என் மலர்
புதுச்சேரி
- நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த 12 மணி நேர வேலை மசோதா உதவி புரியும்.
- பணி புரியும் நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கிறதே தவிர ஊழியர்களின் ஒட்டுமொத்த பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை.
புதுச்சேரி:
12 மணி நேர வேலை மசோதாவை தொழிலாளர்கள் ஒப்புதலுடன் மாற்றம் செய்ய வேண்டும் என்று புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
12 மணி நேர வேலைத்திட்டத்திற்கு ஆதரவான என்னுடைய கருத்து தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. தொழிலாளர் நலனையும் தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே நான் இந்த மசோதாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறேன்.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த 12 மணி நேர வேலை மசோதா உதவி புரியும். 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு விட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
தொழிலாளர்களின் ஒப்புதலோடு இதுபோன்ற மாற்றங்களை படிப்படியாக கொண்டு வர வேண்டும். அதையும் தாண்டி மாற்றுக் கருத்து இருந்தால் அவற்றை ஆராய்ந்து அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசுகள் நடந்து கொள்ள வேண்டும்.
பணி புரியும் நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கிறதே தவிர ஊழியர்களின் ஒட்டுமொத்த பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை. 6 நாட்களில் 8 மணி நேர பணியில் மொத்தம் 48 மணி நேரம் உழைக்கும் தொழிலாளர்கள் 12 மணி நேர வேலையில் அதனை 4 நாட்களில் செய்து முடிக்கலாம்.
மீதமுள்ள 3 நாட்கள் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு, உறவுகளோடு ஓய்வெடுத்து உளவியல் ரீதியாக புதுதெம்பு பெற்று அடுத்தகட்ட பணியில் ஈடுபட முடியும்.
ஆக்கபூர்வமான பல செயல்பாடுகளில், பணிகளில் ஈடுபடுவதற்கு இது உதவியாக இருக்கும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களின் மூலமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எந்தவிதமான சலுகைகளும் பறிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ மாட்டாது என்பதை உணர்ந்தே என்னுடைய கருத்துகளை பொதுவெளியில் முன்வைக்கிறேன்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
- புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர்.
புதுச்சேரி:
ஐ.பி.எல் நிர்வாகம் பேன் பார்க் ஒன்றை அமைத்து கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க நாடு முழுவதும் 45 நகரங்களில் பிரம்மாண்ட திரைகள் மூலம் போட்டிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது.
புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சென்னை அணி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மைதானம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பியது. இதனையடுத்து இரவு 8 மணிக்கு நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் அங்கேயே நின்று கூச்சல் போட்டனர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.
- அரசியல்கட்சிகள் தங்கள் நிர்வாகிகளை தக்க வைப்பதிலும் பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. புதுவையில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பணிகளை தொடங்கியுள்ளன.
புதுவை மக்களிடம் செல்வாக்கை பெற மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், சத்தியாகிரகம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகளை இழுக்கும் வேலையும் நடந்து வருகிறது.
கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற தி.மு.க. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பிரமுகர்கள், அனுதாபிகளை தங்கள் பக்கம் இழுத்துள்ளனர்.
- மருத்துவ பேராசிரியர் அமெரிக்க பெண்ணுக்கு 8 முறை மொத்தம் ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்.
- மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் டாக்டர். தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு, அவரது பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். புதுவையில் உள்ள ஒரு தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை அங்கிருந்து எடுத்து சமூக வலைதள மோசடிக்காரர்கள், மருத்துவ பேராசிரியரை ஒரு பெண் மூலம் தொடர்பு கொண்டனர்.
தொடர்பு கொண்ட பெண் தான் சிரியாவில் இருப்பதாகவும் இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி அவருடைய அனைத்து விவரங்களையும் அனுப்பியுள்ளார். அந்த பெண் தான் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் சிரியாவில் நடந்த நிலநடுக்கத்திற்காக தன்னார்வலராக வேலை செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.
இங்கு வந்த பிறகு அமெரிக்கர் என்பதால் தன்னுடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.
அவருடைய கணக்குகள் முடக்கப்பட்ட விவரங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கான லொகேஷன், அவர் பணிபுரிகின்ற மருத்துவமனை போன்றவற்றை அனுப்பியுள்ளார். நீங்கள் உதவி செய்தால் மட்டுமே நான் இங்கிருந்து வெளியேற முடியும்.
வரி, சுங்கக்கட்டணம், டாக்குமெண்டேஷன் இன்னும் சில தேவைகள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய மருத்துவ பேராசிரியர் அவருக்கு 8 முறை மொத்தம் ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்.
ரூ.35 லட்சம் பணத்தை பெற்ற பிறகு, அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை டாக்டர் உணர்ந்தார். இதுகுறித்து அவர், இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் (சைபர் கிரைம்) புகார் அளித்தார்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.
புதுச்சேரி:
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், 2சனிக்கிழமைகளில் புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில், சிறப்பு மருத்துவ நிபுணர்களின் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், நரம்பியல் மற்றும் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலிருந்து சிறப்பு டாக்டர்கள் குழு காரைக்கால் வருகை தந்து , பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். காலை 9மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு முகாம் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.
- பிள்ளைத்தெருவாசல் சாலை அருகே தனது ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டார்.
- பல இடங்களில் கடந்த சில நாட்களாக தேடியும் கிடைக்காததால் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் பச்சூரைச்சேர்ந்தவர் தியாகு. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்துவரும் இவர், கடந்த 12-ந் தேதி, பிள்ளைத்தெருவாசல் சாலை அருகே தனது ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டார். சிறிது நேரம் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிள் இல்லை. பல இடங்களில் கடந்த சில நாட்களாக தேடியும் கிடைக்காததால் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடிசென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.
- காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை, காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர்.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.
புதுச்சேரி:
காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை, காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். காரைக்கால் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்க, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், அந்தந்த போலீஸ் நிலைய போலீசார், தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு ஒரு சிலரை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், காரைக்கால் சமத்துவபுரம் பகுதியில், இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சமத்துவபுரம் பகுதிக்கு சென்றபோது, போலீசாரை பார்த்ததும், இளைஞர்கள் தப்பியோடினர். தொ டர்ந்து, அங்குள்ளோரிடம் விசாரணை நடத்தி தப்பிசென்ற தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவைச்சேர்ந்த ரவிராஜ்(வயது19), வில்பர்ராஜ்(23), ரஞ்சித்(23) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருது, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில், கூலி அதே இடத்தில் தலை நசுங்கி பலியானார்.
- மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதே இடத்தில் அவர் பஸ்சின் இடதுபுற பின்புற சக்கரத்தில் தலை நசுங்கி பலியானார்.
புதுச்சேரி:
காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில், மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில், கூலி அதே இடத்தில் தலை நசுங்கி பலியானார். காரைக்காலை அடுத்த நிரவி கீழமனை கிராமத்தைச்சேர்ந்தவர் தண்டாயுதபாணி(வயது36). இவர் கட்டிடவேலையில் சித்தாளாக வேலை செய்து வந்தார். இவருக்கு சந்தனமேரி என்ற மனைவியும், தஷ்வந்த் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். தண்டாயுதபாணி நேற்று முன்தினம் வழக்கம் போல், நிரவி அம்மாள் சத்திரம் அருகே கட்டும் கட்டிடத்தில் வேலை செய்துவிட்டு, சம்பளம் வாங்குவதற்காக, காரைக்காலுக்கு மோட்டார் சைக்கிளில் இரவு 8 மணி வந்தார்.காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில், அம்பாள் சத்திரம் தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது, இவருக்கு பின்னால், அதிவேகமாக வந்த தனியார் பஸ் தண்டாயுதபாணி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதே இடத்தில் அவர் பஸ்சின் இடதுபுற பின்புற சக்கரத்தில் தலை நசுங்கி பலியானார்.
இது குறித்து, தண்டாயுதபாணியின் மனைவி சந்தனமேரி, திருபட்டினம் போக்குவரத்து போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில், பஸ் டிரைவர் நாகை மாவட்டம் நாகூரைச்சேர்ந்த ஷேக்தாவூது(44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- "சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
- ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் போற்றப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஊக்குவித்ததிலும், ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக அவர் போற்றப்பட்டார்.
அவரது பெருமைகளை இன்றைய நாளில் நாம் நினைவு கூருவோம். அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது
- போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. தலைமறைவுஇதுகுறித்து சிறுமியின் தந்தை நெருங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அன்புசெல்வனை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 13-ந்தேதி அன்புசெல்வன் வீட்டில் பதுங்கி இருப்பதாக நெடுங்காடு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆபத்தானநிலையில் இருந்த அன்பு செல்வனை போலீசார் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 4 நாட்கள் சிகிச்சையில் இருந்த அன்பு செல்வன் உடல்நிலை சரியானதை அடுத்து போலீசார் போக்சோ வழக்கில் அன்புசெல்வனை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.
- விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32). இவருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவர் மற்றொருவரின் மனைவி சங்கீதா(24)வை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
பழங்குடி நாடோடிகளான குமரேசன் தம்பதி சமீபத்தில் புதுவையை அடுத்த கிருமாம்பாக்கம் புதுக்குப்பத்துக்கு வந்தனர். புதுக்குப்பம் குளக்கரையில் இவர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவுக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் இரவு குழந்தையோடு சங்கீதா அங்கு படுத்திருந்தார். நேற்று காலை கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதையடுத்து அப்பகுதி முழுவதும் குழந்தையை தேடினர்.
அப்போது புதுக்குப்பம் சுடுகாடு அருகே கடற்கரையில் பெண் சிசு புதைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு வந்த விசாரித்தபோது, அது சங்கீதாவின் குழந்தை என தெரியவந்தது. குழந்தையை கண்டு சங்கீதா, குமரேசன் கதறி அழுதனர். அப்பகுதியை சேர்ந்த மர்ம ஆசாமிகள் குழந்தையை தூக்கி சென்றிருக்கலாம் என போலீசில் தெரிவித்தனர்.
சங்கீதாவின் பேச்சில் சந்தேகமடைந்த போலீசார் அவரை தனியே அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சங்கீதாவை கைது செய்தனர்.
இதுகுறித்து சங்கீதா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
குழந்தை பிறந்த பிறகு என் கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு, அடித்து துன்புறுத்தினார். குழந்தை எனக்கு பிறந்ததா? எனக்கேட்டு தகராறு செய்தார். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தால் பிறந்ததால் வளர்ப்பதற்கு சிரமப்பட்டேன். கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.
நேற்று அதிகாலை எல்லோரும் அசந்து தூங்கும்நேரத்தில் குழந்தையை புதுக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுசென்றேன். அங்கு மணலில் குழந்தை தலையை அழுத்தி கொலை செய்து புதைத்துவிட்டு வந்துவிட்டேன். காலையில் ஒன்றும் தெரியாதது போல இருந்தேன். போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என குமரேசன் தெரிவித்துள்ளார்.
- பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது32). நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர் சென்னை, புதுவை பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்தார்.
இவருக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே மற்றொருவரின் மனைவியான சங்கீதாவை 2-வதாக திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா கர்ப்பமானார்.
இந்நிலையில் குமரேசன் சங்கீதாவை அழைத்துக்கொண்டு புதுவை கிருமாம்பாக்கத்துக்கு வந்தனர். அங்குள்ள சமுதாய கூடம் அருகே உள்ள காலி இடத்தில் வசித்தனர்.
பின்னர் புதுக்குப்பம் குளக்கரை அருகே தங்கியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
நேற்று இரவு குளக்கரையில் குமரேசன், சங்கீதா இருவரும் குழந்தையை அருகில் படுக்க வைத்துவிட்டு தூங்கினர். இன்று காலை கண்விழித்த போது குழந்தையை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பகுதியில் குழந்தையை தேடினர்.
இதற்கிடையே புதுக்குப்பம் கடற்கரையில் இன்று காலை ஒரு குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது.
அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன், ஏட்டு பிரீமியர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த குமரேசன் சங்கீதா தம்பதியினர் அங்கு வந்தனர். அப்போது மணலில் புதைக்கப்பட்டு இருந்தது அவர்களது குழந்தைதான் என்பது தெரியவந்தது. அவர்கள் அழுது துடித்தனர். போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
நேற்று இரவு குழந்தை அழுததால் குமரேசன் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்தார். குழந்தையோடு, தானும் தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என குமரேசன் தெரிவித்துள்ளார்.
பச்சிளம் குழந்தையை கடற்கரை மணலில் உயிரோடு புதைத்து கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் குமரேசன், சங்கீதா தம்பதியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






