என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.
    • இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உத்திரபிரதேசம்:

    இன்ஸ்டாகிராமில் லைக்ஸ், கமெண்ட்ஸ், பெற்று அனைவரிடமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்குவதில்லை. சிலர் மலைகளில் ஏறி வீடியோ எடுக்கிறார்கள்.

    ரெயில் தண்டவாளத்தில் ஆபத்தான நிலையில் வீடியோ பதிவு செய்கிறார்கள். ஒரு சிலர் ரெயில்வே பிளாட்பாரத்தில் நடனம் ஆடுகின்றனர்.

    இதுபோல பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் ரூ.15 ஆயிரம் இழந்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வர்ணிகா பிரயாக் மாவட்டத்தில் உள்ள சிவிலியன் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.

    இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டார். மணப்பெண் போல் உடை அணிந்து சொகுசு கார் மீது முன்னால் அமர்ந்து பிரபலமான பாடலுக்கு நடனமாடினார். முக்கிய சாலைகளில் சென்று வீடியோவை பதிவு செய்தார்.

    இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார். இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.

    ஒரு சிலர் இது குறித்து போக்குவரத்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

    இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் இளம்பெண் அமர்ந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணின் விவரங்களை கண்டுபிடித்தனர்.

    போக்குவரத்து விதிகளை மீறி இளம்பெண் முக்கிய சாலைகளில் காரின் மீது அமர்ந்து வீடியோ பதிவு செய்ததாக ரூ.15,500 அபராதம் விதித்தனர். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    • கோர்ட்டு வளாகத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டனர்.
    • துப்பாக்கி சூட்டில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் இருவரும் காயமடைந்தனர்

    ஜான்பூர்:

    உத்தரபிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் ஆகிய இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ஜான்பூரில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது கோர்ட்டு வளாகத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டனர். இதில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை கோர்ட்டு வளாகத்தில் நின்றிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய லக்னோ அணி 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 89 ரன்கள் விளாசினார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்தது. கேப்டன் குருணால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் சேர்த்தார்.

    மும்பை இந்தியன்ஸ் சார்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 37 ரன்னில் அவுட்டானார்.

    இஷான் கிஷன் அரை சதமடித்து 59 ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும், வதேரா 16 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் டிம் டேவிட் அதிரடியில் மிரட்டினார். அவர் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், மும்பை அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    லக்னோ அணி சார்பில் ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • தீக்குளித்த சரோஜ் யாதவை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசாருக்கு சில சி.சி.டி.வி. காட்சிகள் கிடைத்துள்ளது. அதன் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்லால் யாதவ். இவரது மகள் சரோஜ் யாதவ் (வயது 31).

    இவர்களுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பவன்குப்தா என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் பவன்குமாரின் குடும்பத்தினருக்கும், சுந்தர்லால் குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் சரோஜ்யாதவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சரோஜ்யாதவ் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அலறித்துடித்துள்ளார்.

    இந்நிலையில் சரோஜ் யாதவின் சகோதரர் சஞ்சீவ் யாதவ், தீக்குளித்த தனது சகோதரியை காப்பாற்றுவதற்கு பதிலாக அவர் தீப்பற்றி எரிவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் வைரலாக பரவியது.

    இதற்கிடையே தீக்குளித்த சரோஜ்யாதவை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக போலீசாருக்கு சில சி.சி.டி.வி. காட்சிகள் கிடைத்துள்ளது. அதன் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரிசோதனை முடிவில் தான் குரங்குகள் எப்படி இறந்தது? என்பது தெரியவரும்.
    • கைப்பற்றப்பட்ட தண்ணீர் பழங்கள், வெல்லம் ஆகியவைகளும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரசேத மாநிலம் ஹபூர் அருகே உள்ள ஹர்முக்தேஸ்வர் வனப்பகுதியில் நேற்று 40 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

    இது பற்றி அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் தண்ணீர் பழங்கள் மற்றும் வெல்லம் கிடந்தது. இதில் விஷம் கலந்து கொடுத்து குரங்குகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இறந்த குரங்குகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    பரிசோதனை முடிவில் தான் குரங்குகள் எப்படி இறந்தது? என்பது தெரியவரும். கைப்பற்றப்பட்ட தண்ணீர் பழங்கள், வெல்லம் ஆகியவைகளும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    • உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் கடந்த வாரம் போலீசார் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • பிரபல ரவுடிகளான இருவரும் அந்த பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    ஜான்சி:

    உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் கடந்த வாரம் போலீசார் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போலீஸ்காரர் பெத்ஜீத்சிங் என்பவர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். ஆனால் அதில் இருந்தவர்கள் நிற்காமல் சென்றதோடு, தங்களை தடுத்த போலீஸ்காரர் பெத்ஜீத் சிங்கை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் 25 இடங்களில் படுகாயம் அடைந்த பெத்ஜீத்சிங் பரிதாபமாக இறந்தார்.

    அவரை கொலை செய்தவர்களை பிடிக்க ஐ.ஜி.பிரசாந்த் குமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் போலீஸ்காரர் பெத்ஜீத்சிங்கை கொலை செய்தவர்களை தேடி வந்தனர்.

    இதில் போலீஸ்காரர் பெத்ஜீத்சிங்கை கொன்றவர்கள் ஜலான் பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் கல்லு என்கிற உமேஷ் என தெரியவந்தது. பிரபல ரவுடிகளான இருவரும் அந்த பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் சுற்றி வளைத்தனர்.

    போலீசாரை கண்டதும் இருவரும் அங்கிருந்து தப்பி யோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிபிடித்ததும், இருவரும் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். உடனே போலீசார் அவர்களை நோக்கி திருப்பி சுட்டனர்.

    இதில் இருவரும் குண்டுபாய்ந்து இறந்தனர். இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

    உத்தரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் பிரபல ரவுடி ஒருவர் போலீஸ் கண்முன்பே சுட்டுக்கொல்லப்பட்டார். இப்போது 2 ரவுடிகளை போலீசாரே என்கவுண்டர் செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளை அழைத்தும் விசாரித்தனர்.
    • உடந்தையாக இருந்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஒருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஷாஜகான்பூர்:

    உத்தரபிரதேசத்தில் ஷாஜகான்பூரை அடுத்த தில்ஹார் பகுதியில் அரசு பள்ளி உள்ளது.

    இங்கு 30 வயதான ஆசிரியர் ஒருவர் கம்ப்யூட்டர் பாடம் நடத்தி வந்தார். அவர் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போது, அவரிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். மேலும் பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளை அழைத்தும் விசாரித்தனர்.

    மாணவிகளின் பெற்றோர் முன்னிலையில் நடந்த விசாரணையில் சுமார் 15 மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பள்ளிக்கு செல்லும் நாட்களில் வகுப்பு முடிந்த பின்னர் ஆசிரியர் தங்களை தனியாக அழைத்து உடலை தொடுவதும், தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகள் பலரும் தலித் பிரிவினரை சேர்ந்தவர்கள். இதையடுத்து கல்விதுறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கம்ப்யூட்டர் ஆசிரியரை கைது செய்தனர்.

    அவரை நேற்று மாஜிஸ்தி ரேட்டு வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே கம்ப்யூட்டர் ஆசிரியரின் செக்ஸ் சேட்டைக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஒருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியில் இருந்து உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் குற்றவாளிகளை குலைநடுங்க செய்யும் அதிகாரி முனிராஜ் அம்மாநிலத்தில் சிங்கம் என்றே அழைக்கப்பட்டு உள்ளார்.
    • உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன.

    இந்திய அரசியல் களத்தில் பரபரப்பான மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது உத்தர பிரதேசம். இந்த மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகளில் பலர் கிரிமினல் குற்றம் புரிந்தவர்களாகவே இருப்பார்கள்.

    அதே நேரத்தில் அந்த மாநிலத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களும் அதிகம். குறிப்பாக டெல்லிக்கு அருகில் உள்ள உத்தர பிரதேச மாநில காசியாபாத் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது எப்போதுமே மாநில காவல் துறைக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்துள்ளது.

    இப்படி தொடர்ச்சியாக அந்த மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை அரங்கேற்றுவதுடன் கொலை உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் உத்தர பிரதேச அரசுக்கு இந்த மாவட்டத்தின் குற்றவாளிகளை அடக்குவது என்பது பெரும் தலைவலியாக இருந்தது.

    கடந்த ஆண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு தலையெடுத்து குற்றவாளிகளின் கூட்டத்தை அடியோடு ஒடுக்கி இருக்கிறார்.

    அவரது பெயர் முனிராஜ். தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ஆ பாப்பாரப்பட்டி என்கிற கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் 2019-ம் ஆண்டு உத்தர பிரதேச கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார் அங்கு பல்வேறு மாவட்டங்களில் அவர் பணியமர்த்தப்பட்டார். உளவுத்துறையில் அவர் பணியில் இருந்தபோது தான் கடந்த ஆண்டு காசியாபாத் மாவட்டத்தில் கடுமையான குற்றங்கள் நடைபெற்று வந்தன.

    அப்போது அங்கு போலீஸ் அதிகாரியாக இருந்த பவன்குமார் என்பவர் எவ்வளவோ நடவடிக்கைகளை மேற்கொண்டும் குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அதிரடியாக அவர் மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது தான் உத்தரபிரதேச மாநில முதல்-அமைச்சரான யோகி ஆதித்ய நாத்தின் பார்வை முனிராஜின் மீது பலமாக விழுந்துள்ளது.

    முனிராஜ் இதுவரை பணியாற்றிய மாவட்டங்களில் சிறப்பாக பணி புரிந்ததையும் உளவு பிரிவில் அவர் நன்றாக பணியாற்றுவதையும் புள்ளி விவரங்களோடு தெரிந்துகொண்ட யோகி ஆதித்யநாத் மாவட்டத்திற்கு பொறுப்பு அதிகாரியாகவே எஸ்.பி. முனிராஜை நியமனம் செய்து உள்ளார்.

    இந்த பொறுப்பு பணியிலேயே முனிராஜ் கடுமையாக வேகம் காட்டினார். இதையடுத்து காசியாபாத் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவாளிகளும் வேட்டையாடப்பட்டனர். அந்த வகையில் காசியாபாத்தில் முனிராஜ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் உத்தரபிரதேச மாநிலம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டது. அந்த மாநிலத்தில் இவரது பெயரை கேட்டாலே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள பயந்து நடுங்கும் நிலை உருவானது. இப்படி குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த முனிராஜ் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் அறியப்பட்டார்.

    ஆயுதங்களுடன் போலீசாரை தாக்க வரும் குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க அவர் எப்போதுமே தயங்கவில்லை அந்த வகையில் பல குற்றவாளிகளின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இப்படி பல குற்றவாளிகளை காலில் சுட்டு பிடித்த காவல்துறை அதிகாரி முனிராஜ் அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான இரண்டு ரவுடிகளை சுற்றி வளைத்து பிடிக்க சென்றபோது அவர்களை எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.

    இரண்டு குற்றவாளிகளும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்கள் ஆவர். அவர்கள் இருவரும் போலீசாரை தாக்க முற்பட்டபோது துப்பாக்கி குண்டுக்கு இரையானார்கள். இந்த என்கவுண்டர் சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இப்படி உத்தரபிரதேச மாநிலத்தில் குற்றவாளிகளை குலைநடுங்க செய்யும் அதிகாரி முனிராஜ் அம்மாநிலத்தில் சிங்கம் என்றே அழைக்கப்பட்டு உள்ளார்.

    தற்போது உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. காசியாபாத்தில் இருந்து மாற்றப்பட்டு மிகவும் முக்கிய பகுதியாக விளங்கி வரும் அயோத்தியில் உயர் பதவியில் முனிராஜ் அமர்த்தப்பட்டுள்ளார்.

    தற்போது அங்கு பணிபுரிந்து வரும் அவர் விரைவில் நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழா வரை அயோத்தியிலேயே பணியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ராமர் கோவில் விழாவை ஒரு மாதம் வரையில் நடத்த உத்தரபிரதேச அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராமர் கோவில் விழாவை கோலாகலமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முனிராஜ் தான் சரியான தேர்வு என்று நினைத்து அவரை அங்கு பணியில் அமர்த்தியுள்ளார். அதற்கேற்ப போலீஸ் அதிகாரி முனிராஜும் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி முனிராஜ் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    காசியாபாத் மாவட்டத்தில் நான் பணியமர்த்தப்பட்டபோது அங்கு குற்ற செயல்கள் அதிகம் நடைபெற்று வந்தன. இதனால் ஆரம்பத்தில் குற்றவாளிகளை ஒடுக்குவது பெரும் சவாலாகவே இருந்தது. வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்தோம்.

    இதன்பிறகு கிரிமினல்களையும் களையெடுக்க முடிவு செய்து அதன்படி திட்டமிட்டு செயல்பட்டோம். கடுமையான குற்றவாளிகள் 100 பேரை காலில் சுட்டு பிடித்தோம்.

    எப்போதுமே போலீஸ் மீது பயம் இருந்தால் மட்டுமே குற்றசெயல்கள் குறையும். அந்த வகையில் நானும் எனக்கு கீழ் பணிபுரிந்த காவல்துறையினரும் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக குற்றசெயல்கள் காசியாபாத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டன. குறிப்பாக 20 கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்த இரண்டு குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடிக்க சென்றபோது அவர்கள் தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டர் செய்ய நேரிட்டது. இதுபோன்ற சம்பவங்களும் குற்றவாளிகளுக்கு கடுமையான எச்சரிக்கையாக அமைந்தது.

    இதன் காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் போலீசாரை பார்த்து குற்ற செயல் ஈடுபடுபவர்கள் நடுங்கும் நிலையை ஏற்படுத்தினோம் கடந்த ஆண்டு இறுதியில் அயோத்தியில் பணி அமர்த்தப்பட்டு உள்ளேன் காவல்துறை பணியை சிரமமாக கருதாமல் கவனமுடன் சிறப்பாக மேற்கொண்டாலே போதும் குற்ற செயல்களை வெகுவாக குறைக்க முடியும்.

    இவ்வாறு போலீஸ் அதிகாரி முனிராஜ் தெரிவித்தார்.

    வெளி மாநிலங்களில் இருந்து தமிழக கேடர் காவல்துறை அதிகாரிகளாக பணியில் சேர்ந்த பலர் தமிழகத்திலும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி முனிராஜ் உத்தர பிரதேச மாநிலத்தை கலக்கி வருகிறார். அம்மாநிலத்தில் அவரைப்பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு தனது உழைப்பாலும் கடுமையான சிரத்தையான பணியாலும் காவல்துறை வட்டாரத்தில் சுறுசுறுப்பான திறமையான அதிகாரி என்ற பெயரையும் எடுத்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் போலீஸ் அதிகாரி முனிராஜ் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பெயர் சொல்லும் வகையிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ள போலீஸ் அதிகாரி முனிராஜ் உத்தரபிரதேச மாநிலத்திற்கு மட்டுமின்றி தனது சொந்த மாநிலமான தமிழகத்துக்கும் பெருமை சேர்த்து வருகிறார் என்றால் அது மிகையாகாது.

    • பஞ்சாயத்துகளில் பா.ஜனதாவின் முன்னிலை எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்தது.
    • சமாஜ்வாடி 130 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 23 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும் மற்றவை 11 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 4 மற்றும் 11-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது.

    17 மாநகராட்சி, 199 நகராட்சி மற்றும் 52 நகர பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 14 ஆயிரத்து 522 பதவி இடங்களுக்கு 83 ஆயிரத்து 378 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் 53 சதவீத வாக்குகள் பதிவானது.

    உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று நடந்தது. இதற்காக 353 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    இதில் ஆளும் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 16 மாநகராட்சிகளிலும் பா.ஜனதா தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்தது. இதனால் அந்த மாநகராட்சிகளையும் பா.ஜனதா கைப்பற்றுகிறது. ஒரு மாநகராட்சியில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலை பெற்றது.

    காலை 11 மணி நிலவரப்படி 94 நகராட்சிகளில் பா.ஜனதா முன்னிலை பெற்றது. 39 நகராட்சிகளில் சமாஜ்வாடி கட்சி, 19 இடங்களில் பகுஜன் சமாஜ், 6 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றன. மற்றவை 41 இடங்களில் முன்னிலையில் இருந்தன.

    பஞ்சாயத்துகளில் பா.ஜனதாவின் முன்னிலை எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்தது. அக்கட்சி 212 பஞ்சாயத்துகளில் முன்னிலை பெற்றது. சமாஜ்வாடி 130 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 23 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும் மற்றவை 11 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

    உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு அமோக முன்னிலை கிடைத்துள்ளது. அக்கட்சிக்கு சமாஜ்வாடி சில இடங்களில் கடும் போட்டியாக விளங்கியது.

    • மல்புரா பகுதியில் பாராசூட் தரை இறங்குவதற்கான மண்டலத்தை நோக்கி ராணுவ வீரர் குதித்தார்.
    • பாராசூட் கயிறு எரிந்து, அங்குர் சர்மா, உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார்.

    ஆக்ரா:

    காஷ்மீரை சேர்ந்தவர் ராணுவ கமாண்டோ வீரர் அங்குர் சர்மா. இவர், விமானத்தில் இருந்து பாராசூட்டில் கீழே குதித்து பயிற்சி எடுப்பதற்காக, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு சென்றார்.

    நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பயிற்சியில் கலந்து கொண்டார். விமானத்தில் பயணித்த அவர், 8 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்து பாராசூட்டில் கீழே குதித்தார்.

    மல்புரா பகுதியில் பாராசூட் தரை இறங்குவதற்கான மண்டலத்தை நோக்கி அவர் குதித்தார். முதலில், சரியான பாதையில் தரையை நோக்கி வந்தார். திடீரென பலத்த காற்று வீசியதால், அவர் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரம் பாராசூட் விலகி சென்றது. அந்த பாதையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் பாராசூட் சிக்கிக் கொண்டது. அடுத்த சில வினாடிகளில் பாராசூட் தீப்பிடித்துக் கொண்டது.

    இதனால் பாராசூட் கயிறு எரிந்து, அங்குர் சர்மா, உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார். அவர் தீக்காயமும் அடைந்தார். அவரை ஆக்ரா ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு, அங்குர் சர்மா உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • காரை ரிவர்ஸ் செய்யும் போது காரின் வேகத்தை கட்டுப்படுத்த தெரியாமல் பெண் திணறி உள்ளார்.
    • பரபரப்பான சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளின் மீது பெண் காரை ஏற்றி உள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் டிரைவிங் கற்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் தனது காரை தாறுமாறாக ஓட்டி உள்ளார். மேலும் காரை ரிவர்ஸ் செய்யும் போது அவரால் காரின் வேகத்தையும் கட்டுப்படுத்த தெரியாமல் திணறி உள்ளார். அப்போது பரபரப்பான சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளின் மீது அந்த பெண் காரை ஏற்றி உள்ளார்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நடந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

    • தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்தார்.

    உத்திரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டம் ராம்கோலா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள மகி மதியா கிராமத்தில் உள்ள குடிசையில் நேற்று திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பக்கத்து குடிசைகளிலும் தீப்பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் குடிசைகளில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். ஆனால் தீ அதிகளவில் பரவி மாற்றுத்திறனாளி பெண் மற்றும் 4 குழந்தைகள் என 5 பேர் பலியாகினர்.

    ஷேர் முகமது என்பவரது மாற்றுத்திறனாளி மனைவி பாத்திமா மற்றும் அவரது நான்கு குழந்தைகளான ரோகி (6), அமினா (4), ஆயிஷா (2), மற்றும் இரண்டு மாத குழந்தை கதீஜா ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இதில் மூன்று பேர் மருத்துவமயைில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு, தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    ×