என் மலர்
புதுச்சேரி
- மின் ஊழியர்களுக்கு கவர்னரும், மின்துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
- கைது செய்யப்பட்ட மின் ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டவாறு பஸ்களில் சென்றனர்.
புதுச்சேரி:
மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து மின் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் மின் தடை ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். புதுவை முழுவதும் இருளில் மூழ்கியதால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், கிழக்கு கடற்கரை சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மின் ஊழியர்களுக்கு கவர்னரும், மின்துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என கூறியிருந்தனர்.
மேலும் பாதுகாப்பு பணிக்காக ஆவடியில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (துணை ராணுவம்) வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் அடையாள அணிவகுப்பு நடத்தினர். மேலும் துணை மின்நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று இரவு புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் துணை ராணுவம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். வளாகத்தினுள் அமர்ந்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்களுக்கு போலீசார் 2 முறை எச்சரிக்கை விடுத்தனர்.
அரசுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி போலீசாரால் தேடப்படும் மின் துறை ஊழியர்கள் தலைமறைவாக இருக்க உடந்தையாக இருப்பது சட்டவிரோதமானது. ஆகையால் போலீசாரால் தேடப்படும் நபர்கள் இருந்தால் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். வேலை நேரத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்.
இப்போது உடனே கலைந்து செல்லுமாறும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்து 5 நிமிடம் அவகாசம் வழங்கினர்.
அதன் பிறகும் அவர்கள் கலைந்து போகாததால் நள்ளிரவு 11 மணி அளவில் 300-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை 5 பஸ்களில் எற்றி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்ட மின் ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டவாறு பஸ்களில் சென்றனர்.
இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சி.பி.டி.யு. புதுவை மின்துறை ஊழியர் சங்க தலைவர் முருகசாமி செயற்குழு உறுப்பினர் நடராஜ் ஆகிய 2 நிர்வாகிகளை புதுவை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- அரசின் நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் புதுவையில் மின் தடை தொடர்கதையாக இருந்து வருகிறது.
புதுவையில் நகர் மற்றும் கிராமப் புறங்களின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு வரை மின்சாரம் தடைபட்டதால் மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதை கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின்வினியோகம் சீரமைக்கப்பட்டது.
5-வதுநாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் அந்தந்த பகுதியில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து மின்துறை ஊழியர்களால் மின்வெட்டு ஏற்படுமானால் மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ் நடவடிக்கை பாயும் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.
- பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
வழக்கமாக அணியும் காக்கி டவுசருக்கு பதில் அவர்கள் காக்கி பேன்ட் அணிந்திருந்தனர். பிற்பகல் தொடங்கிய இந்த பேரணி, காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன்வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக சிங்காரவேலர் சிலையருகே நிறைவு பெற்றது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் மதிப்பில் நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
- இதுவரை புதுச்சேரி அரசு முறையான விளக்கம் அளிக்கவில்லை.
புதுச்சேரி:
புதுச்சேரி மதுபான தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டை மறைக்கவே மின்துறை தனியார் மயம் என்ற அறிவிப்பை கொள்கை முடிவாக அரசு அறிவித்துள்ளது என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மற்றும் கிளிஞ்சல் மேடு பகுதிகளில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை அமைப்பதற்காக, மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் மதிப்பில் நேற்று பூமி பூஜை நடைபெற்றது.இதில் பங்கறே்ற வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது- புதுச்சேரி மாநிலத்தில் மின் துறை லாப நோக்கில் இயங்கி வருகிறது. அதனை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் இப்போது என்ன அவசரம்?. மின்துறை சொத்துக்களை விற்பது வேறு, ஆனால் அதன் ஊழியர்களை விற்பது எந்த வகையில் நியாயம்?. மின்துறையை தனியார் மயமாக்குவதால் பொதுமக்களுக்கு என்ன லாபம்? என்பது குறித்து அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
அதே போல் தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில், ஈடுபட்டு வரும் ஊழியர்களை கவர்னரோ, முதல மைச்சரோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ இதுவரை அழைத்துப் பேசாமல் மௌனம் காப்பது ஏன்?. மின் துறையை தனியார் மாயமாக்கினால் அதன் ஊழியர்களின் எதிர்காலம் என்ன என்பதுதான் கேள்வி. அதற்கு இதுவரை புதுச்சேரி அரசு முறையான விளக்கம் அளிக்கவில்லை. புதுச்சேரி மின்துறையை தனியாரிடம் கொடுத்து விட்டு அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது தான் அரசின் நோக்கம். இன்னும் சொல்லப்போனால், புதுச்சேரியில் செய ல்படக்கூடிய மதுபான தொழிற்சாலைகளை மீது ஏற்பட்ட குற்றச்சாட்டை மறைப்பதற்காகவே பாஜக - என்.ஆர் காங்கிரஸ் அரசு மின்சாரத்துறை தனியார் மயம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனை பொது மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர். ஆனால் கவர்னரும், முதல மைச்சரும் மின்துறை தனியார்மயம் ஆக்கினால் ஊழியர்களும், பொதுமக்களும் பாதிக்க பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும், இது அரசின் கொள்கை முடிவு என அறிவித்திருக்கிறார்கள். அப்படி என்ன ஒரு கொள்கை முடிவு என்பதை இருவரும் விளக்க வேண்டும். என்றார்.
- தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
- தி.மு.க. மற்றும் கூட்டணிகட்சியினர் அண்ணாசிலை முதல் காமராஜர் சிலை வரை கைகோர்த்து நின்றனர்.
புதுச்சேரி:
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கூட்டம் முதலியார் பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காந்தி பிறந்த நாளான இன்று சமூக நல்லினக்கத்தை வலியுறுத்தியும் மத வெறிக்கு எதிராகவும் புதுவை அண்ணாசிலை முதல் காமராஜர் சிலை வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. மற்றும் கூட்டணிகட்சியினர் அண்ணாசிலை முதல் காமராஜர் சிலை வரை கைகோர்த்து நின்றனர்.
இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., எதிர்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், சம்பத் எம்.எல்.ஏ. காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- புதுவை முழுவதும் உள்ள மின்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மின்துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து கவர்னர் தமிழிசையுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவை மின்துறையை தனியார் மயமாக்க டெண்டர் கோரப்பட்டதை தொடர்ந்து, மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, அங்குள்ள தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை வம்பாகீரப்பாளையம் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு புதுவை முழுவதும் உள்ள மின்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்ததினால் புதுவை நகரம் புறநகர் மற்றும் கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மக்கள் சாலை மறியல், மின்துறை அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றும் கோரிமேடு காலாப்பட்டு, தட்டாஞ்சாவடி, மற்றம் கிராம பகுதிகளில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மின்துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து கவர்னர் தமிழிசையுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
காலை 10.45 மணிக்கு கவர்னர் மாளிகை வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, கவர்னருடன் அங்கு ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் அவுட் சோர்சிங் முறையில் மின்துறை பணியாளர்களை நியமித்தது மற்றும் ஓய்வு பெற்ற மின் ஊழியர்களை பணிக்கு அழைத்தது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், தொடர்ந்து அத்தியாவசிய பணிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்துள்ளனர்.
ஆலோசனையின்போது தலைமை செயலர் ராஜீவ்வர்மா, கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, மின்துறை செயலர் அருண் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களுக்கு எதிராகவும், ஊழியர்களுக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் புதுவையில் இருக்காது. விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து மக்களுக்கு நல்லது என்பதற்காக மட்டுமே தனியார் மயமாக்க ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.
மக்களுக்கான மின்சாரத்தில் தடையை ஏற்படுத்துவது நல்லது அல்ல. குழந்தைகள் படிப்பார்கள். மங்கல நிகழ்வுகள் வீடுகளில் நடைபெறும். சுயநலத்திற்காக மின்தடையை ஏற்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மின்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். சட்டப்பூர்வமாக அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பது குறித்துதான் நாங்கள் விவாதித்தோம்.
மேலும், தற்போதுள்ள காய்ச்சல் சூழ்நிலை, மருத்துவமனைகளை மேம்படுத்துவது, நூலகங்களை பார்வையிட்டது கபற்றியும் உலக தமிழ்மாநாடு குறித்து பேசியுள்ளோம். இதுஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பு. மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை நடத்த கூடாது. மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீது எஸ்மா டெஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டதற்கு அவர் பதில் ஏதும் கூறாமல் சென்றார்.
- காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்காலில் நேற்று இரண்டாம் நாளாக மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்த முடிவை கண்டித்து, காரைக்கால் மாவட்ட மின் துறை ஊழியர்கள், நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களின் போராட்டத்தால் மின் பழுது பார்த்தல், மின் கட்டணம் கட்டுதல், மின் அளவீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு ஏற்படும் பல பகுதிகளில் பொதுமக்கள் 2 நாட்களாக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தத் தொடர் மின்வெட்டை கண்டித்து அம்பகரத்தூர், திருநள்ளார், சேத்தூர், விழுதியூர், நல்லம்பல், திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாம் நாளாக மின் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்ததால் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் தோமாஸ் அருள் வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மின் தடை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காரைக்கால் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.
- தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- புதுவையிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு அதிரடியாக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுவையிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை அரசின் தலைமை செயலர் ராஜூவர்மா நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பு மற்றும் தொடர்புடைய ரீஹேப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு, நேஷனல் உமன்ஸ் பிரண்ட், ஜூனியர்பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேசன் மற்றும் ரீஹேப் பவுண்டேசன் கேரளா ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அமல்படுத்த மாவட்ட கலெக்டர்கள், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின் துறை ஊழியர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
- வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
புதுச்சேரி:
மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்த காரைக்காலில் மின் துறை ஊழியர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்தப்போராட்டத்தால், காரைக்காலின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டு, மின் ஊழியர்கள் அதனை சரி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, காரைக்காலின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். அதேபோல், காரைக்கால் அருகே அம்பகரத்தூரில், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு ஏற்பட்ட மின்தடை பகல் 2.30 மணிவரை சரிசெய்யப்ப டவில்லை யென கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் தண்ணீர் விநியோகமும் தடைபட்டது. வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
தொடர்ந்து, அத்திர மடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் அம்பகரத்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த திருநள்ளாறு போலிசார், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், சம்பவ இடத்திற்குசென்று, மின் ஊழியர்களிடம் பேசுவதாகவும், தண்ணீர் விநியோகத்தை டீசல் மின் மோட்டார் மூலம் சரி செய்வதாக உறுதியளித்ததையடுத்து, பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டு சென்றனர்.
- புதுவை பஸ்நிலையம் முன்பு இந்து முன்னணி, இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டனர்.
- இந்து அமைப்பினர் இந்து சமய பாடல்களை பாடிக்கொண்டே பஸ்நிலையம் முன்புறம் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து, இன்று இந்து முன்னணி, இந்து அமைப்புகள் சார்பில் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
இதையொட்டி புதுவை பஸ்நிலையம் முன்பு இந்து முன்னணி, இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டனர். இந்து முன்னணி அமைப்பாளர் சனில்குமார், பொதுச் செயலாளர் முருகையன், பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு, நிர்வாகிகள் செல்வம், ரவிச்சந்திரன், வெற்றிச்செல்வம், கோவேந்தன்கோபதி மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் திரண்டனர்.
ஆண்களும், பெண்களும் காவி உடை, ருத்திராட்ச மாலை அணிந்துகொண்டு கையில் வேல், சூலம் ஆகியவற்றுடன் வந்திருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, மதம் தொடர்பான கோஷங்களை எழுப்பலாம். ஆனால் மறைந்த தலைவர்களையும், அவர்களின் இயக்கங்களையும் விமர்சித்து கோஷம் எழுப்பக்கூடாது. அதையும் மீறி கோஷம் எழுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதைத்தொடர்ந்து இந்து அமைப்பினர் இந்து சமய பாடல்களை பாடிக்கொண்டே பஸ்நிலையம் முன்புறம் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பெண்களை இழிவாக பேசிய தி.மு.க. எம்.பியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பாளர் சனில்குமார் கூறும்போது, இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டம் முழு வெற்றியை அடைந்துள்ளது. மக்கள், வியாபாரிகள், தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்து, எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எம்.பி. ராசா மீது தி.மு.க. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மக்களை இழிவாக பேசியதற்காக தி.மு.க. பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பந்த் போராட்டத்தை முழு வெற்றி பெறச்செய்த அனைத்து தரப்பினருக்கும் இந்து முன்னணி, இந்து அமைப்புகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மறியல் செய்த இந்து முன்னணி, இந்து அமைப்புகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
- புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
- எம்.ஜி.ஆர். சிலை அருகே பெட்ரோல் பங்க் எதிரே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு தமிழக அரசு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.
புதுச்சேரி:
இந்து மதத்தையும் இந்து பெண்களையும் இழிவுபடுத்தி பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ராசாவுக்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி மற்றும் இந்து சமுதாய அமைப்புகள் சார்பில் இன்று புதுவையில் பந்த் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் இன்று புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. டெம்போக்களும் ஓடவில்லை. தமிழக அரசு பஸ்கள் மட்டுமே காலையில் இயக்கப்பட்டது.
இன்று காலை சுமார் 5 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த தமிழக அரசு பஸ் வந்தது. வில்லியனூர் மேம்பாலம் அருகே மின்துறை அலுவலகம் எதிரே அந்த பஸ்சை வழிமறித்த கும்பல் பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டார்.
மேலும் எம்.ஜி.ஆர். சிலை அருகே பெட்ரோல் பங்க் எதிரே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு தமிழக அரசு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.
பஸ் பாஸ் சாலையின் அருகே மற்றொரு தமிழக அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வில்லியனூர் போலீசார் வந்து பஸ்சின் கண்ணாடியை உடைத்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு பஸ்சை குறி வைத்து அடுத்தடுத்து 3 இடங்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பதட்டத்தை தணிக்க வில்லியனூர் பகுதியில் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- புதுவையிலிருந்து காலையில் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்ட பணிக்கு செல்வோர் அரசு பஸ்களில் சென்றனர்.
- சேதாரப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளிலும் குறைவான தொழிற்சாலைகள் இயங்கின.
புதுச்சேரி:
இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து, இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.
இதன்படி காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் நகர பகுதியில் முக்கிய சாலைகளான மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, நேருவீதி, காமராஜர் வீதி, படேல் சாலை, புஸ்சி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட சாலைகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. சிறிய கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்தது.
புறநகர், கிராமப்புற பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரத்தில் தமிழகம், புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கியது.
புதுவையிலிருந்து காலையில் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்ட பணிக்கு செல்வோர் அரசு பஸ்களில் சென்றனர். சென்னை செல்லும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் இருந்தது. 2 அல்லது 3 பஸ்களில் பயணிகள் நிரம்பிய பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லை வரை கொண்டு சென்று போலீசார் அனுப்பினர்.
இருப்பினும் குறைவான அரசு பஸ்களே இயங்கியது. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்களும், புதுவையிலிருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்களும் குறைவாகவே இயக்கப்பட்டது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் கல்லூரிகள் இயங்கியது. மாணவர்கள் கல்லூரி பஸ்களில் ஏறிச்சென்றனர்.
அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடக்கிறது. இதனால் பெற்றோர்கள் மாணவர்களை இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். சேதாரப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளிலும் குறைவான தொழிற்சாலைகள் இயங்கின. தியேட்டர்களில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கியது.
பெரியமார்க்கெட், சின்ன மார்க்கெட், அரியாங்குப்பம், வில்லியனூர், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
பந்த் போராட்டத்தையொட்டி நகரெங்கும் சாலை சந்திப்புகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களில் நகர பகுதி முழுவதும் போலீசார் வலம் வந்தனர்.






