என் மலர்
உத்தரப் பிரதேசம்
- உடலை சூட்கேசில் அடைத்து முதலில் தனது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
- தன் மனைவி விபத்தில் இறந்துவிட்டதால் அவசரமாக தகனம் செய்வதற்கு செல்வதாக ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கூறியிருக்கிறார்
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக். இவரது மனைவி வந்தனா அவாஸ்தி (வயது 28). இவர் ஆயுர்வேத மருத்துவர். இவர்கள் சீதாபூர் சாலையில் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி தன் மனைவி வந்தனாவை காணவில்லை என டாக்டர் அபிஷேக், கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விலை உயர்ந்த சில பொருட்களை மனைவி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் கணவன் அபிஷேக் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர். பின்னர் அவரிடம் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை நவம்பர் 26ம் தேதி அடித்துக் கொலை செய்து உடலை சுமார் 400 கிமீ தொலைவில் கொண்டுபோய் எரித்தது தெரியவந்தது. இந்த கொலைக்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி ஏஎஸ்பி அருண் குமார் சிங் கூறுகையில், "நவம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சண்டையின்போது வந்தனா அவாஸ்தியை கொலை செய்த அபிஷேக், காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார். பின்னர் உடலை சூட்கேசில் அடைத்து தனது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஆம்புலன்சை வரவழைத்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள கார்ஹ் முக்தேஷ்வரில் வைத்து உடலை எரித்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவரிடம், தன் மனைவி விபத்தில் இறந்துவிட்டதால் அவசரமாக தகனம் செய்வதற்கு செல்வதாக கூறியிருக்கிறார்" என்றார்.
- பைக்கில் ஏறி தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை இழுத்து பைக்கோடு கீழே தள்ளிவிட்டார்.
- திருடர்களுடன் போராடும்போது பதிவான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
மீரட்:
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் செயின் பறித்த திருடர்களுடன் இளம்பெண் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் தைரியமாக போராடியது அனைவராலும் பாராட்டப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு செயின் திருடர்கள், இளம்பெண்ணிடம் இருந்து கம்மலை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது துணிச்சலுடன் செயல்பட்ட இளம்பெண், அந்த திருடர்களை எதிர்த்து போராடினார்.
பைக்கில் ஏறி தப்பிச் சென்ற இருவரையும் இழுத்து பைக்கோடு கீழே தள்ளிவிட்டார். மீண்டும் எழுந்து செல்ல முயன்றபோது ஒருவனை பிடித்துக்கொண்டார். அவன் பைக்கில் ஏற முயன்றபோது தப்ப விடாமல் பிடித்துக்கொள்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
பின்னர் செயின் பறித்த திருடர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஆன்மீக தொடர்பை பிரதமர் புதுப்பித்துள்ளார்.
- காசிக்கு வந்த 2500 பேர், 25000 சுற்றுலாப் பயணிகளை மீண்டும் அழைத்து வருவார்கள்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்க கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், கூறியுள்ளதாவது:
காசி தமிழ் சங்கமத்தை முன்னெடுத்த பிரதமருக்கு நன்றி, பிரதமரின் முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2500 பேர் காசிக்கு வருகின்றனர். காசிக்கு வந்த 2500 பேர், 25000 சுற்றுலாப் பயணிகளை மீண்டும் காசிக்கு அழைத்து வருவார்கள். எனவே இது ஆரம்பத்தான்.
காசி தமிழ் சங்கமம் பற்றி இதற்கு முன்பு யாரும் யோசிக்கவில்லை. காசியுடன் தொடர்புடைய தென்காசி உள்பட தமிழகத்தில் ஏராளமான ஊர்கள் உள்ளன. இந்த தொடர்புகள் பிரதமரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. காசியுடன் தொடர்புடைய தமிழக பகுதிகளுக்கு உத்தரபிரதேச மக்கள் செல்ல வேண்டும். தமிழகத்தின் கலை, கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தியதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
- தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினத்தையொட்டி மாநில சுகாதார அமைச்சர்களின் 2 நாள் மாநாடு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் உரையாற்றிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது:
கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தியதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கொரோனாவிற்கு எதிரான இந்திய தடுப்பூசி உலகிற்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்டது. தரமான தடுப்பூசிகளை இந்தியா தயாரித்துள்ளது. அதன் செயல்திறன் உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து சீரமைக்க கொரோனா தொற்று நோயை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டது.

2014 ஆம் ஆண்டில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. விரைவில் நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கும் தருவாயில் உள்ளன. மத்திய அரசின் மருத்துவ சேவைத்திட்டம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் தடுப்பூசித் திட்டம் போன்ற முதன்மைத் திட்டங்கள் சுகாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா, சிக்கிம் சுகாதாரத்துறை அமைச்சர் எம் கே ஷர்மா, உத்தரகாண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் மற்றும் சிக்கிம் சுகாதாரத்துறை அமைச்சர் சபன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
- நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன என்றார்.
லக்னோ:
தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் காசிக்கும் இடையே நீண்டகால கலாசார தொடர்பு உள்ளது. இந்தப் பிணைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடத்துகிறது.
வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல்துறை பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரெயில்களில் காசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி இன்று நடந்தது. சமூகம் மற்றும் தேச கட்டமைப்பில் கோவில்களின் பங்கு என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
வணக்கம் காசி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:
உலகளவில் இந்தியாவின் எழுச்சி காணப்படுகிறது.
நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன. அவை நமது வாழ்வின் வழியாகும்.
நம்பிக்கை மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான இடமாக மட்டும் கோயில்கள் இருக்கவில்லை. சமுதாய நலக் கூடங்களாக இருந்தன. மக்கள் ஒன்று கூடுவதற்கான இடமாகவும், கலையை ஊக்குவிப்பதாகவும் இருந்தன.
இந்திய பாரம்பரியத்தைக் கொண்டிருப்பவையாக கோயில்கள் இருந்தன. அவை நமது வாழ்க்கையின் பாதையாகவும் இருந்தன.
என தெரிவித்தார்.
- தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
- இந்தியாவின் எழுச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெற்றியும் ஒரு காரணம்.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வழிபாடு நடத்தினார். முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

இந்தியா தெற்காசிய பிராந்திய ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகப் பார்க்கும் ஒரு சகாப்தம் இருந்தது, இன்று, யாரும் அதைச் செய்வதில்லை, இந்த பிராந்தியத்தில் முதன்மை சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சார்க் அமைப்பு தற்போது செயல்படவில்லை. ஏனெனில் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்று (பாகிஸ்தான்) அண்டை நாடுகளை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் கையாளலாம் என்று நம்புகிறது. இந்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத நாடுகள் உள்ளன, ஆனால் அவர்களின் பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்படி நாங்கள் கேட்கிறோம். நாம் ஒரு சுதந்திர சக்தியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை உலகம் மதிக்கும்.
இந்தியாவின் எழுச்சியை உலகமே இன்று உற்று நோக்கும் போது, அதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் வெற்றிகளும் ஒரு பகுதியாகும். எனவே, நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கவனித்துக் கொள்வது நமது கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை வலுப்படுத்தும்.
- வாரணாசி ரெயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மறுசீரமைக்கப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புத் திட்டப் பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது என்றும், உலகிலேயே சிறந்த ரெயில் நிலையங்களில் ஒன்றாக இதை மாற்றும் வகையில் சுமார் 7000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் தெரிவித்தார்.
பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். பின்னர் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் மந்திரி வைஷ்ணவ் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அவருடன் பகிர்ந்து கொண்டனர்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக குழுவினரின் முயற்சிகளை மந்திரி பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் வாரணாசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார். இதுபோன்ற பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
- அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
- இந்த கோவில் 2024-ம் ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ :
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமபிரான் பிறந்த இடத்தில் அவருக்கு பிரமாண்ட கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 3 தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கோவில் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் இருந்து ராமர் கோவிலை எளிதாக அடையும் வகையில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1,000 கோடியில் மெகா திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
நிலம் கையகப்படுத்தல், குடியிருப்பாளர்கள், கடை உரிமையாளர்களின் மறுவாழ்வு மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்துக்கு உத்தரபிரதேச அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது குறித்து அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'இந்த திட்டத்தின் மூலம், ராம ஜென்மபூமிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு, ராமபிரானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அழகிய சூழல் உருவாக்கப்படும்' என்று கூறினார்.
இதில் முக்கியமாக, சுக்ரீவா கோட்டையில் இருந்து ராம ஜென்மபூமி வரையான 566 மீட்டருக்கு பக்தர்களின் வசதிக்காக நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு ஜென்மபூமி பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.83.33 கோடிக்கு யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து இருப்பதாக அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
- நொய்டா மேற்கு பிஸ்ராக் என்ற பகுதியில் சாபெரி என்ற கிராமம் உள்ளது.
- தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
நொய்டா:
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மேற்கு பிஸ்ராக் என்ற பகுதியில் சாபெரி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள 6 மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென பரவ தொடங்கியது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தின் போது அந்த கட்டிடத்தில் வசித்து வந்த சுமார் 50 பேர் வெளியே வரமுடியாமல் தவித்தனர். உடனே துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அவர்களை மாடிப்படி வழியாக பத்திரமாக மீட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- ஓசூரில் இருந்து காசிக்கு தமிழகத்தை சேர்ந்த தம்பதி ராஜன் - ராமலட்சுமி தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
- காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தம்பதி பூரிப்புடன் தெரிவித்தனர்.
வாரணாசி:
உத்தரபிரதேசத்தின் காசியில் தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன், ஓசூரில் இருந்து காசிக்கு தமிழகத்தை சேர்ந்த தம்பதி ராஜன் - ராமலட்சுமி தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
ஓசூரில் இருந்து பயணத்தை தொடங்கி, இடையில் உணவுக்காகவும் எரிபொருளுக்காகவும் செலவிட்ட நேரத்தையும் சேர்த்து, 32 மணி நேரத்தில் 1,857 கி.மீ. தூரம் பயணம் செய்து காசியை அவர்கள் சென்றடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'இந்த பயணம் எங்களின் திருப்திக்காக மேற்கொள்ளப்பட்டது, சாதனை புத்தகத்தில் பதிவதற்காக அல்ல. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு பற்றி தமிழ்நாட்டில் இருக்கும்போது கூட எங்களால் இவ்வளவு விஷயங்களை தெரிந்துகொள்ள முடியவில்லை. இங்கே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறோம். காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்று பூரிப்புடன் தெரிவித்தனர்.
கடந்த ஓராண்டாக மோட்டார் சைக்கிளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட இவர்கள் தற்போது நேபாளம் செல்ல திட்டமிட்டனர்.
- காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை.
- இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது.
வாரணாசி:
காசியில் நடந்துவரும் தமிழ் சங்கமம் நிகழ்வில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உத்தரபிரதேச மாநில மந்திரி சஞ்சீவ் கோண்ட் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப்பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரமாக உள்ளது. காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையைப் பேசுகிறார். பாரதியார் கவிதைகளை மேற்கோள்காட்டி பேசுகிறார். தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.
இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இந்த உணர்வில் எப்போதும் ஒரு துளியும் குறைய கூடாது. இதுவே நமது வாழ்க்கையை பெருமைப்படுத்தும் என்பதை அடுத்த தலைமுறைக்கும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் மணமகன் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதிய மணமகள் ஆவேசமடைந்து விழாவை நிறுத்தினார்.
- மணப்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணமகளை சமாதானப்படுத்த முயன்றனர்.
பரேலி:
உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் கடந்த 27-ந்தேதி இரவு விவேக் அக்னிகோத்ரி (வயது 26) என்ற வாலிபருக்கும், அப்பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மண்டபத்தில் குவிந்திருந்தனர். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக தொடங்கியது. மணமக்கள் மாலைகளை மாற்றிக்கொண்டனர்.
அப்போது திடீரென மணமகன் விவேக் அக்னிகோத்ரி, மணமகளை முத்தமிட்டார். இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.
விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதிய அவர் ஆவேசமடைந்து விழாவை நிறுத்தினார். இதனால் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணமகளை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால் அந்த பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வளவு பேர் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரின் குணாதிசயங்கள் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறிய மணப்பெண் திருமணத்தை நிறுத்திய கையோடு இதுபற்றி போலீஸ் நிலையத்திற்கு சென்றும் புகார் அளித்தார்.
சம்பவத்தை கேட்டறிந்த போலீசார் மணமகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த பெண் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் போலீசாரிடம் கூறுகையில்,
நாங்கள் மேடையில் இருந்த போது அவர் என்னை தகாதமுறையில் தொட்டார்.
உடனே நான் அதை தடுத்தேன். பின்னர் அவர் எதிர்பாராமல் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்தேன் மற்றும் அவமானப்படுத்தப்பட்டேன். அவர் என் சுயமரியாதையை பற்றி கவலைப்படாமல் பல விருந்தினர்கள் முன்னிலையில் மோசமாக நடந்து கொண்டார்.
எதிர்காலத்தில் அவர் எப்படி நடந்து கொள்வார்? என பயமாக இருக்கிறது. எனவே அவருடன் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் என்றார்.
மணமகளின் தாயார் கூறுகையில், எனது மருமகனின் நண்பர்கள் தூண்டுதலின் பேரிலேயே அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இப்போது என் மகள் அவருடன் செல்ல விரும்பவில்லை.
நாங்கள் சமாதானப்படுத்தியும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே நாங்கள் சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
ஆனால் தன்மீதான குற்றச்சாட்டை விவேக் அக்னிகோத்ரி மறுத்துள்ளார். மணமகளுடன் பந்தயம் கட்டியதன் அடிப்படையிலேயே அவருக்கு மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். அனைவரும் முன்னிலையிலும் முத்தமிட்டால் ரூ.1,500 தருவதாகவும், இதை செய்ய முடியாவிட்டால் ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் பந்தயம் கட்டியிருந்ததாக அவர் கூறினார்.
ஆனால் இதுகுறித்து போலீசார் மணப்பெண்ணிடம் விசாரித்த போது அவ்வாறு எந்த பந்தயமும் கட்டவில்லை என கூறினார்.
இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பங்கஜ் லாவணியா கூறுகையில், முறைப்படி தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் தற்போது விவேக் அக்னிகோத்ரியை மணமகள் நிராகரித்துள்ளார். எனவே 2 நாட்களுக்கு பிறகு அடுத்ததாக என்ன செய்வது என்று முடிவு செய்வோம் என்றார்.






