என் மலர்
உத்தரப் பிரதேசம்
- இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல.
- வர்த்தகத்தால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடு இந்தியா.
வாரணாசி:
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தையொட்டி, வாரணாசியில் நடைபெற்ற வர்த்தக இணைப்பு மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பின்னர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஆன்மீகமும், வர்த்தகமும், கலாச்சாரமும், பாரம்பரியமும், வாழ்க்கை முறையும், மொழியும் இணைந்த ஒரு சங்கமம்தான் காசி தமிழ் சங்கமம். தமிழகத்தில் காஞ்சிப்பட்டின் வளர்ச்சியை, காசி பனாரஸ் பட்டில் காண முடிகிறது. இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல, வர்த்தகத்தால், பழக்கவழக்கங்களால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடாகும்.
இந்த தன்மையை மனதில் கொண்டு கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்று பாரதியார் பாடினார். இந்த நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படையாக இருப்பது கங்கை நதி என்று மகாத்மா காந்தி 1909-ல் இந்து ஸ்வராஜ் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
மொழிகளும், பழக்க வழக்கங்களும் வேறு வேறாக இருப்பினும், தங்களுக்குள் ஒற்றுமை இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என அந்த நூலில் காந்தி கூறியுள்ளார். இதனை தற்போது காசியில் காண முடிகிறது. காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மீகம் இருக்கிறது.
தொன்மையான கலாச்சாரத்துடன் நாட்டை காசி இணைத்திருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் காசிக்கு வர வேண்டும் என்று விரும்புவது இயற்கையானது. இந்த விருப்பத்தை நிறைவேற்ற மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்திய பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
- காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள 5-வது குழு வாரணாசி சென்றது.
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 216 பேர் கொண்ட 5-வது குழு வாரணாசி சென்றது. வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஸ்வநாதரை தரிசித்த பின் அன்னை அன்னபூரணி ஆலய வளாகத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாரணாசியின் பல்வேறு பாரம்பரிய இடங்களுக்கும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இந்த குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை, காவிரி சங்கமத்திற்கு இணையானது என காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
காசியில் கங்கை இருக்கிறது, விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர், சோயி அம்மன் இருக்கிறார்கள். கங்கையில், புனித நீராடவும், தரிசிக்கவும், தமிழ் நாட்டின் கிராமங்களில் உள்ளவர்கள் கூட ஒரு முறையாவது வரவேண்டும் என்று விரும்புவார்கள். தற்போது பக்தர்கள் கூடுதலாக வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் வருகையால் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவும் அதிகரித்துள்ளது.
விஸ்வநாதர் கோவில் முன்பு மிகக் குறுகலாக, சுமார் 1,000 பேர் வரைதான் ஏற்கெனவே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்தும் தென்மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் காசிக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த பிரதமர் மோடி, கோவிலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனால் தற்போது தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதமாக கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுவதோடு பிரசாதமும் கொடுக்கப்படுகிறது.
விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலேயே உள்ள மணிகர்னிகா தீர்த்தத்தை கையில் எடுத்து வந்து நேரடியாக விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பாராயணங்களும், ஆன்மீக கச்சேரிகளும் நடைபெற வசதியாக தமிழக கோவில்களில் உள்ளதை போன்று விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் பிரமாண்டமான கலையரங்கு கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தது உத்தர பிரதேச அரசு
- உயிரிழந்த 6 பேரில் 3 பேர் குழந்தைகள் என காவல்துறை தகவல்
ஃபிரோசாபாத்:
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் வீட்டு உபயோகத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் பொருட்களை விற்கும் கடை செயல்பட்டு வந்துள்ளது. கடைக்கு மேலே உள்ள முதல் தளத்தில் உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று இந்த கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இந்த தீ முதல் தளத்திற்கு வேகமாக பரவியது. ஆக்ரா, மெயின்புரி, எட்டா மற்றும் ஃபிரோசாபாத் ஆகிய இடங்களில் இருந்து 18 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும் 12 காவல் நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டரை மணி நேரம் இந்த பணி நீடித்தது.
இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரின் வீடு எரிந்து நாசமானது. தீயில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி தெரிவித்துள்ளார். தீக் காயங்களுடன் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி என்பதால், மீட்பு பணியில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆஷிஷ் திவாரி கூறியுள்ளார். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
- கலாச்சாரத்தை பேணிக்காப்பது நமது கடமை.
- நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் உறவை பிரதமர் மெருகேற்றி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், தமாகா தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி. கே. வாசன் கலந்து கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நமது கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தை பேணிக்காப்பது தான் நமது கடமை. இந்த கடமையை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திரமோடி காசி தமிழ் சங்கத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.
ராமேஸ்வரம் - காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த உறவை மெருகேற்றி, ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்வு காசியில் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழாவாக இது நடைபெறுவது வாழ்த்துக்குரியது, பாரட்டுக்குரியது. இந்த விழாவிற்காக தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தற்போது அந்த வீட்டில் பாரதியாரின் வழி வந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
- பாரதி சிலையுடன் கூடிய நூலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ் ராஜலிங்கம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இங்கு மகாகவி பாரதியார் 4 ஆண்டுகள் வாழ்ந்த வீடான சிவமடத்தை புதுப்பிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது:
பாரதியார் இங்கு இருக்கும் போது, அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகவே நான் கருதுகிறேன். அந்த வீட்டில் தற்போது பாரதியாரின் வழி வந்தவர்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் அவர்களின் அனுமதியோடு சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம்.

சமூக அவலங்களையும், அந்த காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்சினைகளையும் பாரதியார் எப்படி தனது கவிதைகள் மூலம் அணுகினார் என்ற முக்கியத் தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது இலக்கியப் படைப்புகள் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும்.
பாரதி வாழ்ந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் பாரதியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன்கூடிய நூலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஒரு இன்ஸ்பெக்டர், 14 சப்-இன்ஸ்பெக்டர்கள், 44 போலீஸ்காரர்கள், ஒரு வட்ட அதிகாரி என 60 போலீசார் திருமணத்துக்கு பாதுகாப்பு அளித்தனர்.
- போலீசார் துணையுடன் மணமகனின் குதிரை ஊர்வலம் நடந்தது. மேலும் மணமக்களுக்கு போலீசார் சார்பில் திருமண பரிசாக ரூ.11 ஆயிரம் வழங்கினர்.
பரேலி:
உத்தரபிரதேச மாநிலம் லோஹமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்கிஷன். இவருக்கும் ரவீனா என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. தனது வருங்கால கணவர், குதிரையில் ஊர்வலமாக வர வேண்டும் என்று ரவீனா விரும்பினார்.
ஆனால் தலித்தான ராம் கிஷன், ஊருக்குள் குதிரையில் ஊர்வலமாக செல்ல வேறு ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்து கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் மணமகனின் குதிரை ஊர்வலத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து மணப்பெண் ரவீனாவின் உறவினர் ராஜேந்திர வால்மீகி, சம்பல் மாவட்ட போலீசிடம் மனு அளித்தார். அதில் இசை நிகழ்ச்சி மற்றும் குதிரையுடன் திருமண ஊர்வலத்தை சில ஜாதியினர் அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்ரேஷ் மிஸ்ரா அந்த திருமணத்துக்கு பெரும் போலீஸ் படையை பாதுகாப்புக்காக அனுப்பினார்.
ஒரு இன்ஸ்பெக்டர், 14 சப்-இன்ஸ்பெக்டர்கள், 44 போலீஸ்காரர்கள், ஒரு வட்ட அதிகாரி என 60 போலீசார் திருமணத்துக்கு பாதுகாப்பு அளித்தனர்.
போலீசார் துணையுடன் மணமகனின் குதிரை ஊர்வலம் நடந்தது. மேலும் மணமக்களுக்கு போலீசார் சார்பில் திருமண பரிசாக ரூ.11 ஆயிரம் வழங்கினர்.
இது தொடர்பாக மணப்பெண்ணின் உறவினர் ராஜேந்திர வால்மீகி கூறும்போது, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த எனது மகள் திருமணத்தில் பிரச்சினை ஏற்படுத்தினர். எங்களது விருந்தினர்களை அவமானப்படுத்தினார்கள். இந்த முறை அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் மீண்டும் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை.
ஊர்வலத்தை நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிலர் மிரட்டல் விடுத்தனர். இதனால் போலீஸ் உதவியை நாடினோம் என்றார்.
மணப்பெண் ரவீனா தாய் ஊர்மிளா கூறும்போது, என் மகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அவளது கனவை போலீசார் நனவாக்கி விட்டனர். அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றார்.
- காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் புதுப்பித்துள்ளார்.
- கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது
காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் ஆன்மீக யாத்திரை செல்லும் எல்லோரும் காசி– ராமேஸ்வரம் என்ற சொல்வது மிகவும் பிரபலமானது. ராமேஸ்வரத்திற்கு வந்தபின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற கலாச்சார, ஆன்மீக இணைப்பை பிரதமர் மீண்டும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.
காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம்காலமாக இருந்து வருவதாகும். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார்.
இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாச்சார நிகழ்வுகளை பார்க்கும் போது கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
மகாகவி பாரதியின் பேரனை காசியில் சந்தித்தேன். தமிழ் சங்கமம் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக காசியில் உள்ள பாரதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது தேசிய கீதம் ஒலித்த பின்பு நிகழ்ச்சி தொடங்கியது. பின்பு நான் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம்பெறாமல் இருப்பதா? என்று எடுத்துக்கூறி மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பாடினேன். இதை அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இந்த கொடூர சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி நடந்தது.
- சிறுவனை கொன்றதாக தான் தேவி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
பரேலி:
உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த ஜமுக்கா கிராமத்தை சேர்ந்தவர் தான் தேவி (வயது 33). தான் தேவிக்கு குழந்தை இல்லை. எனவே அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மந்திரவாதியை சந்தித்து தனது குறையை கூறினார்.
அந்த மந்திரவாதி, தான் தேவிக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் சிறுவன் ஒருவனின் ரத்தத்தை முகத்தில் பூசி கொள்வதோடு, அதனை குடிக்கவும் வேண்டும் எனக் கூறினார்.
மந்திரவாதி கூறியதை அப்படியே நம்பிய தான்தேவி, தான் குழந்தை பெற சிறுவன் ஒருவனை கொன்று ரத்தம் குடிக்க முடிவு செய்தார்.
இதையடுத்து தனது பக்கத்து வீட்டில் வசித்தவரின் 10 வயது சிறுவனை கடத்தி அவனை கொன்றார். பின்னர் அந்த சிறுவனின் ரத்தத்தை உடலிலும், முகத்திலும் பூசியதோடு, அதனை குடிக்கவும் செய்தார்.
இந்த கொடூர சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி நடந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பரேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சிறுவனை கொன்றதாக தான் தேவி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு பரேலி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை கொன்று ரத்தம் குடித்த பெண் தான் தேவிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இத்தீர்ப்பு பற்றி சிறுவனின் பெற்றோர் கூறும்போது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி இருக்க வேண்டும். கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு போதுமானதாக இல்லை, என்றனர்.
- எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது.
- எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன.
மதுரா :
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நெடுஞ்சாலை போலீஸ் நிலையம் சார்பில் பல்வேறு சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை செர்கார் கிட்டங்கியில் போலீசார் பாதுகாத்து வந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்தபோது, கைப்பற்றப்பட்ட 586 கிலோ கஞ்சாவை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் கூறிய தகவல்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தது. "எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன. அவை 581 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டன. எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது" என்று அவர் வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, "எலிகளை கட்டுப்படுத்தவும், எலிகள் 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டதற்கான ஆதாரங்களை வரும் 26-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவும்" போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு முன்பு ஒருமுறை, 195 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக போலீசார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- காதலில் முறிவு ஏற்பட்டு வேறு ஒருவரை ஆராதானா திருமணம் செய்து உள்ளார்.
- முன்னாள் காதலியை கொல்ல பிரினஸ் யாதவ் முடிவு செய்தார். இதற்கு அவரது பெற்றோர், உறவினர் சர்வேஷ் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருந்தனர்.
அசம்கர்:
மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொன்று உடலை 35 துண்டுகளாக வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
டெல்லியை போன்றே உத்தரபிரதேச மாநிலத்திலும் இது மாதிரியான கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது. முன்னாள் காதலியை வாலிபர் கொன்று உடலை 6 துண்டுகளாக வீசியுள்ளார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டம் இசாக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராதனா. இவரை அதே பகுதியை சேர்ந்த பிரினஸ் யாதவ் என்பவர் காதலித்துள்ளார்.
இந்த காதலில் முறிவு ஏற்பட்டு வேறு ஒருவரை ஆராதானா திருமணம் செய்து உள்ளார். இதனால் தனது முன்னாள் காதலியை கொல்ல அவர் முடிவு செய்தார். இதற்கு அவரது பெற்றோர், உறவினர் சர்வேஷ் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருந்தனர்.
கடந்த 9-ந்தேதி கரும்பு தோட்டத்தில் வைத்து ஆராதனாவை பிரின்ஸ் யாதவ் கழுத்தை நெறித்து கொன்றார். அவரும், சர்வேசும் சேர்ந்து உடலை 6 துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பையில் அடைத்து கிணற்றில் வீசினர். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள குளத்தில் தலையை வீசினர். கிணற்றில் உடல் பாகங்கள் கிடக்கும் தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்றனர். போலீஸ் விசாரணையில் பிரின்ஸ் யாதவ் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
இளம் பெண்ணின் தலையை கண்டு எடுப்பதற்காக அவரை போலீசார் அழைத்து சென்றனர். அந்த பகுதியில் நாட்டு துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்தார். தப்பிக்கும் நோக்கில் போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார். போலீசாரின் என்கவுண்டரில் யாதவ் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார்.
பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்ட அவருக்கு உதவியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் 24 வயதான பிரியங்கா சிங் என்பவரது உடல் காரில் கண்டு எடுக்கப்பட்டது. பணம் விவகாரம் தொடர்பாக அந்த பெண்ணை வாலிபர் கொன்று உடலை 4 நாட்கள் காரில் வைத்து இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நதிகள் இணைப்புத் திட்டத்தை பாரதியார் அப்போதே பாடியிருக்கிறார்.
- காசியில் தமிழ் சங்கமத்தை நடத்தும் பிரதமரை கண்டு வியப்படைகிறேன்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும் போது கூறியதாவது:
காசியில் பாரதியார் 2 ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். காசியில் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை பாடுகையில், புலவர் பேச்சுக்களை காசியில் கேட்க கருவி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா முன்னேற்றம் அடையாத நேரத்தில் பாரதியார் இதை பாடியுள்ளார்.
கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்று நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அப்போதே பாரதியார் பாடியிருக்கிறார்.

இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் கங்கையில் மூழ்கி எழும் போது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையை பரிசளித்த நிகழ்வு காசியில் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட பெருமை மிக்க காசி நகரில் தமிழ் சங்கமத்தை நடத்தும் எண்ணம் பிரதமருக்கு எப்படி வந்தது என்பதை கண்டு வியப்படைகிறேன்.
தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி, காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற்றது. தமது குழுவினருடன் ஜனனே ஜனனே, ஓம் சிவோஹம் உள்ளிட்ட பாடல்களை அவர் பாடினார். பிரதமர் மோடி அந்த பாடல்களை ரசித்து கேட்டு மகிழ்ந்தார்.
- தமிழக கலாச்சாரம், பண்பாடு உத்தரப்பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது.
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அளித்தார் பிரதமர்.
வாரணாசி:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் வரவேற்புரை ஆற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளதாவது:
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது. தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே கணக்கிட முடியாத பந்தம் உள்ளது.
பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்ட பின்னர், தமிழகத்திற்கு திரும்பி தென்காசியில் பெரிய சிவாலயத்தை நிறுவினார். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவை காசிக்காண்டம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அளித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காசி தமிழ் சங்கமம் விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் ஜெயின், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






