என் மலர்
புதுச்சேரி
- வடிவேல், ஆட்சியம்மாள் 2 மகன்களின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
- வழக்கம் போல், வீட்டு மாடியில் தூங்கசென்றுவிட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் கிளிஞ்சல் மேடு, சுனாமி குடியிருப்பு மீனவ கிராமத்தைச்சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஆட்சியம்மாள்(வயது 62). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வடிவேல், ஆட்சியம்மாள் 2 மகன்களின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். வடிவேலின் தம்பி சுப்பிரமணி மகன் தீபமணியை வடிவேல்ஆட்சியம்மாள் சிறு வயது முதல் வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக, தீபமணி, மியான்மர் உள்நாடு கலவரத்தில் சிக்கி தவித்து வருகிறார். இது குறித்து, தீபமணியை மீட்டு தருமாறு காரைக்கால் மாவட்ட கலெட்கரிடம் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், தீபமணி பற்றி கவலையில் இருந்துவந்த ஆட்சியம்மாள், தீபமணியை இனி எப்போது பார்ப்பேன் என புலம்பி வந்துள்ளார். தொடர்ந்து, வழக்கம் போல், வீட்டு மாடியில் தூங்கசென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலை, ஆட்சியம்மாள் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரம் அறிந்து, அனைவரும் சென்றுபார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை மேற்கொண்டது.
- பிரதமர் மோடியை பற்றி பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் எழுதிய மோடி-20 புத்தக்கத்தை அனைவரும் படிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி-20 புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தென்னிந்திய மாநிலங்களுக்கான மோடி-20 புத்தகம் வெளியிடும் பொறுப்பாளர் எச்.ராஜா, புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை மேற்கொண்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தீய சக்திகளுக்கு துணை போவதற்கு என்றே திருமாவளவன், சீமான் போன்ற சிலர் உண்டு. இவர்கள் அரசியலில் இருக்க லாயக் கற்றவர்கள். விடுதலை சிறுத்தைகள், பி.எப்.ஐ. எஸ்.டி.பி.ஐ.க்கும் வித்தியாசம் இல்லை. எனவே, தமிழக அரசு, அரசியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகள் மீதும், திருமாவளவனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எந்த பாதுகாப்பும் தமிழக காவல் துறை கொடுக்கக்கூடாது. திருமாவளவன், சீமானை உடனே கைது செய்ய வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு எதிராக பேசுபவர்கள், தேச விரோதிகள், பிரதமர் மோடியை பற்றி பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் எழுதிய மோடி-20 புத்தக்கத்தை அனைவரும் படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பா.ஜனதா மாநில பொது செயலாளர் மோகன் குமார், மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன், மாநில செயலாளர் நாகராஜ், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், நிகழ்ச்சி பொறுப்பாளர் முன்னாள் நீதிபதி அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் இருந்தது.
- தேர்வு முடிந்த பிறகு ஒருவாரத்துக்கு விடுமுறை விடப்படும்.
புதுச்சேரி:
புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுவை, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது.
அத்துடன் நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் இருந்தது.
ஆனால் புதுவையில் நாளை 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது "காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார விடுமுறைக்கு பிறகு புதுவை, காரைக்காலில் பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது.
திட்டமிட்டப்படி புதுவை, காரைக்காலில் காலாண்டு தேர்வுகளும் நாளை தொடங்கும். தேர்வுகள் வருகிற 30-ந் தேதி வரை நடக்கும். தேர்வு முடிந்த பிறகு ஒருவாரத்துக்கு விடுமுறை விடப்படும். அக்டோபர் 6-ந் தேதி முதல் 2-ம் பருவத்துக்கு பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
- காரைக்காலில் சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.
- மாணவிகள் குறுக்கே வந்ததால், மாணவிகள் மீது மோதாமல் இருக்க, எதிர் திசையில் சென்றார்.
புதுச்சேரி:
காரைக்கால் சேத்திலால் நகரில் வசிப்பவர் அந்தோணி(வயது30). இவர் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் ஆனது. நேற்று மதியம் உணவு சாப்பிடுவதற்காக, வேலை செய்யும் இடத்திலிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். காரைக்கால் காமராஜர் சாலை- அல்லிக்குளத்து வீதி சந்திப்பில் சென்ற பொழுது, பள்ளி மாணவிகள் குறுக்கே வந்ததால், மாணவிகள் மீது மோதாமல் இருக்க, எதிர் திசையில் சென்றார்.
அப்போது எதிரே வந்த சேத்தூரை சேர்ந்த கதிரவன்(28) மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இந்த விபத்தில் அந்தோணி தூக்கிஎறியப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர். அந்தோணியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நேற்று மாலை அந்தோணி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதில் 2 குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் சுகாதாரத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- புதுவை மாநிலத்தில் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வேண்டும்.
- ரேஷன் கடை ஊழியர்களை குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வேண்டும். மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும்.
ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை தி.மு.க சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. மாநில அமைப்பாளருமான சிவா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், தி.மு.க. துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், சண். குமாரவேல், செந்தில்குமார், குணா திலீபன், பெல்லாரி கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் லோகையன்,
சிறப்பு அழைப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், முகிலன், வடிவேல், சண்.சண்முகம், கோபாலகிருஷ்ணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தி.மு.க. அமைப்பாளர் சிவா பேசியதாவது:-
பெஸ்ட் புதுச்சேரி, 30 கிலோ அரிசி எதுவும் தேவையில்லை, ரேஷனில் 10 கிலோ அரிசியாவது வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை மூடியதற்கும், ஊழியர்களுக்கு சம்பளம் தராததற்கும் ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
புதுவை கூட்டுறவு சொசைட்டி, பாப்ஸ்கோ மற்றும் தனியாரின் கீழ் 584 ரேஷன் கடைகள் உள்ளது. எந்த ரேஷன் கடைகளும் திறக்கவில்லை.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 4 ஆண்டாக இ.பி.எப். ரூ.12 கோடி, இ.எஸ்.ஐ. ரூ.3.5 கோடி, கிராஜுவிட்டி ரூ.3.6 கோடி செலுத்தவில்லை. அவர்களது சம்பளத்தையும் சேர்த்து ரூ.60 கோடி ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடன்காரனாக அரசு உள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு இ.பி.எப்., இ.எஸ்.ஐ. கட்டாததற்காக தலைமை செயலர், நிதி செயலர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களை குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
மக்களுக்கு நேரடியாக சேவை செய்யக்கூடியவர்கள் ரேஷன் கடை ஊழியர்கள். ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்பது புதுவை மக்களின் உரிமைக்குரல். மக்கள் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம்தான் அத்தியாவசியம். எனவே ரேஷன் கடைகளை திறந்து அரிசியை வழங்குங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து எதிர்கட்சித்தலைவர் சிவா, 2 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- பஸ்சை , டிரைவர் ஆட்சியப்பன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
- தாக்குதல் நடத்திய 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பஸ்சான பி.ஆர்.டி.சி, நேற்று பகல், காரைக்கால் எல்லையான அம்பகரத்தூரில் இருந்து காரைக்கால் நோக்கி 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை , டிரைவர் ஆட்சியப்பன் என்பவர் ஓட்டிச்சென்றார். காரை க்கால் திருநள்ளாறு சாலை யான பச்சூர் அருகே வந்த போது, எதிர் திசையில் மோட்டார் சைக்களில் ஹெல்மெட்டுனுடன் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென பஸ் மீது கல்லை வீசி தாக்குதல் நடத்திவிட்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர். இதில் பஸ்ஸின் முன்புற கண்ணாடி உடைந்து சிதறியது.
சிதறிய கண்ணாடி துண்டுகள், பஸ்சின் முன் வரிசையில் அமர்ந்து இருந்த ஒரு பெண் பயணி மீதும், டிரைவர் ஆட்சியப்பன் மீது பட்டதில், இருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, இருவரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி பெற்றனர். பின்னர், டிரைவர் ஆட்சியப்பன் இது குறித்து, டவுன் போலீஸ் நிலைய த்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- காரைக்காலில் சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 3 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1500 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே விழிதியூர் சங்கரன்தோப்பு பஸ் நிறுத்தம் அருகே, சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக, நிரவி காவல்நிலைய போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்ற போது, அதே பகுதியை ச்சேர்ந்த மகேஷ்(வயது24), கமலேஷ்(23) மற்றும் காரைக்கால் பெரிய பேட்டைச் சேர்ந்த கார்த்திகேயன்(22) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனைச் செய்தனர். அப்போது அவர்களிடம் சிறு, சிறு பொட்டலங்களாக ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான 50 கிராம் கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1500 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை யும் கைது செய்தனர்.
- அஜேஸ்ராமு மற்றும் அவரது தாத்தா செல்வராஜ் ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.
- கடையில் ஆள் இல்லாததால், இரும்புத்துண்டுகளை திருடியதையும் ஒப்புகொண்டனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திரு.பட்டினத்தில் மெயின் சாலையில், இறந்த தொழில் அதிபர் ராமு மனைவி வினோதாவின் மதுபானகடை உள்ளது. இந்தக்கடை போலீஸ் வழக்கு தொடர்பாக, கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே உள்ளது. இருந்தாலும், வினோதாவின் மகன் அஜேஸ்ராமு மற்றும் அவரது தாத்தா செல்வராஜ் ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர். சம்பவத்தன்று அஜேஸ்ராமு தனது நண்பர் வைத்தீஸ் என்பவருடன், வழக்கம் போல், கடையை கண்காணிக்க சென்றபோது, கடையின் பின்பக்கத்தில் உள்ள குடோனில் இருந்து, செட்டர் இரும்புத்துண்டுகளை 2 நபர்கள் திருடிச்சென்றதை பார்த்து, 2 நபர்களையும், விரட்டி பிடித்து, திரு.பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, அஜேஸ்ராமு கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தபோது, திருவாரூர் சின்ன மேட்டு பபளையத்தைச்சேர்ந்த ஷாகுல் அமீது(வயது24), கரூர் தோகமலையைச்சேர்ந்த முகம்மது ஷாகுல் அமீது(26) ஆகிய 2 பேர் என்பதும், கடையில் ஆள் இல்லாததால், இரும்புத்துண்டுகளை திருடியதையும் ஒப்புகொண்டனர். அதன்பேரில், 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- காரைக்காலில் கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- ஒரு வார காலமாக வகுப்புகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த செருமாவிலங்கையில், பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 30-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கையான பதவி உயர்வை வலியுறுத்தி நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து கல்லூரி பேராசிரியர் தாமோதரன் கூறியதாவது:-
2007 ஆம் ஆண்டுக்கு பிறகு பேராசிரியர்களுக்கு எந்தவித பதவி உயர்வும் அளிக்கவில்லை. எனவே பேராசிரியர் கான பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். புதுச்சேரியில் அமைந்துள்ள என்ஜினியரிங் கல்லூரியில் அங்குள்ள பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரு வார காலமாக வகுப்புகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
- எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்து இலங்கை காங்கேயன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- விடுதலையான மீனவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே கீழகாசாக்குடிமேடு பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கீழகாசாக்கடிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்பட 12 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
கடந்த 6-ந் தேதி இவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது தட்பவெட்ப நிலை காரணமாக படகு முல்லை தீவு பகுதியில் ஒதுங்கியது. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் படகுடன் கைது செய்தனர்.
இவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்து இலங்கை காங்கேயன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள கோர்ட்டு உத்தரவுபடி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுபற்றி புதுவை மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையின் பேரில் காரைக்கால் மீனவர்கள் 12 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.
- சந்திரசேகரன் பாரதியார் சாலையில், பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
- கல்லாவில் வைத்திருந்த ரூ.1000 மதிப்பிலான சில்லறை காசுகள் திருட்டு போய் இருந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் தலத்தெரு பிள்ளையார் கோவில் மேட்டில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர், பாரதியார் சாலையில், பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கடை உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த ரூ.1000 மதிப்பிலான சில்லறை காசுகள் திருட்டு போய் இருந்தது. இது குறித்து, சந்திரசேகரன், காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கல்லாவில் காசுகளை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.






