில் இருந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வெங்கடபாபு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மளிகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், மளிகை கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது முறையே 17 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர் அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீசார், விழுப்பணங்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை ஒருவர் ஏற்றி வந்தார். போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் வந்தவரிடம் விசாரித்தபோது, அவர் அதே கிராமத்தை சேர்ந்த கலியபெருமாளின் மகன் ராஜேந்திரன்(வயது 34) என்பதும், அவர் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மோட்டார் சைக்கிளை கைப்பற்றி ராஜேந்திரனை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விக்கிரமங்கலம் அருகே 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சுற்றி அணைக்குடி, அறங்கோட்டை, புதுப்பாளையம் போன்ற ஊர்கள் உள்ளன. ஸ்ரீபுரந்தான் ஊராட்சி 9 வார்டுகளை கொண்டதாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை இந்த ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கி, வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் போதிய நிதி ஒதுக்கி வேலை கொடுக்கும்படி ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கேட்டும், அதிகாரிகள் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் உலகநாதன், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீபுரந்தான் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், 100 நாள் வேலை கேட்டு கும்பகோணம்- அரியலூர் சாலையில் ஸ்ரீபுரந்தான் பஸ் நிலையம் அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த், தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குணசேகரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 100 நாள் வேலை உடனடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் கும்பகோணம்-அரியலூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






