என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • இந்த கூட்டுப்பயிற்சி 6 வாரங்களுக்கு நடத்தப்படுகிறது.
    • இரு நாட்டு விமானப்படைகளும் நவீன சாகச பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

    இந்திய விமானப்படையும், சிங்கப்பூர் விமானப்படையும் பங்கேற்றுள்ள 11வது கூட்டு போர்ப்பயிற்சி மேற்கு வங்க மாநிலம் கலைக்குந்தா விமானப்படைத் தளத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சி 6 வாரங்களுக்கு நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக வரும் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை இரு நாட்டு விமானப்படை வீரர்களும் நவீன சாகச பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். 


    இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் எஸ்யு- 30 எம்கேஐ, ஜாக்குவார், எம்ஐஜி-29, இலகு ரக தேஜாஸ் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்கின்றன, சிங்கப்பூர் விமானப்படை சார்பில் எப்-16 விமானம் பங்கேற்றுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • தேசிய நலனுக்கு முதலிடம் கொடுப்பது முக்கியம்.
    • எல்லா அரசியல்வாதிகளும் இந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.

    கொல்கத்தா:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கொல்கல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த (ஐஐஎம்) மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

    ஜம்மு காஷ்மீருக்கு 370வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, அன்றைய அரசியல் காரணமாக 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. சிறப்பு அந்தஸ்து என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். ஆனால் இவ்வளவு காலம் அது நீடிக்க என்ன காரணம்? சிறப்பு அந்துஸ்து காரணமாக அங்கே (ஜம்முகாஷ்மீரில்) இவ்வளவு குழப்பமான பிரச்சினை இருந்தது, உலகம் முழுவதும் அதைப் பயன்படுத்தியது.

    இது நாட்டின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இன்றைய அரசியல், தேசத்தின் நலனுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. எல்லா அரசியல்வாதிகளும் முதலில் அந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தேசிய நலனுக்கு முதலிடம் கொடுப்பது முக்கியம். அரசியல் காரணமாக நமது நாட்டின் எல்லைகள் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
    • காங்சபதி மற்றும் ஷிலாபதி நதிகளின் மீது இரண்டு புதிய பாலங்கள் கட்டப்படும் என்றும் கூறினார்.

    குஜராத் மோர்பி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தை அடுத்து, மேற்கு வங்காளத்தில் உள்ள 2,109 பாலங்களில் ஆய்வு நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் புலக் ராய், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், பாலங்களின் நிலையை ஆய்வு செய்து நவம்பர் இறுதிக்குள் தேவையான கண்காணிப்புளுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

    மேலும் அவர், ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில், சிலிகுரியில் உள்ள முடிசூட்டுப் பாலத்தையும், காங்சபதியின் குறுக்கே உள்ள பிரேந்திர சாஸ்மல் சேதுவையும் சீக்கிரம் சரிசெய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சந்த்ராகாச்சி பாலத்தை சீரமைக்க தேவையான பணிகள் நவம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், காங்சபதி மற்றும் ஷிலாபதி நதிகளின் மீது இரண்டு புதிய பாலங்கள் கட்டப்படும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் புலக் ராய் கூறுகையில் ​​"குஜராத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்த்த பிறகு, மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களிலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். நம்மால் அப்படி ஒரு சூழலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு எடுத்துக் கொள்ள முடியாது." என்றார்.

    • இல.கணேசனின் மூத்த சகோதரர் பிறந்தநாள் நவம்பர் 3-ந்தேதி வருகிறது.
    • நிகழ்ச்சியில் பங்கேற்க எண்ணற்ற மூத்த அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா :

    மணிப்பூர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் கவர்னர் இல.கணேசனின் மூத்த சகோதரர் பிறந்தநாள், நவம்பர் 3-ந்தேதி வருகிறது. இல.கணேசனின் சென்னை இல்லத்தில், இந்த பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    அதில் பங்கேற்க வருமாறு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று, சென்னையில் அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று மேற்கு வங்காள அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்க எண்ணற்ற மூத்த அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • வங்காளதேச கடலோர காவல் படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • இரு நாடுகளின் கடலோர காவல் படைகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    சிட்ரங் சூறாவளி தாக்குதலால் வங்காளதேச மீனவர்கள் சென்ற மீன்பிடி படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 20 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர்.

    இதன்பின்னர், கடலில் மிதந்த பெரிய பொருள் ஒன்றை பிடித்து கொண்டு உதவிக்காக வெகுநேரம் காத்திருந்துள்ளனர்.

    இந்த நிலையில், அந்த வழியே இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் விமானம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. இதில், நடுக்கடலில் சிக்கி தவித்த வங்காளதேச மீனவர்களை இந்திய படை வீரர்கள் கவனித்தனர்.

    இதனை தொடர்ந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு மீனவர்களை மீட்டனர். அவர்களை வங்காளதேச கடலோர காவல் படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இரு நாடுகளின் கடலோர காவல் படைகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    • 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவர் பதவியை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வகித்து வந்தார்.
    • பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைவர் பதவியை 2019-ம் ஆண்டு முதல் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வகித்து வந்தார். அவரது பதவி பறிக்கப்பட்டது. அவர் ஐ.சி.சி. என்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என கூறப்பட்டது.

    அவரை அந்த பதவிக்கு போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குரல் கொடுத்தார்.

    இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் கடந்த வாரம் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்திருந்த ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஆனாலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம், ஐ.சி.சி. தேர்தல் பற்றி விவாதிக்காமல் முடிந்துள்ளது.

    இதனால் சவுரவ் கங்குலி, ஐ.சி.சி.யின் தலைவர் பதவியில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக சாடி உள்ளார்.

    இதையொட்டி கொல்கத்தாவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐ.சி.சி.க்கு ஏன் சவுரவ் கங்குலி அனுப்பப்படவில்லை? இது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள யாரோ ஒருவரின் நலனுக்காகத்தான். (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா உள்ளார்.)

    நான் பா.ஜ.க. தலைவர்கள் பலரோடு பேசி விட்டேன். ஆனால் அவர் அனுமதிக்கப்படவில்லை. அவரது வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

    இது வெட்கக்கேடானது. அரசியல் பழிவாங்கும் செயல் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கங்குலி பா.ஜ.க.வில் சேர மறுத்ததால்தான் அவர் ஐ.சி.சி. தலைவர் பதவியில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவமனை ஊழியர்களிடம் தனது தம்பியின் மருத்துவசெலவுக்கு பணம் தேவைப்படுவதால் தனது ரத்தத்தை விற்க வந்ததாக சிறுமி கூறினார்.
    • அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இதுகுறித்து சைல்டுலைனுக்கு போன் செய்தனர்.

    கொல்கத்தா:

    பள்ளி மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் ஸ்மார்ட் போன் வாங்க ஆசைப்பட்டு சிறுமி ஒருவர் தனது ரத்தத்தை விற்க முயன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

    அம்மாநிலத்தில் தாபான் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை பஸ் ஏறி 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலூர் காட் மாவட்ட மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்த ஊழியர்களிடம் தனது தம்பியின் மருத்துவசெலவுக்கு பணம் தேவைப்படுவதால் தனது ரத்தத்தை விற்க வந்ததாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இதுகுறித்து சைல்டுலைனுக்கு போன் செய்தனர்.

    அவர்கள் வந்து சிறுமியிடம் விசாரித்த போது அவர் ஆன்லைனில் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்ததும், அதை வாங்குவதற்கு பணம் தேவைப்படுதால் ரத்தத்தை விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், நான் பக்கத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் பார்க்கிறேன். எனது மனைவி வீட்டை பார்த்துக் கொள்கிறார். எனது மகள் வெளியே சென்ற போது நான் வீட்டில் இல்லை. ரத்தம் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்ற விஷயம் அவளுக்கு எப்படி தெரிந்தது என்று கூட எனக்கு தெரியவில்லை என்றார்.

    • ஸ்மார்ட்போனை காசு கொடுத்து வாங்க முடியாததால் ரத்தத்தை விற்க முயற்சி செய்துள்ளார்
    • அந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தின் தினஜ்பூர் மாவட்டம், பலூர்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு கடந்த 17-ம் தேதி காலை 16 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். ரத்த வங்கியில் கனாக் குமார் தாஸ் என்பவரிடம், தான் ரத்ததானம் செய்ய உள்ளதாகவும், அதற்காக தனக்கு பணம் வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதை கேட்டதும் குமார் தாசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் சிறுவர் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது.

    அந்த சிறுமி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும், 12ம் வகுப்பு படிப்பதும் தெரியவந்தது. அவரால் ஸ்மார்ட்போனை காசு கொடுத்து வாங்க முடியாததால் ரத்தத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் போனை வாங்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோரை அழைத்து சிறுமி குறித்த தகவல்களை அதிகாரிகள் கூறி அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், எனது மகள் வீட்டை விட்டு சென்ற போது நான் வீட்டில் இல்லை. ரத்தத்தை விற்றால் பணம் கிடைக்கும் என்ற யோசனை அவருக்கு எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை என்றார்.

    சிறுமியின் தந்தை காய்கறி வியாபாரி, தாய் இல்லத்தரசி. சிறுமிக்கு 4 ஆம் வகுப்பில் படிக்கும் தம்பி உள்ளார். அந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் கவுன்சலிங் வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது தம்பியின் சிகிச்சைக்காக தான் எனது ரத்தத்தை விற்க வந்ததாக தெரிவித்தார். பின்னர் தன்னுடைய உறவினரின் செல்போனில் இருந்து ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்ததாகவும் அதற்கு கேஷ் ஆன் டெலிவரிக்கு பணம் கொடுக்க ரத்தத்தை விற்க வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அந்த போனின் விலை ரூ 9 ஆயிரம் என்றும் அதை ஞாயிற்றுக்கிழமை ஆர்டர் செய்ததாகவும் வியாழக்கிழமை டெலிவரி கிடைத்து விடும் என்றும், பெற்றோரிடம் பணம் இல்லாததால் எனது ரத்தத்தை விற்று பணம் செலுத்தலாம் என வந்தேன் என்றார். இவர் கூறுவதை கேட்டு அதிர்ந்த அதிகாரிகள், அவருக்கு கவுன்சிலிங் வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

    • ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு வரும் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
    • கங்குலியை ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:

    கங்குலி மிக பிரபலமான நபர். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தின் பெருமை மட்டும் கிடையாது. அவர் இந்தியாவின் பெருமையும் கூட. அவர் ஏன் இவ்வளவு நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டார்.

    கங்குலி மீது கவனம் செலுத்தி அவரை ஐ.சி.சி. தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு வரும் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட்டால் பி.சி.சி.ஐ. ஆதரவுடன் கங்குலி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    • மாணவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காரக்பூர்:

    மேற்கு வங்காள மாநிலம் காரக்பூரில் உள்ள ஐஐடி விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுதி அறையில் அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

    அந்த மாணவர், அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், சமீபத்தில் விடுதியில் சேர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகங்களில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி சென்னை ஐஐடியில் ஒரு மாணவர், 17ம் தேதி கவுகாத்தி ஐஐடியில் ஒரு மாணவர் என இறந்துள்ளார். இதேபோல் ஐதராபாத், கான்பூரிலும் கடந்த மாதம் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    • துர்கா பூஜையின் போது, ​​அசுரனுக்குப் பதிலாக மகாத்மா காந்தியைப் போன்ற சிலை காட்சிப்படுத்தப்பட்டது.
    • அதிகாரத்தில் இல்லாதபோது விசாரணை அமைப்புகள் வீட்டுக்குள் புகுந்து உங்களை காதைப் பிடித்து வெளியே இழுத்துவரும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பபானூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    இன்று பாஜக அதிகாரத்தில் இருப்பதால் விசாரணை அமைப்புகளை வைத்து அதிகாரத்தை காட்டுகிறது. நாளை நீங்கள் அதிகாரத்தில் இல்லாதபோது, இதே விசாரணை அமைப்புகள், வீட்டுக்குள் புகுந்து உங்களை காதைப் பிடித்து வெளியே இழுத்துவரும். அந்த நாள் விரைவில் வரும்.

    துர்கா பூஜையின் போது, ​​அசுரனுக்குப் பதிலாக மகாத்மா காந்தியைப் போன்ற சிலை காட்சிப்படுத்தப்பட்டது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுபோன்ற வெட்கக்கேடான செயலுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். நான் கடும் அதிருப்தி அடைந்தேன், ஆனால் பூஜையின்போது எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது.
    • கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்கு 2வது முறையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை. எனினும் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா 2வது முறையாக போட்டியிடுகிறார். கங்குலிக்கு பதில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகின.

    இந்நிலையில் பாஜகவில் கங்குலி சேராததால், 2வது முறையாக அவருக்கு பிசிசிஐ தலைவர் பதவியை வழங்காமல் அவரை அக்கட்சி அவமானப் படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே, கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது என்றார்.

    கடந்த மே மாதம் கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால் கங்குலி பாஜகவில் சேராதததால் அவரை அக்கட்சி அரசியல் ரீதியாக அவமானப்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் குணால் கோஷ் கூறினார்.

    ஜெய்ஷா இரண்டாவது முறையாக பிசிசிஐ செயலாளராக ஆகும் போது கங்குலி ஏன் பிசிசிஐ தலைவராக 2வது முறையாக வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் திரிணாமுல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள பாஜக, கொல்கத்தா இளவரசரை, ஒருபோதும் கட்சியில் சேர்க்க முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளது.

    ×