என் மலர்
உத்தரப் பிரதேசம்
- அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர் மோடி கோவில் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தது முதலே கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தொழில் அதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, நடிகர்கள் அமிதாப்பச்சன், அக்சய் குமார், பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகை கங்கனா ரனாவத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி , பிரபல டி.வி. தொடரான ராமாயணாவில் ராமர் மற்றும் சீதாவாக நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா மற்றும் 3 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் 1990-ல் இருவேறு போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழந்த 50 கர சேவகர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களை அழைத்து வருவது, உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை விஸ்வ இந்து பரிஷத் மேற்கொண்டுள்ளது.
இது தவிர 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய குருமார்கள், மத தலைவர்கள் மற்றும் மிக முக்கிய பிரபலங்கள், எழுத்தாளர்கள், நாட்டின் பல்வேறு துறை நிபுணர்கள், ஓய்வுபெற்ற முக்கிய ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள், இசையமைப்பாளர்கள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கும் கோவில் டிரஸ்ட் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இரு பாறை கற்கள் கொண்டுவரப்பட்டன
- 3 சிலைகளை உருவாக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அயோத்தி:
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான மூலவர் குழந்தை ராமர் சிலை அடுத்தவாரம் தேர்வு செய்யப்படும் என அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று தெரிவித்தனர். இது தொடர்பாக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் இதுகுறித்து கூறுகையில், 'மூலவர் குழந்தை ராமர் சிலை செய்வதற்காக கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இரு பாறை கற்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் இருந்து 3 சிலைகளை உருவாக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. அந்த 3 சிலைகளில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய சிறந்த சிலையை கோவில் அறக்கட்டளை வருகிற 15-ந் தேதி தேர்ந்தெடுக்க உள்ளது' என்றார்.
- இருவரும் வெவ்வேறு மதங்களையும் வெவ்வேறு நாட்டையும் சேர்ந்தவர்கள்
- இரு மத முறைப்படி திருமணங்கள் இரு நாடுகளிலும் நடக்கிறது
உத்தர பிரதேச மாநில ஃபதேஹ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஹர்திக் வர்மா (32).
ஹர்திக், பணியின் காரணமாக நெதர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு தன்னுடன் பணியாற்றும் கேப்ரியலா ட்யூடா (21) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
ஹர்திக் இந்து மதத்தை சேர்ந்தவர்; கேப்ரியலா கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், ஹர்திக் தன்னுடன் கேப்ரியலாவை அழைத்து கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு வந்தார். அங்கு அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், இருவரையும் வரவேற்றனர். கேப்ரியலாவுடன் நெருங்கி பழகிய ஹர்திக்கின் குடும்பத்தினர், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அக்குடும்பத்தினருடன் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் பங்கேற்று மகிழ்ச்சியுடன் தம்பதிகளை வாழ்த்தினர்.
ஃபதேஹ்பூரில் உள்ள பூர்வீக வீட்டிலிருந்து குஜராத் மாநில காந்தி நகருக்கு தம்பதியினர் செல்ல உள்ளனர். அங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதில் கேப்ரியலாவின் தந்தை மேசின் ட்யூடா, தாய் பார்பரா ட்யூடா மற்றும் மணப்பெண்ணின் உறவினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதை தொடர்ந்து ஹர்திக்-கேப்ரியலா தம்பதியினர் நெதர்லாந்து செல்கிறார்கள். அங்கு கிறித்துவ சம்பிரதாய முறைப்படி மீண்டும் அவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துக்களுடன் நாடுகளையும், மதங்களையும் தாண்டி இணைந்த மனங்களை சமூக வலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்.
- விமான நிலையத்தின் முதல் கட்டம் டிசம்பர் 15ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று அறிவிப்பு.
- விமான நிலையம் மர்யதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி நடக்கிறது.
நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனையொட்டி, அயோத்தி விமான நிலையமும் தயார் நிலையில் உள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டம் டிசம்பர் 15ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று அறிவித்துள்ளார்.
இந்த விமான நிலையம் மர்யதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் என்றும் விமான நிலையத்தில் போயிங் 737, ஏர்பஸ் 319 மற்றும் ஏர்பஸ் 320 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் 3 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
- திடீரென அங்குள்ள 2 தண்டவாளத்திலும் எதிரெதிரே 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து கொண்டிருந்தன.
பாரபங்கி:
உத்தரபிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தின் ஜகாங்கிராபாத் ரெயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்தது. இதை சரி செய்யும் பணியில் 3 ஊழியர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள 2 தண்டவாளத்திலும் எதிரெதிரே 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் அவர்களுக்கு தப்பிக்க முடியவில்லை. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 ஊழியர்கள் மீதும் ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த மற்ற இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மற்றொரு ஊழியரும் பலியானார். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா.
- மிக நீளமான தலைமுடிக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை படைத்தார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா (46). சிறுவயது முதலே தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், முடியை பராமரிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார்.
ஸ்மிதாவுக்கு சிறு வயதில் முடியை வெட்டிவிட்டனர். 14 வயதுக்கு பிறகு தனது தலைமுடியை வெட்டுவதை அவர் தவிர்த்தார். இதனால் அவரது முடி தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி மற்றும் 9 அங்குலம் உள்ளது. 236.22 செ.மீ உள்ளது. இதன்மூலம் உலகின் நீளமான தலைமுடியை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்மிதா கூறுகையில், பெண்களுக்கு அழகே நீண்ட தலைமுடிதான். வாரத்திற்கு 2 நாட்கள் தலைமுடியை வாஷ் செய்து வருகிறேன். முடியை வாஷ் செய்தல், உலர்த்துதல், சிக்கல் எடுத்தல் மற்றும் ஸ்டைலாக பின்னுதல் என இந்த நடைமுறையை செய்து முடிக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகிறது என தெரிவித்தார்.
இந்தி நடிகைகளின் முடி அலங்காரத்தால் ஈர்க்கப்பட்டு தலைமுடியை வளர்க்கத் தொடங்கிய ஸ்மிதா, தற்போது நீண்ட தலைமுடிக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
- ராகுல்காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
- அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் மாவட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
சுல்தான்பூர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார்.
அமித்ஷாவை கொலைக் குற்றவாளி என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது உத்தரபிரதேசத்தில் சுல்தான்பூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் விஜய் மிஸ்ரா எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் மாவட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
அதில் ராகுல்காந்தி, வருகிற 16-ந் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் மிஸ்ரா கூறும்போது, "இந்த சம்பவம் நடந்தபோது பா.ஜனதா துணைத்தலைவராக இருந்தேன். பெங்களூருவில் அமித்ஷாவை ஒரு கொலைகாரர் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று முடிவு வந்துள்ளது" என்றார்.
மேலும் விஜய் மிஸ்ராவின் வக்கீல் சந்தோஷ்குமார் பாண்டே கூறும்போது, "ராகுல்காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்" என்றார்.
ஏற்கனவே மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையை சூரத் கோர்ட்டு விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இதில் அவரது தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததையடுத்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- 1984ல் ம.பி. உறுப்பினராக பதிவு செய்து கொண்டார் ப்ரிதிங்கர் திவாகர்
- அதிர்ஷ்டவசமாக எனக்கு சாபமே வரமானது என்றார் திவாகர்
உத்தர பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றம், பிரயாக்ராஜ் (முன்னர் அலகாபாத்) நகரில் உள்ளது.
இங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் ப்ரிதிங்கர் திவாகர் (Pritinker Diwaker).
திவாகர், கடந்த 1984ல் மத்திய பிரதேச பார் கவுன்சில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர். பிறகு 2005 ஜனவரி மாதம் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரானார். கடந்த 2009ல் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 2018 அக்டோபர் மாதம் பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். 2023 அன்று தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 26 அன்று பிரயாக்ராஜ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனமானார்.
பிரயாக்ராஜ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ப்ரிதிங்கர் திவாகரின் பணிக்காலம் முடிவடைந்து அவர் விடைபெற்று செல்வதால், நேற்று அவருக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது:
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம், என்னை துன்புறுத்துவதற்காகவே பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு மாற்றல் வழங்கியது. அது ஒரு கெட்ட நோக்கத்தில் வழங்கப்பட்ட பணி மாறுதல். ஆனால், அதிர்ஷ்டவசமாக, சாபமே வரமானது போல் எனக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பும், சக பணியாளர்களின் ஒத்துழைப்பும், பார் கவுன்சில் உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தது. எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை தற்போதைய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சரி செய்தார். அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் உயர் நீதிமன்ற மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் அமைப்பே முடிவுகளை எடுக்கும் இறுதி அதிகாரம் கொண்டது. இந்த அமைப்பில் முழுவதும் நீதிபதிகளே உள்ளதால், "நீதிபதிகளை நீதிபதிகளே நியமிப்பது" எனும் வழிமுறை சரியல்ல என பலர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பின் நியமன முடிவை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியே விமர்சித்திருப்பதற்கு சட்ட நிபுணர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி சாதனை.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டி குஜராத்தில் நடைபெற்றதாலும், பிரதமர் மோடி நேரில் பார்க்க சென்றதனாலும் இந்திய அணி தோல்வியடைந்ததாக அரசியல் சார்பில் விமர்சனம் வைக்கப்படுகிறது. மேலும், ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்யும்போது மிகவும் ஸ்லோவாக இருந்தது. பின்னர், இரவில் விளையாடும்போது பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது என்ற விமர்சனம் மெல்லமெல்ல எழுந்து வருகிறது.
ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் காந்தி பிரதமர் "PM Means Panauti Modi" எனக் குறிப்பிட்டிருந்தார். "Panauti" என்றால் துரதிருஷ்டம் அல்லது துரதிருஷ்டத்தை வரவழைப்பவர் என்று அர்த்தம். இதற்கு பா.ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர அகிலேஷ் யாதவ் கூறுகையில் "உலகக் கோப்பை இறுதிப் போட்டி குஜராத்தில் நடைபெற்றது. இது லக்னோவில் நடைபெற்றிருந்தால் இந்திய அணிக்கு அதிக அளவில் ஆசீர்வாதம் (blessings) கிடைத்திருக்கும்.
லக்னோவில் போட்டி நடைபெற்றிருந்தால் கடவுள் விஷ்ணு மற்றும் வாஜ்பாய் ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும். தற்போது, ஆடுகளம் குறித்த சில பிரச்சனைகளை கேட்க முடிகிறது" என்றார்.
- மோதலில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, இந்த தகவல் வெளியானது.
திருமண நிகழ்ச்சி, சுபமுகூர்த்த நிகழ்ச்சி என்றால் அங்கு சுவையான உணவு வகைகள் பரிமாறப்படும். உணவு வகைகளுடன் இனிப்பு போன்ற பலகாரங்கள் வழங்கப்படும்.
முதல் பந்தியில் அனைத்து வகை பலகாரங்கள் வைக்கப்படும். நேரம் செல்லசெல்ல தட்டுப்பாடு ஏற்பட்டு பந்திக்கு வரும் பலகாரங்கள் குறைந்து போகும். இவ்வாறு வரவில்லை என்றால் அதை பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கே பலகாரம் இல்லையா... பெண் வீட்டாருக்கே இல்லையா... நான் யார் தெரியுமா... என சண்டையை வலுக்கட்டாக இழுக்கும் நபர்களும் உண்டு.
இதேபோன்ற சம்பவம் ஒன்று உத்தர பிரதேச மாநில ஆக்ராவில் நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிறு இரவு ஷாம்சாபாத் பகுதியில் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது ரசகுல்லா தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஒருவர் கூற, அது திருமண நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் தீயாக பரவியது.
எப்படி ரசகுல்லா தட்டுப்பாடு ஏற்படலாம் என வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபிறகு ஒரு வழியாக மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மோதலில் 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சேடகான்-மிடார் சாலையில் இன்று அதிகாலையில் பிக்-அப் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை 8 மணியளவில் வாகனம் பாட்லோட்டில் இருந்து அம்ஜத் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (நைனிடால்) பிரஹலாத் நாராயண் மீனா தெரிவித்தார்.
எதிர்திசையில் வந்த மோட்டார் பைக்கை இடிக்காமல் செல்ல முயன்றபோது வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு தம்பதியும் அவர்களது மகனும் ஆவர்.
விபத்தில் காயமடைந்த இருவர் ஓகல்கண்டாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் இருந்து ஹல்த்வானியில் உள்ள உயர் மருத்துவ வசதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருதாக தகவல் தெரியவந்துள்ளது.
- ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
உத்தரப்பிரதசேம் மாநிலம் எட்டாவா பகுதி அருகே புதுடெல்லி- தார்பாங்க சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 4 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் அவை தீக்காயங்களாக இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக எட்டாவா போலீஸ் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
மேலும் , தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருதாக தகவல் தெரியவந்துள்ளது.
தீ விபத்து குறித்து சஞ்சய் குமார் கூறுகையில், "டெல்லியில் இருந்து பீகார் சென்றுக் கொண்டிருந்த ரெயிலில் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் வழங்கப்படும்" என்றார்.
ஆனால், ஒரு பெட்டியில் மட்டுமே தீப்பிடித்ததாக வட மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறுகையில், "புது டெல்லி- தர்பங்கா சிறப்பு விரைவு வண்டி எண் எஸ்1ல் இருந்து எட்டாவா அருகே சராய் போபட் சந்திப்பில் உள்ள காவலர் புகை வெளியேறுவதைக் கவனித்தார்.
பின்னர், ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது வரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை," என்றார்.






