என் மலர்tooltip icon

    அரியலூர்

    படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி விசாரணை நடத்தி வருகிறார்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள அம்பலவர் கட்டளை தெற்குத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 29). இவர் ஐ.டி.ஐ. (தொழில் கல்வி) படித்துள்ளார். அவர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றும், இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் மாரியப்பனின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவிந்தபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜகுமாரி(வயது 48) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜகுமாரியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகன்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி மடத்து பக்தர்களால் அன்னாபிஷேகம் தொடங்கப்பட்டது. இதில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று 100 மூட்டை பச்சரிசி சாதத்தை கோவில் வளாகத்திலேயே சமைத்து, அதனை 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட லிங்கத்திற்கு சாற்றப்பட்டு, மாலை 6.45 மணியளவில் ஐந்து அடுக்கு தீபங்கள் காட்டப்படும். பின்னர் இரவு 8 மணிக்கு மேல் லிங்கத்தின் மீது சாற்றப்பட்ட சாதம் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் அன்னாபிஷேகத்திற்கு பதிலாக சிவலிங்கத்திற்கு அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று 37-வது அன்னாபிஷேக விழா நடந்தது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு அன்னாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த ஆண்டும் அன்னக்காப்பு அலங்காரமே செய்யப்பட்டது.

    இதையொட்டி நேற்று காலை கணக்க விநாயகருக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 9 மணியளவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு திரவியப்பொடி, மஞ்சள், திருநீறு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் கங்கை நீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு 5 அடுக்கு தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 3 மணியளவில் 60 கிலோ பச்சரிசி கொண்டு குழைவாக சமைக்கப்பட்ட அன்னம் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்டு, மலர்கள் மற்றும் பலகாரங்களால் அலங்கரித்தனர். மாலை 6.45 மணியளவில் ஐந்து அடுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு மேல் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிட்டால் நோய்கள் குணமாகி, குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    அன்னாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை மூலம் பக்தர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதேபோல் மீன்சுருட்டி பகுதியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
    அன்னாபிஷேகத்திற்காக கங்கைகொண்ட சோழபுரம் கோவில் பிரகதீஸ்வரருக்கு வழக்கமாக நடைபெறும் 2,500 கிலோ அரிசி இந்த ஆண்டு 60 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கங்கை கொண்டசோழபுரம். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன் கங்கை வரை படையெடுத்து சென்று வடபுறத்து மன்னர்களை வெற்றிக்கொண்டதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி அங்கு பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார்.

    இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 13½ அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என போற்றி வணங்கப்படுகிறது. கங்கை கொண்டசோழபுரம் பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

    அன்றைய தினத்தில் 100 சிப்பம் மூட்டை கொண்ட 2,500 கிலோ பச்சரிசியைக் கொண்டு கோவில் வளாகத்தில் சமைத்து, பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டு 50 வகையான பழங்கள், வில்வ இலை உட்பட 11 வகை இலைகள், 21 வகை பூக்களால் அலங்கரித்து. (சந்திரோதய காலத்தில்) மாலை 6 மணியளவில் மகா தீபாராதனை நடந்தப்படும்.

    அதன்படி ஐப்பசி பவுர்ணமியான இன்று 37-வது ஆண்டு அன்னாபிஷேக விழாவையொட்டி கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று காலை கணக்க விநாயகருக்கு முதல் அபிஷேகம் நடைபெற்றது. கங்கை நீர், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்பட 21 வகையான பொருட்களால் இந்த அபிஷேகம் நடந்தது. பின்னர் ருத்ரஹோமம், பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவக்கிரகங்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால் அன்னாபிஷேக விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் தான் அனுமதியும் வழங்கப்பட்டது. வழக்கமாக நடைபெறும் 2,500 கிலோ அரிசி இந்த ஆண்டு வெறும் 60 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதுவும் கோவிலுக்கு வெளியில் சாதம் தயார் செய்யப்பட்டு மதியம் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த சாதம் பிரகதீஸ்வரரின் முன்பக்கம் மற்றும் சாற்றப்பட்டு அன்னக்காப்பு அலங்காரத்தில் மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், பின்னர் ஐந்தடுக்கு தீபா ராதனையும் நடக்கிறது.

    ஐப்பசி பவுர்ணமி அன்று சிவ ஸ்தலத்திற்கு சென்று வழிபடுவது (பாவ விமோசனம்) புண்ணியம், அதைவிட சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தப்பட்டு ஒவ்வொரு சாதத்து பருக்கையும் சிவ அம்சம் பெற்று, சிவஸ்வரூபமாக மாறுவதால் அன்று அன்னாபிஷேகத்தை தரிசிப்பது, கைலாயம் சென்று தரிசிப்பதற்கு ஈடானதாகும் என ஐதீகம்.

    கோடி சிவஸ்தலத்திற்கு சென்று தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். தொடர்ந்து இரவு 9 மணியளவில் அன்னாபிஷேக சாதத்தை பக்தர்களுக்கு விநியோகித்துவிட்டு, சகல ஜீவராசிகளுக்கும் சிவ அருள் கிடைக்கவும், ஏரி மற்றும் குளங்களிலும், பூமிக்குள் இருக்கும் உயிரினங்களுக்காக, குழி தோண்டி புதைக்கப்பட்டும், பூமியில் வாழும் மிருகங்கள், பறவைகள், கரையான்கள் உட்பட உயிரினங்களுக்கு வயல் வெளிகளில் மற்றும் திறந்த வெளியில் இரைத்தும் அன்னாபிஷேக சாதம் விநியோகிக்கப்படும்.

    தொடர்ந்து நாளை பிரகதீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசாரை கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த 10 வருடங்களாக ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5-ந் தேதி மாலை பள்ளி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது உடையார்பாளையம் த.சோழங்குறிச்சி சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து செல்வராஜ் மனைவி உஷாராணி உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் வசந்த் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்பிரிவு படையினர் சோழங்குறிச்சி சிவன்கோவில்அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து கொண்டிருந்த போது திடீரென ஒருவர் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் துரத்திச் சென்று அந்த வாலிபரை விரட்டிப் பிடித்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

    விசாரணையில் அவர் ஜெயங்கொண்டம் காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 23) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் தனது பணத்தேவைக்காக பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வந்த தலைமை ஆசிரியர் செல்வராஜை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட போது, தலைமை ஆசிரியர் தர மறுக்கவே வெங்கடேசன் கோபத்தில் தான் வைத்திருந்த பட்டாக்கத்தியால் தலைமை ஆசிரியரை தாக்கிஉள்ளதாகவும், அவர் அதே இடத்தில் உயிரிழந்ததாகவும், அப்போது அந்த வழியாக வாகனங்கள் மற்றும் ஆட்கள் வந்ததால் வெங்கடேசன் உடனடியாக, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.

    மேலும் வெங்கடேசனிடமிருந்து பட்டாக்கத்தி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    அரியலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது கணவர் நடராஜன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், தனது மகன் ராமலிங்கத்துடன் உஞ்சினி ஏரிக்கரையில் பழனியம்மாள் வசித்து வந்தார்.

    இவர்கள் இருவரும் பெண்ணாடம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தில் தங்கி, கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் பழனியம்மாள். தனக்கு சொந்தமான பயன்பாடு இல்லாத வீட்டிற்கு அருகில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அண்மையில் பெய்த கனமழையால் அந்த சுவர் சேதமடைந்து இருந்துள்ளது.

    இந்நிலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பழனியம்மாள் திரும்பி வராததால், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள், அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சேதமடைந்த வீட்டில் இடிந்து விழுந்திருந்த மண்ணை அப்புறப்படுத்தும் போது பழனியம்மாள் மண்ணில் இறந்த நிலையில் புதைந்து இருந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், இரும்புலிக்குறிச்சி காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த பழனியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரமங்கலம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் செட்டித்திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டித்திருக்கோணம் நடுத்தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 40) மற்றும் முருகையன் (64) ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டபோது இருவரது வீட்டிலிருந்தும் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 70). இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் மழை பெய்த நிலையில் மாரியம்மன் கோவிலில் நீண்ட நேரமாக சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த கோவிலுக்கு அருகில் இருந்தவர்கள், அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். இதையடுத்து கோவிலுக்கு அருகில் இருந்தவர்கள் வருவதை கண்ட நபர் தப்பிக்க முயற்சித்து, அருகில் இருந்த கரும்பு வயலில் பதுங்கினார். பொதுமக்கள் நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கரும்பு வயலுக்கு வெளியே இளைஞர்கள் பதுங்கியிருந்தனர். சிறிது நேரம் கழித்து கரும்பு வயலில் இருந்து வெளியே வந்த நபரை அப்பகுதியில் பதுங்கி இருந்த இளைஞர்கள் மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை காசுகளை மீட்டனர். அதில் சுமார் ரூ.50 ஆயிரம் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கிராம மக்கள் திருமானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம், அந்த நபரை ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கல்லக்குறிச்சி மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்துவின் மகன் ரமேஷ் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    கொரோனா வைரசின் 3-ம் அலை வராமல் தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நேற்று 5-வது கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி 5-வது கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 240 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 300 இடங்களிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

    முகாமில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுச்சென்றனர். சில முகாம்களில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுச்சென்றனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. முகாமினை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும், அரியலூர் மாவட்டத்தில் ரமணசரஸ்வதியும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில் மொத்தம் 80 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 5-வது கட்ட சிறப்பு முகாமில் 24 ஆயிரத்து 176 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 5-வது கட்ட சிறப்பு முகாமில் 48 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், பூலாம்பாடி, அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு ஆகிய 4 பேரூராட்சி பகுதிகளில் நேற்று நடந்த மாபெரும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசாக தலா ஒரு சில்வர் தட்டு வழங்கப்பட்டது.

    அரியலூர் நகரில் நடந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆண்டிமடம் பகுதியில் ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை, அணிகுதிச்சான், இடையக்குறிச்சி, வாரியங்காவல், மருதூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 47 இடங்களில் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமையில் சிறப்பு முகாம் நடந்தது. கூவத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 100 பேரில் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சேலை வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் ஒன்றியம் இறவாங்குடி, தழுதாழைமேடு, கொல்லாபுரம், மீன்சுருட்டி, பாப்பாக்குடி, வங்குடி ஆகிய கிராமங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    அரியலூர் மாவட்டத்தில் மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்ற 14 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது, மொத்தமாக விற்பனை செய்தது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட வாரியங்காவல் டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் பாலமுருகன் விற்பனையாளர் சிவகுமார், வரதராஜன்பேட்டை டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர் செல்வகுமார், ரவீந்திரன், பழனிவேல், ஆகியோர் அனைவரும் மொத்த விற்பனை செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் ஆண்டிமடம் டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் பழனிவேல், மற்றும் விற்பனையாளர்கள் சண்முகவேல், பிறை செல்வன் ஆகியோர்ரொக்க பணம் கூடுதலாக இருந்ததாலும் அரியலூர் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் ராஜகோபால் மற்றும் சாமிநாதன் விற்பனையாளர்கள் கருணாநிதி, அக்பர்கான், பாலசுப்பிரமணியன், ஆகியோர் தொகை குறைவுஇருந்தது போன்ற குற்றச்செயல்களுக்காக டாஸ்மாக் ஒழுங்குமுறை மோசடி நடவடிக்கைகள் தடுத்தல் மற்றும் கண்டுபிடித்ததற்காக விதிமுறைகளின்படி டாஸ்மாக் ஊழியர்கள் 14 பேரையும் சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செல்வராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மின்சாரம் பாய்ந்து ஒரே நேரத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 47), விவசாயி. இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு 2 மகள்களும், சங்கர் என்ற ஒரு மகனும் இருந்தனர்.

    2 மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தபின் அதே பகுதியில் விவசாய நிலத்திற்கு அருகில் வீடு கட்டி மகன் சங்கருடன், இவர்கள் வசித்து வந்தனர். சங்கர் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சங்கர் காலையில் கடைக்கு சென்றால் இரவு 9 மணி அளவில் வீடு திரும்புவது வழக்கம். இந்தநிலையில் நேற்று அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதில் பல இடங்களில் மரங்கள், மின் கம்பம்பங்கள் சாய்ந்து கிடந்தன.

    நேற்று இரவு மழை நின்றவுடன், சங்கர் தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்த போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார். இதில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

    உடலில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்ததோடு, பலத்த காயம் அடைந்த சங்கர் அலறினார். இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த முத்துசாமி, பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார். அங்கு மகன் மீது மின்சாரம் பாய்ந்ததை அறிந்த அவர், அருகில் கிடந்த ஒரு மரக்குச்சியை எடுத்து, மின் கம்பியை அகற்ற முயற்சித்தார்.

    அப்போது அந்த குச்சி மழையில் நனைந்து ஈரமாக இருந்ததால் முத்துச்சாமி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தந்தை, மகன் இருவரும் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கீழப்பழூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு, மின்சாரம் பாய்ந்து பலியான இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பின்பு சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததோடு, அறுந்து கிடந்த வயர்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    மின்சாரம் பாய்ந்து ஒரே நேரத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×