என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அஸ்வின் தனது நண்பர்கள் 6 பேருடன் புதுவையை சுற்றி பார்க்க வந்தார்.
    • 6 பேர் மீட்கப்பட்ட நிலையில் அஸ்வின் மட்டும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டார்.

    பாகூர்:

    சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மகன் அஸ்வின் (வயது 18). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு கல்லூரியில் சேர தயாராகி இருந்தார்.

    இந்த நிலையில் அஸ்வின் தனது நண்பர்கள் 6 பேருடன் புதுவையை சுற்றி பார்க்க வந்தார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர்கள் புதுவை நகரப் பகுதியை சுற்றிப்பார்த்து சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு இன்று காலை வாடகை சைக்கிளில் வந்தனர். அவர்கள் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 7 பேரும் சிக்கிக் கொண்டனர்.

    இதில் 6 பேர் மீண்ட நிலையில் அஸ்வின் மட்டும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டார். அவரை அப்பகுதி மீனவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அஸ்வினை பிணமாகவே மீட்க முடிந்தது.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக சகாய டோனிவளவன் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
    • மாணவியின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை 100 அடி சாலை அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக கண்டமங்கலம் இந்திரா நகரை சேர்ந்த சகாய டோனிவளவன் என்பவர் பணிபுரிகிறார். இவர் இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் டோனி வளவன் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தார். மேலும் அந்த மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த மாணவி எந்த பதிலும் அளிக்காத போதிலும் டோனிவளவன் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்த தகவல் கிடைத்ததும் சமூக அமைப்பினர் பள்ளி தாளாளரிடம் முறையிட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ராஜேந்திரனிடம் விற்றனர்.
    • நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை நேருவில்லா நகர் புனித மேரி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது43). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினரான லாஸ்பேட்டை சாந்தி நகர் தி.ரு.வி.க. தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ஆரோக்கியராஜ் மற்றும் அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, குமரன், சீதாராமன் உள்பட 12 பேர் மகாபலிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சீதாராமன் கொரோனா தொற்றால் சமீபத்தில் இறந்துபோன நிலையில் ஆரோக்கியராஜ் மற்றும் குமரனை சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இதில் தொடர்புடையவர்களில் ஒருவரான கடலூர் தீதாம்பாளையம் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த தனியார் என்ஜீனியரிங் கல்லூரி பேராசிரியரான அபிலாஷ் ராஜீவ் தரணை அதிரடியாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கடலூர் சில்வர் பீச்சில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • புதுச்சேரியில் தணிக்கைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    • கணக்குகளை முறையாக பராமரிப்பது அவசியமானது.

    புதுச்சேரி அரசின் அலுவலக தலைமை அதிகாரிகள் மற்றும் நிதி கையாளும் அதிகாரிகளுக்கான கணக்குத் தணிக்கை நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

    பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆடிடோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கணக்குகளை முறையாக பராமரிப்பதன் மூலம் தேவையற்ற செலவுகளை குறைக்க முடியும் என்று தெரிவித்தார்.

    முறையாக பராமரிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், வீட்டுச்செலவு கணக்குகளையும் பராமரிக்க வேண்டுமென்று கூறினார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தணிக்கைத் துறை பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டமன்ற பேரவைத் தலைவர் செல்வம், பொது கணக்குக் குழுத் தலைவர்கே.எஸ்.பி.ரமேஷ், தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • என் தாய் மண் நிகழ்வுகளில் பங்கு பெறுவது என் தமிழ் மக்களுக்கு நான் செய்யும் கடமை.
    • பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்தோம்,இதுதான் புதுச்சேரி மாடல்.

    தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    தமிழக மக்கள் பயன்பெறும் கருத்துகள் கூறியதற்கு விமர்சனம் செய்த முரசொலி பத்திரிக்கைக்கு எனது பதில் தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, உயிரிலும் இருக்கிறது. தமிழகத்தின் மகளான நான் மூக்கையும், வாலையும் தமிழகத்தில் நுழைய நீட்ட வேண்டியதில்லை.

    என் உடல், உயிர் அனைத்தும் தமிழ் மண்ணிற்கும், தமிழ் மக்களுக்கும் சொந்தமானது. அந்த வகையில் தமிழச்சியான எனக்கு எந்தவொரு கருத்தையும் கூறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு.

    அதுவும் புதுச்சேரியில் பள்ளி கல்வி திட்டமும், தேர்வும் தமிழகத்தை சார்ந்து இருப்பதால் புதிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறுவது என்ன தவறு.

    ஆளுநர்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு கூறும் கருத்துக்களை அரசியலாக்குவதுதான் தவறு. மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டிய பட்டமளிப்பு விழாக்களை அரசியலாக்குவதுதான் தவறு.

    கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் கடந்த காலங்களில் கருத்தை கருத்தாக எதிர்கொள்ளாமல் அதை மீம்ஸாக எதிர்கொண்டவர்கள் அதை மீண்டும் நினைவுபடுத்தி ரசிப்பது அவர்களுடைய மனநிலையை காட்டுகிறது. மீம்ஸ்களுக்கு அஞ்சுபவர் நான் அல்ல.

    தெருவோர குடிமகனுக்கும் அரசியலமைப்பின்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை சிலர் மொழி வெறி கொண்டு தடுக்கும் போது அதை கண்டிப்பதும், காப்பதும் ஆளுநரின் கடமையே.

    தமிழக்தின் தென்தமிழ் கோடியான நாகர்கோவிலில் பிறந்த நான் தெலங்கானாவிற்கும்,புதுச்சேரிக்கும் ஆளுநராக பொறுப்பு வகித்தாலும் என் தாய் மண்ணில் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வுகளிலும் பங்குபெறுவது என் தமிழ் மக்களுக்கு நான் செய்யும் கடமை. என் தமிழ் மக்கள் பயன்பெரும் வகையில் எந்தவொரு கருத்தையும் கூறுவதற்கு தமிழகத்தின் மகளாக எனக்கு முழு உரிமை உண்டு.

    மும்பை,டெல்லி போன்ற பகுதிகளுக்கு சென்று பணி புரியும் தமிழக மக்கள் தனது சொந்த ஊரில் ஏதேனும் திருவிழா என்றால் சொந்த ஊருக்கு வருவதைப் போன்று என் சொந்த ஊருக்கு வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் என்ன தவறு?

    நான் ஆளுநராக இருக்கும் தெலங்கானாவில் இயங்கிவரும் நவோதயா பள்ளிகளின் பிரமாண்டமான செயல்பாடுகள் கண்டு என் தாய் தமிழகத்திலும் இல்லையே என்று வருந்துவதற்கு காரணம் அங்கே நவோதயா பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஆண்டுக்கு 60 முதல் 80 மாணவர்கள் வரை நீட் தேர்வு மூலமாக மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கிறது.

    மற்றும் பிற உயர்கல்வி தேர்வுகளிலும் வெற்றி பெறுகின்றனர். சாதாரண ஆட்டோ ஓட்டும் தொழிலாளிகளின் பிள்ளைகளும் ,ஏழை விவசாயிகளின் பிள்ளைகளும் நவோதயா பள்ளியில் படிப்பதால் நீட் தேர்வின் மூலம் மருத்துவராக வாய்ப்பு கிடைக்கிறது.

    ஏழை,எளிய மாணவர்கள் கல்வி கற்க குறைவான கட்டணத்தில் உயரிய கல்வி பெற சேவை புரியும் நவோதயா பள்ளிகள் என் தாய் தமிழகத்தில் இல்லையே என்று ஏங்குவதில் என்ன தவறு?

    இதே நவோதயா பள்ளிகள் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் சிறப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கே பொருளாதாரத்தில் பின்தங்கிய பல குழந்தைகள் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறுவதை நான் நேரில் பார்த்து வருகிறேன்.

    இங்கே நுழைவுத்தேர்வு வேண்டாம் என்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் நுழைவுத் தேர்வுகள் உண்டு.ஏன் இங்கேயும் எல்கேஜி வகுப்பில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோருக்கு நுழைவுத்தேர்வு வைக்கும் நிலை வந்து விட்டது.நுழைவு தேர்வே வேண்டாம் என்பதே சமூக நீதியா என்பது தெரியவில்லை .

    உதாரணமாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் பயிற்சி மேற்கொண்டு தயார் செய்துகொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு நான் தயார் செய்துகொள்ளவில்லை என்று ஒலிம்பிக் போட்டியே வேண்டாம் என்பது என்ன நியாயம்?

    இங்கே தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது கண் கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி. ஏழைக்குழந்தைகளுக்கு சமச்சீர் கல்வி பணக்காரக்குழந்தைகளுக்கு உயர்தர கல்வி.

    சமச்சீர் கல்வி பயிலும் குழந்தைகள் உயர்தர கல்வி பெற வேண்டும் என்பதே சரி. புதிய கல்விக்கொள்கை தற்போது எல்லோருக்கும் சமமாக இல்லாத கல்வியை தாய்மொழி கல்வியை முன்னிறுத்தி சமப்படுத்தும் என்பதே உண்மை நிலை.

    தமிழக அரசியல்வாதிகளின் குழந்தைகள் எத்தனை பேர் சமச்சீர் கல்வி கற்கிறார்கள் என்பதை பட்டியலிடுங்களேன் பார்க்கலாம். உங்கள் வீட்டு குழந்தைகள் படிக்க கூடாத கல்வியை ஏழை,எளிய வீட்டு குழந்தைகளுக்கு படிக்க வேண்டும் என்று திணிக்கிறீர்கள். நீங்களே விரும்பாத கல்வியைத்தான் ஏழை, எளிய மக்கள் மீது திணிக்கிறீர்கள்.

    உங்கள் வீட்டு பிள்ளைகள் உயர்தர கல்வி பயில்வதைப் போலவே ஏழை,எளிய வீட்டு குழந்தைகளும் குறைந்த செலவில் உயர்தர கல்வி கற்க கொண்டு வந்ததுதான் நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகள்.

    புதிய கல்விக்கொள்கை மூலம் அனைவரும் ஏற்றம் பெறுவது உறுதி. ஏழை ,எளிய மாணவர்கள் பயன் பெறக் கூடாது என்பதற்காகவே நீங்கள் இந்தி திணிப்பு என்று மக்களை ஏமாற்றுகின்றீர்கள். இந்தி மொழி எதிர்ப்பை கூறியே நீங்கள் தமிழை வளர்ப்பதாக சொல்லி இன்னும் எவ்வளவு காலம்தான் மக்களை ஏமாற்ற முடியும்.

    புதிய கல்விக் கொள்கையிலும் தாய் மொழிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் இருந்தால் வேறு ஒரு மொழியை கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறது. தூங்குபவரை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. அதைப் போல தான் இல்லாத ஒரு இந்தி திணிப்பை கூறுவது.

    ஒரு கதை சொல்வார்கள் அமாவாசை இரவில் கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு இல்லாத கருப்பு பூனையை தேடுவதைப் போல இல்லாத இந்தி திணிப்பை வைத்து மக்களை எவ்வளவு காலம் தான் ஏமாற்ற முடியும்.

    என் வீட்டு குழந்தைகள் எல்லாம் உயர்தர கல்வி படிக்க வேண்டும். ஏழை,எளிய வீட்டு குழந்தைகள் சமச்சீர் கல்விதான் படிக்க வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ?

    சமூகநீதி என்று சொல்லிக்கொண்டு குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின சமுதாயத்தைச் சார்ந்தவருக்கு ஓட்டு போட மறுத்தவர்கள் ஆனால் சமூகநீதி பற்றி பேசும் கண்ணோட்டம் எப்படி என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.

    தமிழிசை என்றும் தமிழிசையாக தான் இருப்பேன். இந்திசையாக மாறமாட்டேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். இந்தி திணிப்பு இந்தி திணிப்பு என்று இல்லாத ஒன்றை மக்கள் மீது கருத்து திணிப்பு செய்ய வேண்டாம்.

    மோடி அரசு என்ன செய்தாலும் அதனுடைய நற்பயன்களும், பலன்களும் மக்களுக்கு வந்து சேர்ந்து விடக் கூடாது, அப்படி நற்பலன்கள் மக்களை சென்று சேர்ந்தாலும் அது மோடியின் பெயரால் வந்து விட கூடாது என்பதற்காகதான் நீங்கள் செய்யும் பல நிகழ்வுகள் காட்டிக் கொண்டு இருக்கிறது.

    ஒரு முதல்வரும் கவர்னரும் ஒரு மித்த குரலில் மக்களுக்கு இணையாக இணைந்து பணியாற்றுவதை கண்டு பொறுக்காத சிலர் கவர்னர் ஆட்சியா சூப்பர் முதல்வரா என்று விமர்சனம் செய்கிறார்கள்.

    வாரிசுகளை முன்னிறுத்தி குடும்ப ஆட்சி நடத்துபவர்கள் எல்லாம் மக்கள் நலனை முன்னிறுத்தி இணக்கமாக நடக்கும் ஆளுநரை புதுச்சேரியில் நடப்பது கவர்னர் ஆட்சி என்றும் சூப்பர் முதல்வர் என்றும் விமர்சிப்பதுதான் ஆச்சரியம்.

    புதுச்சேரியில் சிறப்பான நல்லாட்சி நடைபெற்று "பெஸ்ட் புதுச்சேரி" என்று சொல்வதைப்போல தமிழகத்தின் நுழை வாயிலாக ஒரு சிறந்த நிர்வாகத்தின் ஆட்சியும் நடத்தி தமிழக மக்களை திரும்பி பார்க்க வைப்போம்.

    கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் எல்லா மதத்தினரின் வழிபாட்டு தலங்களை திறந்து வைத்தே கொரோனாவை கட்டுப்படுத்தினோம். பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்தோம் இதுதான் "புதுச்சேரி மாடல்" ...

    இந்த "புதுச்சேரி மாடல்" என்று சொல்வது தான் நீங்கள் சொல்லும் மாடல்களுக்கு எல்லாம் உதாரணமாக வருங்காலத்தில் இருக்கப் போகிறது.

    என்னுடைய கருத்துக்கு ஒரு முழு பக்கம் பதில் எழுதும் போது தெரிகிறது. மக்கள் உண்மையை கண்டு பிடித்து விடுவார்கள் என்பதின் அச்சத்தின் காரணமாக தனி நபர் விமர்சனங்களை வைக்க வேண்டாம். கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள் பதில் சொல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே அதிர்ந்தது.
    • பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்குபாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்தநிலையில் நேற்று இரவு நண்பர் சக்தி (20) என்பவருடன் தனது வீட்டில் பன்னீர்செல்வம் மது குடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இரவு 10.15 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துகொண்டு இருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று ஒரு கும்பல் வந்து இறங்கியது.

    திமுதிமுவென்று அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் வீட்டுக்குள் புகுந்தனர்.

    அவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வமும், சக்தியும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை அந்த கும்பல் வீசியது.

    பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே அதிர்ந்தது.

    வெடிகுண்டுகள் வெடித்த வீட்டிலும், அந்த பகுதியிலும் புகை மண்டலமானது. இதை பயன்படுத்தி தப்பி ஓட விடாமல் பன்னீர்செல்வம், அவரது கூட்டாளி சக்தி ஆகியோரை அந்த கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தள்ளியது.

    இதில் அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

    அதன்பின் பன்னீர்செல்வம், சக்தி ஆகியோரை உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சக்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பன்னீர்செல்வம் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கொட்டும் மழையை பயன்படுத்தி வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி பன்னீர்செல்வத்கதை கொலை செய்த கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    இந்த பயங்கர கொலை சம்பவம் சண்முகாபுரம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, 100 அடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த மாதம் ராகுல்காந்தி எம்.பி.யிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், நீலகங்காதரன், கார்த்திகேயன், பாலன், நிர்வாகிகள் சங்கர், தனுசு, ஆர்.இ.சேகர், ரகுமான், மு.ப.சரவணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொய் வழக்கு போடாதே, பொய் வழக்கு போடாதே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போடாதே, வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு பொய் வழக்கை வாபஸ் வாங்கு, ரத்து செய், ரத்து செய் பொய் வழக்கை ரத்து செய் என கோஷம் எழுப்பினர்.

    ஒரு கட்டத்தில் இந்திராகாந்தி சிலையை சுற்றிலும் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, 100 அடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    • மழை வெள்ளத்தை தடுக்க இளைஞர்கள் மணல் மூட்டைகளை ஆங்காகே வைத்து தடுத்து வருகின்றனர்.
    • போலீசார், தீயணைப்பு துறையினருடன் உள்ளூர் இளைஞர்களும் இணைந்து வீடுகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கோதாவரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    ஏனாமின் 14 மீனவ கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஓரிரு நாட்களில் வடியும் என கருதப்பட்ட வெள்ளம் தொடர்ந்து உயர்ந்து வருவதோடு 6-வது நாளாக நீடித்து வருகிறது. நேற்றும் கோதாவரி ஆற்றிலிருந்து வெளியெறும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது.

    இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள கோனா வெங்கடரத்தினம் நகர், அய்யன் நகர், பாலயோகி நகர், சுபத்ரா நகர், பரம்பெட் உள்ளிட் கிராமங்களை சூழ்ந்துள்ள நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மக்கள் குடிநீர், உணவின்றி தவித்து வருகின்றனர். 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நகர பகுதியிலும் வெள்ள நீர் ஆறாக ஓடுகிறது. அங்குள்ள மண்டல அதிகாரி அலுவலகம், மருத்துவமனை, போலீஸ் நிலையம் என அனைத்தும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    மழை வெள்ளத்தை தடுக்க இளைஞர்கள் மணல் மூட்டைகளை ஆங்காகே வைத்து தடுத்து வருகின்றனர். மேலும் போலீசார், தீயணைப்பு துறையினருடன் உள்ளூர் இளைஞர்களும் இணைந்து வீடுகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.

    அய்யன்னா நகரில் ஒரு வீட்டில் நாய் 7 குட்டிகளை ஈன்று இருந்தது. அவற்றை வெள்ள நீரில் இருந்து காப்பாற்றினால் தான் நாங்கள் வருவோம் என குடும்பத்தினர் கூறினர்.

    அவர்களது கோரிக்கைகளை ஏற்ற இளைஞர்கள் நாய் குட்டிகளை பத்திரமாக ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்து படகில் ஏற்றினார்கள். இதனால் மன நிம்மதி அடைந்த குடும்பத்தினர் படகிற்கு வந்தனர். நள்ளிரவு வரை மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

    ஏனாம் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திராவின் மும்மிடிவரம் காட்டுப்பகுதி உள்ளது. அங்கிருந்து வரும் வெள்ள நீரில் பாம்புகள் அடித்து வரப்படுகிறது. ஏராளமான பாம்புகள் வெள்ள நீரில் வருவதாக மக்கள் பீதியில் உள்ளனர்.

    இதனிடையே வெள்ள மீட்பு, நிவாரண பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் வல்லவன் ஏனாம் சென்றுள்ளார்.

    • 14 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
    • தற்போது பொதுப் பணித்துறையினரின் தொடர் கண்காணிப்பில் ஏனாம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ஒரு பிராந்தியமான ஏனாம் பகுதி கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

    கோதாவரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏனாம் பிராந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனாம் பிராந்தியத்தில் அனைத்து தாழ்வான பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏனாமில் மழை பெய்யாமலேயே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையை மீறி வெள்ளம் ஊருக்குள் நுழைந்துள்ளது.

    அங்கு 14 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். படகுகள் கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்களை போலீசார் படகுகள் மூலம் அனுப்பிவைத்தனர்.

    வெள்ளப்பெருக்கு 4-வது நாளாக குறையாத நிலையில் உள்ளது. இதனால் ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரில் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர்.

    தற்போது பொதுப் பணித்துறையினரின் தொடர் கண்காணிப்பில் ஏனாம் உள்ளது. பாதுகாப்பிற்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தொடர் வெள்ள பெருக்கு காரணமாக ஏனாம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது.
    • என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணியை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று இந்தியா முழுவதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே அரசு மூலம் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டாலும், பிரதமர் அறிவிப்பு மக்களை ஊக்கப்படுத்தி ஊசி போட வரவழைக்கும்.

    பிரதமர் ஊக்கத்தினால் தான் கொரோனாவை எதிர்கொண்டோம். மக்கள் பாதிக்கக்கூடாது என்று ஊக்கப்படுத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு அதிகமாவதால் பூஸ்டர் தடுப்பூசி நம்மை பாதுகாக்கும்.

    புதுவை முழுக்க 75 பள்ளிகளை பார்க்க திட்டமிட்டு ஒவ்வொரு பள்ளியாக செல்கிறேன். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ திறமையாளர்கள் உள்ளனர். அரசு பள்ளியை மேம்படுத்த முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்துள்ளேன். பள்ளிக்கு நேரடியாக செல்வதால் பல விஷயங்கள் தெரிகின்றன.

    புதிதாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தைத்து சீருடை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் வினியோகம் செய்ய ஆரம்பித்துள்ளோம். மாணவர் பஸ் நிதித்துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.

    அரசு பள்ளியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடுநிலை, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அரசு பள்ளியை நோக்கி வர ஆரம்பித்துள்ளது இது மகிழ்ச்சியான விஷயம். அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, தனியார் பள்ளிகளை விட அதிகமாக நல்ல நிலைமைக்கு வர பணிகள் செய்யப்படும்.

    தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.

    கவர்னர்கள் எல்லோரும் வேந்தர்களாக, அந்தந்த கல்வி நிலையங்களை மேம்படுத்த பணியாற்றுகிறார்கள். அரசும், கவர்னரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். வேந்தர்களாக இருப்பதற்கே கவர்னருக்கு உரிமையில்லை என்ற வழிவகை செய்யக்கூடாது.

    கல்வியை மேம்படுத்ததான் கவர்னர்கள் முயற்சி செய்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது. இன்னொரு மாநில கவர்னராக இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் கருத்து கூறுகிறேன்.

    பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து உழைத்து மந்திரியான அவரை அழைத்தது மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதை அரசியலாக்க எடுத்துக்கொள்ளாமல், மத்திய-மாநில அரசை சார்ந்தோர் கவர்னருடன் இணைந்து பட்டமளிப்பு விழாக்களை குழந்தைகளுக்கு வழிகாட்டும் விழாக்களாக கொண்டு செல்லவேண்டும். இதில் அரசியல் ஏதும் இல்லை. அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் உரிமை இருக்கிறது.

    ரெட்டியார்பாளையம் சாலை விபத்தில் குழந்தை இறந்தது வருத்தமளிக்கிறது. மிகுந்த மனவேதனை அடைந்தேன். வாகன நெரிசல் சரிசெய்யப்படும். குழந்தைகளை அழைத்து செல்லும் போது எச்சரிக்கை தேவை.

    சாலையை விரிவுப்படுத்துவதும், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற மக்களும் உதவ வேண்டும். புறவழிச்சாலை பணிகள் தொடர்பாக விசாரிக்கிறேன். தவறுகள் சரி செய்யப்படும். உயிரிழப்புகளை அனுமதிக்க முடியாது. அரசு மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.

    என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன். புதுவை மத்திய பல்கலைக்கழகத்திலும் புதுவை மாணவர் ஒதுக்கீடு தொடர்பாக துணைவேந்தரிடம் விசாரிக்கிறேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு தமிழகத்தில் தருவதைப்போல் புதுவையில் தருவது தொடர்பான கோப்பு நிலுவையில் இருப்பது பற்றி விசாரிக்கிறேன்

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    • சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர்.
    • நாளை (14-ந்தேதி) அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்துவரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா ஊரடங்கு காரணமாக, மாங்கனித்திருவிழா, கைலாசநாதர் கோவில் உள்ளேயே, பக்தர்கள் இன்றி மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 11-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. மாங்கனித்திருவிழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு, காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அம்மையாரின் மாங்கனி அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவிழாவின் மூன்றாம் நாள் முக்கிய நிகழ்சியாக, இன்று (13-ந் தேதி)காலை 7 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு மற்றும் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரியே பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார்.

    அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொறுட்டு வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர். அந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை எடுத்துச் சென்றனர். பவளக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடி யார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை சென்றடைந்தது.

    அதன்பின்னர், பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • 13-ந்தேதி பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
    • 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. முன்னதாக, பரமதத்த செட்டியார் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து நேற்று மாலை மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக புறப்பட்டு இரவு காரைக்கால் அம்மையார் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    முக்கிய நிகழ்ச்சியாக 12-ந்தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர்(சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 13-ந் தேதி பிச்சாண்ட மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அதேசமயம், பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

    அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    விழா ஏற்பாடுகளை, காரைக்கால் கைலாசநாதர் கோவில் அறங்காவல் வாரிய த்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பி-னர் ஜெயபாரதி ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    ×