என் மலர்
உத்தரப் பிரதேசம்
- கும்பாபிஷேக நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- கும்பாபிஷேகத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், ரூ.2000 கோடி மதிப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி அன்று நண்பகல் 12.30 மணிக்கு அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மேலும், கும்பாபிஷேக நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார்.
கும்பாபிஷேகத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அமைப்பினர் இன்று அழைப்பிதழை வழங்கினர்.
- அரசு மருத்துவமனையில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறார்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
- 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறார்களுக்கு தானம் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவமனையில், தலாசீமியா எனும் மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதற்கிடையே, 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறார்களுக்கு தானம் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் 2 பேருக்கு எச்.ஐ.வி, 7 பேருக்கு ஹெபடைடிஸ் பி, 5 பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் சிறார்கள் அனைவரும் கான்பூர், பரூகாபாத், இட்டாவா மற்றும் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும்,
ரத்தத்தைப் பரிசோதிக்காமல் சிறார்களுக்கு செலுத்தப்பட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
- மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடக்கிறது.
லக்னோ:
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடக்கிறது. இங்கு பா.ஜ.க. ஆளும் கட்சியாக திகழ்கிறது.
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் சமாஜ்வாடிக்கு 6 தொகுதிகள் வழங்க முடிவு எட்டப்பட்டு இருந்த நிலையில், 229 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. இதனால் சமாஜ்வாடி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
சமாஜ்வாடி கட்சி சார்பிலும் 33 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் அங்கு இந்தியா கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சிக்கு காங்கிரஸ் துரோகம் செய்யக்கூடாது என்றும், சமாஜ் வாடியுடனான கூட்டணி குறித்து காங்கிரஸ் தெளிவுப்படுத்த வேண்டும் என்று உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, உ.பி.யின் ஹர்டோய் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்துக்கு பின் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்புகிறதா, இல்லையா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். எங்களுக்கு எதிராக துரோகம் செய்ய வேண்டாம். உங்களுடன் கூட்டணி குறித்து மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என உறுதியளிக்கிறேன். பா.ஜ.க.வை தோற்கடிக்க தனியாக போட்டியிடுவதற்கான பணிகளை நாங்கள் தொடங்குவோம்.
கூட்டணி இல்லை என்றால் எங்களை அழைத்தது ஏன்? 2024 பாராளுமன்ற தேர்தலில் மட்டும்தான் கூட்டணி, மாநில அளவில் கூட்டணி கிடையாது என்பதை அவர்கள் தெளிவாக தெரிவித்து இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- இரண்டு நகரங்களுக்கு இடையில் அதிவேக ரெயில் சேவை தொடங்க வழித்தடம்
- சாஹிபாபாத்- துஹாய் டிப்போ இடையே ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
மண்டல ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (Regional Rapid Transit System) வழித்தடம் டெல்லி- காசியாபாத்- மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் ரெயில்கள் 160 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.
பயண நேரத்தை குறைக்கும் வகையிலும், பயணம் செய்வோர் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை விரைவாக சென்றடைவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டப் பணி தற்போது முடிவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சாஹிபாபாத்- துஹாய் டெப்போ ஆகியவற்றிற்கு இடையே 17 கி.மீட்டர் தூரத்திற்கு நமோ ரெயில் சேவை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை இந்த வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பின் நமோ ரெயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சாஹிபாபாத், காசியாபாத், குர்தால், துஹாய், துஹாய் டெப்டோ ஆகிய ஐந்து இடங்களில் அடங்கியுள்ளது.
தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கார்பரேசன் இந்த வழித்தடத்தை அமைத்து வருகிறது. மொத்தம் 82.15 கி.மீ. தூரம் இந்த வழித்தடம் அமைய இருக்கிறது. மொத்த பணிகளும் வருகிற 2025 ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் ரெயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி பள்ளிக் குழந்தைகள், ரெயில் பணியாளர்களுடன் உரையாற்றினார். நாளை முதல் பயணிகள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தலாம்.
- ‘நூரி’ என்ற வார்த்தை இஸ்லாமிய புனித நூலான குரானுடன் தொடர்புடையது.
- ராகுல் காந்தி தனது முகநூல் பக்கம், யூடியூப் பக்கத்தில் நாயின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரயாக்ராஜ்:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாயார் சோனியாவுக்கு அளித்த நாய்க்கு 'நூரி' என்று பெயர் வைத்ததை எதிர்த்து அவர் மீது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
'நூரி' என்ற வார்த்தை இஸ்லாமிய புனித நூலான குரானுடன் தொடர்புடையது, குரானில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது என்று வழக்குத் தொடுத்துள்ள மஜ்லிஸ் கட்சித் தலைவர் முகமது பர்கான் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முகமது பர்கானின் வக்கீல் முகமது அலி கூறுகையில், 'ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ (மத உணர்வுகளைப் புண்படுத்துதல்) பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
ராகுல் காந்தி தனது முகநூல் பக்கம், யூடியூப் பக்கத்தில் நாயின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், செய்தித்தாள்களிலும் இது தொடர்பான செய்திகள் வந்துள்ளன. அவற்றை ஆதாரமாக காட்டியுள்ளோம்' என்றார்.
உலக விலங்குகள் தினத்தையொட்டி கடந்த 4-ந்தேதி தனது தாயார் சோனியாவுக்கு 'நூரி' என்று பெயரிடப்பட்ட நாய்க்குட்டியை ராகுல் காந்தி பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தங்கத்தை கடத்திச் செல்வதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவில் இருந்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
- தங்க பிஸ்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் படோகி மாவட்டத்தில் கடத்தல்காரர்கள் சிலர் பெருமளவிலான தங்கத்தை கடத்திச் செல்வதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவில் இருந்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாருடன், வருவாய் நுண்ணறிவுப் பிரிவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதையடுத்து உஷாரான கடத்தல்காரர்கள், ராஜ்புரா என்ற இடத்தில் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர். மோரா நதியையொட்டிய காட்டுக்குள் அவர்கள் புகுந்து விட்டனர்.
இந்த நிலையில் கடத்தல்காரர்களின் வாகனத்தில் இருந்து ரூ.8.45 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்க பிஸ்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். காட்டுக்குள் புகுந்த கடத்தல்காரர்களில் 2 பேரை போலீஸ், வருவாய் நுண்ணறிவுப் பிரிவு கூட்டுப் படையினர் நேற்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் இருவரும் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வங்காளதேசத்தில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு தங்கத்தை கடத்திச் செல்லும்போது பிடிபட்டுள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மராட்டிய மாநிலம் நாக்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு ரெயிலில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கசிந்தது. அதையடுத்து நேற்று அங்கு சோதனை மேற்கொண்ட ரெயில்வே பாதுகாப்பு படையினரும், வருவாய் நுண்ணறிவுப் பிரிவினரும் 2 பேரை மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்த சுமார் 9 கிலோ தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றினர்.
அதன் மதிப்பு ரூ.5 கோடியே 40 லட்சம் என போலீசார் கூறினர்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.
பரேலி:
உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர், மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடினர். அப்போது ரெயில் ஏறியதில், 2 கால்கள் மற்றும் ஒரு கையை இழந்து மாணவி படுகாயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.
இதுதொடர்பான விசாரணையில், கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞர்கள், பின்தொடர்ந்து வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
- சுதந்திரப் போராட்ட வீரரான ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- அவருக்கு மரியாதை செலுத்தச் சென்ற அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
லக்னோ:
சுதந்திரப் போராட்ட வீரரான ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஜெய பிரகாஷ் நாராயண் சர்வதேச மையம் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்துவதற்காக அங்கு
தொண்டர்களுடன் திரண்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அங்கு தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டு கதவும் மூடப்பட்டது. இதைக் கண்டித்து சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் கோஷமிட்டனர்.
இந்நிலையில், அகிலேஷ் யாதவ் அருகிலுள்ள சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசாரின் சந்தேக பார்வை கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் மூத்த சகோதரி அஞ்சலி பால் மீது திரும்பியது.
- சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மண் வெட்டி, அரிவாள், ரத்தம் படிந்த ஆடைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பகதூர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்வீர் சிங். விவசாயி. இவருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் ஜெய்வீர் சிங் தனது மகள்கள் சுர்பி (வயது 6) ரோஷினி (4) ஆகியோரை வீட்டில் தனியாக விட்டு விட்டு மனைவி, மகன்களுடன் வயலுக்கு சென்று விட்டார்.
இரவு அவர்கள் வீடு திரும்பினார்கள், அப்போது வீட்டில் சுர்பியும், ரோஷினியும் ரத்த வெள்ளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடல்கள் தனித்தனி அறைகளில் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பல்ராய் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 2 சகோதரிகள் உடல்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் போலீசாரின் சந்தேக பார்வை கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் மூத்த சகோதரி அஞ்சலி பால் மீது திரும்பியது. அவளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் தனது சகோதரிகளை கொலை செய்ததை அவள் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவளை கைது செய்தனர். இந்த கொலைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. விசாரணையில் இந்த கொலையில் அஞ்சலி பால் 3 ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் தான் இந்த இரட்டை கொலைக்கான முழு விவரம் தெரியவரும்.
சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மண் வெட்டி, அரிவாள், ரத்தம் படிந்த ஆடைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
- ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்தனர்.
- பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி மீது, அந்த ரெயில் பயணம் செய்து கொண்டிருந்த மற்றொரு நபர் சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து உடனடியாக சக பயணிகள் அந்த ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்தனர்.
இதையடுத்து ஜான்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகள், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த நபரின் பெயர் ரித்தேஷ் என்பதும், சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ரித்தேஷ் மீது ரெயில்வே சட்டம் பிரிவு 145-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வாரணாசியில் இருந்து ஜான்பூருக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
- 3 வயது குழந்தை மட்டும் உயிர் தப்பியது.
வாரணாசி:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து ஜான்பூருக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை 7 மணியளவில் பூபுர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சென்றபோது லாரி மீது மோதியது. இதில் 8 பேர் பலியானார்கள். 3 வயது குழந்தை மட்டும் உயிர் தப்பியது. குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது
- இச்சம்பவத்தை எம்.எல்.ஏ. ஜெய்வீர் சிங் கவனிப்பதும் பதிவாகியுள்ளது
பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த தலைவர்களில் ஒருவரான மறைந்த பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அலிகாரின் கோல் பகுதியில் ஸ்ரீராம் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோல் சட்டசபை உறுப்பினர் அனில் பராசர் ஏற்பாடு செய்திருந்தார். அம்மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர், உயர் கல்வி அமைச்சர் மற்றும் முன்னாள் மேயர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான சதீஷ் குமார் கவுதம் (51). கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த சதீஷ், தனக்கு அருகே அமர்ந்திருந்த பா.ஜ.க.வின் பெண் சட்டசபை உறுப்பினர் ஒருவரின் தோளில் கை போட்டார். இந்த அநாகரீகமான செய்கையை அடுத்து அப்பெண் எம்.எல்.ஏ. தனது இருக்கையை மாற்றி அதே மேடையில் வேறொரு இடத்தில் அமர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சி அங்கிருந்த சிலரால் வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், எம்.பி.யின் அத்துமீறலை அந்த பெண் எம்.எல்.ஏ. தடுக்க முற்படுவதும் இந்த சம்பவத்தை பா.ஜ.க.வின் பரோலி எம்.எல்.ஏ.வான தாகுர் ஜெய்வீர் சிங் கவனிப்பதையும் காண முடிகிறது.
இந்நிகழ்ச்சி வைரலானதை தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி.யின் அநாகரீக செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய ஊடக பொறுப்பாளர் சுரேந்திர ராஜ்புத், "இதுதான் கலாச்சார பெருமை பேசும் பா.ஜ.க.வின் உண்மையான கலாச்சாரம்" என விமர்சித்துள்ளார்.
இதுவரை இச்சம்பவம் குறித்து பா.ஜ.க.வின் தரப்பிலிருந்து எந்த அறிக்கையோ அல்லது அந்த எம்.பி. மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த செய்தியோ வரவில்லை.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் முதல் கூட்ட தொடரில் பெண்களுக்கு பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளில் 33% இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை பா.ஜ.க. கொண்டு வந்தது. ஆனால், மேடையில் பெண் எம்.எல்.ஏ.வை நிம்மதியாக அமர கூட விடவில்லை என இந்நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.






