என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவையில் 24 மணி நேரம் கடைகள் திறக்க அனுமதி- அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
    X

    புதுவையில் 24 மணி நேரம் கடைகள் திறக்க அனுமதி- அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

    • புதுவை மாநிலத்தில் 24 மணி நேரமும் வர்த்தக வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது தவறானது.
    • 24 மணி நேரம் கடை திறப்பு அறிவிப்பின் முழு நோக்கமும் இரவு நேரத்தில் மதுபான கடைகளை திறப்பதே குறிக்கோளாக கொண்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் தொழிலாளர் துறை இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையை ஏற்று 24 மணி நேரம் கடை, நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கி அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பில் 10 பணியாளர்களுக்கும் மேல் வேலை செய்யும் கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்கலாம். பெண்களுக்கு உரிய வசதிகளை செய்து விருப்பமுள்ளவர்கள் பணியாற்றலாம் என்பது உட்பட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது எப்போது முதல் அமலாகிறது என்ற விபரங்கள் குறிப்பிடவில்லை. 24 மணி நேர கடை திறப்பு என்பது மதுபார்களுக்கும், மதுபான விடுதிகளுக்கும் பொருந்துமா? என்பதும் குறிப்பிடவில்லை. கலால்துறை இதற்காக தனியாக கட்டணம் வசூலித்து அனுமதியளிக்குமா? என தெரியவில்லை.

    புதுவையை பொறுத்தவரை விடுதிகளில் சுற்றுலா மதுபான விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வணிக வளாகம், பெரிய நிறுவனங்கள்,ஷோரூம்கள் என அனைத்தையும் திறக்க அனுமதிக்கப்படுமா? இவற்றை அனுமதிக்க தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? காவல்துறையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சட்டம்- ஒழுங்கை சீர்செய்ய முடியவில்லை என புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. இரவு முழுவதும்கடைகளை திற ந்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க போதிய போலீசார் உள்ளார்களா? 15 நாட்களுக்கு ஒரு முறைமின்தடை அறிவிக்கப்பட்டு பகுதி, பகுதியாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இரவு முழுவதும் கடைகளை திறந்தால் மின்பயன்பாடு அதிகரிக்கும். இந்த மின்தேவைக்கு மின்சாரம் அதிகமாக உள்ளதா? என பல கேள்விகள் எழுகிறது. இதனால் 24 மணி நேர கடை திறப்பு சாத்தியமா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    24 மணி நேரம் கடைகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. எந்த கடைகள் திறக்க வேண்டும்? எதை திறக்கக்கூடாது? என பட்டியல் வெளியிடவில்லை. அத்தியாவசியமான தேவை கடைகளை திறப்பதில் ஆட்சேபனை இல்லை. மதுபார்கள், பப் திறப்பதால் புதுவையில் சாராய ஆறுதான் ஓடும். எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல், அறிவித்துள்ளது குளறுபடியை ஏற்படுத்தும். எனவே அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 24 மணி நேரமும் வர்த்தக வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது தவறானது. 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வர்த்தக, வியாபார கடை நிறுவனங்கள், மதுபான ரெஸ்டாரண்டுகள், ஓட்டல்கள், ஸ்பா, மால்கள், மசாஜ் சென்டர்கள், பப் பார்கள் நடைபெறும். இது சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதா? முதலில் இரவு நேரம் இதுபோன்ற கடைகள் திறப்பதற்கு சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் அனுமதி கேட்கப்பட்டதா? இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட நம்மிடம் அதிகப்படியான காவலர்கள் உள்ளனரா? இப்போது உள்ள நிலையில் பணி சுமையோடு பணிபுரியும் காவல் துறையினரால், புதுவையில் வெளிமாநிலத்தவர்களின் சந்தோஷத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டத்திற்காக துன்பத்திற்கு ஆளாக்கப்பட வேண்டுமா?

    இரவு முழுவதும் கடைகள் திறந்திருந்தால் துப்புரவு பணி எவ்வாறு செயல்படுத்த முடியும். இரவு முழு நேர இந்த உத்தரவால் நிச்சயம் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். யார் யாரையோ திருப்திபடுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எதிர்கால இளைஞர்களின் ஒரு தலைமுறையை நாம் வீணடிப்பதை போன்று அமைந்துவிடும்.

    எனவே முழு இரவு நேர கடைகள் திறப்பு சம்பந்தமாக தொழில்துறையின் இந்த உத்தரவை முதல்-அமைச்சர் மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    24 மணி நேரம் கடை திறப்பு அறிவிப்பின் முழு நோக்கமும் இரவு நேரத்தில் மதுபான கடைகளை திறப்பதே குறிக்கோளாக கொண்டது. அரசியல் ஆதாயத்திற்காகவும், சாராய வியாபாரிகளை திருப்திப்படுத்த சுயநல லாப நோக்கோடும்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    24 மணி நேரமும் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டால் சட்டம்-ஒழுங்குதான் சீர்கெடும். ஏற்கனவே ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் போலீசார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அப்படியிருக்க, 24 மணி நேரமும் பாதுகாப்பு, போக்குவரத்து பணியில் யார் ஈடுபடுவார்?

    இதனால், போதைப்பொருள் நடமாட்டம், விபசாரம், பாலியல் வன்கொடுமைகள், அண்டைமாநில சமூகவிரோதிகளின் கூடாரமாக புதுவை மாறும். அரசின் இந்த அறிவிப்பால் இளைஞர்கள் உழைப்பு மேலும் சுரண்டப்படும். மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கிய அரசு, அந்த மது வகைகளை விற்பனை செய்ய இந்ததிட்டத்தை நயவஞ்சகமாக வகுத்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×