என் மலர்
உத்தரப் பிரதேசம்
- குழந்தையின் நிலையைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- குற்றவாளிக்கு 26 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.
கன்னோஜ்:
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50 வயது ஆசாமி ராஜேஷ் ஜாதவ் என்ற மகாத்மா.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 3 வயது பெண்குழந்தையை கடத்திச்சென்று, அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கற்பழித்துவிட்டார்.
அந்த குழந்தையின் நிலை மோசமடைந்ததால் அதை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டு அங்கு சென்ற குடும்பத்தினர், அதன் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ராஜேஷ் ஜாதவ் பின்னர் கைது செய்யப்பட்டார். சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், ராஜேஷ் ஜாதவ் குற்றவாளி என 'போக்சோ' சட்ட சிறப்பு நீதிபதி அல்கா யாதவ் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார்.
அவர் குற்றவாளிக்கு 26 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் அவர் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
- உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி 65 தொகுதிகளில் போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்
- இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாத வகையில் செயல்பட்டு வருகிறோம்
வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் இடம்பிடித்துள்ள கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து மூன்று கூட்டங்களை நடத்தி பா.ஜனதாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.
தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முக்கிய கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ், முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதை நிதிஷ் குமார் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கிடையே மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 இடங்களில் 65 இடங்களில் போட்டியிடுவோம் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார். கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன் அடிப்படையில் அதிக இடங்களில் போட்டியிட இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்ததில் இருந்து தற்போது வரை, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியால் முன்னதாகவும், இனிமேலும் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடையாது.
கட்சியில் உள்ள தலைவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருகிறது என்பதை தற்போது உங்கள் முன் சொல்லிக் கொள்கிறேன்'' என தெரிவித்தார்.
இதனால் உத்தர பிரதேச மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு போதுமான இடங்களை பகிர்ந்து அளித்து போட்டியிட வாய்ப்புள்ளது.
- மொபைலை பறி கொடுக்காமல் இருக்க, கீர்த்தி கெட்டியாக பிடித்து கொண்டார்
- காவல் அதிகாரிகளின் துப்பாக்கி சூட்டில் ஜிதேந்திராவிற்கு காலில் குண்டடி பட்டது
உத்தர பிரதேச மாநில காசியாபாத் நகரின் ஏபீஈஎஸ் பொறியியல் கல்லூரியில் (ABES Engineering College) முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தவர் 19 வயதான கீர்த்தி சிங்.
கீர்த்தி, கடந்த அக்டோபர் 27 அன்று காசியாபாத்தின் மசூரி பகுதியிலிருந்து ஒரு பணிக்காக ஹாபூர் வரை பேருந்தில் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அங்குள்ள பேருந்து நிலையத்தை அடைய ஒரு ஆட்டோ ரிக்ஷாவில், தனது தோழி தீக்ஷா ஜிண்டாலுடன் தேசிய நெடுஞ்சாலையில் (NH-9) சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஆட்டோவிற்கு அருகில் ஒரு மோட்டார் பைக் வந்தது. அதை பல்பீர் என்பவர் ஓட்டி வந்தார்; ஜிதேந்திரா (28) என்பவர் பின்னால் அமர்ந்திருந்தார். கீர்த்தி சென்ற ஆட்டோவிற்கு அருகில் அந்த மோட்டார் பைக் இணையாக வந்தது.
அப்போது ஜிதேந்திரா, திடீரென கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனை பறிக்க முயன்றார். இதை எதிர்பாராத கீர்த்தி, மொபைலை பறி கொடுக்காமல் இருக்க அதனை கெட்டியாக பிடித்து கொண்டார். அந்த திருடர்கள் பைக்கை வேகமாக செலுத்தியதால், கீர்த்தி ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து, விழுந்த வேகத்தில் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.
இந்த விபத்தில் கீர்த்திக்கு பலமான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அங்குள்ளவர்கள் உதவியுடன் கீர்த்தி அருகில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக கீர்த்தி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வந்ததில் பைக்கை ஓட்டி வந்த பல்பீர் காவலர்களிடம் சிக்கினார்.
இதற்கிடையே, காவலர்கள் கங்கா நதி சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு மோட்டார் பைக்கில் கீர்த்தியை தாக்கிய ஜிதேந்திராவும் மற்றொரு நபரும் சென்றனர். அவர்களை காவல்துறை அதிகாரிகள் நிற்க சொல்லி சைகை செய்தும் நிற்காமல் வேகமாக தப்பித்தனர்.
உடனடியாக காவல் அதிகாரிகள் அவர்களை பின் தொடர்ந்த போது, இருவரில் ஒருவர் துப்பாக்கியால் காவலர்களை சுட தொடங்கினார். இதில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து காவல் அதிகாரிகள் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் ஜிதேந்திரா, காலில் குண்டடிபட்டு கீழே விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜிதேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடி விட்ட அவருடன் பயணம் செய்த மற்றோருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த 2020ல் குண்டர்கள் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜிதேந்திராவிற்கு எதிராக பல காவல் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்திற்குட்பட்ட பன்வாரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுவனின் உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராம்அவதார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஆவேசம் அடைந்த கும்பல் ராம்அவதாரை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கி உள்ளனர். வலி தாங்க முடியாமல் ராம்அவதார் கையை வைத்து முகத்தை மறைத்த போதும் கும்பல் அவரை சரமாரியாக கைகளால் தாக்கி, கால்களால் உதைத்துள்ளனர்.
சிலர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் கும்பலால் தாக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராம்அவதாரை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
- இங்கிலாந்து 100 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ், தாவித் மலான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் இங்கிலாந்து 13 ரன்கள் எடுத்தது.
4 ஓவரில் 26 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து நல்ல தொடக்கத்துடன் விளையாடியது. 5-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் தாவித் மலானை (16) வீழ்த்தினார். அடுத்த பந்தில் ஜோ ரூட்டை டக்அவுட்டில் வெளியேற்றினார்.
அதன்பின் இங்கிலாந்து அணி தடம் புரண்டது. பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முகமது ஷமி பந்தில் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், பேர்ஸ்டோவ் 14 ரன்னிலும் ஸ்டம்பை பறிகொடுத்தனர்.
இதனால் இங்கிலாந்து 10 ஓவரில் 40 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. அதன்பின் இங்கிலாந்து அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஜாஸ் பட்லர் 10 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
மொயீன் அலியை (15) முகமது ஷமி வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸை (10) ஜடேஜா வீழ்த்தினார். ஒரு பக்கம் தாக்குப்பிடித்து விளையாடிய லிவிங்ஸ்டோன் 27 ரன் எடுத்த நிலையில் குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து 100 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து, டேவிட் வில்லே மற்றும் அடில் ராஷித் ஜோடி விளையாடியது. இதில், அடில் ராஷித் 13 ரன்களில் ஷமியின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.
9வது விக்கெட் இழந்த நிலையில், டேவிட் வில்லேவுடன் மார்க் வுட் ஜோடி சேர்ந்தார். இதில், ஒரு ரன் கூட எடுக்காமல் மார்க் வுட்டும் அவுட்டானார்.
இறுதியில், 34.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து தோல்வி அடைந்தது.
இந்நிலையில், 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக விளையாடி இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
- 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில், பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் நேரில் கண்டு ரசித்து வருகிறார்.
இதன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
- விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். சுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
இதனால் இந்தியா 40 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்த போதிலும், மறுபக்கம் ரோகித் சர்மா உறுதியாக நின்று விளையாடினார். அடுத்து ரோகித் சர்மா உடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார்.
ரன்கள் விரைவாக அடிக்க கடினமான நிலையில், இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இதனால் ஸ்கோர் உயர்ந்த வண்ணம் இருந்தது. ரோகித் சர்மா 66 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
இந்தியா 30.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருக்கும்போது கே.எல். ராகுல் 58 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.
80 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 101 பந்தில் 87 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.
அடுத்து வந்த ஜடேஜா 8 ரன்னிலும், முகமது ஷமி 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 183 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
சூர்யகுமார் யாதவ் ஸ்கோரை 250 ரன்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என எண்ணத்தோடு விளையாடினார். அவருடன் 8-வது விக்கெட்டுக்கு பும்ரா ஜோடி சேர்ந்தார். பும்ரா சிங்கிள் ரன் எடுக்க திணறினார். இதனால் ஸ்கோர் வேகமெடுக்க மறுத்தது. 12 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடக்காமல் இருந்தார்.
46-வது ஓவரை மார்க் வுட் வீசினார். முதல் பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 200 ரன்களைக் கடந்தது. 3-வது பந்தில் பும்ரா பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். இந்தியாவுக்கு இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. ஸ்கோர் 208 ஆனது.
49 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் யாதவ் அரைசதத்தை நினைக்காமல், சிக்ஸ் அல்லது பவுண்டரி எதிர்பார்த்து அடித்து விளையாடினார். இதனால் 47-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும்.
9-வது விக்கெட்டுக்கு பும்ரா உடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். இதில், பும்ரா 16 ரன்களில் ரன் அவுட் ஆனார். குல்தீப் யாதவ் 9 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இந்நிலையில், 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை இந்தியா எடுத்தது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
ரன் சுருக்கம் : 10 ஓவர் 35-2, 20 ஓவர் 73-3, 30 ஓவர் 131-3, 40 ஓவர் 180-5, 50 ஓவர் 229.
- ஸ்டோக்ஸ் எளிதாக கேட்ச் பிடித்தார்.
- விராட் கோலி உலகக் கோப்பையில் (ஒருநாள் மற்றும் டி20) முதன்முறையாக டக்அவுட் ஆகியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். கவர் டிரைவ் மற்றும் ஆஃப் சைடு திசைகளில் ரன்கள் அடிக்க முடியாத வகையில் பீல்டிங் அமைத்தார் இங்கிலாந்து கேப்டன். பந்து வீச்சாளர்களும் அதன்படி பந்து வீச, விராட் கோலி ரன் கணக்கை தொடங்க சிரமப்பட்டார்.
டேவிட் வில்லே பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றார். அப்போது பந்து மிட்ஆஃப் திசையில் நின்ற ஸ்டோக்ஸ் நோக்கி பந்து சென்றது. ஸ்டோக்ஸ் எளிதாக கேட்ச் பிடித்தார். இதனால் விராட் கோலி 9 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
இதன்மூலம் விராட் கோலி உலகக் கோப்பையில் (ஒருநாள் மற்றும் டி20) முதன்முறையாக டக்அவுட் ஆகியுள்ளார்.
- முகமது ஷமி 7 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்
- பும்ரா 6.5 ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது.
- வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தினார்.
- வரும் தேர்தலில் எதிர்கட்சியான "இந்தியா" கூட்டணி முன்வைக்கும் சவால் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
2024ம் ஆண்டில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவார் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனது பாராளுமன்றத் தொகுதியான லக்னோவுக்கு ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக வந்தார்.
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு இங்கு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர், வரும் தேர்தலில் எதிர்கட்சியான "இந்தியா" கூட்டணி முன்வைக்கும் சவால் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
2024 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அவர் மீண்டும் வருவார் என்பதை நான் மட்டுமல்ல, பல அரசியல் பார்வையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மகரிஷி வால்மீகியின் ராமர் ஒரு அரசர் மட்டுமல்ல, ஒரு லோக் நாயகர்... யுக் புருஷ் மற்றும் ஒரு அவதாரம் என்பதை முழு உலகமும் அறிந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
எல்லா பாரதவாசிகளும், உலகின் எந்தப் பகுதியிலும் இருக்கட்டும், ராமாயணத்தில் மகரிஷி வால்மீகியால் செதுக்கப்பட்டதைப் போல ராமரை மரியதா புருஷோத்தராகப் பார்க்கவும்.
மேலும், வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயா என்ற பெயர் கொண்ட நாயை விட்டு செல்வதற்கு மெரல் பொன்டென்பெல்லுக்கு மனம் இல்லை.
- முறைப்படி நாய்க்கு தேவையான பாஸ்போர்ட் மற்றும் விசா ஏற்பாடு செய்ய மேலும் 6 மாத காலம் இந்தியாவில் தங்க வேண்டியதாயிற்று.
நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த மெரல் பொன்டென்பெல் என்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாவுக்காக இந்தியா வந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் சென்று வந்த அவர், வாரணாசியிலும் சில இடங்களில் சுற்றி பார்த்தார். அப்போது அங்குள்ள ஒரு தெருவில் சென்று கொண்டிருந்த போது திடீரென தெரு நாய் ஒன்று அவரது கண்ணில் பட்டது. செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்ட மெரல் பொன்டென்பெல் அந்த நாய் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்.
ஜெயா என்ற பெயர் கொண்ட அந்த நாயை விட்டு செல்வதற்கு மெரல் பொன்டென்பெல்லுக்கு மனம் இல்லை. இதைத்தொடர்ந்து அந்த நாயை தன்னுடன் அழைத்து செல்ல முடிவு செய்த அவர் முறைப்படி நாய்க்கு தேவையான பாஸ்போர்ட் மற்றும் விசா ஏற்பாடு செய்ய மேலும் 6 மாத காலம் இந்தியாவில் தங்க வேண்டியதாயிற்று.
இருப்பினும் நாய் மீது கொண்ட அன்பு காரணமாக இந்தியாவில் மேலும் 6 மாதம் தங்கி ஜெயாவின் பெயரில் முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா பெற்று நெதர்லாந்துக்கு அழைத்து செல்கிறார். அவரது இந்த செயல் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
- அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தின் பிரோஸ்பூர் மற்றும் மத்தியபிரதேசத்தின் சியோனி இடையே படல்கோட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று மாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆக்ரா ரெயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது, ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, தீப்பிடித்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பின்னர் அந்த பெட்டி ரெயிலில் இருந்து பிரிக்கப்பட்டு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில், இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.






