என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது நிரம்பி இருக்கவேண்டும்.
    • 2 திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

    சென்னை:

    மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு, கலைஞர் கைவினைத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. அந்த திட்டத்தின் சிறப்பம்சங்களையும், அதன் மூலம் பயன் பெறுவதற்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த நிலையில், மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டமும், தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றுதான் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. மேலும் இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய உள்ள விதிகளில் "குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய தொழில் செய்திருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது நிரம்பி இருக்கவேண்டும். அதேவேளையில், விண்ணப்பிக்கும் முன்பே அத்தொழிலில் ஈடுபட்டிருக்கவேண்டும்" என்று உள்ளது. மேலும், அடிப்படை பயிற்சியும், உயர்நிலை பயிற்சியும் வழங்குதல், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குதல், கடன் உதவிகளை வழங்குதல் ஆகியவையே இத்திட்டத்தின் செயல்பாடுகள்.

    இது, தங்கள் குடும்ப தொழிலில் 18 வயதுக்கு முன்பே ஈடுபட தூண்டும் வகையில் உள்ளது. மேலும் மாணவர்களை உயர்கல்வி கற்கும் ஆர்வத்தை குறைத்து குலத்தொழிலில் தள்ளும் என்பதால் இதில் தமிழ்நாடு அரசு இணையவில்லை.

    குலத்தொழில் ஊக்குவிப்பாக இல்லாமல் மாணவர்கள் உயர்கல்வி கனவை சிதைக்காமல் அதேநேரத்தில் இவ்வகை தொழிலில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என 'கலைஞர் கைவினைத் திட்டம்' முழுக்க, முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இதில் இணைவதற்கான வயது குறைந்தபட்ச வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப, வகுப்பு அடிப்படையில் அல்லாமல் 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    எனவே மாணவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், வகுப்பு அடிப்படையில் என சுருங்காமல், தொழிலில் ஈடுபடுவோருக்கு மட்டும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) தமிழ்நாடு அரசு சார்பாக வந்த அறிவிப்பில் விண்ணப்பிக்க தகுதி என்பதில் 35 வயது நிரம்பியவர்களுக்கு என்றும், எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2 திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
    • குன்னூர், கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் திட்டமிருந்தால் 3 நாட்களுக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 14 ஆம் தேதி வரை மழைப்பொழிவு தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மேலும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் புதுவையில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், நன்கு அமைந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்யும். விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் குன்னூர், கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் திட்டமிருந்தால் 3 நாட்களுக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழையும், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 



    • பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    புதிய வண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினேஷன் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மையா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பமேஸ்திரி தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு , ஏஈ கோவில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு , காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராம தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்பிடி குவாட்டர்ஸ்.

    வியாசர்பாடி: இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர் கிராஸ் காந்தி நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, மத்திய குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1வது மெயின் ரோடு 8வது, எம்கேபி நகர் 1வது கிராஸ் தெரு முதல் 6வது குறுக்குத் தெரு, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, ஏ.பி.சி. கல்யாண்புரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, 42வது தெரு, சாமியார்தோட்டம் தெரு 1 முதல் 4, பல்லா தெரு 1 முதல் 4, உதய சூரியன் நகர் அனைத்து பிளாக், எஸ்ஏ காலனி, சர்மா நகர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலவச சலுகை பயணம் பயன் உள்ளதாக இருப்பதாக 90 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.
    • இலவச பயண சலுகையால் மட்டுமே கல்வியை தொடர முடிகிறது என 62 சதவீதம் மாணவர்கள் பதில் அளித்துள்ளனர்.

    நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் குறிப்பிட்ட வகையிலான பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது. அதேபோன்று அனைத்து வகையான பஸ்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த 2 சலுகைகளும் அவசியமா? என்பது குறித்து தணிக்கை துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.

    அந்த ஆய்வின்படி, இலவச சலுகை பயணங்களை பொறுத்தமட்டில் ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இலவச சலுகை பயணம் பயன் உள்ளதாக இருப்பதாக 90 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். கட்டணம் செலுத்தும் பயணிகளை போல் நடத்தப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு 69 சதவீதம் பேர் இல்லை என பதில் அளித்துள்ளனர்.

    இலவச பயண சலுகையால் மட்டுமே கல்வியை தொடர முடிகிறது என 62 சதவீதம் மாணவர்கள் பதில் அளித்துள்ளனர்.

    இலவச பயணத்தால் ஒவ்வொருவரும் மாதம் தோறும் ரூ.637 சேமிக்க முடியும் என மாணவர்கள், பெண்கள் தெரிவித்துள்ளனர்.

    • இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
    • கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதேபோல் சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது.
    • இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

    மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது.

    'நான் முதலமைச்சராக இருக்கும்வரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது' என்று முதலமைச்சர் சட்டசபையில் பேசியிருப்பது மக்கள் மீதான அவரது அக்கறையையும் இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது.

    மக்கள் பிரச்சனையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சர் அவர்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
    • ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று திரண்டு போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பணிநிரந்தரம் கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது வாக்குறுதியளித்த மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.

    பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளோடு நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்த முன்வராததே தற்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று திரண்டு போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

    எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பொய்களை ஆதாரத்துடன் திமுக அரசு தவிபொடியாக்கியது.
    • எடப்பாடி பழனிசாமி கொந்தளித்த குற்றச்சாட்டு அனைத்தும் புஸ்வானமாகி விட்டது என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரைத்த பொய்களையே தொடர்ந்து அரைப்பதாகவும், பொய்களை எத்தனை முறை கூறினாலும் எடுபடாது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது.

    "அறிக்கைகளிலும் எக்ஸ் தளத்திலும் பேட்டிகளிலும் சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கொந்தளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வானமான நிலையில், இப்போது யூடியூப்பிலும் வந்து அதே புலம்பலை, அதே பொய்களைக் கடைப்பரப்ப ஆரம்பித்துவிட்டார்.

    ஃபெஞ்சல் புயல், சாத்தனூர் அணைத் திறப்பு, பாலம் உடைப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சிபிஐ விசாரணை உத்தரவு என அவருடைய சமீபத்திய பொய்களை எல்லாம் உடனுக்குடன் ஆதாரத்துடன் திமுக அரசு தவிடுபொடியாக்கியும்கூட, கொஞ்சமும் கூச்சப்படாமல் அதே பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்."

    வயிற்றெரிச்சலில் கூறிய பொய்களையே திரும்பத் திரும்ப எத்தனை முறை கூறினாலும் எடுபடாது. ஆயிரம் பொய்களைக் கூறினாலும் திராவிட மாடல் நல்லாட்சி மீது சிறு கீறல் கூட விழவைக்க முடியாது."

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • போதைப்பொருள் கடத்திய வழக்கில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.
    • விசாரணையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்ததால் அமலாக்கத்துறை கைது செய்தது.

    சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்ய ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த ஜாமின் மீதான வாதங்கள் நடைபெற்றது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வருகிற 17-ந்தேதி உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் 'சூடோபெட்ரைன்' என்ற போதைப்பொருளை கடத்திய வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணத்தை ஈட்டியதும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமையும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • கோவை ஈஷா மையத்திற்கு ஆன்மீக பயணமாக 120 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் குழு வருகை தந்தது.
    • ஈஷாவில் தியானலிங்கம், லிங்கபைரவி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்தனர்.

    கோவை ஈஷா மையத்திற்கு ஆன்மீக பயணமாக 120 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் குழு வருகை தந்தது. அங்கு எங்களைப் போன்றவர்களாலும் தியானலிங்கத்தை தரிசிக்க முடியுமா என்ற ஏக்கம் தற்போது நிறைவேறியதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். 

    தமிழ்நாடு மாற்றத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் 120 பேர் ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் சிரமங்கள் ஏதும் இல்லாமல் தரிசனம் செய்ய தேவையான சிறப்பு ஏற்பாடுகளை ஈஷா யோக மையம் செய்திருந்தது.


    ஈஷாவில் தியானலிங்கம், லிங்கபைரவி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு இலவச யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டன.

    இது குறித்து தவழும் மாற்றுத்திறனாளி பாஸ்கர் கூறுகையில், "ஈஷா போன்ற பிரபலமான இடங்களுக்கு தவழும் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவது மிகவும் சிரமம் என்றே இதுவரை நினைத்திருந்தேன். பல முறை வெளியில் மட்டுமே நின்று வந்துள்ளேன். நம்மை போன்றவர்களால் தியானலிங்கத்தை பார்க்க முடியாதா என்று கூட பல முறை நினைத்து இருக்கிறேன்.


    ஆனால் நேற்று ஈஷாவில் எங்களை அழைத்துச் சென்ற விதமும், அங்குள்ள ஆன்மீகப் பணியாளர்களின் தூய்மையான அன்பும், மிகவும் சிறப்பானதாக இருந்தது. எந்தவித சிரமமும் இல்லாமல் கோவிலின் அனைத்து இடங்களையும் எங்களுக்கு சுற்றிக்காட்டினர் என அவர் கூறினார்.

    பார்வை மாற்றுத்திறனாளியான மணிகண்டன் கூறுகையில், "ஈஷா சென்று வந்த பயணம் மனத்திற்கு மிகவும் நிறைவானதாக இருந்தது. நாங்கள் கேட்ட வசதிகள் அனைத்தையும் ஈஷாவில் முழுமையாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. ஈஷா தன்னார்வலர்கள் எங்கள் மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை மிகவும் சிறப்பாக வழி நடத்தினார்கள்.

    அவர்கள் அனைவருக்கும் கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றத்தினாளிகள் நலச்சங்கத்தின் சார்பிலும் எல்லோரது சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என அவர் கூறினார்.

    • தமிழகத்தை காட்டிக் கொடுத்து விட்டேன் என்பது போன்று முதல்வர் ஸ்டாலின் பேசுவது அழகல்ல.
    • கனிம வள சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் ஒப்புதல் பெறப்படும் என்ற பிறகே ஆதரிக்கப்பட்டது.

    மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், "நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை" என தம்பிதுரை மழுப்பி இருக்கிறார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் தம்பித்துரை கூறுகையில் "தமிழகத்தை காட்டிக் கொடுத்து விட்டேன் என்பது போன்று முதல்வர் ஸ்டாலின் பேசுவது அழகல்ல. கனிம வள சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் ஒப்புதல் பெறப்படும் என்ற பிறகே ஆதரிக்கப்பட்டது" என்றார்.

    டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு பாராளுமன்ற ஆவணங்களே சாட்சி என்றும், முழு பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க முடியாது எனவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.

    மேலும் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், "நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை" என தம்பிதுரை மழுப்பி இருக்கிறார்.

    அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத்திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது.

    டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார்.

    அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.

    அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது.

    தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை?

    மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா?

    இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?

    கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும்- புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்திருந்தார்.

    • அ.தி.மு.க.-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என மனு.
    • மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

    நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடியும் வரை அ.தி.மு.க.-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    வரும் 19-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கவும், 23-ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகவும் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் வழக்கு தொடர்ந்து சூர்யமூர்த்தி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.

    ×