என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை ஜெயில் கைதிகளுக்கு ஆம்புலன்சில் போதை பொருட்கள் கடத்திய சிறைத்துறை டிரைவர்
- கைதிகளுக்கு உடல்நிலை பாதிப்பு என்றால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
- சிறைக்கு வாகனம் திரும்பியபோது வழக்கம் போல் வாகனத்தை சிறை துறையினர் சோதனை செய்தனர்.
சேதராப்பட்டு:
புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
ஜெயிலில் மருத்துவ மையமும் உள்ளது. ஆனால் கைதிகளுக்கு உடல்நிலை பாதிப்பு என்றால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இதுபோல் கடந்த 23-ந் தேதி கைதி ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவரை சிறை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்சை சிறைத்துறை காவலர் ஜெயக்குமார் ஓட்டிச் சென்றார்.
பின்னர் சிறைக்கு வாகனம் திரும்பியபோது வழக்கம் போல் வாகனத்தை சிறை துறையினர் சோதனை செய்தனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் டிரைவரின் இருக்கையின் கீழ் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்(ஹான்ஸ் பொட்டலங்கள்) இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த போதை பொருட்கள் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கோர்ட்டுக்கு அறிக்கை அளித்தனர். இதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சிறை கைதிகளுக்கு சப்ளை செய்ய ஆம்புலன்சில் போதை பொருள் கடத்திய சிறைத்துறை டிரைவர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறைத்துறை டிரைவர் ஜெயக்குமார் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.






